‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33

பகுதி ஐந்து : எஞ்சும் கனல்- 3

திரௌபதியின் குடில் அருகே சென்றபோது யுதிஷ்டிரனின் தேர் தயங்கத்தொடங்கியது. அவர் தேரை ஓட்டவில்லை என்றாலும் தேரில் அவருடைய நடைதளர்வு தெரிந்தது. ஊர்பவரின் உள்ளத்தை தேர் பிரதிபலிப்பதை யுயுத்ஸு முன்னரும் கண்டிருந்தான். குடில் முற்றத்தில் தேர் நின்று சற்று நேரமாகியும் யுதிஷ்டிரன் அதிலிருந்து இறங்கவில்லை. தேருக்குப் பின்னால் வந்து புரவியை நிறுத்தி இறங்கி அதன் கழுத்தைத் தட்டியபடி யுயுத்ஸு காத்து நின்றான். யுதிஷ்டிரன் திரை விலக்கி “இங்கு அரசி இருக்கிறாளா?” என்றார். “ஆம் அரசே, இங்குதான் இருக்கிறார்” என்றான் யுயுத்ஸு.

“அவள் எந்நிலையில் இருக்கிறாள் என்று சென்று பார்த்துவிட்டு வந்து கூறுக!” என்றார். யுயுத்ஸு “அரசே, அவர் இங்கு இருக்கிறார். தாங்கள் வருவீர்கள் என்றும் அறிந்திருக்கிறார். ஆகவேதான் வாயிலில் பணிப்பெண் நின்றிருக்கிறாள். தாங்கள் சென்று சந்தித்து கூறுவனவற்றைக் கூறி அவர் சொற்களையும் கேட்டு வரலாம்” என்றான். யுதிஷ்டிரன் அவன் முகத்தையே சில கணங்கள் நோக்கிய பின்னர் “சில தருணங்களில் உன்னுடைய உறுதி எனக்கு ஒவ்வாமையை அளிக்கிறது. நீ என்னை எவ்வாறு மதிப்பிடுகிறாய் என்ற ஐயம்கூட ஏற்படுகிறது” என்றார். யுயுத்ஸு அதற்கு மறுமொழி கூறவில்லை. யுதிஷ்டிரன் சீற்றத்துடன் “அவளை எண்ணி நான் அஞ்சுகிறேன் என்று எண்ணுகிறாயா? அல்லது அவளுக்கு முன் பணிந்துவிடுவேன் என்று கருதுகிறாயா?” என்றார்.

அவர் குரலில் ஒலித்த மிகை அவனை சலிப்புறச் செய்தாலும் யுயுத்ஸு அதற்கு மறுமொழி சொல்லவில்லை. “நான் அரசன்! என் வினாவுக்கு முன் மறுமொழி சொல்லாமலிருக்க எவருக்கும் உரிமையில்லை” என்றார் யுதிஷ்டிரன். “உங்களை இத்தருணத்தில் மூத்தவர் என்றே எண்ணுகிறேன், அரசர் என்று அல்ல” என்று யுயுத்ஸு சொன்னான். மேலும் சீற்றத்துடன் ஏதோ கூற வாயெடுத்த பின் யுதிஷ்டிரன் “உன்னிடமிருப்பது அதே ஆணவம். உனது தந்தையிடமிருந்து வந்தது அது. உன் மூத்தவனிடம் அது வேறுவகையில் சமைந்திருந்தது. நீ நூல்நவின்று சொல்தேர்ந்து பிறிதொன்றாக ஆக்கிக்கொண்டிருக்கிறாய்” என்றபின் தேரிலிருந்து இறங்கி அவனிடம் ஒரு சொல்லும் கூறாமல் குடில் நோக்கி சென்றார்.

அவர் வந்த விசையைக் கண்டு சற்றே அஞ்சிய பணிப்பெண் பதற்றத்துடன் தலைவணங்கினாள். அவளால் முகமன் உரைக்க முடியவில்லை. “அரசி இருக்கிறாரா?” என்று அவர் கேட்டபோது “ஆம் அரசே, உள்ளே இருக்கிறார்… உள்ளே காத்திருக்கிறார்” என்று பணிப்பெண் சொன்னாள். மேலும் தயங்கிய பின் யுதிஷ்டிரன் திரும்பிப் பார்த்து யுயுத்ஸுவிடம் “இளையோனே, நீயும் வா” என்றார். “நான் வருவது உகந்ததல்ல” என்று அவன் சொன்னான். “நீயும் உடனிரு. உரிய முறையில் சொல்லெடுக்க என்னால் இயலாமல் போகலாம். நீ உடனிருப்பது எனக்குத் தேவை இப்போது” என்றார்.

