அரசனும் தெய்வமும்- கடிதம்

 

கிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா?- எதிர்வினை

பக்தியும் அறிவும்

கிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா?

கீதையை எப்படிப் படிப்பது? ஏன்?

 

அன்பு ஜெயமோகன்,

 

கிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா எனும் தங்கள் கட்டுரைக்கு அனீஷ் கிருஷ்ண நாயர் எழுதி இருந்த முகநூல் குறிப்பைப் படித்தேன்.

 

இறைவனுக்கு அரசதன்மையைக் கற்பிப்பது மேற்குலகக் கோட்பாடு என அனீஷ் குறிப்பிடுகிறார். அரசத்தன்மை ஏற்றப்படல் என்பது எகிப்தியக்கோட்பாடு என அவர் மேலோட்டமாகக் குறிப்பிடுகிறாரோ என அஞ்சத் தோன்றுகிறது.

 

கிருஷ்ணனின் தசாவதாரங்களை வைத்து ’அரசத்தன்மையை’ மறுக்கவும் செய்கிறார். தர்க்க அடிப்படையில் தெளிவாக இருப்பது போல்தான் தோன்றுகிறது. அதேநேரம், அவர் குறுக்கிப் பார்த்து விட்டார் என்றே நினைக்கிறேன். கிருஷ்ணனை வைத்து அவர் குறிப்பிடும் தகவல்களை முருகனை வைத்து என்னால் மறுபரிசீலனைக்கு உட்படுத்த முடியும். முருகன் ஒரு இந்துக்கடவுள் என அனீஷ் நம்பும்பட்சத்தில், என் கருத்துக்களை அவர் பொறுமையாகச் செவிமடுக்கலாம்.

 

முதலிலேயே, கறாராகச் சொல்லிவிடுகிறேன். இறைவன் எனும் குறியீட்டைப் பன்முகத்தளங்களில் அணுகவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. அதேநேரம், ஆத்திகம் மற்றும் நாத்திகத் தளங்களில்.. வழிபாட்டின் சமூகப்பிரதிபலிப்பை மறுக்கத் திமிரும் போது அப்பார்வையின் போதாமையைச் சுட்டிக்காட்டியாக வேண்டிய தேவை இருக்கிறது.

 

சங்க இலக்கியங்களில் திருமுருகாற்றுப்படை என்ற இலக்கியம் இருக்கிறது. ஆற்றுப்படை இலக்கியங்கள் வறுமையில் வாடும் புலவர்களை அரசரிடத்து ஆற்றுப்படுத்துபவை. அக்கோணத்தில், முருகாற்றுப்படை பக்தர்களை முருகனிடத்து ஆற்றுப்படுத்துவது. இங்கு அரசதன்மை முருகனுக்கு ஏற்றப்பட்டிருக்கிறது தெளிவாகவே புலப்படுகிறது.

 

அரசனுக்குரிய பத்து வகையான உறுப்புகளைத் தசாங்கம் எனச்ம்சொல்வர். நாமம், நாடு, ஊர்தி, ஆறு, மலை, கொடி, ஊர்தி, முரசு, தார் மற்றும் படை உள்ளிட்டவையே அவை. அரசனுக்கு உரியதாகச் சொல்லப்படும் இவ்வுறுப்புகள் தமிழ் பக்தி இலக்கியங்களில் இறைவனுக்குரியவையாக வியந்தோதப்பட்டிருக்கும்.

 

கோவில் அமைப்புகளும் பெரும்பாலும் அரண்மனையை ஒத்தவையாகவே இருக்கின்றன. கோவில் நுழைவுவாயிலை இன்றளவும் இராஜ கோபுரம் என்றே குறிப்பிடுகிறோம். வாயிற்காப்பாளர்களாக துவாரபாலகர்கள் இருக்கின்றனர். பல திருக்கோவில்களில் கட்டியம் கூறுதல் இன்றைக்கும் உண்டு. கோவிலில் இருக்கும் உண்டியலும் அரசதன்மை கொண்டதே. பழனியில் இன்றுவரை முருகனுக்கு இராஜ அலங்காரம் என்பது சிறப்பான வழிபாட்டு முறையாக இருக்கிறது.

 

கோவிலில் நிகழும் கொடியேற்றங்கள், நடனம் உள்ளிட்ட கலைநிகழ்வுகள், தேர் வலம் உள்ளிட்ட முக்கியச் சடங்குகளில் அரசதன்மையைத் தெளிவாகக் காணலாம். அவ்வளவு ஏன்? வழிபடுவதில் கூட அரண்மனைப் படிநிலைகளே பின்பற்றப்படுவதாக ஊகிக்கலாம். கருவறையில் பிராமணர், கருவறைக்கு அருகே முதன்மைச் சாதியர், கருவறைக்குக் கொஞ்சம் விலகி இடைநிலைச் சாதியர், கோவிலுக்கு வெளியே தாழ்த்தப்பட்டவர் என்பதான வழிபாட்டு நிலைகளை இன்றுவரை கோவில்களில் காணலாம்தானே?.

 

வேறுசில தரவுகளைக் கொண்டு முருகனை முழுக்க அரசதன்மை ஏற்றப்படாதவன் என வாதிடவும் இயலும். இங்கு சிக்கல், ஒன்றை நிறுவுவதோ அல்லது நிராகரிப்பதோ அன்று. சமய வழிபாட்டுக்கும், சமூக இயங்கியலுக்குமான தொடர்பைப் புரிந்து கொள்ள முயற்சிப்பதே முக்கியம்.

 

சத்திவேல்,

கோபிசெட்டிபாளையம்.

கல்விச்சாலையில் இந்திய மரபிலக்கியங்கள்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-41
அடுத்த கட்டுரைபகடிகபடி!