இன்றைய காந்திகள்

திண்டுக்கல் காந்திகிராமத்தில் நூல்வெளியீட்டுவிழா இன்று

 

இந்திய மக்கள் தொகையான 130 கோடியில், 30 கோடி மக்கள் இன்னும் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கிறார்கள். இன்னுமொரு 30 கோடி, அதன் அருகில் வாழ்கிறார்கள். இன்றைய இந்தியா, வலதுசாரிப் பொருளாதாரக் கொள்கைகளை நோக்கிய சாய்வில் உள்ளது. தனியார் துறை, தனது உற்பத்தித் திறனைப் பல மடங்கு மேம்படுத்தியுள்ளது. வருங்காலத்தில், உற்பத்தி அதிகரித்தாலும், அதற்கேற்ப வேலை வாய்ப்பு அதிகரிக்காது என்னும் நிலை இன்று உருவாகியுள்ளது.

மெல்ல மெல்ல அதிகரிக்கும் இயந்திரமயமாக்கம், அதிக உற்பத்தி, குறைந்த வேலை வாய்ப்பு என்னும் வழியில் செல்கிறது. மானியங்களால் செயற்கையாகக் குறைவாக மட்டுறுத்தப்படும் உலக வேளாண் பொருட்கள் விலைகளால், வேளாண்மை லாபமில்லாத தொழிலாக உள்ளது. கைத்தொழில்கள், நெசவு போன்றவை நசிந்துகொண்டேவருகின்றன. இங்கேதான் காந்தி மீண்டும் வருகிறார். ‘நான் அப்பவே சொன்னேனே’, என பொக்கை வாய்ச் சிரிப்புடன்.

சுதந்திரச்சந்தை வலுப்பெற்று ஒரு மதம் போலத் தன் பல்லாயிரக்கணக்கான கரங்களால் இந்தியச் சமூகத்தை இறுக்கிவருகிறது. பொருளாதாரத்தின் அடித்தட்டில் இருக்கும் ஒரு பெரும் சமூகம், இதனால் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அவர்களுக்கு நிலையான வருமானத்தை ஏற்படுத்திக் கொடுக்க, வருமானத்துக்கேற்ப கௌரவமான, நீடித்து நிலைக்கும் வாழ்க்கையை, காந்திய வழிகளே உருவாக்கித் தர முடியும் என்பதே இந்தக் கட்டுரைகளின் வழி நான் அடைந்திருக்கும் மனநிலை.”

 

–         பாலசுப்ரமணியம் முத்துசாமி தனது முன்னுரையில்...

 

வெறுப்பரசியலின் குரல் உரக்க ஒலித்துக்கொண்டிருக்கும் இந்நிகழ்காலம், மனதுள் ஒருவித அச்சத்தை உண்டாக்குகிறது. ஒற்றைத்தரப்பு நியாயங்களால் உலகம் சூழப்பட்டுவருகிறது. தத்துவங்களை நிறுவுவதற்கான ஒவ்வொரு அதிகாரப்போட்டியிலும் தெரிகிறது மானுட வர்க்கத்தின் வெறியோட்டம். நுகர்வு அடிமையாக வாழ்ந்ததற்கான விளைப்பயனை இயற்கையின் ஒவ்வொரு அழிவிலிருந்தும் மனமறிகிறது. ஈவு இரக்கமற்ற அறிவியலை மனிதவளர்ச்சியாக ஒப்புக்கொள்ள போலிவெற்றிகள் வற்புறுத்துகின்றன.

 

ஆனால், இவையெல்லாவற்றையும் கடந்து மனிதரின் அனிச்சை குணமான அன்பையும் கருணையையும் விடாமல் பற்றிக்கொள்வதற்கான வாய்ப்புகளும் இவ்வாழ்க்கையில் நிகழத்தான் செய்கிறது. இளம்தலைமுறை உள்ளங்களுக்கு காந்தியைப்பற்றியான அறிமுகமும், அறிதலும் அப்படியானதொரு உளஎழுச்சியை நல்கக்கூடியவையே. காந்தியவழி என்பது மனிதர்களின் வாயிலாக இறையிருப்பைக் கண்டடைவது.

