அன்புள்ள ஜெயமோகன்,
2011-ஆம் ஆண்டில் ‘வாரம் இரண்டு நாட்களே இணையதளத்தில் எழுதத்
திட்டமிட்டுள்ளதாக’ நீங்கள் எழுதியதை முதலில் படித்தபோது சற்று ஏமாற்றமாக,
வருத்தமாக இருந்தது. ஆனால், கடந்த சில வாரங்களாக அறம், சோற்றுக்கணக்கு,
மத்துறுதயிர், தாயார் பாதம், வணங்கான், யானை டாக்டர் என்று சீரிய சிறுகதைகளைத்
தொடர்ந்து வெளியிட்டுவருகிறீர்கள்!
‘உயிர்களிடத்தில் அன்பு வேணும்’ யானை டாக்டர் நான் சமீபத்தில் வாசித்த ‘காடு’
கதையின் இயற்கை ரசிகர் அய்யரை சற்று நினைவுபடுத்தினார்.
இத்தொடர்வாசிப்பின் மூலம், இக்கதைகளுக்கான எதிர்வினைகளின் மூலம், சிறுகதையின்
‘இலக்கணம்’ சற்றுப்புலப்படுகிறது. யானை டாக்டர் சிறுகதையையே அவரின் குடும்பம்,
மகள்களின் திருமணங்கள் நடத்தப் பொருளாதாரச்சிக்கல் போன்ற பல அம்சங்களை உள்ளடக்கி விரிவாக்கினால் நாவலாகும். சரியா? (மிக எளிய புரிதல்தான் :(
நன்றி,
பழ. கந்தசாமி
அன்புள்ள கந்தசாமி
ஆகாது.
யானைடாக்டர் கதையின் மையப்புள்ளி அந்த இருபது யானைகளும் சேர்ந்து அவரை வாழ்த்தும் கணம் மட்டுமே. மற்ற அனைத்தும் அந்த இடம் வரை கதையை கொண்டு வந்து சேர்க்கின்றன. டாக்டரின் குணச்சித்திரம், காட்டின் இயல்பு, டாக்டரைச்சூழ்ந்திருக்கும் நம் சமூகத்தின் பார்வை ஆகியவற்றைச் சொல்லி அந்த மையம் நோக்கி செல்கின்றது கதை. அது ஒரு சிறுகதைத் தருணம், நாவல் அல்ல.
நாவலின் மையம் ஒரு முரண்பாடாக, தொடர்ந்து வினாக்களை எழுப்பும் சிக்கலாக இருக்கவேண்டும். உதாரணமாக டாக்டரையே இளம்வயதானவராக தத்தளிப்புகள் கொண்டவராக அமைத்து லௌகீகமான நகர வாழ்க்கைக்கும் காட்டு வாழ்க்கைக்கும் நடுவே அவரது மனம் ஏங்குவதாகக் காட்டி அந்த போராட்டத்தின் இரு பக்கங்களையும் காட்டி விரித்துச் சென்றால் அது நாவல்.
அந்த மையச்சிக்கலின் உச்சமாக, அந்தச் சிக்கல் தீரும் கணமாக யானைகளின் சல்யூட்டை அமைத்துக்கொண்டால் போதும்
ஜெ
================================
அன்புள்ள ஜெ,
தங்கள் சமீபத்திய கதைகள் (பாதி புனைவு பாதி நிஜம் என்கிற கலவை) காற்றாக வீசுகிறது.
சில சமயம் மூச்சு முட்டுகிறது, சில சமயம் முகத்தை வருடுகிறது. வேறு சில சமயம், உடைகள் படபக்கிறது.
அதிலும், அறம் , சோற்று கணக்கு, வணங்கான், தாயார் பாதம் மற்றும் யானை டாக்டர்.. மனம் அசை போட்டுக்கொண்டே இருக்கிறது. இவை மூலம் சிறுகதைகளுக்கு ஒரு ஊக்கமூட்டும் அணுகுமுறை சுவையாக இருக்கிறது. பொதுவாக மனிதர்கள் இரு காரியம் செய்தால்.. ‘ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்’ என்று மொழி உணர்த்துவார்கள். எனக்கு அது மண்ணில் ஒரு காலும் விண்ணில் ஒரு காலுமாகத் தோன்றும்.
இந்தக் கதைகள் வெகு நிச்சயமாக மனிதனைச் சும்மா விடுவதில்லை.
சில சமயம் உணர்வுத் திறன் (emotional intelligence) வளர்ப்பவை போலத் தோன்றுகிறது. அறிவுத் திறன் வளர்க்கப் பொருளாதாரச் சூழல் பரவாயில்லை (போதிய அளவு உள்ளது) என்றும், உணர்வுத் திறன் வளர்ப்பது ஒரு சாத்தியம் என்பதே உற்சாகம் ஊட்டும் நிகழ்வாகவும் இருக்கிறது.
பலரும் பாராட்டி உள்ளார்கள். நிஜமாகவே எழுதுகிறீர்கள், இணைய வேகத்திற்கு. புரிகிறது, பாரம்பரிய அச்சு உங்கள் வேகத்திற்கு வராது என.
உங்கள கதைகளைப் படித்தால், நானும் எழுதவேண்டுமென ஊக்கம் பிறக்கிறது. அதைச் சற்று முன்னே எடுத்து செல்ல எனக்கு இன்னும் சற்று முயற்சி தேவை.
இதனை, உங்களுக்கு பாராட்டு மற்றும் வணக்கமாகவே தெரிவிக்கிறேன்.
பரவசமான அன்புடன்.
முரளி
அன்புள்ள முரளி
ஒரு கதையை வாசிக்கையில் நாமும் ஒன்று எழுத தூண்டுதலுக்குள்ளாவது என்பது அக்கதைமீதான மிகச்சிறந்த எதிர்வினைகளில் ஒன்று. மணியோசையின் எதிரொலி போல.
ஜெ
அன்பின் ஜெ.எம்.,
தில்லியில் நடைபெற்ற நாஞ்சில் பாராட்டுக் கூட்ட நினைவுகளிலேயே இருந்ததால் யானை டாக்டரைச் சற்றுத் தாமதமாகத்தான் படித்தேன்.இல்லையென்றால் இரவு 12 மணிக்கு உங்கள் பதிவுகள் வெளிவந்த பின் படித்து விட்டுப் படுப்பதே என் வழக்கம்.
அண்மைக் காலமாகக் கொஞ்சம் காடுகளுக்குள் சென்று கொண்டிருப்பதால் உங்கள் ‘காடு’ நாவல் படித்த கால கட்டத்திலிருந்து சற்று முன்னேறி அந்தச் சூழலை மனக்காட்சியாகக் கொண்டு வருவது சற்று எளிதாக இருக்கிறது.
யானை டாக்டரும் கூடக் கெத்தல் சாகிபு போலத்தான் ! தான் செய்யும் காரியத்தை -அதன் முழுப்பரிமாணங்களுடன் உள் வாங்கிக்கொள்வது… – அதில் மட்டுமே தோய்ந்து கலந்தபடி…புற உலக இயக்கம்,ஆரவாரம்,அங்கீகாரம் ஆகியவற்றைப் பற்றிச் சிந்தை செலுத்தாமல் இருப்பது என அவரும் ஒரு கர்மயோகியாக மட்டுமே காட்சியளிக்கிறார்.
கானக உயிரினங்கள், பிரபஞ்ச நடனத்தின் இயல்பான அசைவுகளையும், ஒத்திசைவுகளையும் தரிசனமாக்கித் தந்து கொண்டிருப்பதை அனுதினமும் கண்டபடி அனுபூதி நிலையை எட்டிவிட்ட ஒருவருக்குப் பரிசுகளையும்,விருதுகளையும் துரத்திக் கொண்டு ஓடும் மனிதனின் உலகம் அருவருப்புக்கு உரியதாக இல்லாமல் போனால்தான் ஆச்சரியப்பட வேண்டும்.
