1. மூன்று பின்னல்களின் கோலம்
மூன்று கோடுகள் பின்னி உருவாகும் கோலம் என்று பிரமிளின் படைப்பியக்கத்தைச் சொல்லலாம். அவரது படைப்பியக்கம் என்பது பெரும்பாலும் அவருடைய முதற்கட்டக் கவிதைகளினால் தீர்மானிக்கப்படுவது.அவருடைய கட்டுரைகளில் அவ்வப்போது நிகழும் திறப்புகள், அப்போது அவருடைய மொழி அடையும் வேகம் ஆகியவை காரணமாக அவற்றைச் சற்றுத் தயக்கத்துடன் அடுத்தபடியான இலக்கியப் பங்களிப்புகள் என்று கூறலாம். அவரது கதைகள் அக்கதைகளில் அவ்வப்போது உருவாகிவரும் படிமங்கள் காரணமாக மட்டுமே பொருட்படுத்தத்தக்கவை. அப்படிமங்கள்கூட அவரது கவிதையுலகில் உள்ள படிமங்களின் சலனத்தன்மை இல்லாதவை. ஆகவே ஒரு கவிஞராக மட்டுமே பிரமிளைக் கணக்கில் கொண்டு பேசினால் அது தவறல்ல
அவரது கவிதைகளைத் தீர்மானிப்பவையாக மேலே சொன்ன மூன்று கோடுகள் உள்ளன. அவற்றைப் புறவயமாக வகுத்துக் கூறுவதற்கு உதவக்கூடிய ஆதாரங்களை அவரது பிற படைப்பியக்கத் தளங்கள் அளிக்கின்றன.
அம்மூன்று கோடுகள் என்னென்ன? முதல்கோடு, பிரமிளின் ஆன்மிகமான தேடல். இரண்டாவது கோடு, அவரது மீபொருண்மையியல் (Metaphysics) சார்ந்த உலகப்பார்வை. மூன்றாவது கோடு, அவரது தன்முனைப்பு. இம்மூன்று கோடுகளும் ஒன்றோடொன்று முற்றாக முரண்படுபவை. பிரமிளின் சிறந்த ஆக்கங்களில் உள்ள ‘அக்கணத்தில் பிறந்த’ ஆன்மிக தரிசனத்தைக் காணும் ஒருவர் [அத்தகைய ஒன்று தமிழில் மிக அபூர்வமாகவே காணக்கிடைக்கிறது] அவரது மனம் பெரிதும் கீழைமதங்களைச் சார்ந்த மீபொருண்மைத்தளத்தில் இயங்கியது என்பதை நம்பமுடியாது. பிரபஞ்சத்தையும் காலத்தையும் சிறகுகளால் அளந்துவிட எம்பும் தரிசனத் தளமும் மீபொருண்மைத் தளமும் தன்னுள் இயங்கிய ஒருவர் எப்படி அத்தகைய வீங்கிய, கடைசிக்காலத்தில் அழுகிய, தனமுனைப்பைக் கொண்டிருந்தார், எப்படி அதை எவ்விதமான திரையுமில்லாமல் வெளிப்படுத்தினார் என்பது புரிந்து் கொள்ளப்பட முடியாத ஒன்று. இம்மூன்று தளங்களுக்கு இடையேயான முரண்பாடுதான் அவரது பிரக்ஞையைக் கொந்தளிக்கச் செய்தது. கொந்தளிப்பே அவரது அழகியலில் அடிப்படைக்கூறாக ஆகியது. அதன் அலைகள்தங்களுக்குள் மோதும் உக்கிரத்தில் மேலெழும் உச்சியில் அவரது படைப்புகளின்சிறந்த தருணங்கள் நிகழ்ந்தன. அவருடைய படைப்பியக்கம் இம்மூன்று விசைகளின் முரணியக்கமே
ஆன்மிகமான தேடல் என்ற சொல்லுக்கு நான் அளிக்கும் மதம் சாராத, இறை நம்பிக்கை சாராத பொருளுக்கு மிகமிக உதாரணமானது பிரமிளின் தேடல். அதை அவரே மீண்டும் மீண்டும் விளக்கியுமுள்ளார். சாராம்சமான, அடிப்படையான வினாக்களை எழுப்பிக் கொள்ளுதல் என்று அதைச் சொல்லலாம். பிரபஞ்ச விரிவையும் காலப்பெருவெளியையும் கருத்தில் கொண்டு அதனடிப்படையில் வாழ்வின் ஒவ்வொரு அசைவையும் அறியவும் வகுத்துக்கொள்ளவும் முனைவது அது.அறிவியல், அறவியல், அழகியல் என்ற முற்றிலும் மாறுபட்ட தளங்களை இணைத்துக்கொண்டு அவற்றுள் ஒடும் உண்மையின் உயிரைத் தொட்டறிய முயலும் முயற்சி அது. தத்துவத்தின் தனிமொழியில் கூறவேண்டுமானால் அறிவியல் உண்மை அறவியல் உண்மை, அழகியல் உண்மை என்று வாழ்வு ஒவ்வொரு கணமும் உருவாக்கிக்கொண்டிருக்கும் உண்மைகள் அனைனத்தையும் தன் உடலுறுப்புகளாகக் கொண்ட உண்மை, முழுமுதல் உண்மை, என்ன என்ற வினா அது. பிரமிள் அதைச் சொல்ல இரு சொற்களை அவரே உருவாக்கி தமிழில் நிறுவியிருக்கிறார். ’காலாதீதம்’ என்றும் ‘மொய்மை என்றும் அவர் குறிப்பிடும் அது இயல்பான அறிவியக்கம் மூலம் அடையப்படுவது அல்ல என்ற எண்ணம் பிரமிளுக்கு இருந்தது. வாழும் ஒவ்வொரு கணத்தையும் அறிவின் உச்சகட்ட விழிப்பு நிலையில் நிகழ்த்தும்போது கிடைக்கும் அறிதல் அது. அதை பிரமிள் ‘அறிவார்த்தம்’ என்ற தனிச்சொல்லால் குறிப்பிட்டு வந்தார்.
