[ 5 ]
எஸ்.பொன்னுதுரையின் படைப்புலகில் உள்ள மிகையுணர்ச்சியும் அலங்காரநடையும் கொண்ட கதைகளைப்பற்றி இன்றைய வாசகன் கூர்ந்து அவதானிக்க வேண்டும். இவை அக்கால வாசகர்களில் ஒரு சாராருக்கு கிளர்ச்சியூட்டுவனவாக அமைந்திருக்கின்றன என்று தெரியவருகிறது. லா.ச.ராமாமிருதத்தின் படைப்புலகுடன் இவை ஒப்பிடப்பட்டுள்ளன. அபூர்வமாக மௌனியுடனும். இன்று என் வாசிப்புக்கு இவை மிகுந்த பிரக்ஞையுடன் எழுதப்பட்ட மொழிச்சோதனைகளாக மட்டுமே தெரிகின்றன. ஏற்கனவே குறிப்பிட்டபடி தமிழில் இயல்புவாத முன்னோடிகளில் சிலருக்கு இத்தகைய ஒரு நடைமீது ஏனோ மோகம் இருந்திருக்கிறது. நீலபத்மநாபன் பல கதைகளில் சம்ஸ்கிருத அலங்காரங்களை நாடியிருக்கிறார். ஆ.மாதவனுக்கும் அந்த மோகம் உண்டு.
இதற்கான காரணங்கள் சிலவற்றை நான் ஊகிக்கிறேன். தங்கள் இயல்பாலும், தாங்கள் தெரிவுசெய்துகொண்ட அழகியலாலும் மிக எளிமையான நேரடியான இயல்புவாத இலக்கியங்களை உருவாக்கிய இவர்களுக்கு அதிலிருந்து உருவான ஒரு போதாமையுணர்ச்சி எங்கோ ஒரு மூலையில் இருந்திருக்க வேண்டும். ஆகவே இந்த நடையை ஒரு சம எடையாக அவர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும். மேலும் முக்கியமான இன்னொரு காரணமும் படுகிறது. இயல்புவாதம் மனித ஆழத்தை இலட்சியவாதமில்லாமல் நோக்குவது. ஆகவே அதற்கு பூச்சுகள் இல்லாத காமம் ஒரு முக்கியமான பேசுபொருள். இம்மூன்று படைப்பாளிகளுமே காமத்தை கூர்ந்து நோக்கியவர்கள் என்பதைக் காணலாம். தங்கள் இயல்புப்படி இவர்கள் காமத்தை நேரடியாக எழுதியிருக்க வேண்டும். அதில் எஸ்.பொன்னுதுரை துணிந்த அளவுக்குக் கூட பிறர் துணியவில்லை. காரணம் நம் மரபின் தடை. அதைவிட முக்கியமான தடை என்பது இப்படைப்பாளிகளில் ஒழுக்க போதத்தின் தடை. இம்மூவருமே வலுவான ஒழுக்கவாதிகள். இவர்களால் தாங்கள் பாலுணர்வு எழுத்துக்களை எழுதுகிறோம் என்ற சுயபிரக்ஞையை சகித்துக் கொள்ள முடியாது. ஆகவே பாலுணர்வுகளை எழுதுவதற்கு மொழியின் புகைமூட்டத்தை இவர்கள் நாடினார்கள் என்று சொல்லலாம்.
எஸ்.பொன்னுதுரையைப்பொறுத்தவரை இன்னொரு முக்கியமான காரணத்தையும் சொல்ல வேண்டும். எஸ்.பொன்னுதுரை தன் எழுத்துவாழ்க்கையின் ஒரு கட்டத்தில் மன உணர்வுகளை நேரடியாகவும் தீவிரமாகவும் சொல்ல முயன்ற படைப்பாளி. இலக்கியத்தில் மன உணர்வுகளை நேரடியாகச் சொல்லுதல் பெரிய அறைகூவல். புற உலகத்தை அகத்தின் படிம வெளியாக மாற்றுவதன் மூலமே மன உணவுகளை வெற்றிகரமாகச் சொல்ல முடியும். சங்கப்பாடல்கள் முதல் நாம் காண்பது இதையே. இதைச்செய்ய இயல்புவாத அழகியலில் இடமில்லை.அவர்களுக்கு புறம் என்பது புறம் மட்டுமே. ஆகவே அகத்தை ‘அந்தரத்தில்’ கட்டி நிறுத்தவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்படுகிறது. அதற்கு இத்தகைய அலங்கார மொழியை துணைகொள்கிறார்கள். எஸ்.பொன்னுதுரை தனது பல கதைகளில் மன உணர்வுகளை அலங்காரச் சொற்களாலேயே சொல்ல முயல்கிறார். அதாவது செவிக்கு ஒரு தனி ஒலியின்பம் அளிக்கும் சொற்களை சமத்காரமாக பயன்படுத்துவதன் மூலம்.
