மாபெரும் மலர்ச்செண்டு

இலையுதிர்காலம் என்பது ஒரு படிமம். ஒவ்வொன்றாக இலைகளை உதிர்த்துவிட்டு வெறுமைகொண்டு காற்றைத்துழாவி வான்நோக்கி கைவிரித்து நின்றிருக்கும் மரங்கள் கவிதையில் மீண்டும் மீண்டும் பதிவாகியிருக்கின்றன. ஓவியங்கள், திரைப்படங்கள் வழியாக நம் கனவுக்குள் கடந்திருக்கின்றன. இலையுதிர்காலம் என்னும் சொல்லே என்னை நெடுநாட்கள் ஆட்கொண்டிருக்கிறது. 1986 வாக்கில் நான் கணையாழி இதழில் எழுதிய ஆரம்பகாலக் குறுநாவலில் தொடக்கக் கூற்றாக

 

‘சென்றது கிளிக்காலம்

பிறகொரு இறகுதிர்காலம்’

 

என்ற கவிதைவரிகளை எடுத்துக் கொடுத்திருந்தேன். அது நான் மேலும் நான்காண்டுகளுக்கு முன்பு என் கல்லூரிப்படிப்பு முடிந்த சிலநாட்களில் எழுதிய நீண்ட கவிதை ஒன்றின் முதல்வரி. அக்கவிதையை மறந்துவிட்டேன். அவ்வரிகளை எழுதத் தூண்டியதே இலையுதிர்காலம் என்னும் சொல்தான்

ஆனால் இந்தியாவில் சரியான அளவில் நமக்கு இலையுதிர்காலம் இல்லை. நான் வாழ்வது மழைக்காட்டின் சாரலில். மழைக்காடுகளில் பொதுவாக எல்லா மரங்களுமே மாறாப்பசுமை கொண்டவை. இலைகளை அன்றாடம் உதிர்க்குமே அன்றி மொத்தமாக உதிர்த்துவிடுவதில்லை. நம் நிலத்தில் முழுக்க இலையுதிர்ப்பவை அரசமரமும் புங்கரமரமும்தான். தேக்கும் இலையுதிர்க்கும். அரசும் புங்கமும் கோடைக்கு முன் இலையுதிர்த்து கோடையில் ஒரே சமயம் தளிர்விட்டு எழுபவை. இங்கே இலையுதிர்க்கும் மரம் சிலநாட்களிலேயே மீண்டும் தளிர்விட்டுவிடும். நீண்ட காத்திருப்பு இல்லை

 

ஏனென்றால் இங்கே குளிர்காலத்தில் பனி இல்லை. பனியின் எடையைத் தாங்கும்பொருட்டே குளிர்நாட்டு மரங்கள் இலைகளை உதிர்க்கின்றன. இலைகள் இல்லாமையால் அவை பனியை மிகுதியாகச் சூடிக்கொள்ளவேண்டியதுமில்லை. குளிர்காலம் முழுக்க கூட்டுப்புழுத் தவம். பின்னர் சிறகு முளைப்பதுபோல தளிர்கள். வசந்தகாலம். இந்தியாவில் அப்படிப்பார்த்தால் எங்குமே இலையுதிர்காலம் என்பது இல்லை. இங்கே இலையுதிர்க்கும் மரங்களில் பலவும் கோடையில் இலைகளை உதிர்க்கின்றன. சிலமரங்கள் ஆடிக் காற்றில் இலைகளை உதிர்க்கின்றன. காட்டின் மொத்த மரங்களும் இலையுதிர்ப்பது நாம் காணாதது.

இமையமலையில் குளிர்காலத்தில் பனிப்பொழிவு உண்டு. ஆனால் அங்கும் ஐரோப்பா அமெரிக்கா போல  முறையான இலையுதிர்காலம் இல்லை. இமையமலையின் மேல் பொதுவாக மரங்கள் குறைவு. அங்கே உள்ள பெரும்பாலான மரங்கள் இலையுதிர்க்கும் தன்மை இல்லாத ஊசியிலை மரங்கள்தான்.  இமையமலைக் காடுகளில் இலையுதிர்காலம் என வரையறுக்கப்பட்ட பருவத்தில் பலமுறை சென்றிருக்கிறோம், இலைகளை உதிர்த்த மரங்கள் அரிதாகவே காணக்கிடைத்தன. அந்த வரையறை இங்கே வந்த வெள்ளையர் அவர்களின் நிலத்தின் கணக்கைக்கொண்டு உருவாக்கிக்கொண்டது.