தன் படைப்பியக்கத்தை பிரமிள் அரசியல் சார்ந்த நடவடிக்கையாக, சமூகம் சார்ந்த நடவடிக்கையாக, தனிமனித உளப்பயணமாக விளக்க மறுத்தமைக்குக் காரணம் இதுவே. ஆன்மிகமான தேடல் அதன் உச்ச நிலையில்தான் தன் விசையால் தானே பறக்கும் தன்மை கொண்டது. மின்கம்பி வழியாக ஓடும் மின்சாரம் குறிப்பிட்ட உயர் அழுத்தத்தைத் தாண்டிச் செல்லும்போது கம்பியைத் தவிர்த்துவிட்டு ஒரு சருமம்போல் எலக்ட்ரான்கள் மாற அந்தரத்தில் பாய்ந்து செல்வதுபோல. (இதைத் தோல்நிகழ்வு என்கிறார் கள்) அந்நிலையிலும் அக்கம்பி தோன்றாத்துணையாக உடனிருந்து வழி காட்டும் என்பதையும் கூறியாக வேண்டும்.
ஆன்மிகமான தேடலுக்கு இரு கருவிகள் இன்றியமையாதவை. ஒன்று; கருத்துருவங்களையும், பிற அக நிகழ்வுகளையும் சுட்டும் மொழி. அதாவது தனியான கலைச்சொற்கள். இரண்டு; படிமங்கள் மற்றும் உருவகங்ள். பிறரிடம் கூறுவதற்கு மட்டுமல்ல, தனக்குத்தானே அவ்விஷயத்தை எண்ணிக் கொள்வதற்கும்கூட அவை தேவைதான். நான் கூறுவதென்ன என்று தியானப்பயிற்சி சிறிதேனும் உள்ள ஒருவர் புரிந்துகொள்ள முடியும். மனம் என்பது உடலின் ஒரு பகுதி. எண்ணெயின் பகுதியே சுடர் என்பதுபோல. கால இடத்தில் மட்டுமே உடல் இருக்க இயலும். மனமும் கால இடத்தில்தான் இயங்க இயலும். கால இடத்திற்கு அப்பால் மனம் நகர்வது என்பது பெரும்பாலும் நமது கற்பனையே. அந்நிலையில் கால இடபோதத்தை மனம் கலைத்து மாற்றி அடுக்கிக் கொள்கிறது என்பதே உண்மையாகும்.
காலஇடத்துக்கு அதீதமாக மனம் நிகழ்வதென்பது கீழை மதங்களிலும் தியான மரபுகளிலும் நூற்றாண்டுகளாக தேடப்பட்டுவரும் ஒரு நிலை. யோகமுறைகளின்படி முக்தி அல்லது முழுமை என்பது அதுவே. தியானப் பழக்கம் உடையவர்கள் அறிவார்கள், நீண்டகாலப் பயிற்சியின்விளைவாக தியானம் இயல்பாகவே முனைகொள்ளும் நிலை உருவான பிறகு சில கணங்கள் நம்மையறியாமலேயே அந்நிலை நிகழ்ந்து, அது தாண்டிச் சென்றபிறகு நாம் அதை உணர்கிறோம் என்று. தரையில் துள்ளியும் தாவியும் போகும் குதிரை ஒரு அடியற்ற ஒடையை அந்தரத்தில் தாவிக் கடந்து மறுபக்கம் சென்று காலூன்றுவதுபோல. மனதின் இந்த இயல்பு காரணமாகவே மொழியும் படிமங்களும் தேவையாகின்றன. அவை புறஉலகம் அகத்தில் பிரதிபலிப்பதன் மூலம் உருவாகி வரக்கூடியவை. அவை மனம் அல்ல. ஆனால் அவையே மனமாக இயங்குகின்றன. அவை வழியாகவே மனம் தன்னை நிகழ்த்திக்கொள்ள இயலும்
காலாதீதமானதை காலத்தில் பொருத்தியும் எதுவுமற்றதை ஏதோ ஒன்றாக மாற்றியும் சொல்லுக்கும் பொருளுக்கும் அப்பாற்பட்டதைச் சொல்லாகவும் பொருளாகவும் மாற்றிக்கொண்டும் மட்டுமே நம்மால் அறியவும் பேசவும் இயலும் என்ற கருத்து கீழை மத, ஆன்மிக மரபுகளில் இரண்டாயிரம் வருடங்களாக இருந்து வருவதே. விக்ரகம் என்றால் வி+ கிரகம், கிரகிப்பதற்காக வழி என்று பொருள்படும் என்று நித்ய சைதன்ய யதி ஓர் உரையாடலில் கூறுகிறார். விக்ரகங்களைக் கல்லில் மரத்தில் செய்யலாம். சொல்லிலும் செயலிலும்கூட செய்யலாம். விக்ரகம் பிறிதொன்றுக்காக தன்னை நிறுத்துவது. காலம் என்று சொல்லலாம். வேகமாக கையை அசைத்துக்காட்டலாம். இருளில் விரையும் கரியநாய் எனலாம். கால பைரவனாக கற்சிலையாகச் செய்யலாம். இவையெல்லாமே காலத்தைச்சுட்டுபவையே. இவற்றால் சுட்டப்படும் அது இதன் மூலம் உணரப்பட மட்டும் முடியக்கூடியது
