சிலைகளை நிறுவுதல்

கிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா?

கீதையை எப்படிப் படிப்பது? ஏன்?

 

அன்புள்ள ஜெ

கிருஷ்ணன் என்னும் காமுகனை வழிபடலாமா, கீதையை எப்படி வாசிப்பது என்னும் இரண்டு கட்டுரைகளுமே எனக்கிருந்த பலவகையான ஐயங்களையும் குழப்பங்களையும் தீர்த்துவைப்பவையாக இருந்தன. பல புதிய தொடக்கங்களையும் உருவாக்கி அளித்தன. நான் இந்த ஐயங்களுடன் பல ஆண்டுகளாக இருந்து வருகிறேன். பலருடைய உரைகளைக் கேட்டிருக்கிறேன். நூல்களை வாசித்திருக்கிறேன். அவர்கள் சொல்லாத எதை நீங்கள் சொல்லிவிட்டீர்கள் என்று எண்ணிப்பார்த்தேன். நவீனமொழியும் நவீனச் சிந்தனைகளின் தர்க்கங்களைப் பயன்படுத்திச் சொல்லும் முறையும்தான் உங்கள் சிறப்பு என்று தோன்றியது.

என்னைப்போன்ற ஒருவனுக்கு சம்பிரதாயமான பக்திச்சொற்பொழிவின் செயற்கையான நெகிழ்ச்சி கொண்ட நடை ஒவ்வாமையையே உருவாக்குகிறது. அதேபோல நவீனச் சிந்தனைகளுடன் தொடர்பே இல்லாமல் பழைமையான நம்பிக்கைகாளாகவே எல்லாவற்றையும் சொல்வதும் ஏற்றுக்கொள்ளமுடிவதாக இல்லை. அத்துடன் அவர்களில் பலர் நவீனச் சிந்தனைகள் என்னும்போது நிரூபணவாத அறிவியலைத்தான் குறிப்பிடுகிறார்கள். சயன்ஸ் என்ன சொல்லுது என்று ஆரம்பிக்கும்போதே திருமண் இட்டுக்கொண்டால் ஜலதோஷம் வராது என்றுதான் சொல்லப்போகிறார்கள் என்று தெரிகிறது.

இன்றைய சூழலில் சிந்திக்கும் ஒருவனுக்கு மரபின்மேல் பெரிய பக்தி இருக்கமுடியாது பொதுவாக பக்தியே அவ்வளவு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்காது. ஆகவே அவனுக்கு மூளைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கம் தேவைப்படுகிறது. கீதையை எந்தவகையிலும் நான் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்பதில்லை, அதை நியாயப்படுத்தியே ஆகவேண்டும் என்னும் பொறுப்பு எனக்கில்லை என்பதை நீங்கள் சொன்னபோதுதான் உண்மையில் கீதை எனக்கு நெருக்கமானதாக ஆகிறது.

நான் கேட்கவிரும்பும் ஒரு கேள்வி இதுதான். கிருஷ்ணன் என்னும் தெய்வத்தை வழிபடும் ஒருவர் கிருஷ்ணனைப்பற்றிய இந்த நவீனப்புரிதலைக் கொண்டிருக்கவேண்டுமா? அவரை வரலாற்றிலும் தொன்மவியலிலும் வைத்துப் பார்க்கவேண்டுமா? அப்படிப் பார்த்தால்தான் அவரால் கிருஷ்ணனை எதிர்க்கும் ஒருவருக்கு அழுத்தமான பதிலைச் சொல்லமுடியும். அப்படிச் சொல்ல இன்றைய கிருஷ்ணபக்தர்கள் பெரும்பாலானவர்களால் முடிவதில்லை இல்லையா? அப்படியென்றால் கிருஷ்ணனைப்பற்றிய வரலாற்றுபூர்வமான புதிய அறிதல் இந்துமதத்திற்கு இன்றைக்கு தேவைதானே? கிருஷ்ணனைப்போலவே சிவன் முருகன் எல்லாத் தெய்வங்களையும் அப்படி அறிந்துகொள்ளவேண்டும் அல்லவா?

