யானைடாக்டர் ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்

கண்களில் நீர் நில்லாமல் கன்னங்களின் வழியே என் சட்டையை நனைத்துக் கொண்டேயிருக்கின்றன. கதையைப் படிக்கத் தொடங்கிய பொழுது ஆரம்பித்த படபடப்பு பாதி வழியே கண்ணீராக மாறி அதன் நடுவே இதை எழுதுகின்றேன்.

சிறு வயதில் என்ன வேலைக்குப் போவாய் என்று யாராவது கேட்டால் காட்டிலாகா வேலைக்குப் போகவே விரும்புவேன் என்பேன். தொடர்ந்து ஏன் என்று கேட்டால் யானைகளை அருகில் இருந்து பார்க்கலாமே என்பதாகவே பதில் இருக்கும். ஒன்றாம் வகுப்புப் படிக்கும் பொழுது ராஜபாளையம் அருகேயுள்ள அய்யனார் கோவில் அருவிக்கு என் வீட்டில் அழைத்துப் போயிருந்தார்கள். அன்று மனதுள் ஆழமாகப் பதிந்த காடு இன்னும் என்னை விட்டு அகலவில்லை. அந்தக் காட்டை நான் மீண்டும் மீண்டும் இங்கு தேடித் தேடி ஒவ்வொரு முறையும் ஏமாந்து போகிறேன். அமெரிக்காவில் ஆயிரம் இருக்கலாம் ஆனால் ஆனை இல்லாத காடு என்ன காடு? ஐடி ஒரு பெரிய துறையாக மாறுவதற்கு முன்பாகவே அத்துறையில் வேலைக்குச் சேர்ந்திருந்தேன். இன்று ஒரு லட்சம் பேர்களுக்கு மேலாக வேலை பார்க்கும் அந்நிறுவனத்தில் அன்று அதிக பட்சம் இரண்டாயிரம் பேர்களே வேலை பார்த்தோம். நிறுவனத்தின் எச் ஆர் அதிகாரி ஊழியர் கூட்டத்தில் நிறுவனத்திற்கு பல தேசங்களில் இருந்தும் ஆர்டர்கள் வருகின்றன. நீங்கள் வெளி நாடு போக வேண்டும் என்றால் என்னிடம் சொல்லுங்கள் நீங்கள் விரும்பும் நாட்டுக்கு அனுப்புகிறோம் நீங்களாகத் தேடி வெளியேற வேண்டாம் என்று சொல்லி விட்டு யார் யார் எந்த நாட்டுக்குப் போக விரும்புகிறீர்கள் என்று கேட்க்க ஆரம்பித்தார். நான் ஒருவன் மட்டுமே அங்கு சவுத் ஆப்பிரிக்கா போக வாய்ப்புக் கிடைக்குமா என்று கேட்டவுடன் கொல் என்று பெரிய சிரிப்பு எழுந்தது. ஏன் குறிப்பாக ஆப்பிரிக்கா என்று அவர் கேட்ட பொழுது நான் சொன்ன ஒரே பதில் யானையும் காடுகளும் என்றேன். என் தீராத ஏக்கங்களையெல்லாம் நீங்கள் காண்பிக்கும் காடுகளும் யானைகளும் பூர்த்தி செய்கின்றன.

ஒரு உன்னதமான மனிதனை எங்கள் ஊரைச் சேர்ந்தவராக அடையாளப் படுத்தியுள்ளீர்கள். அதனால் எங்கள் கிராமம் பெருமை அடைகிறது. என் மனமார்ந்த நன்றிகள். கற்பனையேயானாலும் கூட அது தென் திருப்பேரைக் கிராமத்துக்குக் கிட்டிய அழியாப் பெருமை என்றே எடுத்துக் கொள்கிறேன்.