இந்தத் தேவையிலிருந்தே மீபொருண்மையியல் உருவாகி வந்தது.பலநூறு தத்துவ ஞானியரின் அகவய அறிதல்கள் படிமங்களும் சொற்களுமாக மாறி ஒன்றுடன் ஒன்று இணைந்து உருவாகிவந்த ஒர் அறிவுத்துறை அது. காலம் என்று உணர்ந்தவன் அதைக் கரிய நாயாகக் ஆக்கினான். பிறிதொருவன் அதை எருமையாக்கினான். பிறிதொருவன் அதுவே மரணம் என்று அறிந்தான். பாசக்கயிறேந்தி எருமை மீதேறி காலதேவன் வருவதாகப் பிறி தொருவன் உருவகித்தான். பல்லாயிரம் வருடங்களாக படிமங்கள் மூலம் சொற்கள் மூலம் பின்னிப் பின்னி விரிந்தபடியே உள்ளது மீபொருண்மையியல். எல்லா மதங்களுக்கும் அவற்றுக்குரிய மீபொருண்மையியல்தளம் உள்ளது. உண்மையில் மீபொருண்மை பல்லாயிரம் வருடப் பழைமை கொண்டது. பழங்குடி வாழ்விலிருந்து, ஏன் அதற்கும் முந்தைய அரைக்குரங்கு வாழ்விலிருந்து பிறந்துவந்த ஒன்று. மதங்கள் அந்த மீபொருண்மைத் தளம்மீது நிகழ்த்தப்பட்டன. மீபொருண்மைத்தள உருவகங்களையும் சொற்களையும் குறிப்பிட்ட வகையில் தர்க்கபூர்வமாக அடுக்கிக் காட்டுவதை மட்டுமே மதம் செய்கிறது. உதாரணமாக யூதமதம், கிறித்தவம் இஸ்லாம் மூன்றுமே ஒரே மீபொருண்மைத்தளம் கொண்டவை. அவற்றின் தர்க்க அமைப்புதான் மாறுபட்டது. எல்லாக்காலங்களிலும் மதத்தில் இருந்து கிளைத்து , மதத்தை மீறியும் மதத்தின் விரிவாக்கமாகவும் முன்னகரும் மீபொருண்மைப்போக்குகள் இருந்துள்ளன. அவை பிற்பாடு தனிமதங்களாக மாறக்கூடும். உதாரணமாக சூஃபி மரபு இஸ்லாமிலிருந்து கிளைத்த மீபொருண்மை ஒரு நோக்கு. இத்துடன் மிகக்குறைவாக மதங்களைச் சாராமல் மீபொருண்மையியலின் கருவிகளை பயன்படுத்தியபடி நடந்துகொண்டிருக்கும் ஆன்மிகத்தேடன் ஒன்றும் உள்ளது. சமீபத்தைய சிறந்த உதாரணம் ஜே.கிருஷ்ணமூர்த்தி
ஆன்மிகமான தேடல் மீபொருண்மையியலின் அலகுகள்மூலமே நிகழ்த்தப்பட முடியும். பகிரப்பட்ட ஆன்மிக தரிசனம் எதுவுமே அக்கணமே மீபொருண்மையாக மாறிவிட்டது என்று நடராஜ குரு குறிப்பிடுவது உண்டு. ஒருவன் ஆன்மிக தரிசனமொன்றைத் தனக்குத்தானே புரிந்துகொள்ள முயலும்போதே மீபொருண்மையியல் தொடங்கிவிடுகிறது. அகம் பிரம்மாஸ்மி’ என்பதும் சரி, ‘அநித்தம் துக்கம் அநாத்தம் என்பதும் சரி மீபொருண்மை சார்ந்த உண்மைகளே. அவை அறியப்பட்ட தருணமோ மீபொருண்மை சென்று தொட முடியாத ஆன்மிகம். இப்படிச் சொல்லலாம். கவிதை நிகழும் கணம் – எழுத்தும் வாசிப்பும் – ஆன்மிகம் என்றால் கவிதையியல் மீபொருண்மையாகும். ஆன்மிக தரிசனமாக சுருக்கும் போது முழுஉண்மையின் வடிவாக இருப்பது அறியப்பட்டதுமே மீபொருண்மையியல் உண்மையாக ஆகிவிடுகிறது. பிறஉண்மைகளுடன் சேராமல் அதனால் முழுமைய அடைய இயலாது.
உதாரணமாக ‘நானே பிரம்மம்’ என்பது முழுமுதன்மையின் தரிசனமே. ஆனால் உபநிடத மரபை அறிகையில், மீபொருண்மையியலின் விதிகளின்படி பிற உபநிடத ஆப்த வாக்கியங்களுடன் இணைத்தே அதற்குப் பொருள் தரப்படுகிறது. ஆக வேதான் ‘எல்லா அனுபவ உண்மைகளும் அரைஉண்மைகளே’ என்றார் நடராஜ குரு. இதற்குச் சமானமான ஒன்றை ரமணர் சொன்னதாகக் கூறப்படுகிறது. பால் பிரண்டனுடனான உரைபாடலில் ‘கடவுள் என்பது பொய்’ என்றார் ரமணர். ‘கடவுள் இல்லை என்பதும் பொய்யே’ என்று தொடர்ந்தார். இப்படிச் சொல்லலாம் மீபொருண்மையின் இரு அடிப்படை இயல்புகள் வரையறைத்தன்மையும் தர்க்க ஒழுங்கும் ஆகும். அதில் உள்ள ஒவ்வொரு கருத்தும் திட்டவட்டமாக வகுக்கப்பட்டு முன்வைக்கப்படுகிறது. அக்கருத்து பிறிதுடன் இணைந்து ஒரு கட்டுமானப் பொருள்போல மீபொருண்மை சார்ந்த தர்க்கத்தை உருவாக்கிச் செல்கிறது. மீபொருண்மை சார்ந்த உண்மை ஒரு கட்டட உதிரிப்பொருள் (Building Block) போல. ஆன்மிக தரிசனம் எப்போதும் எதனினும் இணைக்க முடியாததும் வடிவமற்ற வடிவம் கொண்டதுமான கூழாங்கல்.
