திண்டுக்கல்லில் நூல் வெளியீட்டு விழா

“கீழ்வெண்மணியில், அந்த இரவு நில உரிமையாளர்கள் 200பேர் கையில் அருவாள், துப்பாக்கி, தீப்பந்தம் சகிதம் திமுதிமுவென புறப்பட்டு வந்தார்கள். கண்ணில் தென்பட்டவர்களை எல்லாம் வெட்டிச் சாய்த்து குடிசைகளையெல்லாம் தீவைத்துக் கொளுத்தினார்கள். சேரியில் இருப்பவர்கள் எல்லோரும் உயிருக்குப் பயந்து ஓடி ஒளிந்தார்கள். அப்பொழுது, வயதானவர்களும் பெண்களும் சிறுவர்களும் ஒரு குடிசைக்குள் ஒளிந்துகொண்டிருந்தனர். தீ வைத்தபடியே வந்த கும்பல் அந்தக் குடிசைக்கதவைப் பூட்டிவிட்டு, பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துவிட்டுப் போய்விட்டார்கள். உள்ளே இருந்த 44 பேரும் உயிரோடு வெந்து சாம்பலானார்கள்.

 

அடுத்தநாள் நாங்கள் அங்கு போய்ச் சேர்ந்தோம். கருகிய உடல்களைப் பார்த்ததும் கிருஷ்ணம்மாள் கதறி அழ ஆரம்பித்துவிட்டார். என்னாலும் உணர்ச்சிகளை அடக்க முடியவில்லை. நானும் அழுதேன். கிருஷ்ணம்மாள் மட்டும் கீழ்வெண்மணியில் தங்குவது என முடிவு செய்தோம்.  ஒருவருட காலத்திற்கு காந்திய போதனைகள், வினோபாவின் போதனைகளை பாதயாத்திரை மூலமாக அந்தக் கிராமம் முழுவதும் கொண்டுசென்றோம்.

 

கீழ்வெண்மணி கிராமத்தில் அப்போது மொத்தம் 75 ஹரிஜனக் குடும்பங்கள் இருந்தன. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு ஏக்கர் நிலம் பெற்றுதர வேண்டும் எனத் தீர்மானித்திருந்தோம். 1968ல் அந்தக் கொடூரம் நடந்தது. 1971ல் அந்த 74 குடும்பங்களுக்கும் சேர்த்து 74 ஏக்கர் நிலத்தை அகிம்சை முறையில் வாங்கிக் கொடுத்துவிட்டிருந்தோம். அரைப்படி நெல் கூடுதலாகக் கேட்டவர்களுக்கு, இப்பொழுது நிலமே சொந்தமாகக் கிடைத்தது.”

 

–       சுதந்திரத்தின் நிறம் புத்தகத்தில் கிருஷ்ணம்மாள், ஜெகந்நாதன்…

 

ஜெகந்நாதன், கிருஷ்ணம்மாளின் வாழ்வுவரலாறு பற்றித் உங்களுடைய கட்டுரையின் ஒற்றைவரி  விருப்பவார்த்தையிலிருந்து புறப்பட்டெழுந்த எங்களுடைய எண்ணத்தின் செயலாக்கமே ‘சுதந்திரத்தின் நிறம்’ புத்தகமாக இன்று மலர்ந்திருக்கிறது. தோற்கடிப்பை மையப்படுத்திய வெற்றுவிவாதங்களாக இல்லாமல், நவீன காலத்தின் பெருவெளிக்குள் எங்கெல்லாம் காந்தியம் திறக்கும் சாத்தியமுள்ளது என்பதை நிறைய தருணங்களில் உங்கள் எழுத்துக்கள் எங்களுக்கு வெளிச்சமிட்டன. இப்படியான சாத்தியங்கள் வாய்ப்பதற்கான துணைக்கருவியாக தன்னறம் நூல்வெளி அமைவதில் வார்த்தைகளற்ற உளமகிழ்வு கொள்கிறோம்.