ஒன்று அவரது நடை இப்படி உள்ளது ” சுந்தர விளையாட்டின் ஆதார கலசங்களை சட்டையின் கீழ்முடிச்சு நெகிழ்த்தி பிதுக்கியபோது உயிர்பெற்ற முயல்குட்டிகளைப்போன்று முன்னே பாய்ந்த கவற்சி..” [ஆகுதி]இது காமச்சித்தரிப்பு என்றால் ”கற்பனையில் சிருஷ்டித்துப் பார்க்கும் சுவர்க்கத்தின் எழில் மாடங்களை வனப்பிலும் அமைப்பிலும் தோற்கடிக்கும் நெடிதுயர்ந்த மாடம் .மாடத்தினுள் உப்பரிகை. அதன் காலதர்த் திரைகளிலே வெள்ளிகள் பூத்துக் குலுங்குவதான தோற்றம்..” என்னும் சித்திரம்.அதே கதையில் அதே பாணியில் எண்ண ஓட்டங்கள் ”கண்ணயர்ந்தேனா? கண்களை மூடியவண்னம் ஏதேதோ நினைவுகளில் சஞ்சரித்தேனா? நினைவா? கனவா? நினைவென்றால் என்ன? கனவென்றால் என்ன? விழித்த நிலையின் கனவுகளே நினைவுகள். தூங்கிய நிலையின் நினைவுகளே கனவுகள். இரண்டிற்கும் இடையே உள்ல கயிற்றரவு நிலையில் பாம்பு எது பழுதை எது? அவஸ்தைப்படுகின்றேன்…”
இத்தகைய நடையில் எஸ்.பொன்னுதுரை எழுதிய ஆரம்பகாலக் கதை ‘கணை’. ”அஸால்ஹ பட்சம் பிரசவித்த பூரணை..”என்று தொடங்கும் கதை ”…நிலா பரதம் பயிலும் பாற்கதிர் கற்றையை பீச்சுகின்றது. பாலாவி நிகத்த திரைச்சேலைகளை தழுவி அவற்றை நாணத்திலாழ்த்தி களியிற் கெம்பும் மாருதி. வாலிப உடலங்களில் சடைத்து வளருந்தசைப் பிடுங்கல். விரகம் வியாபிக்கும் நிலைக்களனிலும் சோமா தேவியின் சேதநை சுழல் காற்று வாய்ச்சருகாக எற்றுண்டு அலைக்கழிந்து…” என்று நீள்கிறது. இக்கதை உட்பட எஸ்.பொன்னுதுரை இந்நடையில் எழுதிய பெரும்பாலும் எல்லா கதைகளுமே காமத்தின் கதைகளே. அடிப்படை இச்சைக்கும் தார்மீக நெறிகளுக்கும் இடையேயான முரண்பாடுமூலம் உருவாகும் போராட்டத்தைப் பற்றிய கதைகள் அவை. காமத்தைச் சித்தரிக்கவே மொழி இத்தனை ஜாலம் காட்டுகிறது. தன் முகத்தை நேரடியாக பார்க்க நாணி வண்ணக்கண்ணாடியில் பார்ப்பது போல உதவுகிறது இநத நடை. ‘சீவர ஆடைக்குட் புகுந்தும் உடலில் மதர்க்கும் மாம்ஸ ஆக்கினைகளிலிருந்து விடுபடாது துயிலெழுந்து துயிலெழா நிலையில் பிதக் ஜன பிக்குகள் தவிப்பதைச் சொல்லும் ‘வீடு’ம் அத்தகைய கதையே.