இவ்வேறுபாடு காரணமாகவே மெய்மைக்கான அடிப்படைத் தேடல் கொண்ட மனங்கள் மீபொருண்மையின் கருவிகளை ஆழ்ந்த ஐயத்துடன், அவற்றை நிராகரித்தபடியே பயன்படுத்துகின்றன. சிறந்த உதாரணம் ஜெ.கிருஷ்ணமூர்த்திதான். அவர் தன் வாழ்நாளெல்லாம் கூறிவந்தவை இந்து ஞான மரபின் விளைகனிகள்தான் என்பதை எவரும் உணரலாம். ஆனால் இந்து ஞான மரபின் அனைத்து மீபொருண்மை அடிப்படைகளையும் நிராகரிக்க அவர் மீண்டும் மீண்டும் தன் உரைகளில் முயல்கிறார். அவற்றை வைத்து எவரும் தன் கருத்துக்களை மதிப்பிடவோ அடையாளப்படுத்தவோ கூடாது என்று மிகவும் கவனமாக இருக்கிறார். ஆன்மிகத்தை முன்வைப்பவர்கள் அனைவருமே ஏதோ ஒருவகையில் மீபொருண்மையியலை நிராகரிப்பதைக் காணலாம். ஆன்மிக ஞானிகளில் மிகப் பெரும்பாலானோர் கூடுமானவரை எதுவும் பேசாதவர்களாக இருப்பது இதனாலேயே. பேசினாலும் ஒருபோதும் அவர்கள் விவாதிப்பதில்லை என்பதும் இதனாலேயே. பேசினால் அச்சொற்கள் அனைத்துமே மீபொருண்மையின் முடிவற்ற பரப்பில்தான் சென்று உதிரும் என்று அவர்கள் அறிவார்கள். விவாதித்தால் அந்த தர்க்க முறையைத் தூண்டுசக்தியாகப் பயன்படுத்தி அவை உடனடியாகப் பலகிப்பெருகும் என்பதையும் அறிவார்கள். அதிகமாகப் பேசிய எல்லா ஆன்மிக ஞானிகளும் மீபொருண்மையைத்தான் உருவாக்கிப் பெரும் கட்டுமானமாக வளர்த்திருக்கிறார்கள். ஒஷோவின் எள்ளலும் கலகமும் அவரில் செயல்படும் மீபொருண்மைக்கு எதிராகத்தான். ஆனால் இன்று அவரே இந்தியாவின் மாபெரும் மீபொருண்மைச் சக்தி. நாராயண குரு குறைந்த அளவு பேசி அவசியமானபோது குறியீடுகளை மட்டுமே உருவாக்கினார். ஆனால் அவர்முன்அவை மீபொருண்மைக் கட்டுமானமாகப் பெருகி வேரும் விழுதும் பரப்பின
ஆன்மஞானிகளைப்போல் பிரமிள் தன் ஆன்மிகத் தேடலில் மீபொருண்மையை நிராகரிக்க இடைவிடாது முயலவில்லை. மீபொருண்மையின் தர்க்கம் அவரில் கொடிவீசிப்படர்ந்தபடியே இருந்தது. தன்னுடைய அழகியலையே அவர் மீபொருண்மை யதார்த்தவாதம் (Metaphisical Realism) என்று வகுத்தார்.மரபான மீபொருண்மைப் பரப்பிலிருந்து உருவகங்களையும் கருத்துருக்களையும் அவர் எடுத்தாண்டபோது அவற்றை அப்படியேதான் பயன்படுத்தினார். அவர் தன் வாழ்நாளெல்லாம் ஆசிரியராக முன்னிறுத்திய ஜ. கிருஷ்ணமூர்த்திக்கும் அவருக்கும் இருந்த இடைவெளி இதுவேயாகும். ஜே.கிருஷ்ணமூர்த்தியி்ன் மிகமிக்க் கவனமான மீபொருண்மை மறுப்பினை பிரமிள் முற்றாகவே தவிர்த்திருப்பதாகவே சொல்லமுடியும். உதாரணமாக ஜே.கிருஷ்ணமூர்த்தியின் ‘அறிந்தவற்றில் இருந்த விடுபட்ட அவதானிப்பு நிலை’ என்ற புகழ்பெற்ற கருதுகோளானது இந்து ஞான மரபில் பொதுவாகவும் வேதாந்த மரபில் குறிப்பாகவும் பெரிதும் பேசப்படும் ‘சிரத்தா’ என்ற கருதுகோளுக்ச் சமானமானது; அல்லது அதன் நவீன வடிவம். சுவாமி விவேகானந்தர் அச்சொல்லைப் பற்றி நிகழ்த்திய புகழ்பெற்ற வாஷிங்டன் பேருரை ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் கருத்துக்களை மிகமிக நெருங்கி வருவதைக் காணலாம். ஆனால் கிருஷ்ணமூர்த்தி அச்சொல்லை பாவிக்கவில்லை. அதற்கி ணையான எந்த மரபுச் சொல்லையும் அவர் பொருட்படுத்தவில்லை. அதே சமயம் பிரமிள் தருணம் கிடைக்கும்போதெல்லாம் மரபார்ந்த மீபொருண்மைச் சொற்களைக் கையாள்கிறார். பலசமயம் அவற்றை அழுத்தம் தந்து கூறி விளக்கவும் செய்கிறார். உதாரணமாக ‘வாங்கி உயிர்க்கும் காற்றை விரிக்கும் பிராணசக்தியின் அக்ஷரம் சுழல்கிற அச்சடா இந்த வாய்’ (பைரவர்) இக்கவிதைக்கு அடிக்குறிப்பாக அக்ஷரம் என்ற சொல்லை விளக்குகிறார். பிரமிள். “அக்ஷரம். அ+க்+ஷ்ரம் அல்ல. க் இது சந்தியை நிரப்பும் ஒலி. க்ஷரம் – சிருஷ்டி. ஷ்ரு என்பது சிருஷ்டி என்ற பதத்தின் தாது. அக்ஷரம் சிருஷ்டிக்கு முந்தைய சிருஷ்டிக்கு அப்பால் உள்ள காரணதத்துவம்.”