 

வசந்தம்,. கிரீஷ்மம், வர்ஷம்,. சரத், ஹேமந்தம்,சிசிரம் என்னும் ஆறுபருவங்களை மழையையும் வெயிலையும் பனியையும் கொண்டே நூல்கள் அடையாளப்படுத்துகின்றன. இளவேனில், முதுவேனில், கார், கூதிர்,முன்பனி, பின்பனி என்னும் ஆறு தமிழ்ப்பருவப்பிரிவினைகளும் அவ்வாறே. அப்படியென்றால் இலையுதிர்காலத்தை நாம் ஒரு கருத்துருவாகவே அறிந்திருக்கிறோம். ஐரோப்பிய கவிதைகளைக்கொண்டே அவற்றை உருவகித்திருக்கிறோம்.

நம்முடைய பஞ்சாங்கக் கணிப்புகளைக்கொண்டு பார்த்தால் பருவமாறுதல்கள் அத்தனை துல்லியமாக இருப்பதில்லை. அவை மாறுபடுவதில் 120 ஆண்டுக் காலத்தைய சுழற்சிமுறை ஒன்று உள்ளது என்கிறார்கள். நமது பருவநிலைகள் பருவமழையுடன் தொடர்புடையவை. பருவமழை நுட்பமான முறையில் மாறிக்கொண்டே இருக்கிறது. குளிர்நாடுகளில் நம்மைவிட தெளிவாகவே பருவகாலப் பிரிவினைகள் உள்ளன. ஆகவே பெரும்பாலும் குறித்த நாட்களில் மரங்கள் இலைகளை உதிர்க்கத் தொடங்கிவிடுகின்றன. பனி குளிர்ந்த வெண்ணிறப் போர்வையாக மலையுச்சிகளிலிருந்து சரிந்திறங்கி அணுகி வருகிறது.

 

அமெரிக்காவில் பனிக்காலத்திற்கு முந்தைய இலையுதிர்காலத் தொடக்கம் ஒரு அரிய காட்சி. மரங்களின் இலைகள் பழுத்து பொன்னிறமும் செந்நிறமும் கொண்டு உதிரத்தொடங்குவது தான் தொடக்கம். பின்னர் காடே  பூத்து அனல்கொண்டதுபோல் ஆகும். 2000 த்தில் அ.முத்துலிங்கம் அவர்களின் அழைப்பின் பேரில் நான் கனடா சென்றிருந்தபோது அவர் டொரொண்டோவிற்கு அருகிலிருக்கும் இலையுதிர் காட்டுக்கு என்னை அழைத்துச்சென்றார். அது இலையுதிர்காலத் தொடக்கம். அதை பொதுவாக எரிமருள்பருவம் எனச் சொல்வேன். எரிமருள் வேங்கை என்று காட்டுமரத்தைச் சொன்னவனின் நினைவில்.

நானும் அ.முத்துலிங்கமும் அன்று சென்றது ஒரு மேப்பிள் காடு. மேப்பிள் இலைகள் மலரிதழ்களுக்கு மிக அணுக்கமானவை.மூன்றுவிரல் கை போன்ற அமைப்பு கொண்டவை. பழுத்து பொன்னிறமாகச் சுடர்விட்டு பின் மேலும் சிவந்து பற்றி எரியத் தொடங்குபவை. நான் அன்று பல கிலோமீட்டர் தொலைவுக்கு காடு பொன் என எரியென பெருகிக் கிடப்பதைக் கண்டேன்.