 

அதேபோல்… காந்தியத்தால் தாக்கம்பெற்று தங்கள் துறைகளில் இயங்கும் பல சாட்சிமனிதர்களின் வாழ்க்கைவரலாற்றுத் தொகுப்பாக ‘இன்றைய காந்திகள்’ புத்தகம் உருவாகியுள்ளது. உணர்வெழுச்சியை அகம்விதைக்கும் எழுத்துநடையில் நண்பர் திரு.பாலசுப்ரமணியம் முத்துசாமி அவர்களால் எழுதப்பட்ட இப்புத்தகம், இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டின் வாழ்விலும் காந்தியம் எப்படி உருமாறிப் பயணிக்கிறது என்பதனை பதினோரு வரலாற்று மனிதர்களின் வழியாக நமக்கு அறியப்படுத்துகிறது.

 

இன்னமும் மீட்சிக்கான வழி மீதமிருக்கிறது என்பதை சாட்சியங்களே வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. தோழமை பாலா எழுதிய இக்கட்டுரைகள், காந்தியவழியில் பயணப்பட்டு, தங்கள் செயலிலக்கு தாண்டியும் நம்பிக்கையோடு நகர்கிற சாட்சிமனிதர்களின் தொகுப்பாக நிறைந்துள்ளது. அத்தனைபேரும் இரத்தமும் சதையுமாக இம்மண்ணில் நம்மோடு உலவியவர்கள். பலர் இன்றும் உலவுபவர்கள். வெவ்வேறு செயல்தளத்தில் அகிம்சைக் கோட்பாடுகளின் வழியாக நடைமுறைவாழ்வியலை மேன்மையுறச் செய்து, மக்களுக்கான மனிதர்களாக அவர்கள் தங்களை வாழ்வுபடுத்திக் கொண்டுள்ளனர்.

 

‘சுதந்திரத்தின் நிறம்’ புத்தகம் கடந்தகால வரலாறுகளின் சாட்சித்தொகுப்பாகவும், ‘இன்றைய காந்திகள்’ புத்தகம் நிகழ்காலத்தில் மேலோங்கும் சாட்சியங்களின் விவரிப்பாகவும் அமைந்திருப்பது நிஜத்தில் வியப்பளிக்கிறது. அந்தந்த காலகட்டங்களில் தகுந்த சாத்தியங்களை முன்னெடுத்து, தேவைப்படும் இடங்களில் காந்தியக் கருத்தை ஏற்றும், நடைமுறையை மீறும் இடங்களில் காந்தியக் கருத்தை மாற்றியும் லட்சியங்களை அடைவதை இவ்விரு வரலாற்றுப்பதிவும் எழுத்தின்வழி எடுத்துரைக்கின்றன.

 

எனவே, தன்னறம் நூல்வெளியின் வெளியீடுகளான ‘சுதந்திரத்தின் நிறம்’ மற்றும் ‘இன்றைய காந்திகள்’ புத்தகங்களின் வெளியீடாகவும், நமக்குள் நிகழப்போகும் ஒரு நற்சந்திப்பை ‘செயல்வழி ஞானம்’ என்ற பெயரில் ஒருங்கிணைக்கிறோம். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தூய இருப்பில் மலரப்போகும் இந்நிகழ்வில், உங்களுடைய இருப்பானது, ஒருவித அகத்திறத்தலை  அனைவருக்குள்ளும் உருவாக்கும் என நெஞ்சார நம்புகிறோம். கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்கள் கரங்களால் கட்டிடமெழுப்பிய காந்திகிராம் ஊழியரகத்தில் வைத்து இக்கூடுகை நிகழவிருக்கிறது. கீழ்வெண்மணியில் நிலங்களைப் பெற்ற மக்களின் பிரதிநிதியாக, அம்மண்ணிலிருந்து இருமனிதர்கள் இந்நிகழ்விற்கு வருகைதர இருக்கிறார்கள். புத்தகத்தின் முதல் பிரதியை அவர்களிடம் ஒப்படைத்து, இவ்வரலாற்று நூலுக்கு நேர்மை செய்வது நமது கடமையாகிறது.

