சினிமாப்பாடல்களில் வரிகளின் இடம் என்ன? வரிகள் வழியாகவே இசை நினைவில் நின்றிருக்கிறது,எனக்கு. வரிகள் நன்றாக இல்லை என்றால் இசை உவகையூட்டுவதில்லை. தமிழின் பல மகத்தான பாடல்களை நான் கேட்பதே இல்லை. கீழ்மைநிறைந்த வரிகளால்தான்.
நல்ல வரிகள் அமைந்தால்கூட கேட்கக்கேட்க கொஞ்சம் சலிப்பூட்டுகின்றன அவை. ஓர் இடைவெளிக்குப்பின் அவற்றை கேட்டால் மட்டுமே வரிகள் புத்துயிர்கொள்கின்றன. ஆகவேதான் தெரியாத மொழிப்பாடல்களை மேலும் நுட்பமாக கேட்கமுடிகிறது. பாடல்களின் வரிகளில் பொருள்முழுமை பெறாத குழந்தைத்தனம் இருக்கவேண்டும். அல்லது எண்ணி முடிவடையாத ஒரு மர்மம் எஞ்சியிருக்கவேண்டும்
சில மெட்டுக்கள் மிக எளிமையானவை. சாதாரணமாக பாடினால் ஒருவேளை குழந்தைப்பாடல் போலக்கூடத் தோன்றும். ஆனால் அவற்றின் கட்டமைப்பினால் நீங்காத அழகை கொண்டிருக்கும். நான் இளமையில் கேட்ட பாடல் ‘நீ மதுபகரூ’ என் பக்கத்துவீட்டு அக்கா ஒரு நோட்டுபுக்கில் அந்த பாடலை எழுதி வைத்திருந்ததை நினைவுகூர்கிறேன்.
நீ மதுபகரூ மலர் சொரியூ
அனுராக பௌர்ணமியே
நீ மாயல்லே மறையல்லே
நீல நிலாவொளியே
மணிவிளக்கு வேண்ட
முகில் காணேண்ட
ஈ பிரேம சல்லாபம்
களி பறஞ்ஞ்சிரிக்கும் கிளி துடங்கியல்லோ
தன் ராக சங்கீதம்