எஸ். கிருஷ்ணமூர்த்தி

அன்புள்ள கிருஷ்ணமூர்த்தி,

முதலில் உங்கள் கேள்வியின் இறுதிவரியிலிருந்து ஆரம்பிக்கிறேன். ஏன் ஒரு பக்தன் பிறருக்கு கிருஷ்ணன் பற்றி விளக்கவேண்டும்? ஏன் பிறருடைய அவநம்பிக்கையை அவன் களையவேண்டும்? அவனுக்கு அந்தக் கடமையை பக்திவழிபாட்டுமுறை அளிக்கிறதா என்ன?

முன்பொருமுறை கிருஷ்ணபக்தர் என தன்னை அறிவித்துக்கொண்டவரான மலையாளக் கவிஞர் யூசுஃப் அலி கேச்சேரி இடமறுகு என்னும் நாத்திகர் எழுதிய ‘கிறிஸ்துவும் கிருஷ்ணனும் உண்மையில் வாழ்ந்தவர்கள் அல்ல’ என்ற நூலைப்பற்றி கேட்கப்பட்டபோது சொன்னார். ‘உண்மைதான், இடமறுகின் கிருஷ்ணன் இப்போதும் வாழவில்லை’

பக்தரின் வழி அதுதான். அவருக்கு அவருடைய பக்தி, அவருடைய நம்பிக்கைதான் முக்கியம். பிறரை பக்தி நோக்கி இழுப்பதும், பிறருடைய ஐயங்களை போக்கி தன் விருப்பதெய்வத்தை அவர்முன் நிறுவுவதும் அவருடைய வேலையே அல்ல.

இந்தக்குழப்பம் எங்கிருந்து வருகிறது? கிறித்தவ மதத்தின் விசுவாசத்துடன் இந்துமதத்தின் பக்தியை நாம் ஒப்பிட்டுக்கொள்வதனால். அவர்கள் பயன்படுத்தும் சொல் விசுவாசம். அதற்கு ஏற்பு, கட்டுப்படுதல், ஏற்றுச்சொல்லுதல் என்னும் பொருட்கள் உண்டு. விசுவாசி அப்போது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்கின்றது அந்த மதம்.

விசுவாசம் என்பது நம்பிக்கையில் இருந்து தொடங்குவது. அதன் தளம் மேல்மனம், பிரக்ஞைநிலைதான். மானுட நம்பிக்கை என்பது எந்நிலையிலும் முழுமையானது அல்ல. எப்போதுமே ஒரு துளி ஐயம், ஒரு துளி விலகல் இருந்துகொண்டே இருக்கும். அதனுடன் ஓயாது போராடிக்கொண்டேதான் இருக்கவேண்டும். அந்த ஒருதுளியைத்தான் அவர்கள் சாத்தான் என்கிறார்கள். அவர்களின் விசுவாசம் என்பது சாத்தானுடனான ஓயாத சமர்தான். உன் விசுவாசத்தைக் காத்துக்கொள் என்கிறது கிறித்தவம்.

அந்தச் சமரில் அவர்கள் தங்கள் நம்பிக்கையைப் பேணிக்கொள்ள மிகச்சிறந்த வழியாகக் காண்பது அதை பிறரிடம் பரப்புவது. மதமாற்ற முயற்சி என்பது கிறித்தவத்தை தழுவிய ஒருவர் மேலதிகமாகச் செய்வது அல்ல. அந்த நம்பிக்கையின் ஒரு பகுதி அது. தொடர்ந்து ‘நான் கிறிஸ்துவை நம்புகிறென்’ என பிறரிடம் சொல்பவர் தனக்குத்தானே அதைச் சொல்லிக்கொள்கிறார்