ஒருகணம் எண்ணிய பின் யுதிஷ்டிரன் அருகே சென்று யுயுத்ஸு “வருக!” என்றான். யுதிஷ்டிரன் தலைகுனிந்து குடிலுக்குள் நுழைந்தார். அவரைத் தொடர்ந்து சென்ற யுயுத்ஸு அவருக்குப் பின்னால் வாயிலோரமாக நின்றுகொண்டான். குடிலுக்குள் மறுபக்கத்து சிறுசாளரம் ஒன்று திறந்திருக்க ஒளி சாய்வாக விழுந்து கிடந்தது. தரையிலிருந்து அதன் சுடர் எழுந்து சுவர்களையும் ஒளி கொள்ளச் செய்திருந்தது. திரௌபதி தரையில் விரிக்கப்பட்ட பாயில் அமர்ந்திருந்தாள். யுதிஷ்டிரன் உள்ளே நுழைந்ததும் அவள் எழுந்து தலைவணங்கினாள். பின்னர் யுயுத்ஸுவை திரும்பிப் பார்த்துவிட்டு விழிவிலக்கிக்கொண்டாள்.

யுயுத்ஸு தலைவணங்கி “அரசிக்கு எளியேனுடைய வணக்கம். அஸ்தினபுரியின் அரசர் யுதிஷ்டிரன் தங்களைச் சந்திக்கும் பொருட்டு வந்திருக்கிறார். தங்களிடம் அரசருக்கு அரசமுறையான விண்ணப்பம் ஒன்று உள்ளது” என்றான். விழிசுருக்கி அவனைப் பார்த்தபின் திரௌபதி யுதிஷ்டிரனிடம் “அமர்க!” என்று கைகாட்டினாள். யுதிஷ்டிரன் அது ஒரு முறையான தொடக்கமாக அமைந்தமையால் இயல்புநிலை கொண்டார். அவருடைய உடல் தளர்வதை காணமுடிந்தது. அவர் பாயில் அமர்ந்துகொள்ள அவள் சற்று அப்பால் சென்று தூண் சாய்ந்து நின்றாள். மேலும் பேசும்படி கோரிக்கையுடன் யுதிஷ்டிரன் யுயுத்ஸுவை பார்த்தார்.

யுயுத்ஸு “அரசி, இங்கு நீத்தார்கடனுக்காக நாம் வந்து தங்கியிருப்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். நீர்க்கடன்கள் நாளை காலை தொடங்கவேண்டும் என்று அந்தண முதல்வரான தௌம்யரின் ஆணை. அனைத்து ஒருக்கங்களும் முடிந்துவிட்டிருக்கின்றன. நீர்க்கடன்கள் முற்றிலும் ஆண்களால் செய்யப்படுபவை என அறிந்திருப்பீர்கள். ஆயினும் நோன்பு கொண்டு சொல்லளித்து ஆண்களை இல்லத்திலிருந்து வழியனுப்பும் கடமை ஒன்று இல்ல மகளிருக்கு உள்ளது. அரசியாக தாங்கள் அவற்றை இயற்றுவது தங்கள் கடமை. எனினும் அரசரென தங்களிடம் அதை உரைப்பது முறை என்பதால் அரசர் வந்திருக்கிறார்” என்றான்.

“நீர்க்கடன்கள் முடிக்கையில் நாம் போரை முடித்துக்கொள்கிறோம் அல்லவா?” என்று திரௌபதி சொன்னாள். யுதிஷ்டிரன் பதறிய குரலில் “என்ன சொல்கிறாய்? இப்போது போர் முடியவில்லையா என்ன? நாம் அடைந்த இழப்பு போதாதா?” என்றார். அந்தச் சொல்முந்துதலால் யுயுத்ஸு உருவாக்கிய அனைத்து பேச்சுச்சூழலையும் கலைத்தவராக நடுங்கும் குரலில் “நாம் அடைந்த துயரை தெய்வங்களும் கண்டு அஞ்சும்… இதற்குமேல் என்ன?” என்றார். திரௌபதி “நாம் அடைந்த இழப்பினால்தான் போர் இன்னமும் முடியாமலிருக்கிறது. வெற்றி முழுமைப்படும் வரை போர் முடிய நான் ஒப்பமாட்டேன்” என்றாள்.

