அன்புள்ள ஜெ,
வணக்கம்.
தமிழகத்தின் கல்விச்சுழல் குறித்து, குறிப்பாக உயர்கல்வித்துறை குறித்து வருந்தாத சிந்தனையாளர்கள் இங்கு இல்லை. அதுகுறித்த கசப்புணர்வும், தூற்றல்களும் தமிழ் வாசிப்புச்சூழலில் புதிதும் அல்ல. இணையம், அச்சு என எவ்வூடகம் வழியேனும் மாதம் ஒருமுறையாவது அதைக் கடக்கிறோம். இப்போது கல்விச் சாதனைகள் என்று நாம் மார்தட்டிக் கொள்ள எதாவது இருக்குமென்றால், அது சென்ற தலைமுறை நமக்கு விட்டுச்சென்றவைகளில் ஒன்று. நிகழ்காலம் தேய்பிறை.
ஆனால், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கோ அது குறித்த அக்கறை சிறிதும் இல்லை. சமீபத்திய உதாரணம், தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள உதவிப்பேராசிரியர் தேர்விற்கான அறிவிக்கை. இதுபோன்ற தேர்வுமுறைக்கென எனக்குத் தெரிந்து இந்திய அளவில் முன்னுதாரணங்கள் இல்லை. இது வேறேதாவது மாநிலத்தில் நிகழ்ந்திருந்தால் ஆய்வு மாணவர்கள், பேராசிரியர்கள் போராட்டம் நடத்தியிருப்பார்கள். அப்படியொன்று நிகழ்ந்ததாக எனக்குத் தெரியவில்லை.
இத்தகைய அறிவிக்கை குறித்து ஒருவர் நீதிமன்றம் சென்றார் என்கிறது செய்திக்குறிப்பொன்று. https://www.hindutamil.in/news/tamilnadu/515308-highcourt-ordered-to-issue-notice-to-teachers-recruitment-board.html ஆசிரியர் தேர்வு வாரியம் அவ்வழக்கில் வென்றிருக்கிறது, அதனால்தான் இப்போது விண்ணப்பங்களை வரவேற்றிருக்கிறது.
இம்மாத காலச்சுவடு இதழில், கேரளமும் மேற்கு வங்கமும் பேராசிரியர் தேர்விற்குப் பின்பற்றும் முறைகளுடன் தமிழகம் பின்பற்றும் தேர்வுமுறை குறித்த ஒப்பீட்டை ஒரு கட்டுரையாக எழுதியிருக்கிறேன். https://sannaloram.blogspot.com/2019/10/blog-post.html
மேற்சொன்ன செய்திக்குறிப்பிலும், கட்டுரையிலும் எல்லோருக்கும் புரியும் ஒரு எளிய நீதி இருப்பதாக நம்புகிறேன். நீதிமன்றத்தில் வென்றதாலேயே அம்முறை சரி என்பதை நான் ஏற்க மறுக்கிறேன். நான் தவறாகக்கூட இருக்கலாம்; இங்கு எது சரி என்பது தெரிவுபடுத்தப்பட வேண்டும். இது குறித்த ஒரு விவாதம் இங்கு நிகழவேண்டும் என எண்ணுகிறேன். எனவே, இந்தக்கட்டுரையைப் பொதுவில் வைக்கக் கேட்கிறேன்.
இங்கு நேர்மையான வழியில் ஒருவர் பேராசிரியர் பணி நியமனம் பெற விழைந்தால் அதற்கான சூழலை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோமா என்பதில் எனக்குச் சந்தேகங்கள் இருக்கின்றன. இதற்கு நாம் என்னதான் செய்து விடமுடியும்? மனம் வெதும்பி பக்கங்களை நிரப்பிக்கொண்டிருப்பதைத்தவிர? கசப்பில் இதைக் கடந்து செல்வதைத்தவிர?
அதிகாரத்தில் இருப்பவரோ-இல்லாதவரோ, நம் எல்லோர் பிள்ளைகளும் இச்சூழலில்தானே வளர்ந்தாக வேண்டும்?!
நன்றி,
விஜயகுமார்.
அன்புள்ள விஜயகுமார்
கடந்த பத்தாண்டுகளாக நான் உறுதியாக அறிந்தவரை மிகமிகச் சில அரசு உதவிபெறும் கல்விநிறுவனங்கள் தவிர எங்குமே லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சம் கொடுக்காமல் ஆசிரியர் பணி , கல்லூரியிலோ உயர்நிலைப் பள்ளியிலோ, கிடைப்பதில்லை. அது பேரம்பேசி அடையும் தொகை அல்ல. தெளிவாக, பொதுவாக, வெளிப்படையாக நிறுவப்பட்டுவிட்ட விஷயம்.