அந்த இயல்பு சைவ,வைணவ,சாக்த மதங்களின் பக்திக்கு இல்லை. பக்தியை நாம் நம்பிக்கை, விசுவாசம் என்னும் இரு சொற்களாலும் சுட்டமுடியாது. உங்களுக்கு கிருஷ்ணன்மேல் நம்பிக்கை உண்டா, கிருஷ்ணனுக்கு விசுவாசமாக இருக்கிறீர்களா என்று வைணவம் கேட்பதில்லை. பக்தி என்பது பெரும்பாலும் ஆழுள்ளம்சார்ந்தது. பெரும்பாலும் தன்னிச்சையானது. அது ஒர் இயல்பான ஏற்புநிலை. அதற்கான உள்ளம் கொண்டவர்களுக்குரியது அது.

அந்நிலையில் கிருஷ்ணன்மேல் பக்தரின் ஆழுள்ளம் படிகிறது. அந்த பக்தரின் விழிப்பு உள்ளம், பிரக்ஞைநிலை அதை எதிர்க்கவும்கூடும். அதை தர்க்கபூர்வமாக நிறைவுசெய்துகொள்ள அவர் முயலவேண்டியதில்லை. சொல்லப்போனால் அதற்கு அவர் எதையுமே செய்யக்கூடாது. விழிப்புள்ளத்தை அவர் அப்படியே விட்டுவிடவேண்டும்.

ஆகவேதான்’நீ என்ன கல்லா?’ என்று நம் பக்திப்பாடல்களிலேயே வருகிறது. ‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேனே’ என்று வருகிறது எந்த கிறித்தவப்பாடலிலாவது இப்படி ஒரு வரி வரமுடியுமா? விழிப்புள்ளத்திற்கு நீ கல்லாகக்கூட இருக்கலாம், என் ஆழுள்ளத்திற்கு நீ வேறு என்பதே இவ்வரியின் பொருள்

ஆகவே இங்கே பக்தி என்பது தெரிந்துகொண்டு, புரிந்துகொண்டு, வகுத்துக்கொண்டு ஏற்றுக்கொள்வது அல்ல. கிருஷ்ணனை வழிபடும் பக்தர் எதையுமே தெரிந்துகொள்ளவேண்டியதில்லை. கிருஷ்ணனின் சிலை மட்டுமே போதும். அதைக்கொண்டே அவர் அனைத்தையும் சென்றடைய முடியும்

சிலை [விக்ரகம்] என்பது இரண்டு தளம்கொண்டது. கண்ணால் காணும் பொருள் ஒன்று. அகம் அறியும் குறியீடு இன்னொன்று. ஒன்றின்மேல் ஒன்று படிந்துள்ளது. கண்ணால் காணும் பொருளை வழிபடுபவரிடம் அகம் அறியும் குறியீடு பெருகத் தொடங்குகிறது. அவருடைய கனவை, ஆழுள்ளத்தைச் சென்றடைகிறது.அங்கே மேலும் மேலும் பேருருவம் கொள்கிறது

ஆகவேதான் அந்த விழிமுன் காணும் தெய்வஉருவம் இன்னின்ன முறைப்படி அமையவேண்டும் என்றும், வெறும் அழகியல்நோக்கிலோ, நடைமுறை வசதி கருதியோ அது மாற்றப்படக்கூடாது என்றும் சொல்லப்படுகிறது. அதில் மாற்றம் நிகழவேண்டும் என்றால் அந்த ஆழுள்ளத்திலிருந்தே வரவேண்டும். அது ஒரு ஞானியிடமிருந்தேஎ வரமுடியும்.