அதே கிராமத்தில் சன்னிதித் தெருவில் கோவிலின் முன் மண்டபம் முன்னால் ஒரு யானை இறந்து விட்டது. யானையை அகற்ற பல வாரங்களாக உரிய ஆட்கள் வரவில்லை. நாற்றமும், சீழும், புழுக்களும் தெருவில் உள்ள அனைவரையும் வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியேற வைத்தது. எங்கள் உறவினர் ஒரு கர்ப்பிணிப் பெண் நாற்றம் கொடுத்த வாந்தியினால் வயிற்றில் குழந்தையுடன் உயிரிழந்தார். பெரிய ரம்பம் வைத்து அறுத்து அறுத்து யானையை அப்புறப் படுத்தியிருக்கிறார்கள். பல வருடங்களுக்குப் பிறகு ஊருக்கு சோழி ஜோசியம் பார்க்க வந்த உன்னிக்கிருஷ்ணப் பணிக்கர் இந்தக் கோவிலில் யானை இறந்திருக்கிறது பரிகாரம் செய்ய வேண்டும் என்றிருக்கிறார். அதன் பின் அந்தக் கோவிலுக்குள் யானைகள் வளர்ப்பது இல்லை. ஆற்றின் அக்கரையில் உள்ள இரட்டைத் திருப்பதி என்ற அழகிய இரு காட்டுக் கோவில்களில் யானைகள் இருக்கின்றன. அவற்றில் ஒரு குட்டி யானைக்கு அதிக உஷ்ணத்தினால் உடல் நலம் கெட வைத்தியம் பார்த்தார்கள். அந்த யானை மிகவும் சுட்டியானது. காடு அதற்குக் கிடைக்காவிட்டாலும் கோவிலை ஒட்டிக் கொண்டு ஓடும் தாமிரவருணி அதற்கு அளவில்லாத குஷியை அளிக்கின்றது. முதுமலை கேம்ப் நிச்சயமாக இந்த அநாதைகளான பிருமாண்டமான காட்டின் அரசனுக்கு ஒரு சிறிய புத்துணர்ச்சியை அளிக்கின்றது போலும். அந்தக் கோவில் யானை டாக்டர் சொல்வது போல ஹுயுமரசான ஒரு யானை. லஷ்மி பற்றிய தினமலர் செய்தியைக் கீழே கொடுத்துள்ளேன். அப்பேர்ப்பட்ட இந்த யானைக்கு பழம் கொடுக்காதீர்கள் அதில் ஊசி வைத்து யாரோ கொடுத்து விட்டார்கள் என்று பாகன் சொன்ன பொழுது மனம் பதறியது.

காலில் பீர் பாட்டில் குத்திய யானையுடனும் அதன் கூட்டத்துடனும் அவற்றின் உள்ளுணர்வுடன் டாக்டர் கே உரையாடியுள்ளார். எலிஃபண்ட் விஸ்ப்பரர் ”The Elephant Whisperer My Life with the herd in the African Wild” என்றொரு நூல் யானைகளுடன் உரையாடும் யானையின் தோழன் அந்தோணி லாரன்ஸ் யானைகளுடனான தன் அனுபவங்களைச் சொல்லும் அற்புதமான நூல் என்று நண்பர் அருணகிரி அறிமுகப் படுத்தினார். அதில் ஒரு இடத்தில் ஒரு பெரிய யானை அந்தோனியைத் தாக்க வரும் பொழுது அவர் சொல்லுகிறார் “நில் யாரென்று தெரியாமல் என்னிடம் வராதே இது நான் என்னையா தாக்கப் போகிறாய்” என்று. மற்றொரு இடத்தில் அவர் விமானத்தில் கிளம்பி வீட்டுக்கு வரும் நேரம் அறிந்த யானைகள் அவரை வரவேற்கக் கிளம்பி வந்து கொண்டிருக்க எங்கோ அவரது விமானம் கிளம்பாமல் தடை படுகிறது. உள்ளுணர்வில் அதை உணர்ந்த யானைகள் அவரை வரவேற்க அங்கு செல்லாமல் திரும்பி விட்டிருக்கின்றன என்கிறார். முதுமலையில் இருந்து டாக்டரின் வீட்டைத் தேடி வந்த குட்டி யானையின் சக்தியும் அதைப் போன்றதே. யானைகள் பற்றிய நுட்பமான விவரணங்கள் அடங்கியது வில்பர் ஸ்மித்தின் “தி எலிஃபெண்ட் சாங்”. அது ஒரு விறுவிறுப்பான ஆப்பிரிக்க மசாலா கதைதான் இருந்தாலும் ஆப்பிரிக்கக் காடுகளின், யானைகளின் நுட்பமான விவரிப்புக்கள் நிரம்பிய அவசியம் படிக்க வேண்டிய ஒரு நாவல். அதில் யானைகள் கூட்டாகவும் டெலிபதி மூலமாகவும் சிந்தித்துத் தொடர்பு கொள்கின்றன என்பார்.

