அஞ்சலி : ஹெரால்ட் ப்ளூம்

 

ஐயமின்றி இந்நூற்றாண்டின் தலைசிறந்த இலக்கியவிமர்சகர் என்று ஹரால்ட் ப்ளூமைச் சொல்லமுடியும். பலதருணங்களில் நான் அவரை மேற்கோள் காட்டியிருக்கிறேன். என் சிந்தனைகள்மேல் முதன்மைச் செல்வாக்கு கொண்ட ஐரோப்பிய –அமெரிக்க இலக்கியவாதிகளில் ஒருவர். அவருடைய இலக்கிய மதிப்பீடுகளும் என் மதிப்பீடுகளும் ஏறத்தாழ சமானமானவை – ஐரோப்பிய இலக்கிய ஆக்கங்களைப் பொறுத்தவரை

 

இலக்கியத்தின்மேல் வெவ்வேறு ஆதிக்கங்கள் எப்போதும் செயல்பட்டுள்ளன. சென்றகாலகட்டத்தில் மதம். அதன்பின் அரசியல்கோட்பாடுகள். அவை இலக்கியத்தை வரையறுக்க, கட்டுப்படுத்த, மடைமாற்ற, தரப்படுத்த எப்போதுமே முயன்றுவந்தன.  ஏனென்றால் இலக்கியம் எப்போதுமே தன்னிச்சையான போக்கு கொண்டது, வரைமுறைப்படுத்த முடியாதது, அதேசமயம் வெளித்தெரியாத பேராற்றல் கொண்டது. பாமரர்களுக்கு அது பொதுவான அறிவியக்கத்துடன் தொடர்பற்ற ஒரு தனித்த போக்கு என தோன்றும், ஆனால் வரலாற்றையும் இலக்கியத்தையும் அறிந்தவர்கள் அது மகத்தான ஆக்கவிசை  என அறிந்திருப்பார்கள். ஆகவே அதை தங்கள் ஆட்சிசெய்ய எண்ணுவார்கள்.

 

இலக்கியம் மீதான மதத்தின் ஆட்சியை முறியடித்தவர்கள் என சாமுவேல் ஜான்ஸன், வால்டர் ஸ்காட் முதல் ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் வரையிலான பிரிட்டிஷ் விமர்சகர்களைச் சொல்லமுடியும். இலக்கியம் மீதான அரசியல்கோட்பாட்டாளர்களின் ஆக்ரமிப்பை வென்றவர்கள் என எஸ்ரா பவுண்ட், எலியட் முதல் அமெரிக்கப் புதுத்திறனாய்வாளர்களான கிளிந்த் புரூக்ஸ் வரையிலானவர்களைச் சொல்லமுடியும். இலக்கியம் என்னும் கட்டற்ற, ஆழுளம் சார்ந்த, ஆகவே அறிவெதிர்ப்புத்தன்மையை அடிப்படையாகக்கொண்ட இயக்கத்தின் அறிவார்ந்த முகங்கள் அவர்கள். அறிவார்ந்த மொழியில் அறிவுச்சார்பின் எல்லைகளைப்பற்றிப் பேசியவர்கள்.

 

சென்ற ஐம்பதாண்டுகளில் கல்வித்துறையாளர்கள் இலக்கியத்தை கிட்டத்தட்ட ‘கைப்பற்றி’ விட்ட நிலை உள்ளது. அதற்கு முதன்மைக்காரணம் மேலைச்சூழலில் வாசிப்பு என்பது இரண்டாகப்பிரிந்துவிட்டது. பெருவாரியாக வாசிக்கப்படுவனவற்றை மிகப்பெரிய நிறுவனங்கள் உற்பத்திசெய்து விளம்பரம்செய்து வினியோகிக்கின்றன. நுகர்பொருள் போலவே அவை மிகப்பெரிய அளவில் விற்கப்படுகின்றன. விற்பனையே அவற்றை மதிப்பிடும் முதன்மை அளவுகோல். மிகப்பெரும்பாலான ஐரோப்பிய, அமெரிக்க நூல்களின் பின்னட்டைக்குறிப்பு அவை எந்த அளவுக்கு விற்றன, அந்த ஆசிரியர் எந்த அளவுக்கு விற்பனை கொண்டவர் என்பதையே முதன்மையாகச் சுட்டுகின்றன. குறைவாக வாசிக்கப்படும் படைப்புக்களுக்கு எந்த மதிப்பும் பொதுத்தளத்தில் இன்றில்லை. இலக்கியப்படைப்புகள் விற்கப்படவேண்டும் என்றால் கல்வித்துறையால், ஊடகத்தால் அவை திட்டமிட்டு முன்னிறுத்தப்படவேண்டும். தன்னியல்பான வாசிப்பு – ஏற்பு என்ற நிலையே மறைந்துவிட்டது.

 

ஆகவே சீரியஇலக்கியம் இன்று பொதுமக்களுக்குத் தொடர்பற்ற ஒரு தளத்தில், பெரும்பாலும் கல்விச்சூழலிலேயே புழங்கும்நிலை  உருவாகியுள்ளது. முன்னர் நான் சந்தித்த ஒரு அமெரிக்கப் பேராசிரியர், அவரே கல்வித்துறை ஆய்வாளர்தான், இதைச் சுட்டினார். ‘முன்பெல்லாம் இலக்கியப்படைப்பு பற்றி கல்வித்துறையினரின் கருத்து என்பது ஒரு தரப்பு மட்டுமே. பொதுவாசிப்பின் தரப்பே மையமானது. ஏனென்றால் இலக்கியவாசகர் என ஒர் ஆளுமை அன்றிருந்தார். தன் மகிழ்ச்சிக்காகவும் அறிவார்ந்த தேடலுக்காகவும், தன் ஆன்மீகநிறைவுக்காகவும் வாசிப்பவர் அவர். அல்லது அப்படி ஒருவரை உருவகம்செய்துகொள்ளத்தக்க சூழல் அன்றிருந்தது. அது ஒரு நாணயம் போல. அதன் மதிப்பு என்பது அது புழக்கத்தில் உள்ளது என்பதனால் உருவாவது. சட்டென்று அது இல்லாமலாகிவிட்டிருக்கிறது. அப்படி ஒருவாசகர் இன்றில்லை என்றே தோன்றுகிறது. இச்சூழலில் கல்வித்துறை சார்ந்த தரப்பு மட்டுமே இலக்கியத்தை மதிப்பிடுவதாக மாறிவிட்டிருக்கிறது”

