காடு அமேசானில் வாங்க
காடு வாங்க
குட்டப்பனின் வாழ்க்கையை வாழவேண்டும் என்கிற ஆசை கொண்டதனாலேயே கிரிதரன் தன் வாழ்வை தொலைக்கிறான் என்கிற எண்ணம் வந்தபோது காலை தூக்க கனவிலிருந்து எழுந்தமர்ந்தேன். உண்மைதானா என்கிற எண்ணம் நாள் முழுவதும் தொடர்ந்தது. அப்படிதான் இருக்க வேண்டும் என்று நினைக்கும்போது இஞ்சினியர் அய்யரையும் அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என நினைத்தேன். குட்டப்பனின் தெளிவு, எல்லாவற்றிற்கும் தீர்வு காணும் குணம், சோர்வேயறியாத உடல்பலம், எல்லோருக்கும் பயன்படும் அவன் சேவைகள் கண்டு வளரும் கிரி தன்னை குட்டப்பனாக நினைக்கிறான். அதுஒரு எல்லை, மற்றொரு எல்லையில் அய்யர் இருக்கிறார். அவரது இலக்கிய ரசனை, எப்போதும் அவரிடமிருக்கும் உச்சநிலை, வேலைமுடிந்ததும் இடங்கொள்ளும் வனப்பிரஸ்தம், என்று மற்றொரு எல்லையை நோக்கி செல்ல எத்தனித்துக் கொண்டேயிருக்கிறான். நீலியும், வேணியும், அவன் அம்மாவும் அவனை அலைக்கழிக்க விடுகிறார்கள். வாழ்வின் எந்தப்பக்கத்திற்கும் செல்ல அவனால் முடியவில்லை. மாறாக அவன் மாமா சதாசிவத்தின் வழிசென்று காணாமல் ஆகிறான்.
நீர்நிறைந்த ஆற்றின் மேல்லோட்டத்தில் சில சலனங்ககளும் சிறு கொந்தளிப்புகளும் மட்டுமே தெரியும். காற்றின் வேகத்தில் சில சமயம் மேலே அதன் சிலிர்ப்புகளை காணமுடியும். கீழே அகண்ட படித்துறைகள், பெரிய நடு மண்டபங்கள், புதர் செடிகள், மரங்கள், கோரைகள், பாறைகள் எல்லாம் மறைந்திருக்கும். வெளியிலிருந்து பார்க்கும் போது அதன் இருப்பை உணர்ந்துக் கொள்ள முடியாது. காடு நாவலில் கிரதரன் நாயரின் முழு வாழ்வை மட்டும் சொல்லவில்லை, அதில் ஒளிந்திருக்கும் குட்டப்பனின் வாழ்வும், இஞ்சினியர் அய்யரின் வாழ்வும், நீலியின் வாழ்வும், வேணியின் வாழ்வும் சொல்லப்படுகிறது. நமக்கு அதை புரிந்துக் கொள்வதற்கு சற்று காலம் தேவைப்படுகிறது.
அறிந்தே செய்யக்கூடிய கீழ்மையும் முற்றும் உணரா அதிசயம்போல ஈடேற்றமும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது காலம். எதையும் அறியமுடியாத பரபரப்பில் அடித்துச் செல்லப்படுகிறோம். எழுபது வயது கிரிதரன் இளவயதிலிருந்து தன்னை முழுவதும் கண்டடையும் தருணங்களை அவன் விட்டுவிடாமல் நினைவில் வைத்திருக்கிறான். 42 வயதுவரை அவன் அடைந்த உச்சங்களை, ஜென்ம ஈடேற்றங்களை கட்வெட்டுகள் போல நினைவிலிருந்து எடுத்துவிடமுடிகிறது. அதற்குபின் 30 ஆண்டுகள் அவன் அடைந்த தோல்விகள், சோகங்கள், வீழ்ச்சிகள், அற்ப கீழ்மைகள் எல்லாம் புகைமண்டலங்களாக கடந்து சென்றுவிடுகின்றன. மீண்டும் அவன் பெட்டிக்கடை வைத்து பிழைக்கும்போது அடையும் சின்ன வெற்றிகள் நினைவில் இருக்கின்றன.