இத்தகைய குறிப்புகள் மீபொருண்மை மூலம் மெய்மைமை நோக்கி நகர இயலும் என்ற அவரது நம்பிக்கையை சற்றே கீழான தளத்தில் வெளிப்படுத்துபவை. பியானோ, மண்டபம், தெற்கு வாசல் போன்ற சிறந்த கவிதைகளில் மீபொருண்மை நோக்கு மூலம் உருவாகும் உருவகக்கட்டுமானம் உள்ளது என்பது அதே நம்பிக்கையின் படைப்பூக்கம் கொண்ட சிறந்த வெளிப்பாடு. பிரமிளின் மீபொருண்மை நோக்கின் குறை பாடுகளையும் சாத்தியக்கூறுகளையும் பிற்பாடு விரிவாகக் காணலாம். இங்கு இந்த உதாரணத்தை வைத்தே அவரது மனநிலையின் ஒரு முக்கியக் கூறைக் காணலாம். ஒன்று, பிரமிளின் சம்ஸ்கிருத மோகம். சம்ஸ்கிருதம் மீபொருண்மைக்கான முக்கிய ஊடகமாக நொடுநாட்களாகப் புழங்கி அதற்கான வசதிகள் மிகுந்த மொழி என்பதும், இந்துஞான மரபின் பெரும்பகுதியை சம்ஸ்கிருதம் மூலமே அடைய முடியும் என்பதும் உண்மையே. ஆகவே மீபொருண்மை நோக்கு கொண்ட ஒருவர் சமஸ்கிருதச் சொற்களுக்குள் ஆர்வத்துடன் நுழைவது இயல்பே.ஆனால் பிரமிளின் ஆர்வம் அந்த இயல்பான எல்லையை மீறிய ஒன்று என்பதைக் காணலாம். பல சமஸ்கிருதச் சொற்களை மெய்ஞானக் கிடங்கின் சாவிகளாகக் காணும் அளவுக்கு அவருக்கு அந்த மனமயக்கம் இருந்தது. அதில் ஒன்றே இந்தச் சொற்பகுப்பு விளையாட்டும்.
சம்ஸ்கிருதச் சொற்களில் எளிய அறிமுகம் உடைய ஒருவர் பிரமிளுக்கு சமஸ்கிருதம் மீது பித்து இருந்த அளவு அதன் ஒலி மற்றும் பொருள் அமைப்புகளில் பழக்கம் இருந்தது என சொல்லமுடியாது. பெரும்பாலான தமிழ் வாய்கள் – அய்யர்கள் குறிப்பாக- சம்ஸ்கிருதச் சொற்களை உச்சரிக்கும் போது செய்யும் மிக முக்கியமான பிழையைச் சாதாரணமாகச் செய்து அதனடிப்படையில் வேர்ச்சொல்லையும் ‘கண்டுபிடித்துப்’ பொருள்கொள்ள முயல்கிறார். ‘பேசுதல்’ என்பதை பேஷுதல் என்றால்தான் தமிழ் பிராமணவாய் தன் தனித்தன்மையை அடையாளம் காண்கிறது. இதைசம்ஸ்கிரு தச் சாயல் கொண்ட உச்சரிப்பு என்று தவறாக எண்ணும் அது சம்ஸ்கிருதத்தில் உள்ள பெரும்பாலான ஸ் (S) உச்சரிப்புகளை ஷ் (Sh) என்று உச்சரித்துக் கொள்கிறது. பல சொற்கள் இப்படி திரிபுநிலையில் இங்கே புழங்குகின்றன. உதாரணம் விஷ்வம் (விஸ்வம்) ஷ்ரார்த்தம் (ஸ்ரார்த்தம்). சொல்லப்போனால் தமிழில் உள்ள ஸ கூட சம்ஸ்கிருதச் சொற்களை எழுதுவதற்குப் போதுமானதல்ல. சுகம், சுபம் இரண்டும் வேறுவேறு சு உச்சரிப்பு உடையவை. (தமிழில் பேச்சுவழக்கில் நாம் அந்த வேறுபாட்டை கடைப்பிடித்தும் வருகிறோம்) ஆகவே பிரமிளின் சொற்பகுப்பு, ஒலி மாறுபாடுகளை உணராத பாமர முயற்சி என்றே கூற முடியும். ‘க்ஷரம்’ என்பது எப் படி ஸ்ருஷ் (Shrush) ஆகும் என்ற கேள்வியை பிரமிள் உயிரோடிருக்கும்போது நாம் கேட்டிருக்க முடியாது. கொன்றுவிடுவார் இரண்டும் முற்றிலும் வேறுபட்ட சொல்முதலிகள் என்பதை வெறுமே காதால் கேட்டாலே உணரமுடியும். அ+ஷரம் என்றால் எப்படி எந்த சம்ஸ்கிருத புணர்ச்சி விதிகளின்படி நடுவே க் வரும்? இதே விதிகளின்படி அக்ஷமம், அக்ஷயம், அக்ஷம், அக்ஷி முதலிய சொற்கள் அனைத்துமே சிருஷ்டி சார்ந்த பொருள்தர இயலுமே. பொதுவாக பிரமிளின் எழுத்தில் நகைச்சுவை கிடையாது – இப்படிப்பட்ட வேடிக்கைகளைத்தவிர. அக்ஷி [விழி] என்ற மூலச்சொல்லில் இருந்து விழியால் பார்க்கப்படுவது என்ற விரிவாக்கமாக உருவாகிய சொல் அக்ஷரம் என்பது வழக்கம். அ+க்ஷரம் என பிரித்து அசைவற்றது, நிலையானது என்னும் பொருள் கொள்பவர்க்ளும் உண்டு