 

கல்வித்துறை பற்றியும் அவர் சொன்னார். “எழுபது எண்பதுகளில் மானுடவியலுக்கும் மொழியியலுக்கும் அமெரிக்கக் கல்வித்துறைக்கு தொழில்துறையின் நிதி குவிந்தது. அரசியல்கோட்ட்பாட்டாய்வுகளுக்கு எப்போதுமே அரசுத்துறை நிதியுதவி உண்டு. ஆகவே இத்துறைகள் பொருத்தமற்ற வளர்ச்சி அடைந்தன. அவை இலக்கியம் தத்துவம் போன்றவற்றை தேவைக்குமேல் ஊடுருவின. கல்வித்துறை இன்று பிரம்மாண்டமாக மாறிவிட்டது. அது தனக்குள் விவாதித்து தன்னுள்ளேயே சுழன்றுவருகிறது. மீறல், புரட்சி, கலகம், கிறுக்குத்தனம் எல்லாம்கூட கல்வித்துறையின் வரையறைக்குள் நிகழும் பேசுபொருட்களாக மாறிவிட்டன. இன்று எந்த எழுத்தாளராயினும் கல்வித்துறை ஆதரவைப் பெற்றாகவேண்டும். ஒரு கருத்தைச் சொல்பவரின் கல்வித்துறை சார்ந்த தகுதி முக்கியமானதாக ஆகிவிட்டிருக்கிறது. இதுதான் உண்மையான சிக்கலாக இன்று உள்ளது”

 

நான் அவரிடம் கேட்டேன், ‘ஏன் கல்வித்துறையாளரின் தகுதிக்குறைவு என்ன?” அவர் சிரித்து “தகுதி என சில அவருக்கு உண்டு. தகுதிக்குறைவு  என்பது இதுவே. அவர் முறைமைப்படுத்தப்பட்டவர், அதாவது தன் அகத்தைச் சார்ந்து அல்லாமல் அமைப்பாக்கம் செய்யப்பட்ட சிந்தனைகளைச் சார்ந்து புறவயமாகச் சிந்திக்க பயிற்றுவிக்கப்பட்டவர். அதாவது அவர் தன்வயப்பட்ட தனித்தேடலுக்குரிய சுதந்திரத்தை இழந்து கல்வியாளராக ஆனவர்” என்றார். என் கருத்தையும் அவ்வாறே உருவாக்கியிருந்தேன்.

 

அமெரிக்க- ஐரோப்பியச் சூழலில் இலக்கியத்தின்மேல் செலுத்தப்படும் கல்வித்துறையினரின் மேலாதிக்கத்திற்கு எதிரான பெருங்குரல் என ஹரால்ட் ப்ளூமை மதிப்பிடுவேன். ஹரால்ட் ப்ளூம் அவரே ஒரு கல்வியாளர்தான். 1955 முதல் 2019 வரை யேல் பல்கலையில் ஆங்கிலம் பயிற்றுவித்தார். ஒருவகையில் அவர் பழைய ‘தூய்மைவாத’ ஆங்கில ஆசிரியர். ஆகவே இலக்கியத்தில் பிற அறிவுத்துறைகளின் செல்வாக்கை எதிர்த்தார். இலக்கியத்தை இலக்கியத்துக்குள் இருந்து மதிப்பிட முயன்றார்.

 

ஆனால் இவ்வாறென்றால் அவருக்கு இன்றிருக்கும் முக்கியத்துவம் உருவாகியிருக்காது. அவர் இலக்கியப்படைப்பை அந்தரங்கமாக மதிப்பிட முயன்றார். தன் ரசனைசார்ந்து, தன் உணர்வுகள் சார்ந்து, தன் வாழ்வனுபவங்கள்சார்ந்து, தன் ஆன்மிகம் சார்ந்து புரிந்துகொள்ளவும் ஏற்பும் மறுப்பும் கொள்ளவும், எண்ணிமேலே செல்லவும் தொடர்ச்சியாக முயன்றார். ஆகவே தன் பயணத்திற்கான ஊர்திகளாக இலக்கியப்படைப்புக்களைக் கொண்டார். மிக இயல்பான, இலக்கியம் எப்படி வாசிக்கப்படவேண்டுமோ அப்படி வாசிக்கப்படுகிற அந்தச் செயலுக்கு என்னென்ன தடை சமகாலச் சூழலில் உள்ளது என பார்த்து அவற்றுக்கு எதிரான கடுமையான கண்டனங்களை முன்வைத்தார். அவ்வாறுதான் அவருடைய இலக்கியவிமர்சனச் செயல்பாடு அமைந்தது.

 

ஹரால்ட் ப்ளூம் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். ஏறத்தாழ எழுபத்தைந்து ஆண்டுக்காலம் நீண்டது அவருடைய இலக்கிய விமர்சன வாழ்க்கை. அதை ஓரிரு மையக்கருத்துக்களில் சுருக்குவது கடினம், புதுமைப்பித்தனின் சொற்களில் சொல்லப்போனால் ‘வேதாந்திகளின் கைக்குச் சிக்காத கடவுளை’ பற்றிப் பேசியவர் அவர். கல்வித்துறை நிபுணர்கள் பன்னிப்பன்னிப் பேசியும் சிக்காத இலக்கியத்தின் ஆழமே அவருடைய பேசுபொருள். அதை சுட்டவே வாழ்நாள் முழுக்க அவர் முயன்றார், விளக்கவோ வரையறுக்கவோ அல்ல.ஆகவே அவர் இலக்கியப்பிரதிகள்மேல் வல்லாதிக்கம் செலுத்தவில்லை. இலக்கியவாதிகளை அறுதியாக வரையறுக்கவில்லை. படைப்புக்களை திரிக்கவும் வளைக்கவும் அதனூடாக தன்னை முன்னிறுத்தவும் முயலவில்லை. அவரிடமிருந்த அந்த தற்புரிதலும் அடக்கமுமே அவரை முதன்மையான இலக்கிய விமர்சகர் ஆக நிலைநிறுத்தின.

