‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-24

பகுதி நான்கு : கழுநீர்க் கரை – 5

நகுலனின் எண்ணத்தில் எஞ்சியதெல்லாம் ஒன்று மட்டுமே, காந்தாரி அடுத்ததாகச் செல்லும் இடம். வண்டியின் இணையாக புரவியில் சென்றபடி அவன் அவள் தன் குடிலுக்கு மீளவேண்டும் என விழைந்தான். அவள் சற்றே ஓய்வெடுக்கவேண்டும். சற்று துயில்கொண்டால் அவள் பிறிதொருத்தி ஆகிவிடக்கூடும். அவள் இருக்கும் நிலையை அவன் எவ்வகையிலோ உணர்ந்துகொண்டுவிட்டிருந்தான். அவனை அது பதறச் செய்தது. புரவியின் மேல் அமர முடியாதபடி உடலை அதிர்வுகொள்ள வைத்தது.

வண்டி திரும்பிய திசை காந்தாரியின் குடில் என்பதே அவனுக்கு இருந்த ஆறுதலாக இருந்தது. ஆனால் சற்று நேரத்தில் வண்டி விசையழிந்தது. சத்யவிரதை வெளியே நோக்கி “அக்கை பேரரசரை காணச்செல்ல ஆணையிடுகிறார்” என்றாள். “ஆம், ஆணை” என்ற நகுலன் “ஆனால் அவர் எவ்வண்ணம் இருக்கிறார் என நாம் அறியோம். இப்போதிருக்கும் நிலையில்…” என்றபின் “நான் ஓர் ஏவலனை அனுப்பி அவரிடமிருந்து ஆணை பெற்று வருகிறேன்” என்றான். அவனுக்கே தன் குரலின் நடுக்கம் விந்தையாக இருந்தது. “பேரரசி தன் குடிலில் சற்று ஓய்வெடுக்கையில்…” என்றான்.

சத்யவிரதை இடைமறித்து “இப்போதே செல்லவேண்டும் என பேரரசி ஆணையிடுகிறார்… பேரரசரின் நிலை எதுவாக இருப்பினும் பேரரசிக்கு அது தடை அல்ல” என்றாள். “ஆம்” என்று சொல்லி நகுலன் தளர்ந்தான். ஆம், இதுவே நிகழவிருக்கிறது. எவ்வகையிலும் தடுக்க முடியாது. இது ஒன்றே எஞ்சியிருக்கிறது. “ஆணை” என மீண்டும் தலைவணங்கி முன்னால் சென்று வண்டியோட்டியிடம் “பேரரசரின் குடிலுக்கு” என்றான். வண்டியோட்டியின் விழிகளில் ஓர் உணர்வும் வெளிப்படவில்லை என்றாலும் அவனுக்கு அவன் ஏதோ சொல்லவருவதாகப் பட்டது. தன் உள்ளத்தில் ஒரு கணம் அவன் விழிமுனை எஞ்சி பின் அணைந்ததுபோல் உணர்ந்தான்.

விழிகளை சுழற்றியபோது ஓர் ஏவலன் கண்ணுக்குபட்டான். அவனை விழிகளால் அருகழைத்தான். “சஞ்சயனிடம் பேரரசி அணுகிக்கொண்டிருப்பதாக சொல்” என்றான். ஏவலன் “ஆணை” என்றான். “புரவியில் முடிந்தவரை விரைவில் செல்” என்றான் நகுலன். “ஆணை” என்றபின் அவன் புரவி நோக்கி ஓடினான். வண்டியோட்டி திரும்பி நோக்கினான். நகுலனின் விழிகளிலிருந்து ஆணையை பெற்றுக்கொண்டான். வண்டி விரைவழிந்தது. சற்றே முன்னால் சென்று சுற்றுப்பாதையை தெரிவு செய்து செல்லத்தொடங்கியது. நகுலன் புரவிமேல் உடல் தளர்ந்து அமைந்தான்.