யுதிஷ்டிரன் முற்றிலும் நிலைமறந்தார். “இனி என்ன வெற்றி உனக்கு வேண்டியிருக்கிறது? படை கொண்டு பாரதவர்ஷத்தை வெல்ல நினைக்கிறாயா? அல்லது பாஞ்சாலத்திற்குச் சென்று அங்குள்ள உன் இளையோனையும் வென்று நாட்டை கொள்ளவிருக்கிறாயா?” என்றார். திரௌபதி “என் மைந்தரைக் கொன்றவர்கள் எஞ்சியிருக்கிறார்கள்” என்று சொன்னாள். யுதிஷ்டிரன் அதைக் கேட்டதும் அதை முன்னரே அறிந்திருந்தவர்போல் குன்றி நோக்கை விலக்கிக்கொண்டார். யுயுத்ஸு அவரே பேசட்டும் என்று காத்திருந்தான். “அவர்கள் இருக்கும்வரை போர் முடிவதில்லை. அவர்களின் குருதி வந்து சேரும் வரை இங்கு நீர்க்கடன் தொடங்கப்போவதும் இல்லை” என்றாள் திரௌபதி.

“அது இயலாது” என்று உரத்த குரலில் கூறியபடி யுதிஷ்டிரன் எழுந்தார். “இங்கு நின்று நீ அறைகூவலாம். அது அவ்வளவு எளிதல்ல என்று அறிக! கிருதவர்மன் யாதவர்களுடன் சென்று சேர்ந்திருக்கிறான். அவர்கள் இன்னும் பெரும் எண்ணிக்கையில் எஞ்சியிருக்கிறார்கள். நம்மிடம் அவர்களை எதிர்க்கும் அளவுக்கு படைகள் இன்று இல்லை. இன்னும் பல காலம் யாதவர்கள் பாரதவர்ஷத்தில் ஆற்றல் மிக்கவர்களாகவே நீடிப்பார்கள்… கிருபர் சென்றிருப்பது அவர் தந்தையின் குருநிலைக்கு. சரத்வானின் குருவழியினர் பாரதவர்ஷத்தின் மாபெரும் வில்லவர்கள். அவர்களை வெல்ல பார்த்தனாலும் இயலாது.”

“மேலும் அங்கு அவர் தன் தந்தையுடன் இணைந்து ஊழ்கத்திலிருப்பார் எனில் அவரைச் சென்று வெல்வது நெறியே அல்ல. முனிவர்களுக்கு எதிரான போர் என்பது இன்னும் எந்த அரசகுடியாலும் ஒப்புக்கொள்ளப்பட்டதல்ல. அவ்வண்ணம் ஒன்று நிகழ்ந்த பின் நான் அந்தணர் வாழ்த்துபெற்று அரியணை அமரவே முடியாது” என்றார் யுதிஷ்டிரன். “அஸ்வத்தாமன் எங்கிருக்கிறான் என்றே தெரியாது. பிருகு குலத்தவர் அவனை தங்களவன் என்று எண்ணுகிறார்கள். முக்கண் முதல்வனின் அருள் கொண்டவனென்று அவனைப் பற்றி சூதர்கள் பாடுகிறார்கள். அனல்குலத்து ஷத்ரியர்களின் ஆதரவு அவனுக்கு இருக்கும் என்றால் அவனைத் தொடர்ந்து சென்று வென்று வருவது இப்போது இயல்வதல்ல.”

“ஒன்று அறிந்துகொள் கிருஷ்ணை, இப்போது நமக்கு படையென்று ஏதுமில்லை. நமக்கு உதவியாக பாஞ்சாலமும் துவாரகையும் இல்லை. எந்நிலையிலும் இன்று ஒரு சிறு போரைக்கூட எடுக்கும் ஆற்றல் கொண்டவர்கள் அல்ல நாம். உண்மையை உரைப்பதென்றால் பாரதவர்ஷத்தின் பிற அரசுகளும் நம்மைப்போல் சிதைந்திருப்பதனால் மட்டுமே நாம் ஒரு அரசு என்று நீடிக்க இயல்கிறது. தெற்கிலிருந்தோ எல்லைக்கு அப்பாலிருந்தோ யவனர்களோ திருவிடத்தவர்களோ நம் மீது படையெடுத்து வருவார்களெனில் அஸ்தினபுரியும் இந்திரப்பிரஸ்தமும் அவர்களுக்கு அடிமையாவதன்றி வேறு வழியில்லை. நீ அரசி. எளிய பெண்போல் பேசுவது முறையல்ல. உன் சொற்களுக்கு இருக்கும் மதிப்பென்ன என்று உணர்ந்துகொள்” என்று யுதிஷ்டிரன் சொன்னார்.