இத்தகைய கதைகள் வசிப்புக்கு இன்பமளிக்கும்தன்மை கொண்டிருந்தாலும் எஸ்.பொன்னுதுரையின் சிறந்த இயல்புவாதக் கதைகளின் தளத்துக்கு நகர முடியவில்லை என்றே எண்ணுகிறேன். ஏன் என்றால் கமகுரோதத்தின் மன இருள் என்பது ஓர் யதார்த்தம். அதைச்சொல்ல அதேயளவுக்கு யதார்த்தமான மொழியும் முறையுமே பொருத்தமானது. காமச்சித்தரிப்பில் உள்ள இந்த அலங்காரம் ஒருவகை பசப்பாக ஜாடை அளித்துவிடுகிறது. இச்சொற்றொடர்ச் சிக்கல்களுக்குள் புகுந்துசென்று சிடுக்கெடுத்தால் கிடைப்பது தன் இயல்புவாதக் கதைகள் மூலம் எஸ்.பொன்னுதுரை மேலும் தீவிரமாக முன்வைத்த விஷயமே என்னும்போது செல்லச் செல்லச் சலிப்பும் ஏற்பட்டுவிடுகிறது. சடங்கு குறுநாவலில் செந்திநாதனின் மனைவி சுயஇன்பம் செய்துகொள்ளும் இடம் ஓர் உதாரணம். தமிழிலக்கியத்திலேயே பெண் சுயஇன்பம் செய்துகொள்வது இப்படைப்பில்தான் சித்தரிக்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். ஆனால் மிக அடக்கமாகவும் அழகாகவும் சொல்லப்பட்ட கலைத்தருணமாக இது உள்ளது. அவர் சொற்புழுதி கிளப்பி எழுதிய பிற இடங்களில் எங்கும் இத்தகைய நுண்ணியதும் இயல்பானதுமான காமச்சித்தரிப்பு நிகழவில்லை.
இந்த மொழிநடையை லா.ச.ராமாமிருதத்துடன் ஒப்பிட்டு நோக்கலாம். ராமாமிருதமே சலிப்பூட்டும் நடையை மிதமிஞ்சி மீட்டிய படைப்பாளியாகவே இன்று வாசகர்களால் அறியபப்டுகிறார். ஆனால் அவருக்கு இந்த நடை ஒரு நுண்ணிய கருவி, அதன் மூலம் அவர் தொட்டு எடுக்க முயன்ற பிடிக்குச்சிக்காத ஒரு விஷயம் இருந்தது. அதை அவரது மீபொருண்மையியல் [மெட·பிஸிகல்] உண்மை என்று சொல்லலாம். அவரது தொடக்க காலக் கதைகளில் லா.ச.ராமாமிருதம் அந்த நடனமிடும் நடை மூலம் அன்றாடவாழ்க்கைக்கு அப்பாற்பட்ட நுண்ணிய ஓர் மீபொருண்மை அனுபவத்தைத் தொட முயல்கிறார். அதற்காக மரபிலிருந்து எடுத்துக் கொண்ட படிமங்களை பின்னி பின்னி வெறுமை வரைச் செல்ல முயல்கிறார். அப்போக்கில் மிக அபூர்வமான சொற்சேர்க்கைகளை அவர் உண்டுபண்ணுகிறார் என்பதனாலேயே அவரது இலக்கிய இடம் உறுதிப்படுகிறது. எஸ்.பொன்னுதுரையும் சரி ஆ.மாதவன் போன்றவர்களும் சரி அப்படிப்பட்ட மீபொருண்மைத்தளம் எதையுமே கொண்டிருக்கவில்லை. அவர்கள் சொல்ல விழைவது எளிமையான காம/ஒழுக்கச் சிக்கல்களையே. அவற்றுக்கு இந்த நடையின் தீவிரபாவனை தேவையானதாக இல்லை.