திருதராஷ்டிரரை அவனோ பாண்டவர்களோ அதுவரை நேரில் சந்திக்கவில்லை. அவர் எவ்வண்ணம் இருக்கிறார் என்பதை ஒற்றர்கள் வந்து சொன்னதிலிருந்து கற்பனை செய்து நிகழ்த்தி நோக்கிக்கொண்டிருந்தார்கள். நோக்குமாடத்தில் இருந்து மலையிறங்கி வரும்போது அவர் “ஏன் நாம் செல்கிறோம்? போர் என்ன ஆயிற்று?” என்று உசாவிக்கொண்டிருந்தார். “பேரரசே, போர் முடிந்துவிட்டது” என்று சஞ்சயன் சொன்னான். “முரசறிவிப்பு எழவில்லையே. என் மைந்தனின் வெற்றியை நீ எவ்வண்ணம் அறிந்தாய்?” என்று திருதராஷ்டிரர் கேட்டார். சஞ்சயன் அத்தருணத்தை இயல்பாகக் கடந்து “வெற்றியை எவ்வண்ணமும் அறியலாகும்… ஏன் போர்முரசுகள் முழங்கவில்லை என நாம் அவரை நேரில் சந்திக்கையில் உசாவுவோம்” என்றான்.

கீழிறங்கிவருகையில் திருதராஷ்டிரர் முரசொலிகளை கேட்டுவிட்டார். “ஆ! முரசொலி! வெற்றி முரசின் ஒலி! ஆம்! அது வெற்றிமுரசொலியேதான்!” என்று கூவினார். பற்கள் வெண்ணிறமாக ஒளிகொண்டு தெரிய இரு கைகளையும் விரித்துத் தூக்கி “அவன் வென்றான்! அவன் வெற்றிகொண்டான்! கௌரவர்களுக்கு வெற்றி! குருகுலத்திற்கு வெற்றி!” என்று கூச்சலிட்டார். சஞ்சயன் திரும்பி அவர் முகத்தையே திகைப்புடன் நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான். அவருடைய முகம் உவகையால் விரிந்து கன்னத்தசைகள் நெளிந்தன. மெய்யான உவகை. தெளிவாகவே முரசுகள் பாண்டவர்களின் வெற்றியை அறிவித்துக்கொண்டிருந்தன. “இந்திரப்பிரஸ்தத்திற்கு வெற்றி! யுதிஷ்டிரனுக்கு வெற்றி! பாண்டவர்களுக்கு வெற்றி!”

மேலும் மேலும் முரசொலி வலுக்க அவன் அவர் முகத்தையே ஊன்றி நோக்கினான். அம்முரசொலியை முதலில் அவன் அஞ்சி அதை தவிர்க்க எண்ணினான். ஆனால் பின்னர் அதுவே நல்ல வழி, அவ்வண்ணமே அவர் அறியட்டும் என தோன்றியது. ஆனால் அவர் கைகளை அதன் தாளத்திற்கு ஏற்ப அசைத்து தலையை உருட்டி விழியின்மைக்குழிகள் துள்ளி குழம்ப “வெற்றி! வெற்றி! வெற்றி!” என்று கூச்சலிட்டுக்கொண்டிருந்தார். மெல்ல மெல்ல அவன் உளம் தளர்ந்தான். அது நடிப்பு அல்ல. மெய்யாகவே அவருக்கு அவ்வண்ணம்தான் செவிகளில் விழுகிறது. அதை எப்படி கலைக்கப்போகிறோம் என்னும் அயர்வை அடைந்தான்.

மலையிலிருந்து கீழே வருந்தோறும் அவன் அவர் உடைந்து பெருகிக் கொந்தளித்து எழும் அக்கணத்திற்காக நெஞ்சம் துடிக்க காத்திருந்தான். மிக மெல்லிய ஒரு நீர்க்குமிழி என அவன் அவரை கொண்டுவந்தான். இக்கணம் இதோ இக்கணம் இன்னொரு கணம் என காலத்தை கடந்தான். ஆனால் அவர் அந்த உளம்பெருகிய நிறைநிலையிலேயே இருந்தார். இனிய பெருமூச்சுடன் “மைந்தர்கள் வெற்றி கொண்டாடிக்கொண்டிருப்பார்கள்!” என்றார். உரக்க நகைத்து “எந்த மகிழ்ச்சியையும் உண்டாட்டாகவே அவர்களால் கொண்டாட இயலும்… இந்நேரம் அவர்கள் தின்று குடித்து கூச்சலிட்டுக்கொண்டிருப்பார்கள்!” என்றார்.