 

ஒரு ஐ.ஐ.டி பட்டதாரியாக இருந்தும்கூட, புறம்சார்ந்த தனது கவனங்களை விட்டெறிந்து, குப்பையிலிருந்து பொம்மைகளை கைப்பட உருவாக்கும் பயிற்சியைக் குழந்தைகளுக்கு அளிப்பதை தன் வாழ்நாள் நோக்கமாகக் கொண்டு, பெரியதொரு சமூகமாற்றத்தை சத்தமின்றி விதைத்துப் பயணிக்கிற திரு.சுபீத் (அர்விந்த் குப்தாவின் சீடர்) அவர்கள் ‘இன்றைய காந்தி’நூலை வெளியிட, கிராம உள்ளாட்சி சார்ந்து முழுமூச்சாக இயங்கிவரும் தோழமை நந்தகுமாரும், கழிவுமேலான்மை சார்ந்தும், நீரில்லாக் கழிப்பறைகள் சார்ந்தும் இயங்குகிற தோழி விஷ்ணுப்ரியாவும் புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளவிருக்கிறார்கள்.

 

குக்கூ ‘முகம் விருது’ இம்முறை பொன்னுத்தாய் அம்மா காந்திஜி பள்ளிக்கூடத்துக்கு வழங்கப்படவிருக்கிறது. 1950களிலேயே தனது குடும்ப வீட்டை இடித்து, ஒரு சிறுபள்ளிக்கூடத்தை துவக்கியவர் பொன்னுத்தாய் அம்மாள். வீதிவீதியாக அலைந்து, ஒடுக்கப்பட்ட சேரி மக்களிடமும், காடுமேடுகளில் ஆடுமாடுகள் மேய்ப்பவர்களிடம் பேசிப் புரியவைத்து அவர்களுடைய குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வைத்தவர். காந்தியின் அரிஜனசேவா சங்கத்தோடும், அம்பேத்கரிய மக்கள் இயக்கத்தோடும் இணைந்து பொன்னுத்தாய் அம்மாள் பள்ளிக்கூடம் பொட்டுலுப்பட்டி கிராமத்திலும் அதைச்சுற்றிய பகுதிகளிலும் கல்விப்புரட்சிகளை நிகழ்த்தியுள்ளது. தியாகி கக்கனால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டிமுடிக்கப்பட்ட பள்ளி இது.

 

கட்டணத்தொகை ஏதும் பெறாத முற்றிலும் இலவசமான இப்பள்ளியை மிகுந்த நெருக்கடியில் நடத்தியவர் பொன்னுத்தாய் அம்மாள். தன் வாழ்க்கையின் இறுதிக்கட்டங்களில், சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு வீடுவீடாகச் சென்று ‘படிக்க வாங்க கண்ணுகளா!” என்று பின்தங்கிய குழந்தைகளின் மனதில் கல்வியை விதைத்த முதலாளுமை. இறுதிமூச்சுவரை பள்ளியைப் புதுப்பிக்கப் போராடி  2002ல் பொன்னுத்தாய் அம்மா இயற்கையோடு கலந்தார். பொன்னுத்தாய் என்னும் தனிமனுஷி தனது கிராமத்தில், சமூகத்தில், கல்விப்புலத்தில் நிகழ்த்திக்காட்டிய தியாகத்துக்காகவும் அர்ப்பணிப்புக்காகவும், இந்த கெளரவிப்பு அவர்களுக்கு நிகழ்கிறது.

 

நாடகக்கலைஞர் ராம்ராஜ் குழுவினரின் நிகழ்த்துநாடகமும், புகைப்பட அருங்காட்சியகத் துவக்கமும் இந்நிகழ்வினை இன்னும் சாரப்படுத்தி நிலையுயர்த்த உள்ளது. நண்பர்கள் மற்றும் தோழமையுறவுகள் அனைவரையும் இந்நல்நிகழ்வுக்கு கரம்கூப்பி அழைக்கிறோம். செயல்வழி ஞானத்தை அடைந்த முன்மனிதர்களின் வார்த்தையிலிருந்து நீண்டு பரவுக, அதைப் பின்தொடர்கிற மனங்களுக்கான இலட்சியவெளி. வெறுப்பின் வேர்களிலிருந்து நழுவி, நமக்கான சுதந்திர வெளியை அடையும் ஒரு தார்மீக தாகத்தை இந்நிகழ்வு நிச்சயம் தரும். அருள்நிறை தருணங்கள் நமக்கினி நிகழும்!

 

இப்படிக்கு

தன்னறம் நூல்வெளி

குக்கூ காட்டுப்பள்ளி

முந்தைய கட்டுரையக்ஷி உறையும் இடம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-29