[ 6 ]
எஸ்.பொன்னுதுரையை எப்படி தத்துவார்த்தமாக வரையறை செய்யலாம்? ஆ.மாதவனைப்போல அவரையும் ஒரு ‘நவீனத்துவ ஒழுக்கவாதி’ என்று சொல்வதே பொருத்தமானதாக இருக்கும். சென்ற பதிற்றாண்டில் சடங்கு தீ போன்ற படைப்புகள் மூலம் ஈழத்தில் ஒழுக்கவாதிகள் நடுவே அதிர்ச்சியலைகளை உருவாக்கிய ஒரு படைப்பாளியைப் பற்றி இப்படிச் சொல்வது ஆச்சரியத்தை உருவாக்கக் கூடும். அதனாலேயே ‘நவீனத்துவ’ என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தினேன். ஒழுக்கவாதி என்பவன் யார்? மனித இனம் தன் அடிப்படை இச்சைகளை முறைப்படுத்திக் கொண்டு உறவுகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நேர்மையான முறையில் அதன் செயல்பாடுகள் அமைந்திருக்க வேண்டும் என்றும் எண்ணக்கூடியவன். ஒழுக்கம் சார்ந்து விதிகள் உருவாகின்றன. விதிகளின் அடிபப்டையில் அமைப்புகள் உருவாகின்றன. அமைப்புகளைச் சார்ந்து வாழும் அமைப்புமனிதர்கள் பெருவாரியாக சமூகத்தில் இருக்கின்றனர். அவர்கள் ஒழுக்க விதிகளைப்பற்றிப் பேசுவார்கள். அவற்றை மூர்க்கமாக வலியுறுத்துவார்கள். ஆனால் அவர்கள் ஒழுக்கவாதிகள் அல்ல. உண்மையில் அமைப்பு கோரும் நிபந்தனைகளை நிறைவேற்றுவது மட்டுமே அவர்களின் நோக்கம். அதற்குப்பின் தங்கள் அந்தரங்க உலகில் அவர்கள் அவ்விதிகளைப் பொருட்படுத்துவதில்லை.
ஒழுக்கவாதி அமைப்பு சார்ந்த விதிகளை அப்படியே எடுத்துக் கொள்பவன். அவற்றின் நடைமுறைத்தன்மையை வலியுறுத்துபவன். அமைப்பின் விதிகள் நடைமுறையில் ஒழுக்கத்தை நிலைநாட்ட போதுமானதாக அல்லாமல் அமையலாம். சிலசமயம் சாராம்சத்தில் ஒழுக்கத்துக்கே மாறானவையாக அமையலாம். இந்நிலையில் ஒழுக்கவாதி அமைப்புக்கு எதிரானவனாக திரும்புகிறான். அமைப்பை மாற்ற அவன் முயல்கிறான். அமைப்புமனிதர்களின் எதிர்ப்புக்கும் புறக்கணிப்புக்கும் உள்ளாகும் அவன் பலசமயம் ஒழுக்கக்கேடனாக முத்திரை குத்தப்படுகிறான். உண்மையான ஒழுக்கவாதி ஏதோ ஒருவகையில் சமூகத்தை விமரிசிப்பவனாகவும் கலகக்காரனாகவுமே இருக்க முடியும். காரணம், சமூகம் எப்போதும் முழுமையாக ஒழுக்க விதிகளின்படி செயல்பட இயலாதென்பதே. பலவகையன சமரசங்கள் வழியாகவும் பலவகையான இடக்கரடக்கல்கள் வழியாகவும்தான் சமூகம் இயங்க முடியும். ஒழுக்கவாதி அவற்றை இழுத்து முச்சந்தியில்போடுகிறான். ஆகவே அவை எதிர்ப்புக்கு உள்ளாகிறான். காலப்போக்கில் புதிய ஒழுக்க விதிகளை உருவாக்கி அவனே அமைப்பின் பகுதியாக ஆகிறான்
நவீனத்துவ ஒழுக்கம் என்பது நம் நாட்டில் அறிவியல்தொழில்நுட்பம் அதன் விளைவான நவீனக் கல்வி மற்றும் நவீன மனித உறவுகளின் விளைவாக உருவாகிவந்த ஒன்று. ஈ.வே.ரா அவர்கள் நம் மரபின் பெரும்பாலான நம்பிக்கைகளையும் அவை சார்ந்த அமைப்புகளையும் கடுமையாக நிராகரித்தவர். ஆனால் தொடர்ந்து ‘மனிதன் ஒழுக்கமாக இருக்க வேண்டும்’ என்று அவர் சொல்லியும் வந்தார். அவரது எழுத்துக்களில் ஒழுக்கம் என்றால் என்ன என்பது பற்றிய அவரது விளக்கங்களைக் காணலாம். ஒட்டுமொத்தமாக அதை நவீனத்துவ ஒழுக்கம் எனலாம். தமிழ்ச்சமூக தளத்தில் நவீனத்துத்த்திற்கான ஆகப்பெரிய குரலாக ஒலித்தவர் ஈ.வே.ரா அவர்களே. தி.ஜானகிராமன், ஆ.மாதவன்,நீல.பத்மநாபன் போன்ற முன்னோடிப் படைப்பாளிகளை பொதுவாக நவீனத்துவ ஒழுக்கவாதிகள் என்று வகைப்படுத்தலாம். எஸ்.பொன்னுத்துரையும் அத்தகையவரே. இவர்கள் மூவருக்குமே இயல்புவாத அழகியல் இருப்பதையும் கவனிக்கலாம்.