 

ஹரால்ட் ப்ளூம் பேசியவற்றை இங்கே விவாதிப்பதற்கு பல தடைகள் உள்ளன. அவர் பேசிய பெரும்பாலான எழுத்துக்கள் ஐரோப்பியப் பேரிலக்கியங்கள். அவர் விவாதித்த களங்களும் தொடர்ச்சியாக மாறிவந்துள்ளன. அவற்றை தேடிச்சென்று வாசிக்கமுயலும் வாசகன் அவரை புரிந்துகொள்ள வேண்டும் என்றால் அவர் முன்வைத்த மூன்று கருத்துருக்களை திறவுகோல்களாகக் கொள்ளலாம். இதை ஒரு தமிழ் வாசகனுக்கான வழிகாட்டிக்குறிப்பாகச் சொல்கிறேன். ஒன்று, வாசகனின் தனிமை. இரண்டு, இலக்கியத்தின் தனித்தன்மை. மூன்று, பேரிலக்கியங்கள் அல்லது இலக்கிய மூலநூல்கள்.

 

இன்று, கல்வித்துறைசார்ந்த இலக்கிய அணுகுமுறை ஒரு கூட்டுவாசிப்பை பயிற்றுவித்து நிலைநிறுத்தியிருக்கிறது. பெரும்பாலும் அரசியல்நிலைபாடுகள் சார்ந்த, சமூகவியல் கருத்துக்கள் சார்ந்த, உளவியல் போன்ற பல்வேறு அறிவுத்துறைகள் சார்ந்த வாசிப்புகள் இவை. அரசியல்சரிநிலைகளுக்கு இவற்றில் மிகப்பெரிய பங்கு உள்ளது. ஐயமிருந்தால் இன்று ஒரு நூல் வந்ததுமே வரும் மதிப்பீடுகளை ஒட்டுமொத்தமாகப் பாருங்கள். ஒரு வாசகனாக தன் மதிப்பீட்டை முன்வைப்பவை அரிது. பெரும்பாலும் தன்னை ஒரு பொது அடையாளமாக வரையறை செய்துகொண்டு பேசுபவையாகவே அவை இருக்கும்

 

உதாரணமாக, ஒரு கருப்பின எழுத்தாளரின் படைப்புக்களை ஒருவர் படிக்கிறார் என வைத்துக்கொள்வோம். அவர் அதை மதிப்பிடுகையில்  அவ்வெழுத்தாளரின் கருப்பின அடையாளத்தை கருத்தில்கொண்டே ஆகவேண்டுமா என்ன? கருத்தில்கொள்வதும் கொள்ளாததும் ஒருவரின் விருப்பம். வாசகனுக்கு அவனுடைய இயல்புசார்ந்தும் தேடல்சார்ந்தும் அப்படைப்பை வாசிக்கவும் மதிப்பிடவும் உரிமை உள்ளது. ஆனால் அவ்வெழுத்தாளர் மீது ஒரு பொது அடையாளம் நிலைநிறுத்தப்பட்டு அந்த நோக்கினால ஒரு கூட்டுவாசிப்பு மட்டுமே மெய்யான வாசிப்பு என நிறுவப்படுகிறது. அவர்மீதான வாசிப்பை ஒருவர் முன்வைத்தால் அவரை கருப்பின எழுத்தாளர்’ என வரையறைசெய்திருக்கும் ஒரு பொதுவாசகக் கூட்டமே எழுந்து வந்து அவரைச் சூழ்ந்துகொள்கிறது.ப்ளூம் ஸ்டீபன் கிங்குக்கு விருது வழங்கப்பட்டபோது அப்படைப்பில் உள்ளவை வாசகரசனைக்காகச் சமைக்கப்பட்டவை என எதிர்த்தார். ஸ்டீபன்கிங் ‘யாரும் சொல்லாத’ குற்றவாழ்க்கையைச் சொல்கிறார், அதை மறுப்பது மேட்டிமைநோக்கு என அவருக்கு மறுமொழி சொல்லப்பட்டது.

 

இப்படி அத்தனை படைப்பாளிகளைப்பற்றியும் ஒருவகை கூட்டு அடையாளம் இன்று கல்வித்துறை மதிப்பீடுகளால் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. பெண்கள்,சிறுபான்மையினர், புலம்பெயர்ந்தவர், மூன்றாம்பாலினத்தோர் என. அந்தந்த அடையாளங்களை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்றும் ஒரு பொதுவரையறையை அறிவுச்சூழலில் பயிற்றுவித்து நிலைநாட்டியிருக்கிறார்கள். உதாரணமாக, ஒரு மூன்றாம்பாலினத்தவர் ஒரு நாவல் எழுதியிருக்கிறார் எனக் கொள்வோம். அது மேலோட்டமான, மிகையுணர்ச்சி சார்ந்த, பழகிப்போன கருத்துநிலைகள் சார்ந்த ஒன்றாக இருந்தாலும்கூட அதை நீங்கள் சொல்லமுடியாது. ஏனென்றால் மூன்றாம்பாலினத்தை, அவர்கள் ‘மற்றவர்கள்’ என்பதனால் ‘பொதுப்போக்கினர்’ கரிசனத்துடன் பார்த்தே ஆகவேண்டும். அதிலிருந்தே கருத்துக்களை உருவாக்கவேண்டும். சமூக தளத்தில் இது தேவையானதாகவே இருக்கலாம். ஆனால் இலக்கியம் அந்தரங்கமானது. அங்கே இதை நிபந்தனையாக ஆக்கமுடியாது. நிபந்தனையாக ஆக்கினால் பொதுத்தளத்தில் பொதுவான பாவனைகளை முன்வைப்பதாகவே வாசிப்பு ஆகிவிடும்.