“நான் அறிவேன்” என்று திரௌபதி கூறினாள். “அனைத்தையும் நான் நன்கறிவேன். ஆம், கிருபரையும் கிருதவர்மனையும் நம்மால் இப்போது வெல்ல இயலாது. கிருபர் நம்மிடமே வருவார், பிழையுணர்ந்து பணிவார். அன்று அவரிடம் சொல்வதற்கு சில சொற்களை நான் கருதியிருக்கிறேன். கிருதவர்மனை எவ்வாறு அழிப்பதென்று நான் அறிவேன். அவன் குருதியை நான் காண்பேன். நான் வெல்ல விரும்புவது அஸ்வத்தாமனை. என் மைந்தரைக் கொன்ற பின் அவன் தருக்கி நின்றிருப்பானெனில் இங்கு அரசியென நான் இருப்பதில் பொருளில்லை. என் மைந்தரின் குருதிக்கு பழிநிகர் செய்தாகவேண்டும்.”

யுதிஷ்டிரன் குரல் தழைய “ஒன்று புரிந்துகொள். அளிகூர்ந்து உளம்கொள். அவனை இப்போது நாம் தேடிச்சென்றால்கூட கண்டடைவதற்கு ஓராண்டாகலாம். அதற்கும் நாள் மீறலாம். அதற்கப்பால்தான் நீர்க்கடன் எனில் நீத்தார் அனைவரும் மூச்சுவெளியில் நின்றிருக்க வேண்டியிருக்கும். நம் மைந்தர்கள் அஸ்வத்தாமன் மேல் வஞ்சம் கொண்டிருப்பார்கள் எனில் ஒரு களம் அமைத்து அவர்களிடமே உசாவலாம். அவர்கள் உரைக்கட்டும், அவ்வஞ்சினம் நிறைவேற்றப்பட வேண்டுமென்று. அதன் பின்னரே விண்புகுவோம் என அவர்கள் சொன்னால் அவ்வாறே ஆகுக!” என்றார்.

“அவர்களிடம் வஞ்சினம் இருப்பதில்லை” என்று திரௌபதி சொன்னாள். “அவர்கள் விண்ணிலேறியதுமே மண்ணிலிருக்கும் அனைத்து வஞ்சங்களையும் கடந்து சென்றுவிட்டிருப்பார்கள். இங்கிருக்கையிலேயே வஞ்சமற்றவர்களாகவே அவர்கள் இருந்தார்கள். இளமையின் உளத்தூய்மையை அவர்கள் கடக்கவே இல்லை. வஞ்சமிருப்பது என்னிடம். இங்கு அரசியென நான் நின்றிருக்க வேண்டும் என்பதற்காக நான் கொள்ளும் வஞ்சம் இது.” “அவ்வண்ணமெனினும்கூட எவ்வாறு அவனை வெல்ல இயலும்? சொல், அவன் நீடுவாழி என்று அறிந்திருப்பாய்” என்று யுதிஷ்டிரன் சொன்னார்.

“அவனை நாம் கொல்ல முடியாதென்று மட்டுமே அதற்குப் பொருள்” என்று திரௌபதி சொன்னாள். “அவனை வென்றாகவேண்டும். அவன் தருக்கி நின்றிருப்பது அவனுடைய நுதல்மணியால். அதை இழந்தால் அவன் விழியற்றவன். அந்த நுதல்மணி இங்கு வரட்டும். அதை கொண்டுவந்து என் மைந்தர்களுக்கு நீர்க்கடன் செய்யுமிடத்தில் வைப்பேன். அதன் பின்னரே இங்கு நீர்க்கடன் நிகழும்” என்றாள். மூச்சிரைக்க ஒரு அடி முன்னால் வந்து “அதன் பின் அஸ்வத்தாமனின் சாவின்மையே அவனுக்கான பெருந்தண்டனை ஆகும். ஆறாத புண்ணுடன் அழிவிலா வலியுடன் இங்கே காலமில்லாது வாழ்வான் அவன்…” என்றாள். யுயுத்ஸு நடுக்குற்றான். அவளிடமிருந்து நோக்கை விலக்கிக்கொண்டான்.