ஒவ்வொரு முறை கோவில்களுக்குள் நுழையும் பொழுது யானைகளை எதிர் கொள்ளும் பொழுதெல்லாம் ஒரு விவரிக்க முடியாத சோகமும் நடுக்கமும் மனதுக்குள் பரவுகிறது. இந்த யானைக்கு நான் என்ன நினைக்கிறேன் என்பது புரியும் என்று ஏதோ ஒரு உணர்வு சொல்லுகிறது. அப்படியொரு மகத்தான படைப்பை மனிதன் எவ்வளவு எளிதாக பிச்சை எடுக்க வைத்துக் கேவலப் படுத்தி விடுகிறான். மற்றொரு கோவிலின் குட்டி யானை ஒன்று கிராமத்தில் எங்கள் வீட்டு அழியின் ஷட்டர் கதவுகளை எம்பித் தள்ளித் திறந்து சரியாக கதவின் மேல் உள்ள காலிங் பெல்லையும் அழுத்தி நாங்கள் பழம் கொடுத்த பின்னால் வாங்கி சாப்பிட்ட பின்னாலேயே நகருகிறது. இந்தப் படத்தில் அந்த யானையைக் காணலாம்
https://picasaweb.google.com/strajan123/Sriperai#5192970273474083874
கோவில்களில் ஏற்கனவே இருக்கும் யானைகளை இனிமேல் நீக்க முடியாது. இனிமேலாவது கோவில்களுக்கு எவரும் யானைகளை தானமாக அளிக்காமல் இருக்க வேண்டும். ஏதோ யானைகளின் நல்ல காலம் டாக்டரின் யோசனையை அன்றைய ஜெயலலிதா அரசு ஏற்றுக் கொண்டது .

அந்த யானைக்கு உன்னை தெரியும்கிறத பெரிசா நெனைச்சேன்னா டெல்லியிலே எவனோ நாலு கேணையனுங்க எதையோ காயிதத்திலே எழுதிக் கையிலே குடுக்கறதப் பெரிசா நெனைப்பியா?

காட்டையும் யானையும் வாசிக்கும் ஒவ்வொருவரையும் நேசிக்க வைத்த உங்கள் எழுத்துக்கு எந்த ஞானபீடமும் இணையாகது. விஷ்ணுபுரம் அமைப்பு இந்தக் கதையை பல ஆயிரம் காப்பிகள் ப்ரிண்ட் எடுத்துத் தமிழ் படிக்கத் தெரிந்த ஒவ்வொரு இளைஞர்களிடமும், ஐ டி ஊழியர்களிடமும், காடுகளுக்குள் உலா செல்ல விரும்பும் ஒவ்வொரு காருக்கும் காட்டினுள் கார் நுழையும் இடத்திலேயே அளிக்க வேண்டும். நானும் உதவத் தயாராக இருக்கிறேன். இதைப் படித்தவன் எவனும் அடுத்த முறை ஒரு யானையைக் காணும் பொழுது மனம் நெகிழ்ந்து வணங்க வைக்கும்.

பெரியவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி யானையைப் போன்ற பெரிய மனது படைத்தவர். என் கண்ணீர் மல்கும் நன்றிகள் அவருக்கும் அவரை எங்களிடம் கொணர்ந்து சேர்ப்பித்த உங்களுக்கும்.

அன்புடன்
ராஜன்

முந்தைய கட்டுரைதேவதேவனுக்கு ஓர் இணையதளம்
அடுத்த கட்டுரைமதவாதம்-ஒருகடிதம்