யாதும் ஊரே

அமெரிக்காவின் வண்ணங்கள்

 

 

அன்புள்ள ஜெ

 

ராஜன் சோமசுந்தரம் இசையமைத்த யாதும் ஊரே கேட்டேன். ஏற்கனவே அதை ஒருமுறை கேட்டிருக்கிறேன். அப்போது முதலில் உருவானது ஒரு ஒவ்வாமை. ஏனென்றால் இசைரசிகர்களுக்கு பொதுவாக உள்ள தூய்மைவாதம்தான். ஃப்யூஷன் என்றாலே ஒரு விலக்கம். தூய்மையான இசை என்றால் ஒரு தனி ஈர்ப்ப்பு. அதோடு ஃப்யூஷன் என்றபேரில் சுசீலா ராமன் போன்றவர்களின் பிசாசுத்தனமும் ஒரு காரணம்.

 

ஆனால் இம்முறை மீண்டும் கேட்டபோது மிகப்பெரிய ஒரு நிறைவை அடைந்தேன். அருமையான பாடல். அருமையான இசையமைப்பு. உலகத்தரம் வாய்ந்த இசைநடத்துதலும் ஒலிப்பதிவும். இன்றைக்கு இந்தத்தரத்தில் இசைப்பதிவு செய்ய இந்தியாவில் மிகமிகக் கடினம். செலவும் பயங்கரமாக ஆகும். அற்புதமான இசை. அவருக்கு என் பாராட்டுக்கள். இந்தப்பாடலின் கருவே உலகமே ஒன்று என்பதுதான். ஆகவே இதற்கு ஃப்யூஷன் அர்த்தபூர்வமாக அமைகிறது.

 

அதன் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு இசைச்சாயல்களைக் கொண்டிருக்கிறது. இந்தப்பாட்டுக்கு ஆனந்தபைரவிதான் உகந்தது என்று கண்டுபிடிப்பதுதான் கிரியேட்டிவிட்டியின் முதல்ப்புள்ளி. ஆனந்த பைரவி தனக்குத்தானே மகிழ்ந்துகொள்வதுபோன்ற ராகம். அது உலகளாவிய ராகமும்கூட . ஆகவே அதில் மற்ற இசையெல்லாம் இயல்பாக வந்து பொருந்திக்கொள்கின்றன. ஒட்டுமொத்தமாக ஒரு கொண்டாட்டமாகவும் அதேசமயம் மெலடியஸ் ஆகவும் அமைந்திருக்கிறது பாடல்

 

எஸ்.சுப்ரமணியம்

அன்புள்ள ஜெ

 

ராஜன் சோமசுந்தரம் இசையமைத்த யாதும் ஊரே பாடலை இப்போதுதான் பார்த்தேன். முன்னர் அதை தவறவிட்டிருந்தேன். அழகிய பாடல். அருமையாக அமைக்கப்பட்டிருந்தது. பாடல் உலக ஒற்றுமைபற்றியது. ஆகவே அதில் அத்தனை பண்பாட்டுவடிவங்களும் இணைக்கப்பட்டிருந்ததைப் பார்க்க நிறைவாக இருந்தது. பலவகையான இசை. பலவகையான நடனம். ஒரு நடனமுறை ஒருமுறைமட்டுமே வந்துசெல்லும் அந்த கொரியோகிரபி மிகச்சிறப்பானது. நடுவில் வரும் விஷுவல்ஸ் மட்டும் பொருந்தவில்லை. முழுக்க முழுக்க உலகநடனவகைகளின் ஒட்டுமொத்தத் தொகுப்பாகவே அமைத்திருக்கலாம்.

 

கேட்கக்கேட்க காதுகளை நிறைக்கும் அருமையான இசை. ஆனந்தபைரவி நம்மூர் கிராமத்துப்பாடல்களின் ராகமும் கூட. தாலாட்டு நாற்றுநடவு எல்லாமே ஆனந்தபைரவிதான். ஆகவே கிளாஸிக்கலாகவும் ஃபோக் ஆகவும் ஒலிக்கிறது. அருமையான பாடல். அந்த கருப்பர் யாதும் ஊரே என்று ஆடும்போது ஒரு பெரிய மன எழுச்சி உருவாகிறது. அதுவே இந்தப்பாட்டின் வெற்றி எனப்படுகிறது

 

ராஜ்குமார்

முந்தைய கட்டுரைமகரிஷி கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வீட்டவிட்டு போடா!’