இயற்கை தன்னை என்றும் அழித்துக் கொள்ள நினைப்பதில்லை. மாறாக பெரும்உருவாக விரிந்து வளர்ந்து செல்லவே நினைக்கிறது. ஒவ்வொரு துளியிலும் வளர்ச்சி என்ன என்பதை காண துடித்துக் கொண்டிருக்கிறது. அதன் அழிவிலிருந்து தன்னை மறுஆக்கம் செய்து கொள்கிறது. அதன்முன் மண்டியிட்டு தன்னை காத்துக்கொள்ள துடிக்கிறான் மனிதன். இயற்கையாக மாறும் ஒருவனே இயற்கையின் ஒன்றான காட்டில் வாழமுடியும், சாகவும் முடியும். குட்டப்பன் தன்னை யானை தாக்கி சாகவேண்டும் என நினைக்கிறான். அதுவே ஜென்ம ஈடேற்றமாக இருக்கும் என நினைக்கிறான். அவ்வாறே இறக்கிறான். அவனுடன் வாழ்ந்த காலத்தை கிரியால் மறக்க முடிவதும் இல்லை. அவன் மகனை சில காலம் கழித்து சந்திக்கும்போது மகனுக்கு தந்தைப் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. கிரி அவனிடன் குட்டப்பனின் வாழ்வை கூறுகிறான். அவன் மகன் அடையும் சிறு மனஎழுச்சியின் தன் ஜென்மம் ஈடேறுவதாக மகிழ்கிறான். அதாவது நீ அவன் மகனில்லை, நான் தான் அவனை அறிந்த உண்மையான மகன் என்பதுபோல.
***
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருக்கும் பிற நாவல்கள் இந்நாவலின் தாக்கம் தெரிகிறது. குறிப்பாக இரவு, கன்னிநிலம் போன்ற நாவல்கள் காடு நாவலின் சில பகுதிகள் தான் என்று சொல்லிவிடலாம். காடுவில் வரும் நீலியும், இரவில் வரும் நீலியும் ஒரே பெண்கள் தாம். புறத்தாலே போ சாத்தானே கட்டுரையும் இந்நாவலில் ‘இடம்பெறுகிறது’. மிக நெருக்கமாக உணர்ந்த முதல்வாசிப்பு இடங்களெல்லாம் இடம்வாசிப்பில் அவ்வளவாக கவரவில்லை, ஆனால் குட்டப்பனும், இஞ்சினியர் அய்யர், குரிசு, சினேகம்மை மிக நெருக்கமான நண்பர்களாக தோன்றுகிறார்கள். அதில் வரும் மிளாவும் தேவாங்கும் மிக நெருக்கமானவைகள் தாம். மிகச் சிறிய பாத்திரமான தேவசகாய நாடாரும், பார்க்கில் சந்திக்கும் ஒரு நாடாரும்கூட நெருக்கமாக உணர முடிகிறது.
மிக குறுகிய காலத்தில் எழுதிய நாவல் என்று குறிப்பிட்டுள்ளார் ஜெ. ஆனால் பலகாலம் எழுதியிருக்க வேண்டும் என்கிற பிரம்மை ஏற்படுகிறது நமக்கு? காரணம் அதன் உள்மடிப்புகள். சின்னச் சின்ன விஷயங்கள்கூட புனைவின் வேகத்தில் அழகாக அந்தந்த இடத்தில் அமர்ந்துவிடுகிறது. மிளாவை தொடர்ந்து கவனித்து அதன் வாழ்க்கையை புரிந்துக் கொள்ள நினைக்கும் கிரிக்கு, அதுவே உணவாக கடைசியில் (அவனுக்கு தெரியாமல்) அமையும் என நினைத்திருக்க மாட்டான்.
மிக நெருக்கமாக வாழும் சமவெளிகளில் மனிதர்கள் அப்பட்டமான சலிப்பை அடைகிறார்கள். பொருளைத் தேடி சுற்றும் சமயங்களிலெல்லாம் உறைக்காத ஒன்று தான், ஆன்மீகம், அரசியல், அதிகாரம் எல்லாவற்றையும் அடைய துடிப்பதில் இருக்கும் வேகமும், வெறுப்புமற்று, காட்டில் யாருமற்ற நிலையில் வாழும்போது அடைகிறான்.
ஒரே வாழ்வின் தொடர்பற்ற இருவேறு பக்கங்களை மீண்டும் மீண்டும் சொல்கிறது காடு. சினேகம்மையை அடைய நினைக்கும் கிரி, மாமி அருவருப்பூட்டுகிறாள். நீலி இருக்கும் உலகில்தான் வேணியும் வருகிறாள். குட்டப்பனும் அய்யரும் இருக்கும் இடத்தில் சதாசிவமும் மேனனும் வருகிறார்கள். யேசுவை தேடும் குரிசுவின் பக்கத்தில்தான் இந்திரியங்களில் திளைக்கும் இரட்டையர்கள் இருக்கிறார்கள். என்ன மாதிரியான வாழ்க்கை நமக்கு? எதைச் தேடிச் செல்கிறோமே அதன் எதிரிடைதானே கிடைக்கிறது.
வாழ்க்கைப் பயணத்தில் உச்சங்கள் மட்டுமே அமைவதில்லை, தோல்வியும் கீழ்மையும் கூடவே வருகிறது. எந்த இழிவும் அவன் கைகளிலேயே இல்லை. ஆனால் வாழ்க்கை வசீகரிக்கவே செய்கிறது. அதை மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது, காடு போல.
கே.ஜே.அசோக்குமார்