கைகள் இரு நாகங்கள் என அலைய “அவர்கள் நானே. நான் என் அகத்திலிருந்து பெருகி எழுந்து பரவியதுதான் அவர்கள். நிமித்திகர் சொல்வதுண்டு, என் விழியின்மையிலிருந்து அவர்கள் விழிகொண்டார்கள் என. என் விழைவிலிருந்து அவர்கள் உயிர்கொண்டார்கள். இவ்வுடற்சிறைக்குள் இருந்துகொண்டு பெருகுக நான் என என் ஆத்மா தவித்தமையாலேயே நூறென ஆயிரமென ஆனேன். கந்தகம் இருந்த இடத்திலிருந்துகொண்டே காற்றை நிறைப்பதுபோல அஸ்தினபுரியை நிரப்பினேன்…” அவர் கைகளை அறைந்துகொண்டு நகைத்தார். “அஹ்ஹஹ்ஹஹா!” என்ற ஒலி தேரின் சுவர்களை அதிர்வடையச் செய்தது.

“அவர்களுடன் சென்றமர்ந்து உண்டாட்டில் திளைக்க விழைகிறேன்… அவர்களுக்கு உண்டு நிறைவதில்லை என்பார்கள். உணவால் உடல் நிறைந்து சித்தம் மயங்கி விழுந்து கிடக்கையில்கூட அவர்கள் உண்பதுபோல வாயை மெல்வார்கள், உணவை உருட்டுவதுபோல கைவிரல்களை அசைப்பார்கள். இதை சேடியர் சொல்லி கேட்டிருக்கிறேன். அவர்கள் தொட்டிலில் கிடக்கையில் எந்நேரமும் வாயை சப்புக்கொட்டிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு பசி அடங்குவதே இல்லை. எதைக் கொடுத்தாலும் தழலென எழுந்து கவ்வி உண்பார்கள். நீ அறிய மாட்டாய். அன்றெல்லாம் அஸ்தினபுரியின் பால் முழுக்க அரண்மனைக்கு கொண்டுவரப்பட்டது. உச்சிப்பொழுதில் பசும்பால் போதாமலானபோது புரவிப்பால்கூட அவர்களுக்கு அளிக்கப்பட்டது!”

“அதை அந்நாளில் மருத்துவர்களிடம் உசாவியிருக்கிறார்கள். மருத்துவர்கள் பல வழிகளை கண்டடைந்திருக்கிறார்கள். மூத்தவர் இருவருக்கும் யானைப்பால் கொடுத்துப் பார்க்கலாம் என்றார் ஒருவர். யானைப்பால் பளிங்குக்கல்போல் அடர்த்தியானது. அதை கொடுத்தாலும் அவர்களின் வாயில் அந்த அசைவு இருந்துகொண்டே இருந்தது. ஆம், மெய்யாகவே அவர்கள் யானைப்பாலை செரித்துக்கொண்டார்கள். பின்னர் நிமித்திகர் ஒருவர் சொன்னார், அது பசி அல்ல, பிறிதொன்று என்று. அவர்கள் மாபெரும் விழைவொன்றை அகமெனக்கொண்டு வெளிப்பட்டவர்கள். குழவியர் என்பதனால் அதை அவர்களின் வாய் மட்டுமே இப்போது வெளிப்படுத்துகிறது. வளருந்தோறும் ஐம்புலன்களும் அவ்விழைவை வெளிப்படுத்தும். உடலே அதுவாக திகழும். அவர்களின் இருப்பே அதுவென்று நிகழும் என்றார்.”

திருதராஷ்டிரர் நீண்ட பெருமூச்சுகள் விட்டார். அவர் உவகையின் உச்சியில் இருப்பதாகத் தோன்றியது. உவகை வானிலிருந்து அருவியாகக் கொட்ட அதன் கீழே மூச்சுத்திணறி தவித்து அதை உதறி உதறி சிலிர்த்தபடி அவர் பேசிக்கொண்டிருந்தார். “நிமித்திகர் சொன்னதன்படி ஒன்று செய்தோம். அஸ்தினபுரியின் நான்கு எல்லைகளில் இருந்தும் கைப்பிடி மண் எடுத்து வந்தோம். அதை கலந்து அந்தத் தூளை பாலூட்டி முடித்ததும் அவர்களின் உதடுகளில் சற்றே தடவினோம். நம்ப மாட்டாய், அதன் பின் அந்த உதடசைவு நின்றது. முகங்களில் இருந்த தவிப்பு அணைந்தது. அவர்கள் புன்னகையுடன் தங்களைத் தாங்களே தழுவிக்கொண்டு ஆழ்ந்து உறங்கினார்கள். அதைப்பற்றி சூதர் சிலர் எழுதிய பாடல்கள் உள்ளன. இன்றுகூட அவர்கள் துயில்கையில் அப்பாடலை பாணர் பாடுவதுண்டு…”

