அன்புள்ள ஜெ
இலக்கியம் குறித்த உங்கள் உரைகளை நான் அடிக்கடிக் கேட்பதுண்டு. பொதுவாக நீங்கள் செய்திகளை, தகவல்களை முக்கியமானதாகச் சொல்வதில்லை. ஒரு குறிப்பிட்ட பார்வையைச் சொல்கிறீர்கள். பெரும்பாலும் அந்தப்பார்வையை மட்டும் சொல்லி, இப்படி நீங்கள் பார்க்கலாம் என்று மட்டும் சொல்லி நின்றுவிடுகிறீர்கள்.
குறிப்பாக கவிதைகளைப்பற்றிய மூன்று உரைகளுமே மாறுபட்டவை. வெவ்வேறு கோணங்களை திறந்து காட்டுகின்றன அவை. முதல் உரையில் இன்றைய கவிதையின் டச் ஸ்கிரீன் தன்மையை, மெல்லத்தொட்டுக்காட்டும் இயல்பைச் சுட்டிக்காட்டுகிறீர்கள். இரண்டாவது உரையில் கவிதை, கவிஞன் இரண்டுமே ஒருவகையான பொதுப்பாவனையை மேற்கொண்டிருக்கிறார்களா என்னும் வினாவை எழுப்பிக்கொள்கிறீர்கள். மூன்றாவது உரையில் இன்றைய கவிதை குறுஞ்சித்தரிப்பை கடந்துவிட்டது என்கிறீர்கள். மூன்றுமே முக்கியமான கோணங்கள்.
அர்விந்த்
மதிப்புக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
தங்களுடைய “இலக்கியமும் வாசிப்பும்” என்ற தலைப்பிலான உரையை சமீபத்தில் யூடியூப்பில் கேட்டேன் (https://www.youtube.com/watch?v=4MfLyrSGpbs&t=4s )
ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது, நாம் தான் அந்தப் புத்தகத்தை அதன் எழுத்துக்களிலிருந்து உருவாக்கிக் கொள்கிறோம் என்று கூறியிருந்தீர்கள்.
ஏக் துஜே கேலியே திரைப்படத்திலிருந்து ஒரு பாடலை ஒலி வடிவில் அடிக்கடி கேட்பேன். (தேரே மேரே பீச்சு மே). நாயகனுக்கும் நாயகிக்குமான காதலின் மகத்துவமான, உணர்வுமயமான நிலையை என் மனக் கண்ணில் அந்த இசையும், குரல்களும் கொண்டுவந்தன. இத்தனைக்கும், எனக்கு இந்தி தெரியாது.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, அதே பாடலை வீடியோவுடன் யூடியூப்பில் கண்டேன். என் மனதில் அந்தப் பாடல் உண்டாக்கியிருந்த ஒரு உயர்வான கற்பனை பிம்பம் காணாமல் போயிற்று. பார்க்காமலே இருந்திருக்கலாமே என்று எண்ணினேன்.
அப்போது நீங்கள் “நாமாக மனதில் உருவாக்கிக் கொள்கிறோம்” என்று சொன்னது நினைவக்கு வந்த்து. அப்படியென்றால், அந்தப் பாடலைக் கேட்ட பொழுதெல்லாம், இந்தியே தெரியாமல் என் மனம் இவ்வளவு நாள், எதையோ உருவாக்கிக் கொண்டுள்ளது என்று நினைத்துக் கொண்டேன்.
ஜனகனமண பாடலைப் பாடும் போதும், புரியாத ஒரு மொழியில் ஒரு பக்திப்பாடலைக் கேட்கும் போது மனம் நெகிழ்ந்து உருகும் போதும், இவையெல்லாம் நம் மனமே உருவாக்கிக் கொண்டதுதான் என்று தோன்றியது.
இலக்கிய வாசிப்பில் நம் மனம் ஒரு புத்தகத்தை உருவாக்கிக் கொள்கிறது என்று நீங்கள் சொன்னதன் பொருள் இன்னும் ஆழமாகப் புரிந்த்து.
அன்புடன்,
வி. நாராயணசாமி