 

என் உள்ளம்  குருதிப் பூவின் குலைக்காந்தட்டே.என்ற கபிலர் வரியையே அரற்றிக்கொண்டிருந்தது. பின்னர் அந்த பயண அனுபவத்தை  ஆனந்தவிகடனில் சங்கசித்திரங்களில் அக்கவிதையைப் பற்றி எழுதும்போது விளக்கியிருந்தேன்

 

செங்களம் படக் கொன்று அவுணர் தேய்த்த

செங்கோல் அம்பில் செங்கோட்டு யானை

கழற்தொடி சேய்க் குன்றம்

குருதிப்பூவின் குலைக்காந்தட்டே

செந்நிறக் களத்தில் போரிட்டு அரக்கரைக் கொன்று அம்பும்   யானையின் கொம்பும் செங்குருதியால் பூசப்பட்ட கழல் அணிந்த , கொற்றவையின் மைந்தனான முருகனின் குன்றம் குருதிவண்ண காந்தள் மலர்களால் சிவந்திருப்பது. போர் எங்களுக்கு ஒன்றும் புதியதல்ல என்று தலைவி சொல்வதாக இதற்கு மரபாக பொருள் அளிக்கிறார்கள். குருதிப்பூ என்ற சொல்லாக நினைவில் நின்றிருக்கிறது அப்பாடல்.

 

இம்முறை அமெரிக்கப்பயணத்தின் முதன்மைநோக்கமே குருதிப்பூ என காடு மலர்வதைக் காண்பதுதான். என்ன சிக்கல் என்றால் இந்த செந்நிறக்கொந்தளிப்பு மிக விரைவில் தோன்றி மறைந்துவிடும். நாம் பயணத்திட்டத்தை கொஞ்சம் முன்னதாகவே வகுத்தாகவேண்டும். ஆகவே எப்பகுதியில் முன்னரே குளிர்காலம் இறங்கும் என கணித்து அங்கே இலைமலராகும் காலத்தைக் காணலாம் என வகுத்திருந்தோம். பாஸ்டன் பகுதி அமெரிக்காவின் வடக்கு. அதற்கப்பாலுள்ள நியூஹாம்ஷைர் உகந்தது. அங்கேதான் முதல்குளிர்காலம் வந்திறங்கும். அங்கு இலையுதிர்வு தொடங்கும் என்று வானிலைக் கணிப்புக்கள் கூறின.

[சென்ற நூற்றாண்டு ரயில்நிலையம்]

ராலேயிலிருந்து நானும் ராஜன் சோமசுந்தரமும் விமானத்தில் ஃபிலடெல்பியா சென்றோம்.நியூஜெர்ஸியிலிருந்து நண்பர் பழனிஜோதி வந்து அழைத்துக்கொண்டார். நியூஜெர்ஸியில் அவருடைய வீட்டுக்குச் சென்று நியூயார்க்கில் ஒருநாள் செலவிட்டோம். செல்லுமிடங்களில் எல்லாம் முன்பு புதிய நண்பர்கள் உருவாகி வந்துகொண்டிருந்தார்கள். இப்போது பழைய நண்பர்கள் நிறைந்திருக்கிறார்கள். ஊர்கள் நண்பர்களால் நினைவுகூரப்படுவது இனியது. அதிலும் பிறந்த நாட்டுக்கு மிகமிக அப்பால்

 

இந்தப்பயணம் முழுக்க ராஜனுடனும் நண்பர் விவேக்குடனும் காரில் அமெரிக்காவைச் சுற்றுவதிலேயே செலவாகியது. அமெரிக்கநண்பர்கள் பொதுவாகச் சலிக்காமல் கார் ஒட்ட பழகியிருக்கிறார்கள். கார் ஓட்டுவது இந்தியா போல எரிச்சலூட்டும் அனுபவமும் அல்ல. எங்கள் இந்தியப்பயணங்கள் எதிலுமே நண்பர்கள் காரோட்டுவதில்லை. கார் ஓட்டுபவர் எரிச்சல் கொண்டவராக, உலகை வெறுப்பவராக மாறிவிடுவார். வாடகைக்காரோட்டிகள் ஒருவகையான முனிவர்கள்.