 

இத்தகைய அடையாளங்கள் அப்படைப்பை புரிந்துகொள்வதற்கான வழிகளாக ஆவது வேறு, அப்படைப்பாளிக்கும் அப்படைப்புக்குமான முழுமையான அடையாளங்களாக ஆவது வேறு. மிகமேலோட்டமானவை இந்த வரையறைகள். பெரும்பாலும் படைப்புக்கு அப்பாற்பட்டவை. இத்தகைய கூட்டுவாசிப்பு என்பது இலக்கியப்படைப்பு செயல்படும் அந்தரங்கத்தன்மைக்கு எதிரானது. இலக்கியவாசகனுக்கும் இலக்கியப்பிரதிக்குமான ஊடாட்டத்தின் முடிவிலா சாத்தியக்கூறுகளை மறுப்பது. ஒவ்வொரு வாசிப்பிலும் இலக்கியப்பிரதி மறுபிறப்பு எடுப்பதை தடுப்பது. இலக்கிய வாசிப்பு என்னும் கொண்டாட்டத்தை ஒருவகை சமூகச்செயல்பாடாக, அறிவுப்பயிற்சியாக மாற்றிவிடுவது. ப்ளூம் தன் எழுத்துக்களினூடாக  “Be alone!” என வாசகனிடம் சொல்கிறார். உன் சூழல் சொல்வது எதுவாகவேண்டுமென்றாலும் இருக்கட்டும், அறிஞர்கள் என்னவேண்டுமென்றாலும் சொல்லட்டும், நீ படைப்புடன் தனித்திரு. இந்த அறைகூவலையே அவருடைய இலக்கியவிமர்சனச் செயல்பாட்டின் அடிப்படை எனலாம்.

 

சென்ற ஐம்பதாண்டுகளில் இலக்கியவிவாதங்களில் நிகழ்ந்தவற்றை ஒரே மூச்சில் தொகுத்துப் பார்ப்பவர்களுக்குத் தெரியும் இலக்கியமென்னும் செயல்பாட்டின் தனித்தன்மை மீது பிற அறிவுத்துறைகளின் தாக்குதல் உச்சத்தில் இருந்தது என. இலக்கியம் என்னும் செயல்பாட்டை மறுப்பதையே பெரும்பாலும் இலக்கியவிமர்சனம் என்று சொல்லிவந்திருக்கிறோம் என. இங்கும் அப்பேச்சு ஒலித்திருக்கிறது. “இனிமேல் இலக்கியம் என்பது இல்லை” என்னும் கொக்கரிப்புக்களை எவ்வளவு கேட்டிருக்கிறோம். “இருக்கட்டும், ஆனால் அந்தச் சாவில் உனக்கு ஏன் இத்தனை மகிழ்ச்சி?” என்று சுந்தர ராமசாமி கேட்டார்.

 

முதல்பெருந்தாக்குதல் உளப்பகுப்பியலில் இருந்து. பின்னர் சமூகவியலில் இருந்து. உச்சகட்ட தாக்குதல் மொழியியலில் இருந்து. பின்னர் குறியீட்டியலும் மானுடவியலும் வந்தன. கடைசியாக மூளைநரம்பியல். இவை ஒவ்வொன்றும் இலக்கியத்தின் பேசுபொருட்களை, இலக்கியம் செயல்படும் முறையை வகுக்க முயன்றன. எழுபதுகளில் எளிய உளவியல் கருத்தாக்கங்களின் அடிப்படையில் இலக்கியம் வரையறைசெய்யப்பட்டது, மறுக்கப்பட்டது. சமூகவியல் இலக்கியத்தின் பேசுபொருட்களை அது மேலும் புறவயமாகவும் தெளிவாகவும் பேசிவிட்டதாகச் சொல்லிக்கொண்டது. மொழியியல் இலக்கியத்தின் செயல்முறையையே விளக்கிவிட்டதாக கூறிக்கொண்டது. அழகியல் என்பது என்னவகையான மூளைநிகழ்வு என விளக்குகின்றனர் இன்றைய நரம்பியலாளர்கள்.

 

இவர்கள் அனைவரும் இலக்கியத்தை தங்கள் கோணத்தில் வரையறைசெய்து சடலமாக ஆக்கி அதன்பின் பிணஆய்வு செய்கிறார்கள். இலக்கியத்தின் உயிர்நிலையை இவர்கள் உணர்வதில்லை. இவர்களின் சிக்கலே இவர்கள் இலக்கியத்தின் வாசகர்கள் அல்ல, ஆய்வாளர்கள் என்பதுதான். இலக்கியம் மிகத்தொன்மையான ஒரு அறிவியக்கம், ஒரு கலைநிகழ்வு. அதன் பணி என்பது மொழியில் சிந்தனையையும் சிந்தனையைக் கடந்துசெல்லும் ஆழங்களையும் வெளிப்படுத்த முயல்வது. ஆனால் மொழி அகவயமானது. குறியீடுகள் மற்றும் ஆழ்படிமங்கள் வழியாகச் செயல்படுவது. ஆகவே இலக்கியம் மொழிக்குள் ஒரு தனிமொழியை உருவாக்கிக்கொள்கிறது.அந்தத் தனிமொழிக்குள் மேலும் மேலும் தனிமொழிகள் உருவாகின்றன. அதன் வட்டத்திற்குள் வருபவர்களுக்குள் மேலும் மேலும் தனிவட்டங்கள் அமைகின்றன.

 

அதாவது இலக்கியம் தன் தொடர்புறுத்தலுக்கான குறியீட்டுக் களத்தையும் தானே உருவாக்கிக் கொள்கிறது. அக்களத்தை பயன்படுத்தியே அக்களத்தை தொடர்ந்து உடைத்து விரிவாக்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் இலக்கியத்தை ஒருவகையில் விளக்கினால் இலக்கியம் அதை நிராகரிப்பதில்லை. அதையும் உள்ளிழுத்துக்கொண்டு மேலும் விரிகிறது. சென்றகாலத்தில் இலக்கியத்தை வரையறுக்க முயன்ற அனைத்துச் சிந்தனைகளையும் இலக்கியம் தன்வழியில் விளக்கிக்கொண்டு மேலும் சென்றிருக்கிறது. இந்த தனித்தன்மையே இலக்கியத்தின் வழிமுறை. தன்னைத்தானே வென்று, கடந்துசெல்லுதல். ஒவ்வொரு செயல் வழியாகவும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளுதல்.