நவீனத்துவம் மனிதனை சமூகத்தின் பிரிக்கமுடியாத உறுப்பாக நோக்கும் அணுகுமுறையைக் கைவிட்டது. அவனை தனிமனிதனாக நிறுத்தி அவனுக்கான அறத்தையும் ஒழுக்கத்தையும் உருவாக்க முயன்றது. நவீனத்துவ அற/ஒழுக்கவியலானது பழமையான அற/ஒழுக்கவியலுடன் மோதும்போது எப்போதுமே தனிமனித உரிமையைப்பற்றியே பேசப்படுகிறது என்பதை வாசகர்கள் கவனித்திருக்கலாம். நவீனத்துவ ஒழுக்கவியலின் பணியே தனிமனிதனின் உரிமைக்குள் சமூகம் தலையிடாதபடி ஓர் ஒழுக்கவியலை உருவாக்கிக் கொள்வது எப்படி என்பதே. நவீனத்துவத்தின் அறவியலிலும் ஒழுக்கவியலிலும் ·ப்ராய்டியம் வகித்த பங்கும் மிக முக்கியமானது. காமம் வன்முறை முதலியவறை மனிதனின் இயல்பான அந்தரங்க விருப்புகளாக முன்வைத்த ·ப்ராய்டியம் அவற்றைக் கட்டுப்படுத்துவது என்பது மனம் மீதான அடக்குமுறை என்றது. நவீனத்துவ ஒழுக்கவியலை தேடிய படைப்பாளிகள் அனைவரிலும் ·ப்ராய்டியக் கருத்துக்கள் எதிரொலி செய்தபடியே இருப்பதைக் காணலாம். அடிப்படை இச்சைகளை பாவம் என்ற முத்திரையில் இருந்து விடுவிப்பது இவர்களின் முக்கியமான நோக்கமாக உள்ளது.
தி.ஜானகிராமன், ஆ.மாதவன்,நீல.பத்மநாபன், எஸ்.பொன்னுத்துரை முதலியோரில் உள்ள ·ப்ராய்டியப் பாதிப்பு மிகவெளிப்படையானதும் நேரடியானதுமாகும். தி.ஜானகிராமனும் ஆ.மாதவனும் எஸ்.பொன்னுத்துரையும் காமத்தில் இருந்து குற்றவுணர்ச்சியை விடுவிப்பதை மிகவும் தீவிரமாகச் செய்கின்றார்கள். ஜானகிராமன் காமத்தை அழகிய அந்தரங்கக் களியாட்டமாக மாற்றி உறவின் நுட்பத்திற்குள் செல்வதனூடாக அதன் மீதான எதிர்மறை நிறப்பூச்சுகளைக் களைய முயல்கிறார். ஆ.மாதவன் காமத்தையும் பசியையும் மீண்டும் மீண்டும் ஒரேபுள்ளியில் இணைப்பதன் மூலம் இதை நிகழ்த்துகிறார். காமத்தை அன்பு காதல் முதலிய மெல்லுணர்வுகள் பக்கம் கொண்டுசெல்வதற்குப் பதிலாக உயிர்வாழ்தலுக்கான போராட்டம், தன்னகங்காரம் அல்லது தன்னிலை ஆகிய அட்டைப்படைக்கூறுகளின் பக்கமாக நகர்த்துகிறார். ஆனால் நீலபத்மநாபனில் காமத்தின் குற்றவுணர்ச்சி மிக முக்கியமான ஒரு பேசுபொருளாக எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது. ‘பள்ளிகொண்டபுரம்’ குற்றவுணர்ச்சியின் கதை என்றால் அது மிகையல்ல. அந்நாவலின் இறுதியில் கார்த்யாயினியின் பிள்ளைகளில் பெண் அப்பா பக்கமும் பையன் அம்மா பக்கமும் சாயும் இடத்தில் ·ப்ராய்டிய நோக்கு வெளிப்படையாகவே உள்ளது.