 

தோழமை பாலாவால் எழுதப்பட்டு, உங்களுடைய தளத்தில் தொடர்ந்து வெளியான நவகாந்தியர்களைப் பற்றிய கட்டுரைத்தொகுப்புகள், உரிய புகைப்படங்கள் இணைக்கப்பட்டு, வாசகர்கள் தேர்ந்தெடுத்த தலைப்பான  ‘இன்றைய காந்திகள்’ என்னும் பெயரோடு புத்தகமாகியிருக்கிறது. இன்றைய நவீன காலத்திலும் காந்தியச்சிந்தனைகள் பொருந்தக்கூடிய சாத்தியக்கூறுகளையும் அதன் சாட்சிமனிதர்களையும் இந்நூல் விவரிக்கிறது.

 

எளிய வாசிப்பின் வழி, நம்முள் பெருங்கனவை உருவாக்கும் எழுத்துநடை இப்புத்தகத்தை மனதுக்கு மேலும் அண்மைப்படுத்துகிறது. தகவல்கள், தரவுகளைத் தாண்டி அனைத்து வார்த்தையிலும் ஒரு மானுட அரவணைப்பை உணரமுடிகிறது. இளம்தலைமுறை பிள்ளைகளுக்கு காந்தியத்தை, அதன் சாத்தியத்தை தகுந்தமுறையில் வழிகாட்டுவதில், தங்கள் கருத்துக்கொள்ளளவு ரீதியாக வலுப்பட்டு நிற்பவர்களில் பாலாவும் ஒருவராக வளர்ந்தெழுவார் என நாங்கள் நிச்சயம் நம்புகிறோம்.

 

சமூகத்தின் கூட்டுமனப்பான்மையை அதிகாரமோ, அரசியலோ எது சிதைத்தாலும், அதற்கான ஆழமானதொரு எதிர்வினையும் செயல்பதிலும் பாலாவிடமிருந்து புறப்பட்டெழுகிறது. பாவனைகளின்றி அவருடைய எழுத்துக்கள் நிஜம்பேசுகிறது.’எதன்வழி இம்மானுடம் ஆற்றுப்படவேண்டும் என்பதை நாம் மறுபரிசீலனை செய்தே ஆகவேண்டும்’ என்பதை இந்நூலின் ஒவ்வொரு கட்டுரையும் தெளிவுற மனப்படுத்துகிறது. காந்திய சாட்சிமனிதர்களின் வாழ்வுவரலாறு, செயல்வழிப்பாதை, மானுடக்கருணை உள்ளிட்ட கூட்டியல்புகளின் எழுத்துவெளிப்பாடே இந்நூல். இன்றைய காலகட்டத்தில், இச்சமூகம் நிச்சயம் பயணித்தே ஆகவேண்டிய கரைவெளிச்சம். ஜெயகாந்தன் சொல்வதைப் போல, ‘ஒவ்வொரு ஊரிலும் அந்த ஊருக்கான காந்தி இருப்பார்’ என்ற கூற்றினை உறுதிப்படுத்தும் படைப்பாக இதை உணரமுடிகிறது.

 

படைப்பூக்கத்தாலும் சேவைகளாலும், உலகளாவிய மானுட முகங்களாக அறியப்படுகிற பதினோரு காந்தியர்களின் வரலாற்றுக்கதையின் தெளிவான சித்தரிப்புக் கட்டுரைகளாக, பேரன்னை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனின் ஆசிக்குறிப்போடு,  தன்னறம் நூல்வெளியின் வாயிலாக வெளிவந்திருக்கிறது ‘இன்றைய காந்திகள்’ புத்தகம்.  அக்டோபர் 18ம் தேதி, திண்டுக்கல் காந்திகிராம் ஆசிரமத்தில் இந்நூலின் வெளியீடு நிகழவிருக்கிறது.

துவக்கம் முதல் புத்தகமாக உருப்பெறும் காலம்வரை எண்ணத்தால் துணையிருந்து வழிநடத்திய உங்களுக்கு எங்களுடைய நெஞ்சின் நன்றிகளை சொல்லிக் கொள்கிறோம். இச்சமகாலத்தில் நிகழும் ஒரு நம்பிக்கையாக இப்படைப்பை மனம் ஏந்துகிறோம்.

புத்தகத்தை  பெறுவற்கான இணைப்பையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

http://thannaram.in/product/indraya-gandhigal/

இன்றைய காந்திகள் – பாலசுப்ரமணியம் முத்துசாமி

புத்தக விலை:ரூ 320

கெட்டியான அட்டை (Hard Bound Wrapper)

 

இப்படிக்கு

தன்னறம் நூல்வெளி

 

சுதந்திரத்தின் நிறம்

பொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34
அடுத்த கட்டுரைபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது: