வாசல்பூதம்

 “அதுமேலே ஏறி நிக்கணுமா?”

லக்ஷ்மி மணிவண்ணனின் குறிப்பை சிரிப்புடன் வாசித்தேன். [கீழே] அவர் குறிப்பிடும் இந்தக் கூட்டத்தில் நானும் கலந்துகொண்டேன் என நினைக்கிறேன். கூட்டம் முடிந்த்துமே எனக்கும் சிலபல கண்டனங்கள், அன்பான எச்சரிக்கைகள். ஏனென்றால் நான் போதுமான அளவு கண்டிக்கவில்லையாம். முகநூலில்கூட பலர் எழுதியிருந்தார் என்றார்கள்

கண்டிப்பதற்கு என ஒரு மொழி இருக்கிறது. சுந்தர ராமசாமி ஒரு புளியமரத்தின் கதையில் எழுதியதுபோல ‘லின்லித்கோவுக்குச் சவால். தைரியமிருந்தால் இங்கே வா. இங்கே நாகர்கோயில் மணிமேடையில் நின்று எனக்கு பதில்சொல். மோரையிலே குத்திருவேன்!” பாணியில் கண்டனம் தெரிவித்தாலொழிய அது கண்டனமாக ஆவதில்லை.

‘சைடு எடுக்கிறது’ என்று இதற்குப்பொருள். முழுமூச்சாக ஒரு பக்கம் சாய்ந்துவிடுவது. ஒரு தரப்பின் தற்கொலைப்போராளியாகவே மேடைகளில் தோற்றமளிப்பது. ஆனால் நிரந்தரமாகவெல்லாம் அப்படித் தோன்றவேண்டும் என்பதில்லை. இங்கே இரண்டே தரப்புதான். இடது வலது. இரண்டில் ஒன்றை பொதுவாக தழுவி நின்றால்போதும். இடது என்றால் திராவிட அம்பேத்காரிய மார்க்ஸிய தமிழ்த்தேசிய இஸ்லாமிய அடிப்படைவாதத் தரப்பு என்று அர்த்தம். மாறுவேடமிட்ட கிறித்தவ மதவெறியும் உள்ளே உண்டு.  அதற்குள் எங்கே வேண்டுமென்றாலும் செல்லலாம். எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சம் கலக்கிக்கொள்ளலாம்

வலதுசாரி என்றால் இந்துத்துவம் மையமாக. கூடவே பிராமண,தேவர்,நாடார் சாதிவாதம். பிடிவாதப் பழைமைவாதம் முதல் சீர்திருத்த இந்துத்துவம் வரை அதில் பல நிறமாலை வண்ணவேறுபாடுகள். இதற்குள்ளும் பலநிலைகள் எடுக்கலாம். ஒன்றாக இருந்து கொண்டு இன்னொன்றாகவும் தோற்றம் அளிக்கலாம்

நிலைபாடு எடுத்துவிட்டால் பலவகை இன்பங்கள். முடிவெடுக்கும் பொறுப்பு இல்லை- அரசியலில் முடிவுகளை கூட்டாகவே எடுக்கிறார்கள். சொல்லப்போனால் முடிவு எடுக்கப்பட்ட பின்னரே அதற்குரிய செய்திகள் தெரிந்துகொள்ளப்படுகின்றன. அன்றாடம் எடுக்கும் எல்லா முடிவுகளும் முதலில் எடுத்துவிட்ட ஒற்றை முடிவின் சொல்வேறுபாடுகள்தானே? அந்த முடிவை பெரியவர்கள் முன்னரே எடுத்துவிட்டிருக்கிறார்கள். என்ன வசதி.

முடிவெடுக்கவேண்டியதில்லை என்பதனால் எதையும் சிந்திக்கவேண்டியதில்லை. ஆகவே எதையும் தெரிந்துகொள்ளவும் வேண்டியதில்லை. எடுத்தமுடிவை ஆக்ரோஷமாக வலியுறுத்தி பூசலிடுவதற்கு மட்டும் தெரிந்துகொண்டால் போதும். அந்த அளவுக்கு செய்திகளைத் தெரிந்துகொண்டால் வசதி.

எதிர்த்தரப்பை அவர்களே முடிவுசெய்ய நாம் விடக்கூடாது. எதிர்த்தரப்பின் இயல்பென்ன, அவர்கள் சொல்வது என்ன, அவர்கள் செய்யப்போவது என்ன எல்லாவற்றையும் நாமேதான் முடிவுசெய்துவிடவேண்டும். அதை எக்காரணத்தாலும் மாற்றிக்கொள்ளக்கூடாது.எதிரி கெஞ்சினாலும் விடக்கூடாது இப்போது எதிரிக்கு நாம் சொல்லவேண்டிய பதிலும் தெள்ளத்தெளிவாக, மாற்றமில்லாததாக ஆகிவிடுகிறது.

எதிரி என்பவர் யார்? நம்முடன் சேர்ந்து, நாம் சொல்வதை அப்படியே சொல்மாறாமல் சொல்ல முன்வராத எல்லாருமே நம் எதிரிகள்தானே? அந்த எதிரிகளை வசைபாடலாம். அவதூறுசெய்யலாம். இழிவுசெய்யலாம். கொள்கையின்பொருட்டு இதையெல்லாம் செய்யும்போது எல்லாமே நியாயமாகிவிடுகின்றன. எதிரி எவராயினும் நாம் எதிரிக்காக வைத்திருக்கும் நிரந்தரமான பதிலைச் சொன்னால் போதும். பதில் என்பது ஒரு மரியாதைக்குத்தான். கண்டனம்!

அவர்கள் தங்கள் தரப்பை விதவிதமாக விளக்க முற்படுவார்கள்தான். கலை என்றும் இலக்கியம் என்றும் தத்துவம் என்றும் மெய்யியல் என்றும் சொல்வார்கள். புரிந்துகொள்ளச்செய்ய முயல்வார்கள். அந்தச் சிக்கலில் எல்லாம் சிக்கிக்கொள்ளவே கூடாது. நம் எதிரி என்பவர் நம்மால் நம் கோணத்தில் வரையறுக்கப்பட்டு வசைபாடப்படுபவர். அவர் அப்படி அல்ல என்றால் விட்டுவிட முடியுமா என்ன? நம் எதிரி அவர் என்ன சொல்கிறார் என்று நாம் எதைச் சொல்கிறோமோ அதை மறுத்தார் என்றால் அது ஒரு தந்திரம், அதை நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. அவரை அங்கேயே நிறுத்துவதே நம் தந்திரம்.

எதிரிகளே அரசியலை தீர்மானிக்கிறார்கள். எதிரிகளை நாம் தீர்மானிக்கிறோம். ஆகவே நம் அரசியல் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. இலக்கியத்தையும் அப்படி நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும். அதற்கு அதிலிருந்து முதலில் இலக்கியத்தை வெளியே தள்ளவேண்டும். இலக்கியம் என்பது அழகியல். அதை நீக்கினால் எஞ்சுவது ஒரு வெற்றிடம். அங்கே நாம் அரசியலை வைக்கலாம். அதைத்தான் அழகியலுக்குப் பதில் அரசியல் என்கிறோம். எனக்குத் தெரிந்ததைத்தான் நான் பேசுவேன் என்பதன் இன்னொரு வடிவம்தான் இந்த வழிமுறை

ஆகவே அனைத்தும் அரசியலே. அரசியல் அல்லாத எதுவும் இந்தப்பூமிக்குமேல் இல்லை. அதுவே அரசியல்வாதியின் இலக்கிய அணுகுமுறை.

ஆனால் அரசியல் இல்லாத ஓர் இடம் உண்டு. நாம் வீட்டுக்குத்திரும்பி சட்டையை கழட்டி கொண்டியில் மாட்டிவிட்டு ஃபேனை போட்டு ஹாயாக சாய்ந்து “ஏட்டி ஒரு காப்பி எடு’ என ஆணையிட்டுவிட்டு நம் நிலைக்கு திரும்புகிறோமே அதன்பிறகுள்ள அனைத்துமே அரசியல் அற்றவை. அங்கே சாதிசனம், சாமிபூதம் எல்லாம் உண்டு. அதெப்படி, விட்டுவிட முடியுமா?

மறுபடி சட்டையை எடுத்துப்போட்டு பித்தான்களைப் போடும்போது மீண்டும் அரசியல். வாசலில் நின்றிருக்கும் பூதம் அது. கொண்டுவிட்டுவிட்டு கூட்டிச்செல்வது. ஆனால் மரியாதை தெரிந்தது. அது வீட்டுக்குள் நுழைவதில்லை. நாம் அழைப்பதுமில்லைஅரசியல்வாதிகளின் இலக்கியப்பார்வை

லக்ஷ்மி மணிவண்ணன்

தீர்மானமாக ஒரு திடகாத்திரமான கட்சி நிலைப்பாடு எடுப்பவர்களோடு அறிவுரீதியாகவும் ,சிந்தனைரீதியாகவும் ஒதுங்கியிருப்பதே நல்லது.அவர்கள் சிந்திக்கும் திறனை இழப்பவர்களாக மட்டும் இருப்பதில்லை. பிறருடைய சிந்திக்கும் திறனையும் மழுங்கடித்து விடுகிறார்கள்.

அரசியல் நிலைப்பாடு என்பது விரைந்து தாங்கள் சார்ந்த தரப்பிற்கான அதிகாரத்தை நோக்கம் கொண்டது.அதிகாரம் உரிமையை ஸ்தாபிக்கிற முயற்சி.எந்த தரப்பினரின் அரசியல் என்பதனை முன்னிட்டு ஒருவர் அதற்கு ஆதரவாகவோ ,எதிராகவோ, பிரச்சனைகள் சார்ந்த தற்காலிக நிலைப்பாடுகளோ எடுக்க முடியும் .அது வேறு விஷயம்.இலக்கியம் வேறு விஷயம்.கலை வேறு விஷயம்.கலையிலக்கியத்திற்கு; அரசியல்வாதிகள் கொண்டிருக்கும் நோக்கங்கள் எதுவும் கிடையாது. பிஜேபி, காங்கிரஸ் ,கம்யூனிஸ்ட்கள் இப்படி எந்த வகையான அரசியல் உடையவர்களாவும் இருக்கட்டும், இலக்கியத்தைப் பொறுத்தமட்டில் ஒத்த ஒருமித்த கருத்துடையவர்களே. வாசகனுக்கு அப்படி ஒருமித்த கருத்து இல்லை என்பது மட்டுமல்ல, அவனுக்கு எந்த நிறமும் இல்லை.

அரசியல்வாதிகளின் இலக்கிய ஆர்வமும் ,இலக்கிய வாசகனின் இலக்கிய ஆர்வமும் ஒன்று அல்ல.முற்றிலும் வேறானவை.ஒரு அரசியல்வாதி இலக்கியம் இதனை செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிற எதனையுமே இலக்கிய வாசகன் எதிர்பார்ப்பதில்லை.அவனுடைய கோணம் முற்றிலும் வேறானது.இலக்கிய வாசகன் வாசிப்பிலிருந்து; “பெறமுடியாத ஒன்றை” அடைகிறான். அப்படி அடைந்தால் மட்டுமே ,அந்த வாசிப்பில் அவன் நிறைவெய்துகிறான்.அரசியல்வாதி தன்னுடைய தரப்பிற்கு குறிப்பிட்ட இலக்கியம் என்ன செய்திருக்கிறது என்று யோசிக்கிறான்.

இலக்கியத்தை எப்படி தவறாக வாசிக்க முடியும் என்பதற்கு அரசியல்வாதிகளின் வாசிப்பு முறையையே , நிராகரிக்கும் முறையையே சிறந்த உதாரணங்களாகக் கொள்ளலாம். எல்லாவகையான அரசியல்வாதிகளும் இலக்கிய படைப்புகளின் மேலேறி நின்ற வண்ணம் அதை பற்றி பேசுகிறார்கள். ஆனால் எப்போதும் இலக்கியப் படைப்புகளைப் பொறுத்தவரையில் வாசகனே பிதா மகன்

என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில் அனைத்து கட்சியினரும் எப்படி, எதனை, எவ்வாறு எழுத வேண்டும் என்று கற்றுத் தர முயற்சித்திருக்கிறார்கள்.நானும் தப்பித்து தப்பித்து வந்திருக்கிறேன்.

ஒருமுறை பேருந்து நடத்துனர் ஒருவரிடம் சிக்கிக் கொண்டேன். அவருக்கு பயணச்சீட்டு கொடுக்க தேவையற்ற அனைத்து நேரத்தையும் பயன்படுத்தி எனக்கு இலக்கியம் பயிற்றுவித்தார். எப்படி எழுத வேண்டும்? எதை எழுத வேண்டும்? எவ்வாறு எழுத வேண்டும் என்பதே பாடம். நான் ஒன்றுமே சொல்லிக் கொள்ளவில்லை. நான் முற்றிலும் மனநலச்சீர்கேடு அடைந்திருந்த காலத்தில் ரயிலிலிருந்து குதிக்க முயன்றிருக்கிறேன். இந்த பேருந்துப் பயணத்தில் முன்னனுபவத்தை செயல்படுத்த விரும்பவில்லை. ஆனால் பேருந்திலிருந்து குதித்துத் தப்பிப்பதற்கான எல்லா வாய்ப்புகளையும் அவர் வழங்கிக் கொண்டே இருந்தார். தனிப்பட்ட முறையில் கவலை நிறைந்த ஒரு காரியத்தை முன்னிட்டு செய்து கொண்டிருந்த பயணம் அது. எப்படியாக இருப்பினும் ஜன்னலோரம் கிடைத்தால் பயணம் உற்சாகமானதாக எனக்கு மாறிவிடும். அனைத்து ரத்தத்தையும் ஒருவர் உறிஞ்சி எடுத்த பின்னர் ஒருவாரம் டைபாய்ட் காய்ச்சல் ஏற்பட்டு மீண்டால் இருக்குமே அப்படி இறங்குமிடத்தில் பேருந்திலிருந்து இறங்கினேன். நடத்துனரின் சகோதரர் நாடாளுமன்ற உறுப்பினர். அவரின் பாடங்களின்படி நடந்து கொண்டால் அவருடைய அண்ணனிடம் நடத்துனர் என்னை அறிமுகம் செய்து வைப்பார்.

ஒருமுறை ஒரு கண்டனக் கூட்டம்.கண்டனக் கூட்டங்களுக்கென்றே தமிழ்நாட்டின் எல்லா சிறுநகரங்களிலும் சிலபல புண்ணிய ஆத்மாக்கள் வாழ்ந்து வருகிறார்கள். நாற்பது பேர் வரையில் உண்டு. அவர்கள் தினந்தோறும் கண்டனம் கண்டனம் என்கிற வார்த்தையை பல முறை உச்சரித்து உடலே கண்டனமாக மாறிப் போயிருப்பார்கள். அவர்கள் வராவிட்டால் எந்த கண்டனக் கூட்டமும் வெற்றி பெறுவதில்லை. அவர்கள் வந்தால் மட்டும்தான் பத்திரிக்கையாளர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் நடப்பது கண்டனக் கூட்டம்தான் என்பது ஊர்ஜிதம் ஆகும்.

அவர்கள் இல்லாமல் ஒருமுறை ஒரு கண்டனக் கூட்டத்தை நடத்திய போது பத்திரிகையாளர்கள் சிரித்து விட்டு போய்விட்டார்கள். உளவுத் துறையினர் சமபந்தி போஜனத்திற்கா வந்தீர்கள் என்று கேட்டு விட்டார்கள். ஓய்வு பெற்ற போலீஸ் உயர் அதிகாரி ஒருவரை கண்டனக் கூட்டத்திற்கு வாழ்த்து நல்க அழைத்திருந்தோம். அவர் வந்து பார்த்து விட்டு இது கண்டனக் கூட்டம் போல இல்லையென்றாலும் கூட நல்ல இலக்கிய அனுபவமாக இருந்தது என்று வாழ்த்திவிட்டுச் சென்றார் .

மேற்படி கண்டனக் கூட்டம் ஒரு பெருநகரத்தில் நடந்தது. எழுத்தாளர்களின் கருத்து உரிமை பாதிப்படையக் கூடாது என்பது பொருள். நடத்திய தோழர்களும் எனக்கும் பகை.என்னைப் பார்த்தாலே அவர்களுக்கு கர்ப்பம் தரித்தவளுக்கு வருவது போன்று வாந்தியும் தலைக்கிறக்கமும் வரும்.

கோணங்கித்தான் “அந்த பையன் அப்படியில்லப்பா;அவன் நம்ம பையந்தா …”என்று அவர்களுக்கு ஏத்திவிட்டு என்னைக் களத்தில் இறக்கிவிட்டிருந்தார்.கோணங்கிக்கு பொதுவாகவே கண்டனத்தில் விருப்பில்லையானாலும் கூட ,அவருக்கு அதுவொரு ஜாலி போல. அவருடைய கதைகளின் தலைப்புகளை தோழர்கள் குறிப்பிட்டால் சந்தோசப்பட்டுக் கொள்வார். அது மட்டுமல்ல.கண்டனக் கூட்டங்களில் பேசுவதற்கென்றே அவரிடம் ஒரு மொழி உள்ளது. கண்டனத்தில் ஆரம்பித்து தனுஷ்கோடி பேய்களிடம் உரையை முடிப்பார். சிறுநடனமும் உண்டு. தோழர்கள் புல்லரித்துப் போவார்கள். இவ்வளவு விந்தையா! என கண்கலங்குவார்கள். எனக்கோ கொஞ்சம் தெளிவான மொழி.அன்று நிறைய கொதித்தவர்களுக்கு மத்தியில் நானும் பேசினேன்.

எல்லோருமே இங்கே எழுத்தாளன் தங்களுக்கு எதிராக எழுதிவிடக் கூடாது என்று நினைக்கிறார்கள், உண்மையில் அவர்கள் வேறு யாருக்கோ எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அது நமக்கு தொடர்பற்ற விஷயம்.தொடர்பற்றப்பண்டம். எல்லோரும் ஒதுங்கியிருந்தாலே அவர்கள் ;அவர்கள் வேலையை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.என்று பேசினேன்.

கோணங்கி சொன்னது போல இவன் நம்ம பையன் இல்லபோலிருக்கே! என்று சில இளம் தொண்டர்கள் கண்டுபிடித்து விட்டார்கள். மகாவிசுவாசி ஒரு துண்டுச் சீட்டில் குறிப்பெழுதி “ஒன்றில் இந்தப்பக்கமாகப் பேசுங்கள் இல்லை அந்த பக்கமாக பேசுங்கள்.இந்த அரை வேக்காட்டுத்தனம் வேண்டாம். உங்கள் மீது கொஞ்சம் மரியாதை வைத்திருக்கிறோம் கெடுத்துக் கொள்ளாதீர்கள் வேண்டாம்” என்று எச்சரிக்கையுடன் அனுப்பியிருந்தார். நமக்குத்தான் இந்த எச்சரிக்கைகளைக் கண்டாலே அதிகம் பிடித்துப் போகுமே ! எழுத்தாளன் எப்படி எல்லாப்பக்கமாகவும் பேசக் கூடியவன் என்பதை சில கதைகளை முன்வைத்து பேசியமர்ந்தேன்.

பிராமணனைக் கூட பகைத்துக் கொள்ளலாம்.அவர்கள் நம்மை அங்கீகரிக்க மாட்டார்கள் அவ்வளவுதான் விஷயம். யார்தான் இங்கே அங்கீகரிக்கிறார்கள்? எனவே அவர்களை புறக்கணித்தும் விடலாம். தோழர்களை பகைப்பது தெருவிற்குத் தெரு குடிநீர் குழாய்களை உடைப்பது போன்றது. குடிநீருக்கு வேட்டு வைத்து விடுவார்கள். பக்கத்துக்கு பக்கம் நின்று வழிமறிப்பார்கள். தணிக்கையில் அவர்களுக்கு ஏழாம் அறிவும் உண்டு. உளவுத் துறையினர் வீட்டிற்கு அருகில் வந்து பெட்டிக்கடையில் இவன் ஆளு தீவிரவாதியாக்கும் என்று சொல்லிச் செல்வதை போன்றே இவர்கள் இவன் ஒரு சல்லிப்பயல் என்று சொல்லிச் செல்வார்கள். எழுத்தில் ஆர்வம் உள்ள குடும்ப உறுப்பினர்கள் இருந்தால் அவர்களை உடனே அங்கீகரித்து குடும்பத்திற்குள் குழப்பம் உண்டாக்க முயல்வார்கள் .

இதில் பத்திரிகைகள், ஊடகங்கள் என்று பலவற்றிலும் தமிழ்நாட்டில் பிராமணர்களும், திமுக, கம்யூனிஸ்ட் கோணல்களுமே நிறைந்து இருக்கிறார்கள். உங்களுக்கு போக்கிடம் இல்லாமல் செய்து விடுவார்கள். இவர்களை பகைத்துக் கொள்வது என்பது தனது ஜாதகத்தை எடுத்து வைத்து தனக்கே செய்வினை செய்து கொள்வதற்கு நிகரானது. தேசிய அளவிலும் இதே கோணல்களே சாகித்யங்களில் நிறைந்திருக்கிறார்கள். கொன்று புதைத்து விடுவார்கள். சர்வ அதிகாரம் கொண்ட அதிகாரிகள் கூட பயம் கொள்ளும் அளவிற்கு இவர்களுக்கு அத்தனை கோணல்களும் அத்துப்படி.

கூட்டம் முடிந்ததும் தோழர் ஒருவர் அருகில் என்னை அழைத்தார். வளர்ந்த உயரம் கொண்டவர் அவர். கட்சிப் பத்திரிக்கையில் பலகாலம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். நான் அவருக்கு இடுப்பளவிற்கே இருப்பேன். அவர் ஜிப்பாவுக்குள் புகுந்து கொண்டேன் என வைத்துக் கொள்ளுங்கள் யாருமே என்னை கண்டுபிடிக்க முடியாது. தோழர் நீங்கள் மிகச் சிறப்பாக பேசினீர்கள் என்று கூறினார். உங்கள் எழுத்துக்களையும் ஆங்காங்கே படித்திருக்கிறேன். “நன்றாகத்தான் எழுதுகிறீர்கள்,ஆனால் நீங்கள் கார்க்கி படிக்க வேண்டும். அப்படி எழுத வேண்டும்”

.எனக்கு பேருந்து நடத்துனரின் ஞாபகம் வந்தது.”ஆசிர்வாதம் ஐயா”

“ஐயா அல்ல தோழர் என்று சொல்ல வேண்டும்”.

“உத்தரவு வாங்கிக்கறேன் தோழர்…

அவருக்கு காது கேளாமை நோய் உண்டு. ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் கட்சியில் சேர்ந்து ஓராண்டில் ஏற்பட்ட நோய் அது. அந்த நோய் தான் அவருக்கு பெரிய பெரிய பதவிகளை அளித்தது. அதனால் நான் முதலில் அவருடைய கூற்றுக்களைப் பொருட்படுத்தவில்லை, ஆனால் முடிந்து ஊருக்குத் திரும்புகையில் துண்டுச் சீட்டில் வந்த எச்சரிக்கைக்கும், தோழரின் பாராட்டிற்கும் ஒரே அர்த்தம் தான் என்பது விளங்கியதும் மனம் பதற்றமடையத் தொடங்கியது.எல்லாவற்றையும் எவ்வளவு தாமதமாக புரிந்து கொள்கிறோம் என்று மண்டையில் அடித்துக் கொண்டேன்.

***

முந்தைய கட்டுரைசண்டேஸ்வரர் கலைக்களஞ்சியம்- கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31