இந்திரா பார்த்த சாரதி இணையப்பக்கம்
நேற்று மாலை [07-10-2019] நானும் நண்பர்களும் இந்திரா பார்த்தசாரதி அவர்களை அவருடைய இல்லத்திற்குச் சென்று பார்த்தோம். ஏழு மணிக்கெல்லாம் அவர் தூங்கிவிடுவது வழக்கம் ஏன்பதனால் சொல்லிவைத்து மாலை ஐந்து மணிக்கே நான் தங்கியிருந்த விடுதியில் கூடி அங்கிருந்து கிளம்பினோம். சண்முகம், காளிப்பிரசாத், சுரேஷ்பாபு ராகவ் ஆகியோர்.
இ.பா முன்பிருந்ததைவிட நன்றாக மெலிந்திருக்கிறார். நெஞ்சு எரிச்சல் போல சிறு உடல்சிக்கல்கள் இருந்தாலும் நன்றாக இருக்கிறார். வழக்கமான உற்சாகம், மெல்லிய நக்கல். ‘தொண்ணூறு வயசெல்லாம் இருக்கிறது கஷ்டம்- என்னைச் சொன்னேன்’ என்றார். கம்யூனிஸ்டுக் கட்சி திமுகவிடம் பணம் வாங்கியது பற்றி போகிறபோக்கில் ஒரு சின்ன நையாண்டி.
இபா என்றுமே அரசியல் செய்திகளை கூர்ந்து கவனிப்பவர். இருபதாண்டுகளுக்கு முன் நீங்கள் ஏன் இந்தியாவில் இருக்கவேண்டும், அமெரிக்காவில் பையன்களுடன் வசதியாக இருக்கலாமே என்று கேட்டேன். ‘I want a country to hate’ என்றார். காலை எழுந்து ‘இந்த நாடு உருப்படுமா, உருப்படுமாங்கிறேன்’ என்று சொல்லி அங்கலாய்த்துக்கொண்டு குடித்தால்தானே காபி சுவையாக இருக்கிறது. அமெரிக்கா எக்கேடுகெட்டால் நமக்கென்ன?
விஜய்காந்த் படம் திரையில் ஓடும்போது கேட்புக்கருவிகளை கழற்றி வைத்துவிட்டு அமர்ந்து அதை கலைப்படமாக ஆக்கும் தொழில்நுட்பம் பற்றிச் சொன்னார். நல்ல ஒயிலாக்க நடிப்புதான். கும்பகோணம் நினைவுகள். நாடக நினைவுகள். மயிரிழையில் அல்காஷி அவருடைய ஔரங்கசீப்பை நாடகமாக ஆக்கும் வாய்ப்பு தவறிப்போனது. ஒரு காலகட்டத்தையே ஒரு மணிநேரத்தில் சுற்றிவந்தோம்
அவருடைய சிரிப்பு எப்போதுமே அழகியது. முப்பதாண்டுகளுக்கு முன் என் ரப்பர் வெளியீட்டுவிழாவில் அவரைப்பார்த்துவிட்டு வந்து நான் சொன்னபோது சுந்தர ராமசாமி ’ரொம்ப அழகானவர்னா… அவரோட தமிழ் கிளாசுக்கு இங்கிலீஷ் படிக்கிற பொண்ணுகள் போயி உக்காந்திரும். அப்டி தமிழார்வத்த உண்டுப்பண்ணினவர்” என்றார்
சிரிக்கையில் ஒரு கணம் அந்த பழைய அழகன் தோன்றி மறைவது ஒரு குட்டி அற்புதம்