பிரமிளின் மீபொருண்மையியல் ஈடுபாடானது எப்படி அபத்தமான எல்லைகளையும் தீண்டுமளவுக்குத் தீவிரமாக இருந்தது என்பதற்காகவே இதை இங்கே குறிப்பிட்டேன். இது நம் ஊர்களில் திண்ணையில் வேதாந்தம் அளக்கும் ஆட்களின் வழக்கம் இது. சமஸ்கிருதத்திலோ தமிழிலோ உள்ள சொற்களைத் தங்கள் இஷ்டப்படி பகுப்பாய்வு’ செய்து தங்கள் மீபொருண்மை நோக்கை விரித்தபடியே செல்வது. ஒருவகையில் இது இந்திய மெய்ஞான மரபின் அங்கீகரிக்கப்பட்ட வழிமுறையும் கூட. சொல்லே பொருளின் ஊற்று.(பொருள் எனும் தெய்வத்தின் விக்ரகம்) என்பதனால் அனைத்து விவாதங்களையும் சொல்லைப் பகுப்பதனூடாக வே அமைப்பது. நாராயண குரு நடராஜகுரு, நித்யசைதன்ய யதி முதலியோரும் இம்முறையை கடைப்பிடித்துள்ளனர். சம்ஸ்கிருதமும் தமிழும் நாம் இன்று விவாதிக்கும் எந்த விவாதக்களமும் உருவாவதற்கு நூற்றாண்டுகள் முந்தையவை அச்சொற்கள். சொற்களைப் பகுப்பதென்பது அர்த்தம் உருவான விதத்தைப் பகுப்பாய்வு செய்வதேயாகும். ஆனால் இதில் உரிய முறைமை கடைப்பிடிக்கப்படவேண்டும் என்பது எப்போதும் வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது.
உரிய முறைமையை திட்டவட்டமாகக் கடைப்பிடிக்கும் பேரறிஞர்கள்கூட அவ்வப்போது தங்கள் நோக்கத்துக்கு ஏற்ப தாவல்களை மேற்கொள்வதனால் இன்று இவ்வணுகுமுறைக்கு உடனடி நம்பகத்தன்மை இல்லை. அப்பகுப்பாய்வுக் கோணத்தைப் புரிந்துகொள்ளவே அது உதவும். உதாரணமாக கிருஷ்ணப் பிரேமி என்ற வைணவ உபன்னியாசகர் சம்ஸ்கிருதத்தை ஐயமறக் கற்றவர். ஓர் உரையில் அவர் கிருஷ்ணன் என்ற சொல்லுக்குப் ’பொருள்’ தேடுகிறார். கிருஷ்ணன் கருப்பன் என்பதை ஏற்க அவரால் இயலவில்லை. சகலவிதமான அழகுகளும் உ டைய எம் பெருமான் எப்படி கருப்பனாக இருக்க இயலும்? ஆகவே கிருஷ்(க்ருஷ்) என்ற வேர்ச்சொல்லில் இருந்து வந்தது கிருஷ்ணன் என்ற சொல் என்று அவர் பகுத்துக்காட்டுகிறார். கிருஷ் என்றால் ‘செயல் மூலம் பரவுதல்’ என்று பொருள் கொள்கிறார். க்ரு என்ற வேரானது செய்கை என்று பொருள் உள்ளது.உதாரணம் க்ருஷி, க்ருபை. அப்படியானால் சம்ஸ்கிருத மூல நூல்களில் பல்லாயிரம் இடங்களில் கிருஷண என்றால் கருமை என்று வழங்கப் பட்டுள்ளதே, பாஞ்சாலிக்கும் கிருஷ்ணை என்று பெயருண்டே, கிருஷ்ண பக்ஷம் என்றால் என்ன பொருள் என்றெல்லாம் எவரும் அவரிடம் கேட்கக்கூடாது. இந்த நோக்கு அவரால் உண்மையில் சொற்பிரிவினைப் – புணர்ச்சி விதிகளின்படியே செய்யப்பட்டுள்ளது! ஆகவே இத்தகைய அணுகுமுறையானது அச்சொல்லை விளக்குவதில்லை. சொல்பவரை மட்டுமே நமக்குக் காட்டுகிறது என்பதே உண்மை. அப்படிப் பார்க்கும் போது தன் கவிதைகளிலும் கட்டுரைகளிலும் பிரமிள் அளிக் கும் ஏராளமான சொற்பொருட்’களுக்கு என்ன மதிப்பு?
