நமது பெருமிதம் – கடிதங்கள்

நாம் எதைப்பற்றியாவது பெருமிதம் கொள்ளமுடியுமா?

அன்புள்ள ஜெ,

 

இன்றைய இந்திய பெருமிதங்கள் குறித்த கட்டுரையில் நிவ பிரபுத்துவம் விழுமிய இழப்பையும் முதலாளித்துவ யுகத்தின் தனிமனித வாதத்தையும் குடிமை நாகரீகத்தையும் ஏற்காமை குறித்து நீங்கள் வைத்த அவதானிப்புகளை கொண்டு காந்தியை நெருக்கமாக அணுக முடிந்தது. காந்தியின் பங்களிப்பு குறித்து புதிய திறப்புகளை எனக்கு அளித்தன. நன்றி

 

 

சென்ற நூற்றாண்டின் வெகு சில இந்தியருக்கு மட்டுமே இருந்த பொது இடத் தூய்மை பற்றிய பிரக்ஞை நிலவியது. காந்தி அவர்களில் ஒருவர். ஆங்கிலேய ஆதிக்கம் அளவுக்கோ அல்லது அதைவிடவும் அதிகமாகவே சுத்தமின்மை..சுகாதாரமின்மை அவரை தொந்தரவு செய்தது.

 

 

இந்திய சுயராஜ்ஜியத்தில் மேற்கிலிருந்து இந்தியா பெற எதுவுமே இல்லை என சொல்பவர்தான் தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகத்தில் ஐரோப்பியர்களின் தூய்மை குறித்து விதந்தோதுகிறார். தியாகம், துறவு போன்ற (அப்படி சொல்ல இயலுமா என தெரியவில்லை) நிலபிரபுத்துவ உயர் விழுமியங்களை இழப்பின்றி முதலாளித்துவ யுகத்தின் தனி மனித பிரக்ஞையுடன் இணைக்க முயல்கிறார். காந்தி சமூகத்தை பேராழி வட்டங்கள் எனும் உருவகம் வழியாக அணுகுகிறார். அதன் மையத்தில் ஒரு தனி மனிதனே உள்ளான். அவன் தன்னை காட்டிலும் பெரிய வட்டத்தின் நன்மையின் பொருட்டு அல்லது அதன் ஒரு பகுதியாக தன்னை கரைத்துகொள்கிறான்.

 

 

காந்தி சத்தியாகிரகிக்கும் சாமான்ய குடிகளுக்கும் உள்ள வேற்றுமை பற்றி சொல்லும்போது சாமான்ய குடி மகன் சட்டத்தின் மீதான அச்சத்தால் கட்டுண்டு சட்டத்தை பின்பற்றுகிறான் ஆனால் சத்தியாகிரகி அதே சட்டத்தை பிரக்ஞை பூர்வமாக பின்பற்றுகிறான் என்கிறார். அதுவே சட்டத்தை மீறுவதற்கான அருகதையும் ஆகிறது.

 

 

பொது உடமை அடைய.விரும்பும் லட்சியம் என்பது நிலபிரபுத்துவ காலத்தின் எதிர்வினை என கூறலாம். முதலாளித்துவம் ஒரு எதிர்வினை என்றால் பொது உடமை மற்றொரு எதிர்வினை. ஆனால் பொது உடமை தனிமனித வாதத்தை சுரண்டலுக்கான முதலாளித்துவ தந்திரமாக பார்த்தது. இந்த வாதத்தில் சாரமில்லாமல் இல்லை. தனிமனிதவாதம் நுகர்வு வெறியை பெருக்கியது என்பதே நிதர்சனம். காந்தி தன்னையும் பொது உடமைவாதி என சொல்லிக்கொள்ளலாம் என்கிறார். பொது உடமை லட்சியத்தை முதலாளித்துவ தனி மனித பிரக்ஞையுடன் நிலபிரபுத்துவ விழுமியங்களின் துனையுடன் அடைய முடியுமா என்பதே காந்தியின் கேள்வி. அவர் சுய ராஜ்யம் என சுட்டுவது பூரண சுய ஆளுகை..பூரண தன்னறிதல். தன்னல துறப்பு வழியாக லட்சியத்தை அடைய முடியும் என்று நம்புகிறார். வன்முறை இன்றி இந்த மாற்றத்தை அடைய முடியும் என்பதே அவர் கனவு.

 

பொது உடமை முதலாளித்துவ மற்றும் நிலபிரபுத்துவம் என மூன்று தரப்பினாலும் காந்தி தமக்கு எதிரானவர் என்றோ அல்லது பொதுமான அளவு தம்மவர் அல்ல என்றோ குற்றம் சாட்டப்படுகிறார். உண்மையில் காந்தி இவற்றுக்கு இடையிலான ஆகச்சிறந்த சமரசப்புள்ளி என தோன்றுகிறது.

 

 

சுனீல்கிருஷ்ணன்

 

அன்புள்ள ஜெ,

 

நலம்தானே?

 

நமது பெருமிதம் என்ன என்பதைப்பற்றிய கட்டுரையை வாசித்தேன். பலமுறை பலகோணங்களில் நீங்கள் சொன்ன விஷயம்தான். ஆனால் மீண்டும் சொல்வதனால் கூர்மையாக வெளிப்பட்டுள்ளது

 

நமது பெருமிதம் நாம் ஜனநாயகம் வழியாகவே நிலப்பிரபுத்துவ யுகத்திலிருந்து முதலாளித்துவம் நோக்கி வந்ததுதான். நமது வெற்றி என்பது இன்னும் கூட மோதல்களும் பேரழிவுகளும் இல்லாமல் மாறிக்கொண்டிருப்பதுதான்

 

இந்த வரலாற்று உண்மையை உணர்ந்த அறிஞர்கள் பலர். அவர்களில் மார்க்ஸியர்கள் இந்த மாற்றம் நிகழ்வதற்கு ஜைனமதம் போதித்த அகிம்சையும் அவர்கள் உருவாக்கிய நாடளாவிய வணிகமும்தான் காரணம் என்பார்கள். வலதுசாரிகள் இந்துமதத்தின் ‘அணைக்கும்தன்மை’தான் காரணம் என்பார்கள்.

 

ஆனால் அது நிகழ்ந்தது என்பது உண்மை. காந்தியை அந்த எல்லா சக்திகளின் ஒரு திரண்ட வடிவம் என்று சொல்லலாம். அப்படிப் பார்க்கையில்தான் ஒரு தரப்பு அப்படி ஒரு வன்முறை இல்லா மாற்றம் நிகழவே இல்லை, இங்கே நிகழ்ந்தது எல்லாமே வன்முறைதான் என்று சொல்வதைக் காணமுடிகிறது. அதாவது இங்கே நிகழ்ந்த கருத்தியல்போரே வன்முறைதான் என்பார்கள்.

 

அவர்களிடம் அடிமைமுறையை அகற்ற நிகழ்ந்த வன்முறை, இன்றைக்கும் கருப்பினத்தார் கீழ்நிலையில் வாழ்வது ஆகியவற்றுடன் இந்தியாவில் இட ஒதுக்கீடு முதலியவை உருவான முறையை ஒப்பிட்டுப்பார்க்கச் சொன்னால் கூச்சலிடுவார்கள். இந்தக் கூச்சலிடும் கும்பல் பெரும்பாலும் ”ஸ்பான்ஸர்ட்’ அறிவுஜீவிகளாக இருப்பது தற்செயல் அல்ல\

 

சரவணன் கார்த்திகேயன்.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-25
அடுத்த கட்டுரைவிசும்பு மதிப்பீடு