[கோவரின் இல்லம்]

பழனி ஜோதியின் இல்லத்திற்கு முந்தைய முறை சென்றிருக்கிறோம். அதன்பின் அவர்கள் அருண்மொழிக்கு மிக அணுக்கமானவர்கள். பழனி ஜோதி பாடகர். பயில்முறைப் பாடகர் அல்ல, தொழில்முறைப்பாடகரேதான். சென்ற ஊட்டி சந்திப்புக்கு வந்து பாடிப்பாடி நண்பர்களை கரையவைத்தவர். சென்றமுறை சந்தித்த நண்பர்கள்தான் இம்முறையும். நிர்மல். வேல்முருகன் எல்லாம் பழனி ஜோதி இல்லத்திற்கு வந்திருந்தார்கள்.

 

நியூஜெர்ஸியில் இருந்து காரிலேயே பாஸ்டன் சென்றோம். அங்கே நண்பர் பாஸ்டன் பாலா வீட்டில் ஒருநாள் தங்கினோம். வெங்கடப்பிரகாஷ் என்னும் நண்பர் பாஸ்டனுக்கு வந்து எங்களுடன் தங்கினார். பாஸ்டன் பாலா நான் 2009ல் முதல்முறையாக அமெரிக்கா சென்றபோதே அறிமுகமானவர். அதற்கு முன்னரே அவருடைய snapejudge என்னும் இணையத்தொகுப்புத் தளம் வழியாக தெரியவந்திருந்தவர். இலக்கியவாசகர். அவ்வப்போது எழுதுபவர்.


[ஐஎம்எஃப் உருவான மேஜை ]

அனேகமாக அமெரிக்கா செல்லும் எல்லா எழுத்தாளர்களும் பாஸ்டன் பாலாவின் உபசரிப்பில் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். நான் முன்பு சென்றபோது அவருடைய மகள் இருந்தாள். இசை கற்றுக்கொண்டிருந்தாள். இப்போது அவள் கல்லூரிக்குச்செல்ல அவரும் துணைவியும் மட்டும்தான். இந்தியாவில் இருக்கும் அதே நிலைதான் அமெரிக்காவிலும். பிள்ளைகள் நம்முடனிருப்பது கல்விக்குச் செல்லும் காலம் வரைத்தான். அதன்பின் சட்டென்று நமக்கு ஒரு முதுமை வராமலிருக்கவேண்டும்.

 

ஈரோடு க.மோகனரங்கனின் உடன்படித்தவரான நண்பர் கோவர்த்தனன் நியூஹாம்ஷைரில் இருக்கிறார். அவர் வைட் மொண்டெயினில் ஒரு விருந்தினர் இல்லம் வைத்திருக்கிறார். பெரும்பாலும் அவரே விருந்தினராக அங்கே தங்கிக்கொள்கிறார் என நினைக்கிறேன்.அங்கே சென்று அவருடன் தங்குவதே திட்டம். காலையிலேயே கிளம்பி அவருடைய இடத்திற்குச் சென்றோம்.

[வாஷிங்டன் மௌண்ட் ஓட்டல்]

 

வைட் மௌண்டெய்ன் அமெரிக்காவின் சுற்றுலாப்பகுதி. குளிர்காலத்தில் மொத்தமாக உறைந்து வெண்பனிமலையாக ஆகிவிடும். ஆகவே அந்தப்பெயர். பல மாநிலங்களிலாக விரிந்துகிடக்கும் அதன் மேலேயே ஒரு மலைநடைப் பாதை உள்ளது. ஆயிரம் கிலோமீட்டருக்குமேல் நடந்தே செல்லலாம். செல்லும் வழியெங்கும் தங்க ஏற்பாடுகள் உள்ளன. நண்பர்கள் எவரும் சென்றதில்லை என்றார்கள்.