எஸ்.பொன்னுத்துரை தன் ஒழுக்கத்தேடலையே தனது படைப்புகள் மூலம் மிகவிரிவாக நிகழ்த்துகிறார் என்று சொல்லலாம்.காமத்தைப்பற்றி பேசுவதே பிழை என்று சொல்லும் அமைப்புமனிதர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாகவே அவரது ‘சடங்கு’ ‘தீ’ போன்ற ஆக்கங்கள் வெளிவந்திருக்கின்றன. காமம் மனிதனின் அடிபப்டையான இச்சை என்றும் அதைப்பற்றிப் பேசுவதில் பிழையில்லை என்றும் நவீனத்துவ ஒழுக்கவியலாளர்கள் உலகமெங்கும் முன்வைத்த கோணத்தின் வெளிப்பாடுதான் இது. காமத்தைச் சுற்றி இயங்கும் மன ஓட்டங்களைச் சித்தரிப்பதில் பெரும்பாலான கதைகளில் எஸ்.பொன்னுத்துரை தீவிரமாக முயல்கிறார். காமத்தைக் கட்டுப்படுத்துவது, காமத்தில் இருந்து தப்ப அதை காணாததுபோலிருப்பது என நம் பண்பாடு கொள்ளும் எல்லா பாவனைகளையும் தீவிரமாகக் குத்தி உடைக்க தன் படைப்புகளில் முயல்கிறார். ஒழுக்க மீறலின் பலதளங்களைச் சித்தரிக்கும் கதைகளையே நாம் மீண்டும் மீண்டும் காண்கிறோம் ‘வேலி’ ‘மறு’ ‘விலை’ ‘பாசக்கயிறு’. ஒழுக்க மீறல்கள் நிகழும் தளங்களில் உள்ள நியாயங்கள் மீதே எஸ்.பொன்னுத்துரையின் கவனம் மீண்டும் மீண்டும் படிகிறது. அங்கே ஆண்பெண் வேற்றுமை எப்போதும் ஒரு சிக்கலாகவே உள்ளது. கொழும்பில் சிங்கள வேசையுடன் தொடுப்பு வைத்துக் கொள்ளும் யாழ்பாணத்து ஆண்களை பெண்கள் கெஞ்சுகிறார்கள், கண்ணீர் விடுகிறார்கள், பிரிகிறார்கள், சேர்கிறார்கள், ஒரு கட்டத்தில் பழிக்குப்பழியும் கொள்கிறார்கள்.அடித்தள மக்கலின் வாழ்க்கையில் காம உறவுகளுடன் வன்முறையும் பிணைந்துள்ளது.
எஸ்.பொன்னுத்துரை தேடுவது ஒரு நவீனத்துவ ஒழுக்கவியலை. ஆண்மை சிறுகதைவரிசை வரையிலான அவரது ஆக்கங்களில் இருந்து அவரது கோணத்தை இவ்வாறு வகைப்படுத்தி வரையறைசெய்துகொள்ளலாம். காமம் இயல்பானது, தன்னிச்சையானது. அதை சமூக விதிமுறைகள் கட்டுப்படுத்தலாகாது. காமம் சார்ந்த பாவனைகளும் போலித்தனங்களும் புனித கற்பிதங்களும் உடைத்து வீசத்தக்கவை. காமத்தின் உண்மையை நேருக்கு நேராக நோக்குவதே உசிதமானதாகும். அப்படி நோக்கும்போது மனிதனின் சாரம் பிடிகிடைக்கிறது. உண்மையான உறவுகளை உருவாக்கிக் கொள்வதற்கு இது தேவை. ஆண்மை தொகுதியில் உள்ள பல கதைகளில் மீண்டும் மீண்டும் காமத்தை நேர்மையாக அணுகுவதன் மூலம் உருவாகும் உறவுகளின் மேன்மை நோக்கி எஸ்.பொன்னுத்துரை நகர்வதைக் காணலாம்