 

வெவ்வேறு சொற்களில், வெவ்வேறு விவாதங்களில் ப்ளூம் இலக்கியம் என்னும் தனித்த இயக்கத்தை விளக்கிவிட முயல்கிறார்.தன் ஆரம்பகால எழுத்துக்களிலேயே இலக்கிய ஆக்கம் என்பது எப்படி முந்தைய படைப்பாளிகளை பின்பற்றுவது, மறுப்பது, அப்படைப்புக்களை நகலெடுப்பது திரிப்பது, தன் சொந்த அனுபவங்களை முந்தைய புனைவுகளைக்கொண்டு விளக்குவது , புதிய அனுபவங்களை உருவாக்கிக்கொள்வது என்னும் தளங்களில் நுட்பமாக நிகழ்கிறது என்பதை அவர் தொட்டறிய முயல்கிறார். புனைவைவிட நுட்பமானவையான கவிதைகளை அதன் பேசுபொருளாக்குகிறார். பின்னாளைய எழுத்துக்களில் வாசகஏற்பு எவ்வண்ணம் படைப்பை மறுபடியும் நிகழ்த்துகிறது என விவரிக்கிறார்.

 

ப்ளூமின் எழுத்துக்களின் தொடக்க காலம் முழுக்க இலக்கியம் என்பது எப்படி தலைமுறைகளைத் தொட்டுக்கொண்டு நீளும் ஒற்றை உரையாடல் என்று காட்டுவதற்கான முயற்சியே. என்னை மிகக்கவர்ந்த இக்கருத்தை ஒட்டி மேலும் பலகோணங்களில் எழுதியிருக்கிறேன். மிக முக்கியமான ஒரு கருத்தாக்கத்தை தொடர்ந்து பேசியிருக்கிறார். அதாவது ஒரு படைப்பாளி தன் முந்தைய யுகத்தையப் படைப்புக்களுக்கு ஒரு தவறானவாசிப்பை அறிந்தோ அறியாமலோ அளித்து அதனூடாக தன்னைக் கட்டமைத்துக்கொள்கிறார் [தமிழில் மிகச்சிறந்த உதாரணம் புதுமைப்பித்தன் பாரதிக்கு அளித்த வாசிப்பு. குறிப்பாக பாரதியின் புதிய ஆத்திச்சூடி போலீஸ்காரர்களுக்கான கையேடு என அவர் அளிக்கும் விளக்கம்] இதைப்பற்றிய நம் கருத்து என்னவாக இருந்தாலும் எல்லா படைப்பாளிகளிலும் முந்தைய தலைமுறையின் பெரும்படைப்பாளி ஒருவரைப்பற்றிய கூர்ந்த அவதானிப்பு ஒன்று தொழில்படுகிறது என்பது உண்மை. அதுவே தொடர்ச்சியை கட்டமைக்கிறது.

 

ஐரோப்பியத் தத்துவ விவாதக் களத்தில் ஆழ்ந்த பயிற்சி கொண்டவர் ப்ளூம்  ஆனால் இலக்கியத்தைப் புரிந்துகொள்வதில் தன் தத்துவநோக்கு உள்ளே வரலாகாது என்பதில் கவனமாக இருக்கிறார். அவருடைய மதம்சார்ந்த ஆய்வுகளில் தெளிவாகவே தெரியும் ஐரோப்பியச் சாராம்சவாத நோக்கை இலக்கியவிவாதங்களில் காணமுடியாது. அவருடைய சாராம்சவாத நோக்குக்கு மிக அணுக்கமானவரான எமர்சனை அவர் ஆராயும்போதுகூட எமர்சனின் இலக்கியத்தன்மையையே முன்னிறுத்துகிறார். ஆகவேதான் சாராம்சநோக்கில் எமர்சனுக்கு நேர் எதிரானவரான ஷெல்லியையும் அவரால் நிகரெனக் கருதமுடிகிறது.கலைப்படைப்பு ‘கூறுவது என்ன?’ என்பதை அவர் கருத்தில்கொண்டதில்லை. கலைப்படைப்பு கூறுவதல்ல, நம்மிடம் அது நிகழ்த்தும் உரையாடலே அதன் செயல்பாடு என்பது அவருடைய நோக்கு. இலக்கியத்தின் தொடர்ச்சியான செயல்நிலையை அறியவே எப்போதும் அவர் முயல்கிறார். இலக்கியம் என்னும் இயக்கத்தின் தனித்தன்மையை முன்வைக்கவே அவருடைய இலக்கிய விமர்சனச்செயல்பாடு பெரும்பாலும் நிகழ்ந்தது

 

அப்படி ஒரு தனித்தன்மையைச் சற்றேனும் புறவயமாக வரையறை செய்யவேண்டும் என்றால் அதற்குரிய ஒரே அடிப்படை செவ்விலக்கியங்களே. செவ்விலக்கியங்கள் என்பவை காலத்தால் நிறுவப்பட்டவை. ஒரு பண்பாட்டால் ஏற்கப்பட்டவை. ஆகவே அவற்றுக்கு ஒரு புறவயத்தன்மை மறுக்கமுடியாமல் உருவாகிவிட்டிருக்கிறது. அவை எப்படி மொழிவடிவு கொண்டுள்ளன, வாசிப்பில் எப்படியெல்லாம் மறுகட்டமைவு கொள்கின்றன, அவற்றின்மீதான ஏற்பும் மறுப்பும் எப்படிப்பட்டது, அவை நிலைநிறுத்தும் படிமங்கள் என்னென்ன, அப்படிமங்களின் வரலாற்றுத் தொடர்ச்சி என்ன என்பனவற்றை ஓர் எல்லைவரை வரையறுக்க முடியும். அவற்றிலிருந்து இலக்கியம் என்னும் கலையின் செயல்முறைகளை புரிந்துகொள்ளமுடியும். ப்ளூமின் இலக்கியவிமர்சனக்கோணம் முழுக்கமுழுக்க அகவய வாசிப்பை முன்னிறுத்துவது. ஐரோப்பிய இலக்கியச்சூழலின் தலைசிறந்த ரசனைவிமர்சகர் அவர். ரசனை விமர்சனம் நோக்கி எப்போதும் கேட்கப்படும் கேள்வி, அதில் புறவயமாக உள்ளது என்ன, அதன் மாறா அளவுகோல் என்ன என்பது. அதற்கு ப்ளூம் செவ்விலக்கியங்களையே சுட்டிக்காட்டுகிறார்.