 

நியூஹாம்ஷைர் மாநிலத்தின் வைட் மௌண்டைன் பகுதி  பனிச்சறுக்குக்குப் புகழ்பெற்றது. சாலையில் செல்லும்போதே பக்கவாட்டில் தெரியும் மலைகளில் பனிச்சறுக்குப் பாதைகள் காட்டின் நடுவே அமைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். நீரற்ற அருவியின் தடம்போலத் தோன்றின அவை. பனிச்சறுக்குக் காலகட்டத்தில் வெள்ளைமலை திருவிழாக்கோலம் கொண்டிருக்கும் என்றார்கள்.

பனிச்சறுக்குக்கு வருபவர்கள் தங்குவதற்குரிய விடுதிகள், தனிப்பட்ட இல்லங்கள் மலையடிவாரமெங்கும் செறிந்திருந்தன. பல இல்லங்கள் பழுதுபார்க்கப்பட்டுக் கொண்டிருந்தன. பனிச்சறுக்கு வண்டிகள் ஒருக்கப்பட்டுக்கொண்டிருந்தன. பொதுவாக சோம்பலான அமைதியான இடம். ‘உலகம் எங்கே போகிறது?’ என்று வியந்தபடி அமர்ந்திருக்க ஏற்றது. அதற்குமுன் சிலபல கோடிகளை சம்பாதித்திருக்கவேண்டும்.

 

கோவர்த்தனன் அந்த ஊரில் மிகமிக உளம்தோய்ந்தவராக இருந்தார். அவ்வண்ணம் ஒரு ஊரில், நிலப்பரப்பில் ஈடுபாடு கொண்டவர்களால் அழைத்துச்செல்லப்படுவது மிக நல்லது. அவர்கள் அந்த ஊரின் நுட்பங்களை அறிந்தவர்களாக இருப்பார்கள்.  அவருடைய காரில் அந்த நிலப்பகுதியில் சுற்றிக்கொண்டே இருந்தோம். வெறுமே மரங்களைப் பார்த்துக்கொண்டு. விழிகளே ஐம்புலன்களுமாக ஆகி.

 

மரங்கள் செண்டுகளாயின. எரிந்தெழுந்தன. பொன்னிறக் கொண்டு அணிகளாயின. ஒரு கனவுநிலையை உருவாக்கின. இத்தகைய சூழல்களில் ஒரு வரி நெஞ்சில் நின்றுவிடுகிறது. அந்த வரியே ஆகிவிடுகிறது புறவுலகம்- எரிமருள் வேங்கை!

இலையுதிர்கால அழகை பார்க்கவென்று இங்கே பயணிகள் வந்துகொண்டிருக்கிறார்கள். நாங்கள் சென்றபோது முழுமையாக அவர்கள் வரத்தொடங்கவில்லை. 1911ல் வைட் மௌண்டெய்ன் பகுதி தேசிய காப்புக்காடாக அறிவிக்கப்பட்டது. அன்றிருந்த அதே சூழலை கூடுமானவரை காக்கிறார்கள். இங்கே வானளாவிய புதுக்கட்டிடங்கள் கிடையாது. சூழலைச் சிதைக்கும் எந்தக் கட்டுமானமும் இல்லை. ரயில்பாதையும் ரயில்நிலையங்களும் அவ்வண்ணமே பேணப்படுகின்றன. ரயில் ஊழியர்கள் கூட அதே பழங்கால உடை.யில் இருக்கிறார்கள்

 

அந்த ரயில்நிலையம் ஒன்றில் நின்றிருந்தோம். நான் நூறாண்டுகள் பின்னுக்குச்சென்றுவிட்டதுபோல. வேறேதோ நவீன காலத்தில் இருந்து ஒரு ரயில் வந்து நின்றது. நவீனகாலத்து மக்கள் வந்து இறங்கினார்கள் நினைவுப்பொருட்கள் விற்கும் கடையிலும் உணவகங்களிலும் கூடினார்கள். ‘பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு நல்வரவு’ என அவர்களிடம் மானசீகமாகச் சொல்லிக்கொண்டேன்.

நடுங்கச்செய்யாத குளிர். கண்களை நிறைக்கும் வெயிலொளி. இந்தியாவின் வெயிலொளி செங்குத்தானது. இங்கே புழுதியும் மிகுதி. ஆகவே வெயிலே காட்சிகளை மறைக்கும் திரையாக ஆகிவிடும். ஐரோப்பாவிலும் அதே தட்பவெப்பம் கொண்ட வடகிழக்கு அமெரிக்காவிலும் ஒளி துல்லியமானது. ஒவ்வொரு பொருளையும் கழுவித் துலங்கவைப்பது. கண்களுக்குள் இருந்து ஒரு படலத்தை உரித்து எடுத்துவிட்டதுபோன்ற துல்லியம்.

 

மலைகள் செங்குத்தாக எழுந்து நின்றன. அவற்றின் ஓவியங்கள் என கீழே விரிந்த ஏரிகள். அவற்றில் விழிதுலங்க மிதந்த பெரிய மீன்கள். இப்பகுதி முழுக்கமுழுக்க சுற்றுலாவுக்கானது. மலர்செறிந்த விடுதிகள். வெவ்வேறுவகையாக அணிசெய்யப்பட்ட உணவகங்கள். ஏதேனும் வகையில் அழகுபடுத்தப்படாத ஒற்றை கட்டிடம் கூட கண்களுக்குப் படவில்லை.

வைட் மௌண்டெய்ன் பகுதியின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்வது மௌண்ட் வாஷிங்டன் ஓட்டல்.ப்ரெட்டன் வுட்ஸ் என்னும் இடத்திலிருக்கும் இந்த மாபெரும் மாளிகை சார்ல்ஸ் அல்லிங் கிளிஃபோர்ட் [Charles Alling Gifford] என்னும் கட்டிட வரைவாளரால் 1900 த்தில் உருவாக்கப்பட்டது. நிலக்கரி வணிகரான ஜோசப் ஸ்டிக்னி இதன் உரிமையாளர். பின்னர் விடுதியாக மாற்றப்பட்டது இதைக்கட்ட 250 இத்தாலியக் கலைஞர்கள் கொண்டுவரப்பட்டு குடியேற்றப்பட்டார்கள். 1986ல் இது அமெரிக்க தேசியக் கலைச்செல்வமாக அறிவிக்கப்பட்டது

 

இந்த மாளிகையின் தனிச்சிறப்பு என்பது அனைத்துநாட்டு நிதியம் [IMF] உருவாக்கப்படுவதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தையும் ஒப்பந்தமும் இங்குதான் நிகழ்தன. 1944ல் July 1 முதல் 22 வரை நடந்த இந்த கூட்டரங்கு பிரெட்டன் வுட்ஸ் கருத்தரங்கு என்றே அழைக்கப்படுகிறது. அந்த கருத்தரங்கு நடைபெற்ற அறை அவ்வாறே பேணப்படுகிறது. அதில் கலந்துகொண்டவர்களின் பெயர்களை வாசித்தேன்

அதில் பிரிட்டன் சார்பில் ஜான் மெய்னார்ட்ஸ் கீன்ஸ் பங்கெடுத்தார். அந்த ஒருபெயரே நானறிந்தது. இந்தியாவின் சார்பில் சி.டி.தேஷ்முக், ஆர்.கே.சண்முகம் செட்டியார், ஏ.டி.ஷெரோஃப், பி.கே.மதன் ஆகியோர் கலந்துகொண்டார்கள். அன்று இந்தியா பிரிட்டிஷ் காலனியாகவே இருந்தது. ஆனால் ஒரு தனி பொருளியல் மண்டலமாகத் திகழ்ந்தமையால் இந்த பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டது

 

இவ்விடுதியில் அமெரிக்காவின் அதிபரோ அல்லது நிகரானவர்களோ வந்து தங்கக்கூடும் என்னும் எதிர்பார்ப்பில் நிலவறை அமைக்கப்பட்டுள்ளது. நிலவறை என்றால் பதுங்கு குழி அல்ல. மண்ணுக்கு அடியில் ஒரு மாளிகை. இதழாளர்சந்திப்புக்கான அரங்கு, விளையாட்டு அரங்கு, திரைப்பட அரங்கு உட்பட எல்லா வசதிகளுடனும். அணு ஆயுதப்போர் வந்தால்கூட சாப்பாடு தீரும்வரை, அல்லது கையிருப்பு சினிமா தீரும்வரை தங்கலாம்

 

 

மௌண்ட் வாஷிங்டனின் மேல் ஏறும் ஒரு சாலையை கீழிருந்தே பார்க்கமுடிந்தது. அது சாலை என்றே தோன்றவில்லை, சாலைகள் பொதுவாக பாம்பு சுற்றியிருப்பதுபோல மலையை வளைத்து ஏறும். இது அருவி விழுந்த தடம்போல் தெரிந்தது.Mount Washington Auto Road என அழைக்கப்படும் இச்சாலையில் ஏறுவது ஒரு வண்டியின், ஓட்டுநரின் சவால். ஏறி இறங்கியவர்கள் இது மௌண்ட் வாஷிங்டன் ஆட்டோ ரோட்டில் ஏறி இறங்கிய வண்டி என ஒரு ‘லேபிலை- ஒட்டிக்கொள்கிறார்கள்.

 

அந்த மலைமேல் ஏறும் தகுதிகொண்ட ஓட்டுநர்கள் எங்கள் நண்பர் குழுவில் ஈரோடு விஜயராகவன், நெல்லை சக்தி கிருஷ்ணன் இருவரும்தான். ராஜமாணிக்கம் ஓட்டினால் வண்டி நேர் பின்னால் சென்று நியூயார்க்கை வந்தடைந்துவிடும்.ஆனால் கோவையில் ஒரு மேம்பாலம் இருக்கிறது. வைகுண்டவாசல் என ஆன்றோரால் அன்பாக அழைக்கப்படும் அந்தப்பாலத்தில் ஏறியவர்களால் எவரெஸ்டிலேயே காரில் ஏறிச்செல்லமுடியும் என்று கோவை நண்பர்கள் சொன்னார்கள். இருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது.

வழக்கமாக இப்படி ஓர் இடம் ஒரு பாடலுடன் இணைந்து விட்டால் பின்னர் அந்தப்பாடலே அந்த இடத்தை நம்முள் இருந்து எடுக்கும் கொக்கியாக இருக்கும். ஆனால் நீண்ட இடைவெளிக்குப்பின் நான் சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளையின் ரமணன் என்னும் குறுங்காவியத்தில் இருந்து ஒரு பாடலை நினைவுகூர்ந்தேன்.”எவிடே திரிஞ்ஞொந்நு நோக்கியாலும் அவிடெல்லாம் பூத்த மரங்ஙள் மாத்ரம்” அந்த வரியுடன் நான் இணைத்து அகத்தில் விரித்துக்கொண்டது வைட் மௌண்டெய்ன் பகுதியின் மலராகவே ஆகிய காடு என பின்னர் எண்ணிக்கொண்டேன்.

 

”மலர்வதென்றால் அப்படி மலரவேண்டும், மலரில்லாமலேயே கூட, உடலே மலராக’ என்று நள்ளிரவில் ஏக்கத்துடன் எண்ணிக்கொண்டேன். ஏன் ஏக்கம்? இழந்தநிலம் என ஏன் எண்ணுகிறேன்? மீண்டும் அங்கே போகலாம். ஆனால் அந்த தருணத்தை ,அந்த மலர்வை இனி நினைவிலிருந்தே மீட்டெடுக்க முடியும்.இந்த உடலுடன் இந்தக்காலத்தில் வாழவேண்டும் என நாம் விதிக்கப்பட்டிருக்கும் வரை எல்லா நிலமும் இழந்தநிலமே

வைட் மௌண்டெய்ன் தேசியக் காப்புக்காடு

வாஷிங்டன் மௌண்ட் ஓட்டல்

பிரெட்டன் வுட்ஸ் மாநாடு

முந்தைய கட்டுரைசுநீல்கிருஷ்ணனின் ‘நீலகண்டம்’ – ஜினுராஜ்
அடுத்த கட்டுரைசகஜ யோகம்,கடிதம்