அந்த அறிதல் தர்க்கபூர்வமானது அல்ல. மொழிவடிவானதும் அல்ல. வரலாற்றுநோக்குடனும் குறியீட்டியல்சார்ந்தும் கிருஷ்ணனை அறியும் ஒரு பேரறிஞர் அறிவதைவிட மிகமிக ஆழ்ந்த மிகமிக விரிந்த கிருஷணவடிவை எளிமையான பக்தர் அடையக்கூடும். அந்த வடிவம் அவருடைய ஆழுள்ளத்திற்குள் எங்ஙனம் செல்கிறது என்பதே முக்கியமானது.

பக்தர் ஒருபோதும் தன் விழிப்புள்ளத்தைப் பொருட்படுத்தக்கூடாது. அதைக்கொண்டுசென்று ஆழுள்ளத்திற்கு எதிர்நிலையில் நிறுத்தக்கூடாது. விழிப்புள்ளத்திற்கு பயிற்சி அளிக்க அளிக்க அவர் ஆழுள்ளத்திற்கான எதிர்ப்பையே பெருக்கிக்கொள்கிறார். ஊழ்கமுறையை அறிந்தவர்களுக்கு தெரியும் ஆழ்ந்துசெல்லும்போது ஊடே புகும் விழிப்புநிலையுடன் போரிடக்கூடாது, அதை விலக்க முயலக்கூடாது. அதை அப்படியே விட்டுவிடவேண்டும். நாம் பேசிக்கொண்டிருக்கையில் ஊடே புகும் குழந்தையை கவனித்தால் அது அடம்பிடிக்க தொடங்கும். அப்படியே விட்டுவிட்டால் அது தன் விளையாட்டுலகுக்குச் சென்றுவிடும்.

ஆகவே இந்துமதத்தின் பக்தருக்கு தன் தெய்வத்தை வரலாற்றுநோக்கில் குறியீட்டு நோக்கில் அறியும் பொறுப்பு இல்லை. அதை அவர் வலியுறுத்தி நிறுவ வேண்டியதில்லை. எவருக்கும் விளக்கவும் வேண்டியதில்லை. எந்த எதிர்ப்பையும் அவர் சந்தித்து வெல்லவேண்டியதுமில்லை. அவருடைய வழிகள் உணர்வுரீதியாக அத்தெய்வத்தில் ஈடுபடுதல், அவ்வுணர்வுகளை நிலையான புறச்செயல்பாடுகளாக ஆக்கிக்கொள்ளும் சடங்குகளைச் செய்தல் மட்டுமே

அப்படியென்றால் ஏன் வரலாற்று விளக்கம் அல்லது குறியீட்டு விரிவாக்கம்? இது பக்தர்களுக்குரியது அல்ல. உங்களையும் என்னையும்போல பக்தியில் சென்றமையாத அறிவார்ந்த உள்ளம் கொண்டவர்களுக்குரியது. இதுவும் இந்துமதங்கள் முன்வைக்கும் வழிமுறைதான். மேலே நான் பக்தியைப்பற்றிச் சொல்லியிருப்பதுகூட பக்தியைப்பற்றிய அறிவார்ந்த விளக்கம் மட்டுமே

அதாவது இந்து மதத்தின் இரு வழிகளைச் சேர்ந்தவர்களுக்கும் எந்தச்சிலைகளையும் நிறுவும் பொறுப்பு இல்லை. ஞானவழியைச் சேர்ந்தவருக்கு அச்சிலைகளை அறிதல்தான் அவருக்குரிய முறை. பக்தியை வழியாகக் கொண்டவருக்கு அச்சிலையினூடாக ஆழ்ந்து செல்லுதல் அவருக்குரிய முறை. ஒருவரின் தன்னியல்புக்கு ஏற்ப ஞானமோ பக்தியோ தெரிவுசெய்யப்படுகிறது.

 

ஜெ

 

கிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா?- எதிர்வினை

பக்தி ஒரு கடிதம்

பாகவதமும் பக்தியும்

 

 

முந்தைய கட்டுரைசென்னையில் வாழ்தல் – கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-28