தரம்பேணும் உறுதிகொண்ட சில நிறுவனங்கள் மட்டுமே முழுக்கமுழுக்க தகுதியின் அடிப்படையில் ஆசிரியர்களைப் பணிக்கு எடுக்கின்றன. அவ்வாறு எடுப்பதாக நான் அறிந்த ஒரே நிறுவனம் சென்னை கிறித்தவக்கல்லூரி. கத்தோலிக்க நிறுவனங்கள் சமீபகாலம் வரை அவ்வாறு இருந்தன. இன்று அங்கே அந்நிலை இல்லை. சாதி அரசியலின் ஆட்டமும் உள்ளது. இந்து நிறுவனங்கள் அனைத்துமே சாதி அடிப்படையும், லஞ்சத்தின் அடிப்படையும் கொண்டுதான் ஆசிரியர்களை பணியமர்த்துகின்றன.
இந்த நிலைதான் நம் கல்வியில் இத்தனை பெரிய வீழ்ச்சி நிகழக் காரணம். இதை நேரடியாக அப்பட்டமாக பேசுவது மட்டுமே நாம் செய்யவேண்டியது. ஆசிரியர் பணிநியமனத்தில் லஞ்சம் பெற்றதற்காக எவருமே தண்டிக்கப்பட்டதில்லை. அதில் ஒரு முறையான விசாரணைக்குக்கூட இங்கே இடமில்லை. கொடுப்பவர் வாங்குபவர் கண்காணிப்பவர் அனைவரும் சேர்ந்து செய்யும் மாபெரும் ஊழல்
இது. நான் அறிந்தவரை சென்ற தலைமுறையில் என்றால் கல்விநிறுவனங்களில் தலைமைப்பொறுப்பில் இருக்கவேண்டிய அறிஞர்கள் தனியார் நிறுவனங்களில் தொகுப்பூதியத்தில் கூலிவேலை செய்துகொண்டிருக்கும் நிலை இன்றுள்ளது. எனக்கு நன்குதெரிந்த ஒருவர், ஐயமில்லாமல் இத்தலைமுறையின் முதன்மையான அறிஞர்களில் ஒருவர். மூன்று தகுதித்தேர்வுகளை வென்றவர். முனைவர் பட்டம் பெற்றவர்- அதிலும் மிகச்சிறந்த முனைவர்பட்ட ஆய்வேடு அது. பயிற்றியலில் பத்தாண்டு அனுபவம் கொண்டவர். ஆனால் வேலைக்கு நாற்பது லட்சம் கேட்டனர். அவர் பணம் கொண்டவர்தான், ஆனால் கொஞ்சம் அறம்பேணுபவர். அந்தப்பணத்தை கொடுக்க மறுத்து தொகுப்பூதியத்திலேயே வாழ்கிறார். தமிழிலக்கியச் சூழலில் தடம் பதித்த பல இளம் அறிஞர்கள் , படைப்பாளிகள் இன்று அனைத்து தகுதிகள் இருந்தும் தொகுப்பூதியத்தில் வாழ்கிறார்கள் தெரியுமா?
இத்தகைய சூழல் தமிழகத்தின் கல்வி வரலாற்றில் அமைந்த்தே இல்லை. இதற்கு விதிவிலக்கான எந்த துணைவேந்தரும் இன்றில்லை. எந்த கல்வி அமைச்சரும் அதிகாரியும் இன்றில்லை. எந்தக் கட்சியும் இந்தச் சூழலுக்கு வெளியே இல்லை. ஆசிரியர் சங்கங்கள்கூட இதைப்பேசுவதில்லை. இந்த இந்த அப்பட்டமான உண்மைக்குமேல்தான் இங்கே தமிழர்பெருமை, திராவிடப்பெருமை, கல்விசிறந்த தமிழ்நாடு, நீட் தேர்வின் அபாயங்கள், வடவரால் அழியும் தமிழ்ப்பண்பாடு என எல்லாமே பேசப்படுகின்றன
இதை உணர நீங்கள் எழுதியுள்ளது போன்ற நீண்ட ஆய்வுகள் எதுவும் தேவை இல்லை. அதைக் காண மறுக்கும் நேர்மையின்மை இங்கே அனைவரிடமும் உள்ளது. அவரவருக்குத் தக்கபடி அதற்கு அரசியல்சாயம் பூசிக்கொள்கிறார்கள், அவ்வளவுதான்
ஜெ
அறிவியல்கல்வியும் கலைக்கல்வியும்