“அது அவ்வளவு எளிதல்ல. இன்றைய நிலையில் அஸ்வத்தாமனை வெல்ல அர்ஜுனனாலும் இயலாது. நீ அறிந்திருப்பாய், அவனுடைய காண்டீபம் நிலை தாழ்ந்திருக்கிறது. ஒரு சொல்லெடுப்பதற்கே அவன் தயங்குகிறான். இந்நிலையில் அவனிடம் சென்று போருக்கு அறைகூவுவதென்பது இறப்பை அழைப்பது. ஒருவேளை…” என்றபின் யுதிஷ்டிரன் பற்களைக் கடித்து “அதை என் நாவால் சொல்லவேண்டியிருக்கிறது. ஒருவேளை என் இளையோன் கொல்லப்படுவானென்றால்… எண்ணுக, மைந்தரை இழந்து, சுற்றத்தையும் இழந்து இருக்கும் எனக்கு எஞ்சிய ஒரே ஆறுதல் என் ஐந்து உடன் பிறந்தாரும் உடனிருக்கிறார்கள் என்பதுதான்” என்றார்.

அவர் குரல் உயர்ந்தது. “இல்லை, அர்ஜுனனை கொண்டுசென்று அஸ்வத்தாமன் வில்லுக்கு முன்னால் நிறுத்த நான் ஒப்பமாட்டேன்… இது நிகழாது” என்றார். “எனில் இங்கு நீர்க்கடன் நிகழாது. நீங்கள் உங்கள் குருதியினருக்கு நீர்க்கடன் நிகழ்த்தலாம். உங்கள் படைகளுக்கும் பிறருக்கும். என் ஐந்து மைந்தருக்கு மட்டும் நீர்க்கடன் எஞ்சியிருக்கட்டும்” என்றாள் திரௌபதி. யுதிஷ்டிரன் சீற்றத்துடன் “அவர்கள் என் மைந்தர்… என்ன சொல்கிறாய்?” என்று கூவினார். “அவர்கள் முதலில் என் மைந்தர். இந்த நீரொப்புதலுக்கு என்ன பொருள் என்று அறிவீர்கள் அல்லவா? இறுதியாக நான் கூறுவது அது. ஆம், இவ்வைந்து மைந்தருக்கும் தந்தையர் நீங்களே என்று அதற்குப் பொருள். அதை நான் கூறமாட்டேன்” என்றாள் திரௌபதி.

“இழிவு செய்கிறாயா என்னை?” என்றார் யுதிஷ்டிரன். உடைந்த குரலில் “எங்கள் மைந்தர் அல்ல என்று சொல்லி அவர்களை இழிவுசெய்கிறாயா?” என்றார். திரௌபதி “இல்லை. தந்தையரெனில் நீங்கள் சென்று பழிநிகர் கொள்க! அதன் பொருட்டு எவர் இறப்பினும் எனக்கு பொருட்டில்லை. அஸ்வத்தாமன் தோற்கடிக்கப்பட்டாகவேண்டும். அவனுடைய நுதல்மணி இங்கு வந்தாகவேண்டும். அவன் மீளா நரகுக்குச் சென்றாகவேண்டும். அதன் பின்னரே என் மைந்தருக்கான நீர்க்கடன்கள் இங்கு நிகழும்” என்று சொன்னாள். நீர் பரவிய விழிகளால் நோக்கி “இனி ஒரு சொல்லும் என்னிடம் இதைப்பற்றி உரைக்கவேண்டியதில்லை” என்றாள்.

“எனில் இதை நீயே அர்ஜுனனிடம் கூறுக!” என்றார் யுதிஷ்டிரன். “அவனைக் கொன்ற பழியையும் நீயே சூடுக!” திரௌபதி “எவரிடமும் நான் கூறுவேன். ஆனால் அரசரென ஆணையிடவேண்டியவர் நீங்களே. உங்கள் இளையோனிடம் நீங்கள் ஆணையிடுங்கள். அவ்வாணையை அவர் மீறுவாரெனில் அது உங்களுக்கும் அவருக்குமான பூசல். என் சொற்களை உரைத்துவிட்டேன்” என்றபின் திரௌபதி தலைவணங்கினாள்.

