பக்தியும் அறிவும்

சிலைகளை நிறுவுதல்

அன்புள்ள ஜெ,

நலமா?

தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கும் கடிதங்களும் விவாதங்களும் புதியவகையில் எண்ணச் செய்கின்றன. முன்பெல்லாம் இந்த விஷயங்களைப்பற்றிய கேள்விகள் உள்ளத்தில் இருந்தாலும் அவற்றை இத்தனை தெளிவாகக் கேட்டுக்கொண்டதில்லை. அவற்றுக்கு இப்படியெல்லாம் பதில் யோசித்ததும் இல்லை. என்ன காரணம் என்றால் இவற்றையெல்லாம் ஒரு அன்றாடப்பார்வையிலேயே பார்த்துவந்தோம். இவற்றின் வரலாறு, குறியீடு எதையுமே யோசித்ததில்லை. ‘அறிவில்லா முட்டாளுங்க பசுவோட குண்டியக் கும்பிடுறாங்க’ என்ற அளவில்தான் நம்பிக்கைகளையும் சடங்குகளையும் பார்த்தோம். இன்றைக்கு யோசிக்கையில் செடி முளைவிடும் வயலை கும்பிடலாம் என்றால் பசுவின் பின்பக்கத்தைத்தானே வழிபடவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

இந்த வகையான எண்ணத்தை உருவாக்கியதற்கு உங்களுக்கு நன்றி. எத்தனையோ கேலிகள் கிண்டல்கள் அரை அறிவாளிகளின் அசட்டு நையாண்டிகள் எல்லாவற்றையும் மீறி இந்த அறிவார்ந்த ஒரு தளத்தைல் தமிழில் நிறுவிவிட்டீர்கள். இது ஒரு சாதனை. இதற்காக உங்களுக்கு நன்றி சொல்லவேண்டியிருக்கிறது. தமிழ்போன்ற ஒரு அறிவார்த்தமே இல்லாமலிருக்கும் சூழலில், வெறும் உணர்ச்சிக்கொந்தளிப்பும் நையாண்டியுமே விவாதமாக நடந்துகொண்டிருக்கும் போது இதை சாதிப்பதற்கு தன்மீதான நம்பிக்கையும் பொறுமையும் தேவை. நீங்கள் வாஷிங்டனில் பேசியதைக்கேட்டேன். உங்களுடைய அபாரமான பொறுமையைத்தான் வணங்கினேன்.

இனி என் கேள்விகள். நான் அறிவார்த்த வழி அல்லது ஞானமார்க்கமே உயர்ந்தது, நுட்பமானது என்று நம்பியிருந்தேன். பக்தி அறிவுநுட்பமில்லாத அன்றாடவாழ்க்கையினருக்கு உரியது என நினைத்திருந்தேன். ஆனால் உங்கள் கட்டுரைகளின் வழியாக பக்தியின் வழி நுட்பமான ஆழ்மனம் கொண்டவர்களுக்கு உரியது என்று சொல்கிறீர்கள். சடங்குகளை அறிந்துகொள்ளவேண்டாம், அவற்றை ஆழ்ந்து செய்தாலே போதும் என்று சொல்கிறீர்கள். இது எனக்கு இன்னமும்கூட முழுக்கவும் ஏற்பு இல்லாததாகவே உள்ளது. பக்தியில் அறிவார்த்தத்துக்கு இடமே இல்லையா? ஞானமார்க்கத்தை முன்வைத்த ஜே.கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் எல்லாம்கூட பக்திக்கு தேவையான நுண்ணுணர்வு குறைவானவர்களா?

என்.ராமகிருஷ்ணன்

அன்புள்ள ராமகிருஷ்ணன்

நான் சொல்லிச்சொல்லி எனக்கே தெளிவுபடுத்திக்கொள்கிறேன், எனக்குச் சொல்லப்பட்டவற்றை நினைவுபடுத்திக்கொள்கிறேன், அவ்வளவுதான்.

நான் பக்தியை எப்படிப் பார்க்கிறேன்? அதற்குத்தேவையானது முதலில் ஒரு கள்ளமின்மை, எளிமை. இன்னொன்று அறிவார்ந்த தளத்திற்கு பதிலாக உணர்வுநிலைகளையும் உள்ளுணர்வையும் முன்வைக்கும் ஆளுமை இயல்பு. சிலருக்கு அந்தத் தன்மைகள் இயல்பாகவே அமைந்துள்ளன. பக்தி அவர்களுக்குரியது.

சிலர் அவ்வாறல்ல. அவர்களுக்கு முதலில் முந்துவது அறிவார்ந்த தன்மை, அதன் விளைவான தன்முனைப்பு அல்லது ஆணவம். உணர்வெழுச்சியும் நுண்ணுணர்வும் அதைத்தொடர்ந்து, அதன் வழியாக மட்டுமே அமைகின்றன. அவர்களுக்குரியது ஞானமார்க்கம்.