இப்படைப்பாளிகளின் பல கதைகள் ஒன்றுபோலவே இருப்பதை வாசகன் கவனிக்கலாம். உதாரணம் ‘ஆண்மை’ கதையில் வரும் ‘அமரி’ யை தி.ஜானகிராமனின் கதையில் வரும் ‘பாலி’யுடன் இயல்பாக ஒப்பிடலாம். ஒரேகதைதான். கல்யாணமான பெண்ணை காமம் கோண்டு அணுகப்போகிறான் கதைசொல்லி. அவள் காமத்தைக் கடந்து தன் கணவனுடன் ஒரு நேர்மையான உணர்வை அடைந்திருப்பதைக் கண்டு, அவ்வுறவின் தூய்மையைஉணர்ந்து , விலகுகிறான். உரையாடல்கள் மூலம் சகஜமாக கதையை நகர்த்தி கச்சிதமாக தி.ஜானகிராமன் முடிக்கையில் ‘நான் மனிதனாய் மீளுயிர் பெற்ற திருப்தி ‘ என நேரடியாக அதை விளக்குகிறார் எஸ்.பொன்னுத்துரை . வேலி கதையின் இன்னொரு வடிவம் இது என்பதையும் வாசகர் காணலாம். அங்கே உண்மையான் உறவின் நேர்மையை உணர்பவன் கணவன். .இவ்வாறு எஸ்.பொன்னுத்துரை எழுதியிருக்கும் கதைகளின் பல பிற வடிவங்களை நீல பத்மநாபன் ,ஆ.மாதவன் ஆகியோரிடம் கண்டடையலாம். ஆ.மாதவனிடம் இதற்கு உபரியாக மனித இயல்பில் எப்போதுமுள்ள தீமைநாட்டத்தின் வல்லமையையும் கண்டுகொள்ளலாம். மனிதன் நல்லியல்புகள் முன் எப்போதும் தன்னை சரணடையச் செய்பவனல்ல, அவனுள் அதேயளவுக்கு தீமைமீதான களிப்பும் உள்ளது என்று சொல்பவை அவரது கதைகள்.
நவீன ஒழுக்கவியல் தேடல் காரணமாகவே இவர்களின் பல கதைகள் ஒருவகை ‘பாலியல் அக்கப்போர்கள்’ ஆக இருப்பதாக வாசகர்களுக்குப் படலாம். அதிலும் நீல.பத்மநாபன் நேரடியாகவே ஒழுக்க மீறலைச் சாடி எழுதுபவர். தன் எழுத்தின் சாராம்சமான மன எழுச்சியாக நீல.பத்மநாபனே இதைச் சொல்கிறார்– ஒழுக்கவாதியான தனக்கு ஒழுக்க மீறல்கள் உருவாக்கும் ஒவ்வாமை. அதை ‘அப்படியே’ எழுதப்போய் அவர் சக ஊழியரால் ஒருமுறை தாக்கப்பட்டதும் உண்டு. ஆ.மாதவனிலும் இந்த அம்சம் உண்டு. தி.ஜானகிராமனில் சற்றே அடங்கிய தொனியில். இருந்தாலும் அவரது ‘மரப்பசு’ பிரபலமான ஒரு நடனக்கலைஞர் பற்றிய அக்கப்போர்தான் என்று சொல்கிறார்கள். எஸ்.பொன்னுத்துரைவின் பலகதைகள் யாழ்ப்பாண பாலியல் அக்கப்போர்களை விதைகளாகக் கொண்டவையாக இருக்கலாம். நம்மால் ஊகிக்க முடிவதில்லை. ‘தீ’ போன்ற கதைகளில் அவற்றை சற்றே உய்த்துணர முடிகிறது என்றாலும்.
ஆனால் பாலியல் அல்லாத தளங்களில் எஸ்.பொன்னுத்துரை நேரடியாக முகத்துக்கு நேராகவே தாக்கும் ஒழுக்கவாதியாகவே செயல்பட்டிருக்கிறார் என்று படுகிறது. அவரது தொகுதியில் உள்ள பல கதைகள் அப்படிபப்ட்டவை. ‘ஒரு யானைக்கதை’ போன்ற சிலகதைகள் அங்கதமாக வெளிப்பட்டிருக்கின்றன. மேடைக்கதைகள் போன்ற எழுத்துக்களில் நேரடியான விமரிசனம் உள்ளது. இந்நோக்குடன் விதவிதமான வடிவங்களில் எழுதிப்பார்த்திருக்கிறார் எஸ்.பொன்னுத்துரை. அவரது ஒழுக்க நோக்குக்கான ஆதாரமாக இவற்றைக் கொள்ளலாமென்றாலும் தமிழகச் சூழலில் ஒருவாசகனுக்கு இவற்றின் பல தளங்கள் பொருள்படுவதில்லை.