தன் தொகை நூலில் பிரமிளின் நண்பரான கால சுப்ரமணியம் பிரமிள் இவ்விஷயத்தில் காட்டிய பிடிவாதத்திற்கு ஏராளமான அடிக்குறிப்புகள் மூலம் ஆதாரமளிக்கிறார்.பிரமிளின் கவிதைகளுக்கு (பிரமிள் கூறியிருக்கலாம்) அவர் அளிக்கும் மீபொருண்மை வாசிப்பு தமிழின் வியப்புகளில் ஒன்று. இதற்குமுன் இத்தகைய வாசிப்பு திருமந்திரத்தின் இரண்டாம் இருநூறைச் சேர்ந்த பாடல்களுக்கே அளிக்கப்பட்டுள்ளது
K பஸ்ஸுக்கும் 18 E க்கும்
ரூட்டாக விளங்கும் மோட்டுப் பாளையத்தில்…
…இதற்குள் பஸ் வர
நுழைந்தேன் K யிலே
தத்துவங்கள் தொடர்ந்து
யெஸ் என்கின்றன ஈயிலே
(தத்துவமோதல்)
என்ற கவிதைக்கு கால சுப்பிரமணியம் இவ்வாறு உரையளிக்கிறார் “தத்துவ மோதல்-இல் 1, 18 என்பவை பற்றி நியூமராலஜி சம்பந்தப்பட்ட எண்குணங்களை அறிந்திருந்தால் சுவையாக இருந்திருக்கும். K- கிருஷ்ணமூர்த் தியையும் E-Evil என்பதையும் சுட்டுவதாகலாம்” மீபொருண்மையின் தர்க்கம் அறிவு என்பதையே கேலிக்குரியதாக்கும் கணம் இது என்று மட்டுமே சொல்ல விரும்புகிறேன்
பிரமிள் முன்வைக்கும் மீபொருண்மையின் முதிர்ச்சியற்ற தளம் வழியாக உள்ளே நுழைய முற்பட்டமைக்கு வருந்துகிறேன். அவரது கவிதையில்லாத எழுத்துக்களிலும் கவிதை பற்றிய விவாதங்கள் மற்றும் குறிப்புகளிலும் கவிதைக்கு மேல் ஏற்றி வைக்கும் உபரியான அர்த்தங்களிலும்தான் இந்த அபத்தங்கள் உள்ளன. அதே சமயம் அவரது படைப்பூக்கம் கொண்ட கவிதைகளில் அவருக்கேயுரிய மீபொருண்மை உலகம் ஒன்று அழகுடனும் பொருள் விரிவுடனும் உருவாகி வந்திருப்பதைக் காணலாம். அங்கே பிரமிள் சொற்பகுப்பு, விபரீதமான தர்க்க ஒழுங்கு ஆகியவற்றுக்கு முயல்வதில்லை. முழுக்க முழுக்க உருவகங்களையும் படிமங்களையும் அடுக்கிக் கட்டப்படும் அமைப்பு அது. அக்கணத்தில் உருவாகும் படைப்புவேகமே அக்கட்டுமான முன்னகர்வை நிகழ்த்துகிறது. வானில் மேலே ஏற விழைபவன் அவசரத்தில் அகப்பட்டவற்றையெல்லாம் எடுத்து அவற்றின் இயல்புக்கேற்ப சரசரவென அடுக்கி மேலேமேலே செல்வதுபோல இவை நிகழ்கின்றன. படிமங்களையும் உருவகங்களையும் அடுக்கிச்செல்லும் பிரமிள் தன் சிறந்த கவிதைகளில் வானில் அவை மீதிருந்து எழுந்து பறந்து மீள்கிறார். பிற கவிதைகளில் அந்தக்கட்டுமானமே சிறந்த ஒரு படைப்புத்தன்மையுடன் நம்முன் கிடக்கிறது
பிரமிளின் படைப்புலகின் ஆதார ஒட்டங்களில் மூன்றாவதாகக் குறிப்பிடத்தக்க அவரது தன்முனைப்பு இரு தளங்களில் மதிப்பிடத் தக்கது. அவரது படைப்பியக்கத்தின் தீவிர நாட்களில் அது அவரை இளங்கன்று புதிய புல்வெளிகளைக் கண்டடைவதுபோல தமிழின் அறியப்படாத இடங்களுக்கு துள்ளிச் செல்லவைத்தது. இளம் திறனாய்வாளராக அவர் அறிமுகமானபோது அவரது துணிச்சலான கருத்துக்களால் அவர் உருவாக்கிய அதிர்ச்சியை இப்போதுகூட பழைய பதிவுகளில் நம்மால் வாசிக்க முடிகிறது. அன்றுவரை தமிழின் இலக்கியமதிப்பீட்டுமுறையில் இல்லாதிருந்த முக்கியமான ஓர் அம்சத்தை உள்ளே கொண்டுவந்தவர் பிரமிள். இலக்கியத்தை அந்தரங்க உள அலைச்சல்களின் வெளிப்பாடு அல்லது சமூக வாழ்வின் சிக்கல்கள் குறித்த எதிர்வினை என்ற இரு தளங்களில் மட்டுமே தமிழ் இலக்கிய உலகம் மதிப்பிட்டு வந்தது. புதுமைப் பித்தனும், கு.ப.ராஜகோபாலனும்,ந.பிச்சமூர்த்தியும், ரா.ஸ்ரீ.தேசிகனும், ஏ.வி.சுப்ரமணிய அய்யரும் இந்நோக்குகளில் ஒன்றைக் கொண்டவர்களே. பிரமிள் இலக்கியம் என்பதை ஆன்மிக விடுத லைக்கும் முழுமைக்குமான சாதனமாகக் கண்டார். அறியும் முறைக ளையெல்லாம் தாண்டி ய ஓர் அறிதலாக இலக்கியத்தை வரையறுக்க முயன்றார் அவர். அவர்அதிகமாக ஜெ.கிருஷ்ணமூர்த்தியைக் குறிப்பிட்டிருந்தாலும்கூட பிரமிளின் இலக்கிய நோக்குகளில் பலவும் அரவிந்தரின் இலக்கிய நோக்குகளின் நீட்சிகளே. அதை விரிவாகவே விவாதிக்கவேண்டும்.
அரவிந்தர் மீண்டும் மீண்டும் கூறும் நான்கு இலக்கிய அடிப்படைக் கருத்துக்கள் பிரமிள் மீது இறுதிவரை ஆழமான செல்வாக்கு செலுத்தின
அ) இலக்கியம் அன்றாட வாழ்விலிருந்து தொடங்குவதாயினும் அன்றாட உண்மைகள் வழியாக முழுமுதல் உண்மையைத் தேடுவதே அதன் அறைகூவலாகும். The truth என்று அதை அரவிந்தர் வரையறைசெய்கிறார்.