அவன் உள்ளம் ஆழ்ந்த துயரை ஒரு வலி என உணர்ந்துகொண்டிருந்தது. இத்தகைய களிப்புடன் தான் அவரை பார்த்ததே இல்லை என எண்ணிக்கொண்டான். இது களிப்பென்றால் களிப்பு என்பதுதான் என்ன? எதையும் எவ்வண்ணமும் உள்ளம் உருமாற்றிக்கொள்ளும் என்றால் மானுட உணர்வுகள் என்பதுதான் என்ன? திருதராஷ்டிரர் அவன் தோளைப்பற்றி உலுக்கி “அங்கே அவர்கள் துயில்கையில் அதைப் பாட பாணர்கள் இருப்பார்கள் அல்லவா?” என்று கேட்டார். “இருப்பார்கள் என்றுதான் படுகிறது” என்றான் சஞ்சயன். “அங்கே அவர்கள் படுத்திருக்கையில் குருக்ஷேத்ரத்தின் குருதி படிந்த மண்ணில் ஒரு துளி எடுத்து அவர்களின் உதடுகளில் வைக்கவேண்டும். அவர்கள் ஆழ்ந்துறங்குவார்கள்.”

அவர் வெடித்து நகைத்து “ஆனால் மறுநாள் எழுந்ததுமே பாரதவர்ஷத்தையே வெல்லவேண்டும் என கிளர்வுகொள்வார்கள்… அவர்கள் இம்மாநிலத்தையே விழுங்கினாலும் தீராப் பசி கொண்டவர்கள்!” என்றார். சஞ்சயன் தோளை அறைந்து “அது என் பசி… அந்தப் பசி என்னுள் இருந்ததை நான் அவர்கள் என்னிலிருந்து எழ எழத்தான் உணர்ந்தேன். நான் என் அகத்தையே கைகளால் தொட்டுத் தழுவி அறியும் வாய்ப்பு கிடைத்தவன்!” என்றார். சஞ்சயன் தன் கன்னங்களில் நீர் வழிவதை உணர்ந்தான். அவருடைய களிவெறிகொண்ட முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தான்.

தேர் வெடிப்பொலியுடன் முழக்கமிட்டுக்கொண்டிருந்த முரசுகளின் நடுவே வந்திறங்கியது. மையச்சாலைக்கு வந்ததும் அவன் முதல்முறையாக மேலே செல்வது எத்திசை நோக்கி என்னும் திகைப்பு கொண்டான். அப்போதுதான் அவனுக்கு தன் உள்ளம் கொண்டிருந்த மயக்கமும் தெரியவந்தது. அவன் அஸ்தினபுரிக்கு திரும்பிச் செல்வதாகவே எண்ணிக்கொண்டிருந்தான். அங்கே துரியோதனனும் கௌரவர்களும் வழக்கம்போல இருப்பார்கள் என்னும் புனைவையே உள்ளம் கொண்டிருந்தது. அந்த அஸ்தினபுரி அவனுள் அதுவரைக்கும் அழியவில்லை.

அவன் அஸ்தினபுரியில் கௌரவர்கள் இல்லை என தன் உள்ளத்தை நோக்கி சொல்லிக்கொண்டே இருந்தான். அதை ஒரு செய்தியாக வாங்கிக்கொண்டபோதும் அது அந்த அஸ்தினபுரிக்கே மீண்டது. ஒன்றே வழி, அரசகுடி ஒழிந்த அஸ்தினபுரியை நேரில் காணவேண்டும். அங்கே ஒருகணம் திகழவேண்டும். அங்கு சென்ற பின்னரும்கூட உள்ளத்தின் அக்கற்பனை அழியாமல் நீடிக்கக்கூடும். ஆனால் ஒரு கணத்தில் குமிழி என அது உடைந்து இனியில்லை என மறையும். அக்கணம் தன் அகத்தே இன்னமும் நடைபெறவில்லை. ஆகவேதான் அவனிடமிருந்து அது அவருக்கு சென்றுகொண்டிருக்கிறது. அவர் மைந்தர் பொலிந்த அஸ்தினபுரியை உருவாக்கிக்கொண்டிருப்பது அவன் சொற்களில் தெரியும் உணர்வுகளினூடாகவே.