 

செவ்விலக்கியங்களே அடுத்தகட்ட இலக்கியத்திற்கான அளவுகோல்களை வழங்குகின்றன என்று ப்ளூம் விளக்குகிறார். ஏனென்றால் இலக்கியம் என்பது ஒரு தொடர் இயக்கம். செவ்விலக்கியம் என்பது ஒரு பெருஞ்சூழலை உருவாக்க அதன்மீதே அடுத்தகட்ட இலக்கியம் ஏற்பும் மறுப்புமாக நிகழ்கிறது. ஆகவே மேலைச்செவ்வியலை தொகுத்துநோக்க, அதன் இயல்புகளைப் புரிந்துகொள்ள ப்ளூம் முயல்கிறார். இதில் கவனிக்கப்படவேண்டிய ஒன்று உண்டு. மேலைச்செவ்விலக்கியம் [western canon ]என்பதை ப்ளூம் ஒரு புறவயமான கட்டுமானமாக நினைக்கவில்லை. அதன் ஏற்பியலையும் கருத்தில்கொள்கிறார். தாந்தே முதல்வால்ட் விட்மான் வரையிலான மேலைச்செவ்விலக்கியங்களைப் பற்றிப் பேசுகையில் அவற்றுக்கான ஏற்பு மேலைப்பண்பாட்டில் எவ்வண்ணம் நிகழ்ந்தது என்பதை ஜான்ஸன் முதல் தொடரும் விமர்சகர்களின் ஆய்வுகளைக்கொண்டு புரிந்துகொள்ள முயல்கிறார். செவ்வியலை இந்த இருநிலைகளையும்கொண்டே வகுக்கவேண்டும். அதாவது திருக்குறள் செவ்வியல் என்றால் பரிமேலழகரும் நச்சினார்க்கினியரும் எல்லாம் சேர்ந்தே அது செவ்வியல் படைப்பாகிறது.

 

இவ்வாறு பார்க்கையில் ப்ளூம் இலக்கியத்தின் முரணியக்கத்தை இப்படி வகுத்துக்கொண்டார் என நான் புரிந்துகொள்கிறேன். செவ்வியல் X தனித்தன்மை. செவ்வியல் ஒரு பொதுச்சூழலாக, மேடையாக உள்ளது. அதன்மேல் நின்றுசெயல்படுகையில் ஆசிரியனின் தனித்தன்மை, படைப்பின் தனித்தன்மை, வாசகனின் தனித்தன்மை ஆகியவை அதை எதிர்த்து செயல்படும் விசைகளாக உள்ளன. ஒவ்வொரு படைப்பாளியும் தன் முன்னோடிகளிடமிருந்து விலகி பறந்தெழ, வேறொன்றாக வெளிப்படவே முயல்கிறான். அதுவரை இல்லாத ஒன்றை வாசிக்கவே வாசகன் விழைகிறான். ஆனால் அவர்கள் செவ்விலக்கியத்தின் மீதுதான் நிற்கிறார்கள். இந்த முரணியக்கம் படைப்பை, படைப்பாளியை, வாசிப்பை நிகழ்த்துகிறது. அந்தப்புள்ளி தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருப்பது என்பதே ப்ளூம் காட்டுவது

 

ஹரால்ட் ப்ளூம் ஷேக்ஸ்பியரை மிக விரிவாக ஆராய்ந்திருக்கிறார். படைப்பை வரையறைசெய்வது, படைப்பிலிருந்து நிலையான அர்த்தங்களை உருவாக்கிக்கொள்வது, படைப்பிலிருந்து கொள்கைகளைச் சமைப்பது ஆகியவற்றுக்கு முற்றிலும் எதிரானவர். படைப்பை வாசகன் அந்தரங்கமாகச் சந்திக்கும் விதத்தை மட்டுமே அவர் முன்னிறுத்துகிறார். அதற்கான சாத்தியங்கள் என்னென்ன ஒரு படைப்பில் உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டுவதே அவருடைய விமர்சனப் பாணி. படைப்பு சமூக மாற்றத்திற்கானது, மெய்மைகளை முன்னிறுத்துவது போன்ற நம்பிக்கைகளுக்கு அவர் எதிரானவர். படைப்பு என்பது ஓர் ஆழ்ந்த உரையாடல் மட்டுமே என்பதே அவருடைய  எண்ணம். அதில் திரள்வன அந்தந்த வாசகனுக்கு அவன் வாசிப்பின் தருணத்தில் மட்டுமே நிகழ்பவை.

 

ஹரால்ட் ப்ளூம் பற்றிய எதிர்விமர்சனங்கள் ஏராளம். இன்று வாசிக்கப் புகும் இளையவாசகன் அந்த எதிர்விமர்சனத்தையே உடனடியாகச் சென்றுசேர்வான். ஏனென்றால் இந்த எதிர்விமர்சனங்கள் பலவும் அரசியல் சார்ந்தவை. அரசியல்சரிநிலைகளின் அடிப்படையிலானவை. புகழ்பெற்ற சமூக – அரசியல் கோட்பாட்டாளர்களால் முன்வைக்கப்படுபவை. ஆகவே உடனடியாக அவை அவனிடம் ஏற்பையும் உருவாக்கும். அதோடு அவரை வாசித்துக் கரைகண்டுவிட்ட பாவனையில் எழுதப்படும் குறிப்புகளும் இனி தமிழில் வரக்கூடும். ப்ளூம் வெள்ளைமேலாதிக்கவாதி, ஆணாதிக்கவாதி, ஐரோப்பியமையநோக்கு கொண்டவர், அமெரிக்க மேலாண்மைநோக்கு கொண்டவர், யூத மரபுவாதி ஆகிய எல்லா குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன

 

ஏனென்றால் அவரை எதிர்ப்பவர்கள் பெரும்பாலும் அரசியல்- சமூகவியல் கோட்பாட்டாளர்கள் மற்றும் கல்வியாளர்கள். அவர்களுக்கு தங்கள் எதிர்த்தரப்பை ஒற்றைப்படையாகச் சுருக்கிக்கொள்ளாமல் பேசத்தெரியாது. எந்தக் கருத்தையும் தாங்கள் பேசிக்கொண்டிருப்பனவற்றின் ஒரு பகுதியாக  ஆக்காமல் அவர்களால் விவாதிக்கவே முடியாது. உதாரணமாக, பெண்ணிய நோக்குக்காக புகழப்பட்ட ஒரு எழுத்தாளரை ப்ளூம் நிராகரித்தால் அவர் ஒரு  ‘வெள்ளை ஆண்’ என வரையறைசெய்யாமல் அவர்களால் மேலே பேசமுடியாது. அவர்கள் வழியாக ப்ளூமை அணுகுவதென்பது இந்நூற்றாண்டின் முக்கியமான இலக்கியசிந்தனையாளனை நாம் இழப்பதுதான். அவர் இன்று நிகழும் இலக்கிய மறுப்பு, நுண்வாசிப்பு மறுப்பு, பொதுமையாக்கம் ஆகியவற்றுக்கு எதிராக எழுப்பிய வலுவான வினாக்களை காணாமல் தவிர்ப்பது அது.

 

ஹரால்ட் ப்ளூமிடம் மேட்டிமைநோக்கு இருக்கக்கூடுமா? இருக்கலாம். அவர் ஒரு மேலைச்செவ்வியலை தொகுத்துக்கொள்கிறார். அவருடைய மதிப்பீடுகள் அதன் அடிப்படையிலானவை. அவை அவருடைய தெரிவையும் மட்டுப்படுத்திவிடுகின்றன. ஓர் ஆப்ரிக்கக் கதையாடலில் இருந்து அவரை அது விலக்கிவிடும். இது மிக இயல்பான ஒன்று. இந்த அம்சம் அவரை சிலவகையான மேட்டிமைநோக்குகள் கொண்டவராகக் காட்டலாம்.

 

ஆனால் நம் முன் இரண்டு தெரிவுகளே உள்ளன. செயற்கையாக, அறிவார்ந்து நம்மை ‘உலகளாவிய பொதுரசனை’ கொண்டவராக கட்டமைத்துக்கொள்வது. அல்லது இயல்பாக நாம் வளர்ந்தெழுந்த பண்பாட்டுச்சூழலின் விளைவாக எழுந்த ஆழ்மனமும் ரசனையும் கொண்டிருப்பது. இதை ஏற்கனவே ப்ளூமைச் சுட்டிக்காட்டி பேசியிருக்கிறேன். சுவை என்பது எப்போதுமே பிறப்பு வளர்ப்பின் எல்லைக்குட்பட்டது, ஏனென்றால் அது தன்னிச்சையானது. அதை செயற்கையாக மாற்றியமைக்க முயல்கையில் நாம் இழப்பது சுவைசார்ந்த நுண்ணுணர்வை. இதைக்குறித்து அரசியல்சரிநிலை சார்ந்த ஒற்றைவரிகளுடன் மல்லிட வரும் கூட்டத்திடம் பேசவிரும்பமாட்டேன். ஆனால் இது ஓர் உண்மை, இன்றைய உலகளாவிய பண்பாட்டுச் சொல்லாடல்கள் உருவாகிவரும் சூழலில் ஒரு மெய்யான சிக்கல் என்பதை நோக்கினால் அறியலாம்.

 

இப்படிச் சொல்கிறேன், ஓர் ஐரோப்பிய இலக்கிய வாசகருக்கு இயல்பாகவே ஐரோப்பியச் செவ்வியல்சூழலில் விளைந்த ரசனை உள்ளது. அவரால் ஐரோப்பிய கலைப்படைப்புகளையே மெய்யாக ரசிக்க முடிகிறது. அவர் தன்னை வலிந்து விரிவாக்கிக்கொண்டு  ‘பிற’ படைப்புகளை ரசிக்க ஆரம்பித்தால் என்ன நிகழ்கிறது? தன் நுண்ணுணர்வுக்கு பதிலாக அவர் ஒரு அரசியல்சரிநிலையை முன்வைக்க ஆரம்பிக்கிறார். அந்த  ‘பிற ஏற்பு’ இருவகையில் நிகழும். அந்தப் பிறரில் செயல்படும் ஐரோப்பிய அம்சத்தை மட்டும் காண்பது ஒன்று – முரகாமி முதலிய ஜப்பானிய எழுத்தாளர்கள் ஐரோப்பாவில் அப்படித்தான் வாசிக்கப்படுகிறார்கள். அல்லது, ‘விந்தையான’ தன்மைக்காக பிற இலக்கியப்படைப்புகளை ரசிப்பது. அல்லது ‘முற்போக்கான’ ‘சீர்திருத்த நோக்கம் கொண்ட’ ‘கலகம்செய்யும்தன்மைகொண்ட’ படைப்புக்களை ரசிப்பது.

 

ஆசிய, ஆப்ரிக்க நாடுகளிலிருந்து செல்லும் எழுத்துக்கள் அவற்றின் கலைநுட்பத்திற்காக அல்லாமல், அறிவார்ந்த தன்மைக்காகக்கூட அல்லாமல், வெறும் சமூகவியல் அரசியல் சார்ந்த காரணங்களால் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் முன்னிலைப்படுத்தப்படுவது இப்படித்தான். இந்த அவலத்தை திகைப்புடனேயே ஆசிய, ஆப்ரிக்கப் பண்பாடுகள் பார்த்துக்கொண்டிருக்கின்றன. அங்கிருந்து சென்று ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கவனிக்கப்படும் படைப்பாளிகள் உள்ளூர் வாசகர்களுக்கு எவ்வகையிலும் முதன்மையானவர்களாக இருப்பதில்லை. ஐரோப்பிய அமெரிக்க இலக்கிய ‘நிபுணர்கள்’ அங்கிருக்கும் படைப்புக்களையும் வெளிப்படைப்புக்களையும் பார்க்கும் அணுகுமுறையில் இருக்கும் இந்த வேறுபாடு இந்நூற்றாண்டின் மிகப்பெரிய அவலம்.