புழுக்களும் பூச்சிகளும் அருவருப்புக்குரியவை அல்ல என்பதை உணர்த்தும் அதே வேளையில் ‘கலக மானுடப்பூச்சிக’ளாகிய மனிதர்களே அதற்கு ஏற்றவர்கள் என்பதையும் முன் வைக்கிறது கதை.
இந்தக் கதையைப் படித்த பிறகு வழக்கமாகப் புழுக்களையும் பூச்சிகளையும் பார்க்கும்போது ஏற்படும் அசூயையான உணர்வை நிச்சயம் கடந்து சென்று விட முடியும்.
யானையில்லாமல் சங்க இலக்கியமே இல்லையென்றதும் சங்கப் பாடல்கள்,பழந்தமிழ்ப்பாடல்கள் பலவும் ஏக காலத்தில் என்னுள் பெருங்குரலெடுத்துப் பிளிறின.
ஆனால் பாடிப்பாடி யானையை வியந்த சங்கமனிதர்களே அதைக்கொன்று வீழ்த்துவதை வீரத்தின் உச்சமாகவும் போற்றிப் பாடியிருக்கிறார்களே!
‘’கவளம் கொள் யானையின் கை துணிக்கப்பட்டுப்
பவளம் சொரிதரு பை போலத் தோன்றும்’’
என்று களவழிநாற்பதில் துடிக்கத் துடிக்க வெட்டுப்படும் யானைத் துதிக்கையிலிருந்து சொரியும்குருதியைப் பவளப் பை கவிழ்த்தது போல இருந்தது என்று பாட அந்தப் புலவனின் மனம் எப்படித் துணிந்தது?
மேன்மையும்,பெருமையும் கொண்ட வேறு எந்த உயிரையும் விட உயர்ந்த நிலையில் இருந்து மேலாதிக்கம் செலுத்துபவன் தானாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற மூர்க்க வெறியே இவ்வாறான முரண்பாட்டுக்குள் அவனைக் கொண்டு செலுத்தியிருக்குமோ?
நன்றி…
—
எம்.ஏ.சுசீலா,(M.A.Susila)
======================
அன்புள்ள ஜெ
யானைடாக்டர் வாசித்தேன்
அழகிய நேரடியான கதை. கதையில் வாசகனின் ஊகத்திற்கு எதையுமே விடாத பாவனை. காரணம் கதையில்தான் வாசகனுக்கான இடைவெளி இல்லை, கதை முன்வைக்கும் vision முழுதுமாகவே வாசகனுக்கு விடப்பட்டிருக்கிறது. உணர்ச்சிகரமாக இந்தக்கதையை வாசிக்கும் எத்தனை பேருக்கு அந்த ஞானம் சென்று சேர்ந்திருக்கும் என்று தெரியவில்லை. நான் வள்ளலாரின் நெடுநாள் பக்தன். வள்ளலாரின் பாடல்களில் இந்த மெய்ஞானம் மீண்டும் மீண்டும் வந்துகொண்டே இருக்கிறது.
அதாவது சுருக்கமாகச் சொல்கிறேன். சமணக் கோட்பாடுகளின்படி எல்லா உயிர்களுக்கும் ஆன்மா உண்டு. யானையின் ஆன்மா பெரியது. எறும்பின் ஆன்மா சிறியது. ஆன்மா என்றால் inner existence அல்லது total self என்று சொல்லலாம்.
ஆனால் ஜோதிதரிசனம் என்ன சொல்கிறதென்றால் ஆன்மாவில் அபப்டி பெரிதும் சிறிதும் ஏதும் இல்லை என்றுதான். ஏனென்றால் எல்லா ஆன்மாவும் ஒன்றே. ஒரே வெளிச்சம் எல்லா பனித்துளியிலும் நிறைந்திருக்கிறது போல.
இந்தக்கதையை, புழுக்களைப்பற்றி சொல்லும் இடத்தை கவனித்து, வாசிக்கும் ஒருவன் அந்த ஞானத்தை நோக்கி வந்து சேர்ந்துவிட முடியும். எங்கள் குழுவினருக்கு இந்தக்கதையைப் படியெடுத்து அளித்தேன்
சிவ சண்முகம்