சஞ்சயன் ஒரு கணத்தில் அம்முடிவை எடுத்தான். குருக்ஷேத்ரம் நோக்கி தேரைத் திருப்ப ஆணையிட்டான். அதை எவ்வகையிலும் எதிர்பார்த்திருக்காத தேர்ப்பாகன் திரும்பி அவனை பார்த்தான். ஆம் என அவன் விழிகளால் சொன்னான். திருதராஷ்டிரர் தொடர்ச்சியாக பேசிக்கொண்டே வந்தார். “வெற்றிவிழவை ஒரு வேள்வியென்றே நாம் கொண்டாடவேண்டும். நாம் உண்டாட்டு கொண்டாடுகிறோம். தேவர்களின் உண்டாட்டே வேள்வி எனப்படுகிறது. அவர்கள் மகிழவேண்டும். நம் நிலம்பொலிய குடிபெருக புகழ்நிலைக்க அவர்களின் வாழ்த்து நமக்கு வேண்டும்.”

குருக்ஷேத்ரத்தில் என்ன நிகழும் என அவன் எண்ணிக்கொண்டான். ஆனால் குருக்ஷேத்ரத்தை அங்கே மலை மேலிருந்து நோக்கும் கோணத்திலேயே தன் அகம் புனைந்து வைத்திருப்பதை அவன் உணர்ந்தான். மெய்யாக விரிந்திருக்கும் குருக்ஷேத்ரத்திற்குச் சென்று அதை தன் அகத்தால் வாங்கிக்கொள்ள இயலுமா? அது இப்போது எவ்வண்ணம் இருக்கும்? அவன் அங்கிருந்து நோக்கியபோது அது ஒரு மாபெரும் செம்மண் வெளியாகவே தெரிந்தது. அங்கே ஓர் உயிரசைவுகூட இல்லை. அங்கே சென்று அதுவே அப்போர்நிலம் என்று அகத்திற்குச் சொல்லி நம்பவைக்க இயலுமா?

ஆனால் வேறுவழியில்லை. அங்குதான் சென்றாகவேண்டும். சாவை உள்ளம் ஏற்றுக்கொள்வதற்காகவே சடலத்தின் மேல் விழுந்து அழுகிறார்கள் மானுடர். தொட்டுத்தழுவி கதறிப் புலம்பும்போது அவர்களின் உயிர் அது வெற்றுடல் என்பதை அறிந்து அமைந்துகொண்டிருக்கிறது. குருக்ஷேத்ரம் அனைத்தையும் சொல்லிவிடும். அது ஒன்றே சொல்லமுடியும். அவனுக்கு மட்டும் அல்ல இன்னும் நெடுங்காலத்திற்கு எழுந்து வரும் தலைமுறைகளுக்கு. அது ஒரு மாபெரும் ஏடு. ஒரு பெருங்காவியம் எழுதப்பட்ட ஒற்றை சுவடிப்பரப்பு.

அவன் காட்டுக்குள் சென்றுகொண்டிருந்தபோது எழுந்த கெடுமணத்தை நெடும்பொழுது உணரவில்லை. அவன் உடல் குமட்டி அதிர்ந்துகொண்டே இருந்தது. வாயில் குமட்டலை உருவாக்கும் நீர் சுரந்து துப்பிக்கொண்டே இருந்தான். திருதராஷ்டிரர் “ஆ, இது குருதிமணம் அல்லவா?” என்றபோது அவன் திடுக்கிடான். “அழுகிய குருதி! சீழ்கொண்ட குருதியின் அதே வாடை!” என்றார். “இதுதான் களத்தின் மணம் போலும்… சஞ்சயா, நீ சொன்ன சொற்களில் இல்லாதிருந்தது இதுவே. மணத்தை நீ உணரவில்லை. உன்னால் அதை சொல்வடிவாக்கவும் இயலவில்லை.”

அதை அவன் அப்போதுதான் உணர்ந்தான். “மூடா! நீ சொன்னது குருக்ஷேத்ரமே அல்ல. அது வெறும் கதை. காவியநூல்களில் இருக்கும் கதைகளைப்போன்ற ஒன்று. மெய்யான போர் குருதிமணம் கொண்டது. அதை இப்போதுதான் உணர்கிறேன். நோக்கு… நோக்கு… இக்காடு முழுக்க குருதி நிறைந்திருக்கிறது. போர்க்களத்தில் இருந்து ஊறிநிறைந்த குருதி. வேட்டையாடி உண்டுவிட்டு வயிறு நிறைந்து துயிலும் வேங்கை போலிருக்கிறது இக்காடு.” அவர் ஆவலுடன் முகத்தைச் சுளித்து மூக்கை கூர்ப்படுத்தி நீட்டினார்.

