சென்னையில் வாழ்தல்
சென்னையில் வாழ்தல்- கடிதம்
அன்புள்ள ஜெ
சென்னையில் வாழ்தல் பற்றிய பதிவுகளை வாசித்தேன் .
சென்னையில் தற்போது வாழ்ந்தாலும் பள்ளிப்பருவத்தில் தமிழகத்தின் பிற சிற்றூர்களில் (தந்தைக்கு மாற்றல் உள்ள வேலை) நிசசயம் மனதிற்கு இனியதுதான். ஆனால் எல்லோருக்கும் எப்போதும் இது சாத்தியம் கிடையாது என்பதுதான் உண்மை. ஒருவருக்கான தொழில் அவர் சொந்த ஊரிலேயே அமைந்ததென்றால் அவர்கள் அதை தாராளமாக அனுபவித்துக்கொள்ளலாம் . மற்றவர்களுக்கு (குறிப்பாக அடுத்த தலைமுறையினருக்கு சென்னையில் வசிக்க வேண்டியதற்கு தொழில், பிற தேடல்கள் , திருமணமாகிப் புகுந்த இடம் , சென்னை மீது ஆர்வம் எனப் பல காரணிகள் உண்டு.வறண்ட மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு சென்னை பசுமையாகத்தெரியலாம்.
சென்னை வெறுப்பாளர்களிடம் பேசிப்பார்த்தால் சில விஷயங்கள் வெளி வரும்
“நம்மூர்ல நமக்கு எம்புட்டு மரியாதை ” என்பது போன்ற ராஜாங்க ஈர்ப்புகள்.
“நம்ம ஊர் டாக்டர் பாத்தாதான் நமக்கு சரிப்பட்டு வரும்”, “நம்ம செங்கழனி அம்மன தெனமும் பார்த்து கும்பிட்டாதான் மனசுக்கு நிம்மதி”, போன்ற நம்பிக்கைகள்.
யாருக்கெல்லாம் எல்லா விஷயங்களிலும் மனதிற்குப் பிடித்த வாழும் சூழல் எப்போதும் கிடைக்குமென்றால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் . அது இல்லாதவர்களுக்கு இருப்பதில் இருந்து மனதிற்கு இனியத்தைக் கண்டடையும் தேடல் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அதற்கு சில நாட்கள் இருந்து விட்டு ஓட்டம் பிடிப்பது உதவாது. மாற்றங்களுக்கும், விட்டுக்கொடுத்தல்களுக்கும் மனதை தயார் படுத்திக்கொள்வது ஒன்றே வழி.