சுந்தர ராமசாமியுடன் இப்படைப்பாளிகளை ஒப்பிடுவது மேலதிகப் பொருள் அளிக்கலாம். சுந்தரராமசாமி நவீனத்துவர். அவரது தேடல் நவீனத்துவ அறவியலைத்தேடித்தான். தொடக்ககாலக் கதைகளில் சிலவற்றில் மட்டுமே அவர் ஒழுக்கச் சிக்கல்களைப் பற்றிப் பேசியிருக்கிறார். அதிகம்பேசப்பட்ட ‘போதை’ முதலிய கதைகள். பிறவற்றில் தனிமனிதனுக்கும் அமைப்புகளுக்குமான உறவு, தனிமனிதன் காலத்தின் முன் கொள்ளும் வெறுமையுணர்வு, அவனது சமரசங்கள் சரிவுகள் என்றே அவரது புனைவுலகு விரிகிறது. அவ்வகையில் இன்னும் விரிந்த ஒரு தரிசன தளத்தை சுந்தர ராமசாமி எடுத்துக் கொண்டிருக்கிறார் என்றே சொல்லலாம். ஒழுக்கம் சார்ந்த வினாக்களுக்கு உள்ள முக்கியமான சிக்கல் என்னவென்றால் அவை மிக எளிதாக காலத்தில் பின்னகரும் என்பதுதான். யாழ்ப்பாணத்தை பதற வைத்த எஸ்.பொன்னுத்துரையின் ‘தீ’ இன்று ஒரு மெல்லிய பாலுணர்வுக்கதையாக மட்டுமே பார்க்கப்படும். மாறாக தனிமனிதனுக்கும் அமைப்புகளுக்கும் இடையேயான அறவியல்சிக்கல்களை நோக்கிச் சென்றதன் வழியாக சுந்தர ராமசாமி பேசிய தரிசனச்சிக்கல்கள் எப்போதைக்குமுரியவை.
[ 7 ]
நவீனத்துவ ஒழுக்கவியலாளரான எஸ்.பொன்னுத்துரை யாழ்ப்பாணத்து மக்களின் வாழ்க்கையின் இச்சைகளையும் இயல்புகளையும் நேரடியாகச் சொன்ன இயல்புவாதப்படைப்புகளின் மூலமே தமிழிலக்கியத்தின் முக்கியமான முன்னோடியாக அமைகிறார். இலக்கியவாதி ஒரு நவீன ‘குலப்பாடகன்'[Bard]. காலம் துடைத்தழிக்கும் அவனது குலமும் நிலமும் அவனுடைய சொற்கள் வழியாகவே என்றும் வாழ்கின்றன. அம்மக்கள் காலூன்றி நின்ற நிலத்துக்குப் பதிலாக அப்படைப்பாளியின் மொழி வந்து அமைகிறது. எஸ்.பொன்னுத்துரை யாழ்ப்பாணத்தின் குலப்பாடகன். தேறலருந்தி தெருவில் அலைந்து, யாழ்நரம்பே தன் நரம்பாகவும் கிணைத்துடிப்பே இதயத்துடிப்பாகவும் கொண்டு அங்கெ வாழ்ந்த பாணன்.இன்று அம்மண் நினைக்கப்படுவதும் என்றும் நி¨லைக்கப்போவதும் அவருடைய சொற்கள் வழியாகவே. அவரது ‘நனவிடைத்தோய்தல்’ தன்னினைவு எழுத்தில் ஒரு பேரிலக்கியம் என்று யாழ்ப்பாணத்தவர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அவர்கள் இழந்ததையும் தக்கவைத்துக் கொண்டதையும் பற்றிய மாபெரும் மானுட ஆவணம் அது. காலம் மனிதர்களை கைவிடுவதில்லை போலும். அனைத்தையும் எடுத்துக் கொள்ளும்போதும்கூட சில கலைஞர்களை விட்டுவைக்கிறது.
‘காலம்’ இதழில் வெளியான கட்டுரை.
ஈழம் பற்றிய எழுத்துக்கள்
கோட்பாட்டின் வலிமையும் வழிச்சுமையும் – கா. சிவத்தம்பியின் இலக்கிய நோக்கு
சுவாரஸியம் என்பது என்ன ? அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்கள்
அகமெரியும் சந்தம் – சு.வில்வரத்தினம் கவிதைகள்
அ.முத்துலிங்கம் நேர்காணல் – ஜெயமோகன்
புன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து