“போர்வீரனுக்கு இதுவே நறுமணம்… இது புதிய ஊன்சோற்றின் மணத்தை விட, புளித்த மதுவின் மணத்தைவிட, மதம்கொண்ட பெண்ணின் மணத்தைவிட இனியது… வேள்விமிச்சத்தைவிட, அவிப்புகையைவிட இனியது… மெய்யாகவே இனியது!” அவர் கைகளை விரித்து “இந்த மணத்தை நான் எங்கோ அறிந்திருக்கிறேன். நான் கனவுகளில் போரிட்டிருக்கிறேன். சௌவீரத்தையும் யவனத்தையும் கூர்ஜரத்தையும் மாளவத்தையும் வங்கத்தையும் மணிபூரகத்தையும் தெற்குத்திருவிடத்தையும் வென்றிருக்கிறேன்… இக்குருதிமணம் நான் நன்கறிந்தது…”

அவர் அவன் தோளை எட்டிப்பிடித்தார். “அந்நாளில் நான் எவ்வண்ணமெல்லாம் கனவு காண்பேன் என நீ அறிந்திருக்க மாட்டாய். ஒற்றர்களிடம் எல்லா நிலங்களில் இருந்தும் மண்ணை அள்ளிக்கொண்டுவரச் சொல்வேன். சிறிய சிப்பிமூடிகொண்ட சிமிழ்களில் அந்த மண்ணை சேர்த்து வைத்திருப்பேன். ஒவ்வொன்றாக திறந்து எடுத்துப்பார்ப்பேன். இது மாளவம், இது விஜயபுரி, இது காஞ்சி, இது தென்மதுரை… எல்லாவற்றையும் என்னால் சொல்லமுடியும். பின்னர் ஒருநாள் அறிந்தேன். குருதிமணமே என்னை கொந்தளிக்கச் செய்கிறது என. குருதி கொண்டுவரும்படி ஆணையிட்டேன். ஆட்டின் குருதி. காளைகளின், குதிரைகளின் குருதி. பின்னர் களிற்றுக் குருதி. பின்னர் மானுடக்குருதியால் அன்றி நிறைவுறாதவன் ஆனேன்.”

“குருதி கொண்டுவாருங்கள் என கூச்சலிட்டுக்கொண்டே இருப்பேன். குருதியை முகர்ந்து முகர்ந்து நோக்கி மகிழ்வேன். அடிமைக் குருதி வேண்டாம், வீரர்களின் குருதி வேண்டும் என்பேன். என்னால் குருதியின் மணத்திலேயே அவ்வேறுபாட்டை உணரமுடியும். எனக்காக தொலைநாடுகளிலிருந்து ஒற்றர்களை பிடித்துக் கொண்டுவந்து அக்குருதியை கொண்டுவருவார்கள். பின்னர் அறிந்தேன். குருதியை மண்ணுடன் கலந்தால் விந்தையான ஒரு மணம் எழுவதை. மிக விந்தையான மணம் அது. அதை வேறெவ்வகையிலும் உருவாக்க முடியாது. அந்த மணம் என்னை காமவெறிகொண்டவனைப்போல் கிளரச் செய்தது…”

“இதே மணம்தான்… அன்று நான் உணர்ந்தவை துளிகள். இது கடல்… பெருங்கடல் ஒற்றை அலையென எழுந்து என்னை அறைவதுபோல் இதை உணர்கிறேன்… வீரனுக்கு இதைப்போல் நறுமணம் வேறில்லை. என் மைந்தர் இந்த மணத்தை என்பொருட்டு உருவாக்கியிருக்கிறார்கள். சஞ்சயா, குருக்ஷேத்ரம் சென்றதும் என்னை குருதிக்களத்திற்கு கொண்டுசெல். நான் அச்சேற்றில் படுத்து உருளவேண்டும். என் உடலெங்கும் செங்குருதிச்சேறு படியவேண்டும். பதினெட்டு நாட்கள் நானும் இப்போரில் உழன்றவனாக உணர்வேன்” என அவர் அவன் தோளைப்பற்றி பிசைந்தார்.

அந்த முகத்தில் இருந்தது பித்தின் வெறி என அவன் அறிந்தான். அவர் தலையை சுழற்றியபடி அரற்றினார். “ஆனால் அதில் என் குருதியும் கலக்கவேண்டும். இல்லையேல் அந்த மணம் முழுமை அடையாது. அங்கே சென்றதும் ஒரு வாளை என்னிடம் கொடு. நானே என் உடலை வெட்டி குருதி வரவழைக்கிறேன். அக்குருதிக்குழம்புடன் என் குருதியும் கலக்கவேண்டும். அன்றும் அதை செய்வேன். என் உடலில் இருந்தும் குருதியெழச் செய்து அதை மண்ணுடன் கலந்துவிடுவேன். அப்போதுதான் அது முழுமை கொள்கிறது.”

