கண்ணீரின் கணங்கள்- கடிதம்

மதிப்பிற்குரிய ஜெமோ

’கண்ணீரும் கதைகளும்’ இப்போதுதான் படித்தேன். நானும்
அழுமூஞ்சிதான்(சுல்தான் கவனிக்க). நான் அழுவதற்கான காரணங்களைக்
கண்டுபிடித்துவிட்டதாகவே நம்பிக்கொண்டிருந்தேன்.இந்தக் கண்டடைதலை ஒரு
நல்ல முன்னேற்றம், பக்குவம் என்று நம்பியிருந்தேன்.ஆனால், அது
முழுமையானதல்ல என்பதை இந்தப் பதிவை படித்தபோது உணர்ந்துகொண்டேன். நான்
இரண்டு கட்டங்களில் அழுதுவிடுவதாகக் கண்டறிந்திருந்தேன்.

1.களங்கமில்லாத அன்பு வெளிப்படும் தருணங்கள்

2.திறமையும், வறுமையும் கலந்து வெளிப்படும் தருணங்கள். வறுமையை மீறி
வளர்ந்து நிற்கும் திறமை.அதிலும், குறிப்பாக சிறுவர்களிடத்தில்
வெளிப்படும்போது.

இவையிரண்டும் என்னளவிலான, தன்னிரக்கம் கொண்டதே.இத் தருணங்களில் என்னைப்
பொருத்தி நான் அடைந்த கழிவிரக்கமே. என்னுடைய தீர்மானத்தைக்
கலைத்துப்போட்டது, உங்களுடைய பதிவு. ஆனால், நீங்கள் சொல்கிறதுபோல பரவச
எழுச்சியில் நான் அழுத தருணங்களை, முன்னதிலிருந்து வேறுபடுத்திப்
பார்த்துக்கொள்ள இந்தப் பதிவு உதவியது. அது மாதிரியான தருணங்களுக்கு நான்
இங்கே 3 எடுத்துக்காட்டுகளைச் சொல்ல விரும்புகிறேன்.

1. ஒருமுறை ஆவடியில் சிறப்புக் காவல்படையின் அணிவகுப்பு, சாகச
நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. நான் அருகிலிருந்து
பார்க்கவில்லை. ஒரு பெண் வர்ண்னையாளரின்( மாவட்ட ஆட்சியர் என்று உடன்
வந்துகொண்டிருந்த நண்பன் சொன்ன நினைவு) பேச்சு மட்டும் ஒலிப்பெருக்கியின்
வழி கேட்கும் தொலைவில், சாலையில் சென்றுகொண்டிருந்தேன். அந்தக் குரலில்
இருந்த கம்பீரமோ, என்னவோ, எனக்குச் சொல்லத் தெரியவில்லை. நான் கேட்டு
அழுதேன்.இது எனக்கே இன்றுவரையிலும், மேலோட்டமாக பார்க்கும்போது
பைத்தியக்காரத்தனமாகத் தோன்றுகிறது.

2. அண்மையில் இணையத்தில் ‘ மிலே சுரு மேரா..” பாடலைப் பார்த்து, கேட்டு
அழுதது.

3. இதற்கு என்னுடைய ஒரு கவிதையை கீழே அளிக்கிறேன்.(ஒரு
விளம்பரந்தான்)இலக்கிய முதிர்ச்சியின்மையும்,மனஎழுச்சியின் ஒரு
உச்சகணமும் இணைந்த வெளிப்பாடு.

ஒரு எலக்ட்ரீஷியனின் பேரனுபவம்

 

ஒரு தொழிற்கல்வி நிறுவனத்தில் பயின்று

எலக்ட்ரீஷியனாக வெளியேறுகிறான்

அவனுக்கு அளிக்கப்பட்ட சான்றிதழ்

அப்படித்தான் சொல்கிறது

பழகுனராக ஒரு பெரிய நிறுவனத்தில் சேர்ந்து

மெல்ல மெல்ல மின்சாரத்தை அறியத்துவங்குகிறான்

கண்ணுக்குத் தெரியாத மின்சாரம் அவனுக்கு

மிகவும் வியப்பை ஏற்படுத்துகிறது

அச்சமூட்டுகிறது

மரியாதையை ஏற்படுத்துகிறது

பெருமையளிக்கிறது

மெய்சிலிர்க்கவைக்கிறது

தன் சட்டைப்பையில் வந்தமர்ந்துகொண்ட

டெஸ்டரை முதன்முறையாகப்

பெருமையாகப் பார்த்துக்கொள்கிறான்

தன்வாழ்வின் தோள்மீது

கைபோட்டு அரவணைத்துக்கொண்டு

பின்தொடரச் செய்த மின்சாரத்திற்கு

நன்றி சொல்லிக்கொள்கிறான்

யாருமற்ற அந்நேரத்தில்

மெல்ல எழுந்து

ஒரு பெரிய மெயின் ஸ்விட்சை நெருங்கி

இருகைகளாலும் பயபக்தியோடு தொட்டு

கண்ணீர் துளிர்க்கும் விழிகளில்

 

 

ஒற்றி வணங்கிக்கொள்கிறான் அந்தப் பையன்.

பதிவுக்கு நன்றி
ச.முத்துவேல்‌

================

அன்புள்ள முத்துவேல்

நான் சொல்வது நீங்கள் புரிந்துகொண்ட அதையே;  அதைத்தான் அந்தக் கவிதையும் சொல்கிறது. முக்கியமான கவிதை.

ஜெ

முந்தைய கட்டுரைநூறுநாற்காலிகள்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைமூன்றுகதைகள்