யுதிஷ்டிரன் அவளை நோக்கியபடியே நின்றார். அவரது உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. உதடுகள் மேலும் மேலும் ஏதோ சொல்வதற்கென விரும்பின. யுயுத்ஸு ஒரு அடி முன்னால் வைத்து “அரசே, கிளம்புவோம்” என்றான். அவர் திரும்பி அவனைப் பார்த்த பின் “ஆம்” என்று தலைவணங்கி அவனுடன் வந்தார்.

 

யுயுத்ஸுவுடன் வெளியே வரும்போது யுதிஷ்டிரன் ஒரு சொல்லும் உரைக்கவில்லை. தேரை அணுகி அதன் படியில் கைவைத்து நின்று சில எண்ணி திரும்பி யுயுத்ஸுவிடம் “இதை அறிந்துதான் நீ என்னை அழைத்து வந்தாயா?” என்றார். “ஆம் அரசே, இதை அவரே உங்களிடம் சொல்ல வேண்டும் என்று தோன்றியது” என்றான் யுயுத்ஸு. யுதிஷ்டிரன் பல்லைக் கடித்து “ஒருநாள்… வாழ்வில் ஒரே ஒருநாள் உவகையுடன் இருந்தேன். எங்கோ தெய்வங்கள் என்னிடம் வஞ்சம் கொண்டிருக்கின்றன” என்றார். “அந்த ஒருநாளின் பொருட்டு தெய்வங்களிடம் நன்றியுடன் இருக்கலாம்” என்றான் யுயுத்ஸு.

“அது ஒருநாள் மாயை. எந்த நோய்க்கும் சிறிய இடைவெளிகள் அளித்து தெய்வங்கள் நம்மை ஆறுதல்படுத்துகின்றன” என்றார் யுதிஷ்டிரன். யுயுத்ஸு புன்னகை புரிந்து “மேலும் துயருக்கு ஒருக்குகின்றன என்கிறீர்களா?” என்றான். “தெய்வங்களிடம் நாம் பேரம் பேசமுடியாது. அளிப்பதை பெறுமிடத்தில் நாமிருக்கிறோம்” என்றபின் யுதிஷ்டிரன் “கிளம்புவோம்” என்று திரும்பிக்கொண்டார். இருக்கையில் அமர்ந்து திரையை மூடிய யுதிஷ்டிரன் பெருமூச்சுவிடுவதை யுயுத்ஸு கேட்டான். அவருடைய தலை உள்ளே அசைந்து தேர்க்கூண்டில் முட்டிக்கொண்டிருப்பதை அவன் உணர்ந்தான்.

தன் குடிலருகே அணுகி தேரிலிருந்து இறங்கி நின்றதும் மீண்டும் அவனைப் பார்த்து “இதை நீ ஏன் செய்தாய்? ஒரு வேளை இத்தருணத்தில் நான் சென்று அவளை பார்க்காமல் இருந்தால் இத்தனை அறுதியாக அவள் இதை சொல்லியிருக்க வாய்ப்பில்லை” என்றார் யுதிஷ்டிரன். “அவர் முன்னரே முடிவெடுத்துவிட்டார்” என்று யுயுத்ஸு சொன்னான். “எனில் நீ என்னை அழைத்துச் சென்றிருக்கக் கூடாது. இளையோனை அழைத்துச் சென்றிருக்க வேண்டும். இப்போது ஆணையிடும் பணியை என் மேல் சுமத்திவிட்டாய்” என்றார் யுதிஷ்டிரன். “நீங்கள் அரசர். நீங்கள் ஆணையிட்டாகவேண்டும்” என்றான் யுயுத்ஸு.

ஒருகணம் விழி தழைய எண்ணம் ஓட்டிய பின் “நீ என்ன நினைக்கிறாய்? நான் அவனிடம் இதை ஆணையிட வேண்டுமா?” என்றார் யுதிஷ்டிரன். “ஆணையிட்டாக வேண்டும். வேறு வழியில்லை” என்றபின் யுயுத்ஸு “வருக!” என்றான். குடிலுக்குள் நுழைந்து தன் பீடத்தில் அமர்ந்துகொண்டு “சகதேவனை வரச்சொல்” என்றார் யுதிஷ்டிரன். “இதை நீங்கள் அவரிடம் கலந்து உசாவ வேண்டியதில்லை” என்றான் யுயுத்ஸு. “பிற அனைத்திலும் அவர் கூறுவது முறையாக இருக்கும். ஆனால் இதில் அல்ல. அவர்கள் அனைவரும் போரில் இருந்து உளம் விலகியிருக்கிறார்கள்.”

யுயுத்ஸுவை சில கணங்கள் நோக்கிய பின் “அர்ஜுனனிடம் இதை இப்போதே நான் கூறவேண்டுமா?” என்றார் யுதிஷ்டிரன். “ஆம், இப்போதே ஆணையிட வேண்டும். இன்றே அவர் கிளம்பிச்சென்றும் ஆகவேண்டும். எனில் மட்டுமே நாளை தௌம்யரிடம் கூற முடியும்” என்றான் யுயுத்ஸு. யுதிஷ்டிரன் “தௌம்யரிடம் எப்படி கூறுவதென்று எனக்குத் தெரியவில்லை” என்றார். “அவரிடம் நான் கூறிவிடுகிறேன். அனைவரிடமும் அவர் கூறட்டும். அதற்கு முன் உங்கள் இளையோனிடம் நீங்கள் ஆணையிடுங்கள்” என்றான் யுயுத்ஸு.

யுயுத்ஸுவை நோக்கி “இளையோனே, என் முகத்தை நோக்கி நீ சொல். இப்போரில் அர்ஜுனன் வெல்ல இயலுமா? அஸ்வத்தாமனின் நுதல்மணியுடன் அவன் திரும்பி வர முடியுமா?” என்றார் யுதிஷ்டிரன். “அவர் இதுவரை எங்கும் தோற்கவில்லை” என்று யுயுத்ஸு சொன்னான். “ஆகவே இனியும் வெல்வார்.” திகைப்புடன் “ஏன்?” என்று யுதிஷ்டிரன் கேட்டார். “வெல்லற்கரியவனின் கருவி அவர். அவர் போருக்குச் செல்வதா வேண்டாமா என்பதை முடிவெடுக்க வேண்டியவர்கள் நாமல்ல, இளைய யாதவர் மட்டுமே. அவரிடம் நாம் உரைப்போம். இளைய யாதவரிடம் பார்த்தன் சொல்பெற்றுச் செல்வார் எனில் வெல்வார். அவருடைய படைக்கலம் அச்சொல் மட்டுமே. அது மட்டும் இருந்தால் போதும்” என்று யுயுத்ஸு சொன்னான்.

யுதிஷ்டிரன் எளிதாக உள்ளம் மீண்டார். “உனது உளம் ஓடும் திசை எனக்குப் புரியவில்லை. ஆனால் பிற எவரையும்விட உன்னைச் சார்ந்திருப்பது எனக்கு எளிதாக இருக்கிறது” என்றார். அவன் சற்று நகைத்தான். யுதிஷ்டிரன் “விந்தை இதுதான். இன்று அஸ்தினபுரியும் இந்திரப்பிரஸ்தமும் உனது ஆட்சியிலிருக்கிறது. கௌரவ நூற்றுவரையும் வென்று இளைய கௌரவனாகிய உன்னிடம் மண்ணை ஒப்படைத்திருக்கிறோம். இதோ என் ஊழையும் உன்னிடமே அளித்திருக்கிறேன்” என்றார். யுயுத்ஸு “அதுவும் நன்றே. மண்ணுக்கான அனைத்து போர்களும் மண்ணில் எப்பற்றும் இல்லாதவரிடமே அதை கொண்டுவந்து சேர்க்கின்றன” என்றான்.