சஞ்சயன் மெல்ல அகத்தே அமைந்துகொண்டிருந்தான். இந்தப் பித்து இவ்வண்ணம் மிகுந்துகொண்டே செல்வது ஒன்றின்பொருட்டே. இது வெடித்துச் சிதறவிருக்கிறது. இன்னும் சற்றுநேரத்தில். இன்னும் சில கணங்களில். அப்போது அது நிகழ்வதை அறிவதற்கான ஆவல் மட்டுமே தன்னுள் முதன்மைகொண்டிருப்பதை அவன் உணர்ந்தான். தான் ஒரு கதைசொல்லி மட்டுமே என்றும் எதுவும் கதையாகவே தன்னால் அறியப்படுகிறது என்றும் தெளிந்தான். கதையில் மெய்யான எதுவும் இல்லை. உணர்ச்சிகள்கூட மெய்யல்ல. அவை சமைக்கப்பட்டவை. கதை போலவே எல்லைகள் கொண்டவை. கதைசொல்லிக்கு இப்புவியே ஒரு முடிவிலாக் கதை மட்டுமே.

சாலை ஓரத்திலேயே அவர்களை யுயுத்ஸு எதிர்கொண்டான். தேரிலிருந்து இறங்கி சஞ்சயன் அவனை நோக்கி சென்றான். யுயுத்ஸு தணிந்த குரலில் “நாம் பேரரசரை மூத்தவரின் சிதைக்கு கொண்டுசெல்லவேண்டும்” என்றான். சஞ்சயன் திகைப்புடன் “ஏன்?” என்றான். “நானும் அதை அறியேன். ஆனால் இன்று காலை இளைய யாதவர் என்னிடம் அதை சொன்னார். நீங்கள் மலையிறங்கும்போது எதிர்கொண்டு இதை சொல்லும்படி சொன்னார்” என்றான். சஞ்சயன் “மேலும் என்ன சொன்னார்?” என்றான். “ஒன்றுமில்லை” என்று யுயுத்ஸு சொன்னான். “அவர் எவரையோ ஏளனம் செய்வது போலிருக்கிறது. இப்போதெல்லாம் முகத்திலிருக்கும் அப்புன்னகையில் வஞ்சம் நிறைந்திருக்கிறது எனப்படுகிறது.”

“வஞ்சம் என தோன்றும் ஏதோ ஒன்றை அவர் சொன்னார் அல்லவா?” என்று சஞ்சயன் கேட்டான். “ஆம், அவர் சொன்னதை நினைவுறுகிறேன். மைந்தனின் சிதையிலேயே அவர் அக்கனவிலிருந்து வெளியே வருவார் என்றார்.” சஞ்சயன் உள்ளம் படபடக்க “ஆம்” என்றான். யுயுத்ஸு தேருக்குள் எட்டிநோக்கி “எப்படி இருக்கிறார்?” என்றான். “கனவில்” என்று சஞ்சயன் சொன்னான். “இப்போது அவரை சந்திக்கக்கூடாதவர் தாங்களே. செல்க!” அவன் “ஆம்” என்றபின் புரவியைத் திருப்பிவிட்டு “இவ்வழியே செல்க… இயல்பாகவே நீங்கள் சிதைக்குழியை சென்றடைவீர்கள். அங்கே இளைய அரசர் நகுலன் உங்களுக்காக காத்திருக்கிறார்” என்றான். சஞ்சயன் “ஆம்” என்றான்.

அந்த ஊடுவழி காட்டுக்குள் சென்றது. திருதராஷ்டிரர் ஏதேனும் கேட்பார் என அவன் எதிர்பார்த்தான். ஆனால் கூண்டிலிருக்கும் விலங்கிடம் தெரியும் ஒரு பதைப்பு மட்டுமே அவரிடம் வெளிப்பட்டது. அவருடைய கேள்வியை அவன் எதிர்பார்த்துக்கொண்டே இருந்தான். அவர் முற்றடங்கி சிலையென ஆனார். தேருள் அவர் இருப்பதை விழிகளால் நோக்கினால் மட்டுமே உணரமுடிந்தது. தேர் நின்றதும் சஞ்சயன் “பேரரசே” என்றான். அவர் “உம்” என்றார். “இறங்குக!” என்றான். அவர் கைநீட்டினார். அவன் அந்தப் பெரிய கையை பற்றிக்கொண்டான். அவர் மெல்ல காலெடுத்து வைத்து இறங்கி மண்ணில் நின்றார். தலையைச் சுழற்றி வாயை இறுக்கி செவிகளால் அந்த இடத்தை நோக்கிக்கொண்டிருந்தார்.