ஆ) இலக்கியம் பிற அறிவுத்துறைகள் அனைத்தையும் தன்னுள் ஏதோ ஒரு வகையில் உள்ளடக்கிக் கொள்ளும் பெருந்தர்க்கம் ஒன்று உடையது. (இதை பிரமிள் அறிவார்த்தம் என்கிறார்) இலக்கியத்தின் அறிதல் முறை பிற எதிலும் இல்லாத்து. இலக்கியத்தில் மட்டுமே உள்ளது (இதை அரவிந்தர் ‘அனன்யத’ என்கிறார்)
இ) கவிதையே இலக்கிய வெளிப்பாட்டின் உச்சம். உச்சகட்ட இலக்கியவெளிப்பாடு அர்த்தமற்ற அரற்றலாகவும் அனைத்து அர்த்தங்களையும் உருவாக்கும் சொல்லுருவாகவும் மொழி வடிவம் கொள்ளும் தலைசிறந்த கவிதை வரியாகும். இதை அரவிந்தர் Supreme poetic utterance என்கிறார்.
ஈ) அத்தகைய உச்சகட்ட வெளிப்பாடு நடக்கும் கவிஞன் மனம் அது வாழும் காலஇடத்தைத் தாண்டியது; நிரந்தரமானது. ஆகவே அவன் ஒருவகையில் மானுட இயல்புகளிலிருந்து விடுபட்டவன். ஏறத்தாழ ஞானி (என்னுள் கவிதையின் காலாதீதச் சுழல்.- முதல்முகத்தின் தங்கைக்கு).
இந்த அடிப்படைகளுடன் பிரமிள் இலைக்கியப்பாப்பை ஊடுருவியபோது நமது இலக்கிய நோக்கின் ஆதாரக் கட்டுமானங்கள் பல அசைவு கொண்டன. பிரமிளின் தன்முனைப்பு என்பது இவ்வாறு தன்னை அச்சமின்றித் தயக்கமின்றி இரண்டாயிரம் வருடத்து மரபு மீது மோதவிட்டுக் கொண்டமையில் உக்கிரமாக வெளித்தெரிகிறது. படைப்பூக்க நிலையில் பிரமிளின் தன்முனைப்பு என்பது மேலே குறிப்பிட்ட இலக்கிய நோக்கின் விளைவாகும். அவர் தன்னை ஒரு கவிஞனாக, அதனாலேயே அமானுடனாகக் கண்டார். அவரது அனைத்துக் கவிதைகளிலும் இ ந்த சுயபிம்பத்தின் இருப்பை நாம் காணலாம். என் கணிப்பில் தமிழில் பாரதி, பிரமிள், தேவதேவன் ஆகிய மூவரிலுமே இந்த வகையான சுயபிரக்ஞை உள்ளது. காலப்பிரவாகத்தின் முன், பிரபஞ்ச வெளியின்முன், மனித நாடகத்தின் முன் எளிய சிறு மனித உயிராகத் திகைத்து நிற்காமல் அந்த முடிவின்மையை உள்வாங்கும் முடிவின்மை தன்னுள்ளும் உள்ளது என்ற தன்னுணர்வுடன் நிற்கும் நிலை இது. ‘விண்ணில் பறக்கும் புள்ளெலாம் நான்’ என்ற உணர்வு. தன் கவிதை குறித்து எழுதும் பிரமிள்
திமிங்கலம் பிடிக்க
கப்பலேறி
கடல்நீரில்
குழிபறித்தேன்
வந்து கவ்வி
வசப்படுமென்று
புலிக்கு இரையாய்
தூண்டிற்புழு தொங்கவிட்டு
மரத்திலே காத்திருந்தேன்
தூண்டில் துளிர்த்து
இலையில் ஊர்ந்து
வசமாயிற்று
புயல்
நீர் சுழன்று குழிந்து
பிடிபட்டது
பிரளயம்
என்று இதே மனநிலையைக் குறிப்பிடுகிறார். இந்த உக்கிரமான தன்முனைப்பு அவருடைய ஆன்மிகத் தேடலின் ஓர் அம்சமாக வும் ஆன்மிகத் தேடலையும் மீபொருண்மை நோக்கையும் ஊடுருவும் கோடாகவும் செயல்படுகிறது.பிரமிளின் தன்முனைப்பு அவரது படைப்பூக்கம் மங்கிய பின்னாட்களில் வெறும் ஆணவமாகத் திரிபடைந்தது. படைப்புக் கணத் தில் தான் உணர்ந்த உச்சத்தைத் தன் ஆளுமையின் குணமாகச் சித்தரித்துக்கொண்டார் அவர். அவரது கட்டுரைகளில், புகழ்பெற்ற அவருடைய வசைகளில், கசப்பை உமிழும் கவிதைகளில் அது வெளிப்பட்டது. அவரை ஒரு சரசரி வாசகன்வசைபாடும் அற்பராக எண்ண வழிவகுத்த்து. தமிழில் எழுத்து வடிவில் பதிவுசெய்யப்பட்ட உச்சகட்ட அற்பத் தனங்கள் பிரமிளின் கவிதைகளே
இம்மூன்று கோடுகளில் முயங்கலும் மோதலுமாக விரியும் பிரமிளின் கவியுலகம் பெரும்பாலும் கொந்தளிப்புகளால் ஆனது. மிக அபூர்வமாக அக்கொந்தளிப்பின் உச்சத்தில் ஒர் ஆழ்ந்த அமைதிமுனையை அவை தொட்டுவிட்டு மீள்கின்றன. இக்கொந்தளிப்பிற்குரிய மொழியும், படிம இணைவும்தான் அவருடைய அழகியல் தனித்தன்மை என்று கூறலாம். தமிழில் கவிதை உருவான காலம் தொட்டு இன்றுவரை எழுதப்பட்டவற்றில் நாமறிந்த வகையில் மிகவும் கொந்தளிப்பான கவிதை உலகு பிரமிளுடையதேயகும்
[மேலும்]