“மெய்யாகவே உனக்கு மண்ணில் பற்றில்லையா?” என்று யுதிஷ்டிரன் கேட்டார். “இரு நகரங்களும் குடிகளும் உன் சொல்லுக்கு கட்டுப்பட்டிருக்கின்றன இன்று. கோன்மையில் உனக்கு துளியும் உளமகிழ்வில்லையா?” அவன் விழிகளை நேர்நோக்கி “உன் தந்தை உனக்கு அளிக்க மறுத்த இளவரசுப் பட்டத்தைத் தாண்டி இன்று அரசருக்குரிய இடத்தில் இருக்கிறாய். உன் அன்னைக்கு அளிக்கப்படாத அரசி பட்டத்தை உனது மனைவி அடையக்கூடும். இவ்வளவும் உன்னை மகிழ்விக்கவில்லையா?” என்றார். “இல்லை” என்று அவன் சொன்னான். “ஏன்?” என்று யுதிஷ்டிரன் கேட்டார். “இயல்பாகவே அவ்வாறு தோன்றவில்லை. இது என்னுடையதல்ல என்று மட்டுமே தோன்றுகிறது. உண்மையில் உளமகிழ்வடைவதற்கும் தருக்குவதற்கும் நான் முயன்றதுகூட உண்டு.”

“நாள் செல்லச் செல்ல கை பழகும், உள்ளமும் பழகும்” என்றார் யுதிஷ்டிரன். “பழகாதென்றே உணர்கிறேன். நாளையும் அதன் மேல் பிறன் என்றே அமர்ந்திருப்பேன்” என்றான் யுயுத்ஸு. யுதிஷ்டிரன் சில கணங்கள் பார்த்துவிட்டு “செல்க, இளையோனை வரச்சொல்க!” என்றார். தலைவணங்கி யுயுத்ஸு வெளியே செல்ல திரும்பினான். யுதிஷ்டிரன் “இளையோனே, நீயே அர்ஜுனனிடம் என் சொல்லை கூறுக!” என்றார். “நானா? என் சொல்லில் அது எழலாகாது” என்றான் யுயுத்ஸு. “நீ சொல்வதே முறை என தோன்றுகிறது. இது என் ஆணை” என்றார் யுதிஷ்டிரன். யுயுத்ஸு தயக்கமாக “அரசே, உங்கள் ஆணையென எழவேண்டியது இளையோருக்குரிய கடமை” என்றான்.

“ஆம், அதைத்தான் எண்ணுகிறேன்” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “நான் ஆணையிட்டால் அதை அவன் தலைமேற்கொள்ளவேண்டும். இன்று அவன் இருக்கும் நிலை என்ன என்று எனக்குத் தெரியாது. நான் நேரில் சொல்லாமல் என்னிடம் திரௌபதி கேட்ட சொல் இது என்று மட்டும் நீ அவனிடம் சொன்னால் அவனால் இதை மறுக்கமுடியும். அவன் மறுப்பான் என்றால் எனக்கும் அது உடன்பாடானதே” என்றார் யுதிஷ்டிரன். “அவர் மறுப்பார் என நினைக்கிறீர்களா?” என்றான் யுயுத்ஸு. யுதிஷ்டிரன் வெறுமனே நோக்கினார். “அவர் உங்கள் சொல்லை கடக்கமாட்டார் என நன்கறிவீர்கள்” என்றான் யுயுத்ஸு. யுதிஷ்டிரன் சீற்றம்கொண்டு “எனில் ஏன் இதை உன்னிடம் சொல்கிறேன்? அவனை நான் அஞ்சுகிறேனா?” என்றார்.

“ஆம்” என்றான் யுயுத்ஸு. யுதிஷ்டிரன் திகைத்தார். “நான்கு இளையோரையும் அஞ்சுகிறீர்கள். அவர்கள் இழிசொல் கூறிவிடக்கூடும் என, கிளர்ந்தெழுந்து படைக்கலம் எடுக்கவும்கூடும் என அஞ்சுகிறீர்கள்.” யுதிஷ்டிரன் “நீ யார்? ஏன் என்னிடம் இந்த உரிமையை எடுத்துக்கொள்கிறாய்?” என்று கூவினார். “நான் உங்கள் இளையோன், உங்களால் அஞ்சப்படாத ஒருவன்” என்று யுயுத்ஸு புன்னகைத்தான். யுதிஷ்டிரன் தலைநடுங்க, உதடுகள் விதும்ப அவனை நோக்கிக்கொண்டிருந்தார். பின்னர் பெருமூச்சுடன் தளர்ந்து “செல்க! என் சூழலை அவனிடம் உரிய முறையில் விளக்குக!” என்றார். யுயுத்ஸு “ஆணை” என தலைவணங்கி வெளியேறினான்.

முந்தைய கட்டுரைசுப்பு ரெட்டியார் கடிதங்கள்
அடுத்த கட்டுரைநிலம்- கடிதம்