முந்தையது நம்பி ஏற்று ஒழுகி அமைவதன் வழி. பிந்தையது அறிந்து ஆராய்ந்து தெளிந்து உள்வாங்கி அமைவதன் வழி. இரண்டிலுமே இறுதியிலிருப்பது அமைவதுதான். வெறுமே நம்புவதும் அல்ல அறிந்துகொள்வதும் அல்ல.

அறிவார்ந்த தளம் கொண்டவர்களிடம் இருக்கும் ஆணவமே அவர்களின் பெரிய தடை. பெரும்பாலானவர்களால் அதைக் கடக்கவே முடியாது. அவர்கள்தான் ஓயாத பூசலில் இருந்துகொண்டிருப்பவர்கள். தான் அறிந்ததை நிறுவ முயல்வார்கள். அறியாததை எதிர்த்துக்கொண்டே இருப்பார்கள். அந்தியில் மரத்தில் அமர்வதற்கு முன்னர்தான் பறவைகள் நிறைய கூச்சலிடும் என நித்ய சைதன்ய யதி ஒருமுறை சொன்னார்.

பக்தியில் செல்பவர்களுக்கான தடைகள் இரண்டு. ஒன்று தொடர்ச்சியாக எழும் அறிவார்ந்த ஐயங்கள். இரண்டு உலகியல்தன்மை. ஐயங்களுக்கு அறிவார்ந்த பதில்களை அவர்கள் நாடி, அதன்பொருட்டு கற்கத்தொடங்குவார்கள் என்றால் காலப்போக்கில் மேலுள்ளம் வலுவாகும். அது ஆழுள்ளத்தை எதிர்த்து மறைத்துவிடும். அதை தன்போக்கில் விட்டுவிடவேண்டும் என்பதே கூறப்படுகிறது.

பக்தியை உலகியல் நன்மைகளுக்கான பேரமாக, அச்சங்களுக்குரிய காப்பாக மட்டுமே கையாளத் தொடங்கிவிடுகையில் அது ஆழுள்ளத்திலிருந்து விலகி மேலுள்ளத்தைச் சார்ந்த ஒரு நடவடிக்கையாகிவிடுகிறது. பக்தன் இவை இரண்டிலும் இருந்து வெல்பவன்.

இயல்பான கள்ளமின்மை கொண்டவர்கள் பக்தியில் அமைகிறார்கள். அறிவார்ந்த தேடல்கொண்டவர்கள் சிலர் சில வாழ்க்கைத் தருணங்களால் உடைந்து ஆணவம் அழிந்து பக்தர்கள் ஆவதுண்டு. சில மேலான ஆளுமைகளால் ஆணவம் உடைக்கப்பட்டு அவ்வாறு ஆவதும் உண்டு

பக்தர்களுக்குரிய அறிவுத்தளம் என்பது தர்க்கபூர்வமானது அல்ல. பக்தியை வளர்க்கக்கூடியது அது. அதன் வழி கற்பனைகள், உருவகங்கள் ஆகியவற்றை அறிவதும் அவற்றில் உணர்வுபூர்வமாக ஈடுபடுவதும்தான். அதுவும் ஞானமே. ஆனால் பக்திஞானம்

உதாரணமாக, அறிவுத்தளத்தேடல் கொண்ட ஒருவர் உபநிடதங்களைக் கற்றுத்தெளிவார். அதன்பின் ஆப்தவாக்கியம் ஒன்றை சென்றடைந்து அதை உள்ளுணர்வுக்குச் செலுத்திக்கொள்வார். பக்தர் ஒருவர் உபநிடதங்களை முழுமுதல்சொல் என நம்பி ஏற்று உள்ளுணர்வை நோக்கி கொண்டுசெல்வார். இரண்டும் இறுதியில் ஒன்றே

இரு உதாரணங்கள். விஷ்ணுபுரத்தில் சிரவணமகாப்பிரபு தன் மாணவனாகிய பிங்கலனிடம் சொல்கிறார். “நீ ஐயம்கொண்டுவிட்டாய், ஐயம் வந்தபின் அறிவே உன் பாதை. நீ எண்ணினாலும் இனி பக்திக்கு மீளமுடியாது”

ஞானவழியிலும் கற்பனை, உணர்வுநிலை,நுண்ணுணர்வு சார்ந்த அறிதல் உண்டு. வேறுவகையானது. ஜே.கிருஷ்ணமூர்த்தி ஓர் உரைக்காக வந்து அமர்கிறார். ஒரு சிறு பறவை அறைக்குவெளியே சன்னலில் அமர்ந்து கூவியது. ‘இன்றைய பாடம் முடிந்துவிட்டது. இதுவே அது’ என எழுந்துகொண்டார்

அந்தப்பறவைப்பாடலை பக்தர் உணரமுடியாது. அதை உணர அறிதலின் வழியாக ஒரு நுட்பமான பயணம் தேவை

ஜெ

 

கிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா?

கீதையை எப்படிப் படிப்பது? ஏன்?

முந்தைய கட்டுரைநிலம் [சிறுகதை]
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30