அப்பால் நகுலன் நிற்பதை அவன் கண்டான். அவனைக் கண்டதும் நகுலன் கை வீசி அருகணைய ஆணையிட்டான். நகுலன் விலகிச்செல்லலாம் என சஞ்சயன் கையசைவால் சொன்னான். ஆம் என நகுலன் அகன்று சென்றான். “வருக, அரசே!” என்று சொல்லிக்கொண்டு அவன் அவர் கையைப் பற்றி அழைத்துச்சென்றான். அவர் கால்களை கிளறியிட்ட புது மண்ணில் நடக்கும் யானைபோல நோக்கி கருதி எடுத்துவைத்து நடந்தார். அப்போதுதான் சஞ்சயன் அந்தத் தருணத்தின் இக்கட்டை முற்றுணர்ந்தான். அவரிடம் எப்படி சொல்லப்போகிறேன்? என்னவென்று சொல்லெடுக்க முடியும்? எட்டுத் திசைகளிலும் அவன் உள்ளம் சென்று முட்டியது. முதற்சொல் போதும். சொற்களஞ்சியமான அவன் உள்ளம் ஒழிந்து கிடந்தது. மொழியையே முற்றிழந்துவிட்டவன்போல் உணர்ந்தான்.

சிதை ஆழ்ந்த கரிய குழியாக மாறி மழையில் ஊறிக் கிடந்தது. சாம்பல்மேல் பெய்த மழை அதன் மேற்பரப்பை மென்படலமாக ஆக்கிவிட்டிருந்தது. அதை நோக்கி செல்லச் செல்ல திருதராஷ்டிரர் நடை தளர்ந்தார். அவர் எதை உணர்கிறார் என அவன் வியந்தான். ஆனால் எதையோ உணர்கிறார். அவர் ஏன் எதுவும் கேட்கவில்லை? அந்த இடத்தில் சாம்பல் மணம் நிறைந்திருந்தது. இலைகளிலிருந்து சொட்டிய நீரில்கூட சாம்பல் கலந்திருந்தது. மழை நீரோடைகள் வற்றிய தடங்களெல்லாம் சாம்பலால் வரையப்பட்டிருந்தன.

குழியை அணுகியதும் திருதராஷ்டிரர் நின்றார். இரு கைகளையும் தலைக்குமேல் தூக்கினார். எடைமிக்க பாறையை தூக்குபவர்போல கைகளை அசைத்தார். அவருடைய பெருந்தசைகள் இறுகி இழுபட்டு நெளிந்தன. பின்னர் வேறெங்கோ என ஒரு பிளிறலோசையை சஞ்சயன் கேட்டான். அவன் வயிற்றுத்தசைகள் இழுத்துக்கொண்டன. அறியாமல் பின்னடி எடுத்துவைத்து விலகினான். திருதராஷ்டிரர் தள்ளாடியபடி ஓடி சிதைக்குழியை அணுகி அவ்விசையிலேயே பாய்வதுபோல் முன்னால் சென்று முகம் மண்ணிலறைந்து விழுந்தார். கைகளால் நிலத்தை ஓங்கி ஓங்கி அறைந்தபடி கரிய சாம்பல்புழுதியில் புரண்டு நெளிந்து கூவிக்கதறி அழுதார்.

அவன் மேலும் மேலும் பின்னகர்ந்து சென்றான். அங்கே நின்றிருந்த நகுலனும் பிறரும் அவன் அருகே வந்தனர். அவன் கைகளை நெஞ்சோடு கூப்பியபடி கண்களிலிருந்து நீர் வழிய அவரை நோக்கிக்கொண்டிருந்தான். நகுலன் அவன் தோளை தொட்டான். சஞ்சயன் திரும்பி நோக்கியபோது நகுலன் அஞ்சி கையை பின்னிழுத்துக்கொண்டான். சஞ்சயனின் உடல் அப்போது அனற்கலம் என கொதித்துக்கொண்டிருந்ததை நகுலன் நினைவுகூர்ந்தான்.

முந்தைய கட்டுரை‘வீட்டவிட்டு போடா!’
அடுத்த கட்டுரைந.சுப்புரெட்டியார்- கடிதங்கள்