 

இந்தச் செயற்கையான ‘உலகளாவிய’ நோக்கு ப்ளூமிடம் இல்லை என்பது ஒரு தகுதியே. அவர் ஐரோப்பிய ரசனைமரபில் ஆழ வேரூன்றியவர், ஆகவே உண்மையானவர். ஆனால் ப்ளூம் உலகளாவிய , மானுடம் அளாவிய கலை அளவுகோல்களைப் பற்றியே எப்போதும் பேசுகிறார். அவற்றை ஐரோப்பியப்பேரிலக்கியங்களில் இருந்து உருவாக்கிக்கொள்ள முடியுமா என்று பார்க்கிறார். உலகளாவிய மானுட மதிப்பீடுகளையே நாடுகிறார். அவருடைய எல்லைகள் இயல்பானவை, அவருடைய தேடல்கள் வழியாக அவர் சென்ற பாதை உலகளாவிய முன்னுதாரணம் என நினைக்கிறேன்.

 

எல்லா விமர்சகர்களையும்போல ஹரால்ட் ப்ளூம் எழுதிக்குவித்தவர். இலக்கியவிமர்சனத்தில் ஆய்வு செய்யும் ஒருவர் மட்டுமே அவரை முழுமையாக வாசிக்கமுடியும். இலக்கியப் பொதுவாசகர்கள் அவரை வாசிக்க How to Read and Why, The Anxiety of Influence போன்ற நூல்களும் அவருடைய தேர்ந்தெடுத்த கட்டுரைகளின் தொகுதிகளுமே போதுமானவை. வேண்டுமென்றால் பிற்காலத்தைய பெருநூலான The Western Canon ஐ வாசிக்கலாம். ஆனால் ஓர் இலக்கியவிமர்சகர் ஒரு குறிப்பிட்ட இலக்கியவிவாதச் சூழலில், பண்பாட்டுக் குறிப்புகளுடன் பேசிக்கொண்டிருப்பவர். முற்றிலும் வேறுபட்ட சூழலில் செயல்படும் இலக்கியவாசகன் அவரை முழுமையாக புரிந்துகொள்ள ஆண்டுகளைச் செலவழிப்பது வீண்முயற்சி. சுருக்கமான அறிமுகமே போதுமானது.

 

நான் ஹெரால்ட் ப்ளூமை அடிக்கடி மேற்கோள்காட்டியிருக்கிறேன். எமர்சன் வழியாகவே நான் அவரைச் சென்றடைந்தேன். என் சிந்தனைகளில் அவருடைய செல்வாக்கை இப்படி வகுத்துக்கொள்கிறேன். ஒன்று, தமிழ்ச்சூழலில் பிரிட்டிஷ் கற்பனாவாதக் கவிதைகள் மற்றும் ஷேக்ஸ்பியர் போன்ற மரபுக்கவிஞர்கள் மேல் இருந்த ஒவ்வாமையை கடக்க எனக்கு உதவியவர். கற்பனாவாதம் என்பது ஒரு பண்பாட்டின் சாராம்சமான உணர்ச்சிகளின் வெளிப்பாடு, வெறும் உணர்வுப்பாவனை அல்ல என்பது அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டது. நவீனத்துவம் மீதான என் ஒவ்வாமைகளை, விமர்சனங்களை அவரே உருவாக்கினார். என்னை செவ்வியல் நோக்கி ஆற்றுப்படுத்தினார். ஷெல்லி, பைரன் போன்றவர்களைப்பற்றிய என் கருத்துக்களில் அவருடைய செல்வாக்கு உண்டு என்பதை வாசிப்பவர்கள் அறிந்திருப்பார்கள்.  மரபிலக்கியம் சார்ந்த அளவுகோல்கள் இலக்கியவிமர்சனத்தின் அடிப்படைகளாக ஆவதை அவருடைய கருத்துக்களின் நீட்சியாகவே உருவாக்கிக்கொண்டேன்.  வாசிப்பின் தனிமை , இலக்கியத்தின் தனித்தன்மையையும் அவருடைய கருத்துக்கள் சார்ந்தவையே.அதை இலக்கியவாசகர் உணர்ந்திருப்பார்கள்

 

கூர்ந்து வாசிக்கும்பொருட்டு அவரை மொழியாக்கம் செய்திருக்கிறேன். ஆனால் நூல்வடிவாகவில்லை, என் மொழியாக்க நடை மிகத்திருகலாக இருந்தது. வேறுவழியும் இருக்கவில்லை. ப்ளூமின் விமர்சனமொழி ஆய்வாளர்களுக்குரியது அல்ல. கூரிய ஒற்றைவரிகள், தனித்த அவதானிப்புகள். சொல்விளையாட்டுக்கள் கலந்து இலக்கியப்படைப்பு போலவே தோன்றுவது. நான் ப்ளூமை அரிதாகவே நேரடியாக மேற்கோள்காட்டியிருக்கிறேன். ஏனென்றால் அவர் முன்வைக்கும் ஐரோப்பிய மைய நோக்கை நான் ஏற்பதில்லை. அவரை மேற்கோள்காட்டி விவாதத்தை அவரை நோக்கி கொண்டுசெல்ல மாட்டேன், வெறுமே உரிய இடங்களில் அவர் பெயரைச் சுட்டியிருப்பேன். மாற்றுபைபிள் குறித்த அவருடைய கருத்துக்களையும் நான் மேற்கொண்டு பேசியிருக்கிறேன்.

 

ப்ளூமுக்கு அஞ்சலி

 

முந்தைய கட்டுரைவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34