பகுதி மூன்று : பலிநீர் – 6
கனகர் இளைய யாதவரை விழியசையாது நோக்கிக்கொண்டு நின்றிருந்தார். முன்பு ஒருமுறையும் அவரை அவ்வண்ணம் பார்த்ததில்லை என்று தோன்றியது. பார்க்கும்தோறும் முன்பொருமுறையும் அவரை மெய்யாகவே பார்த்ததில்லை என்ற நம்பிக்கை உறுதிப்பட்டபடி வந்தது. ஒவ்வொரு முறையும் தொலைவில் அவரை பார்க்கையில் முதற்கணம் எழும் அகத்திடுக்கிடல், அவர் அணுகி வருகையில் எழும் சொல்லில்லா உளக்கொந்தளிப்பு, அணுகியபின் மெய்மறைய உளமழிய இன்மையென்றே உணரும் இருப்பு, அகன்றபின் விழிக்குள் எஞ்சும் பாவையென அவரை மீண்டும் காணுதல், எண்ணம் தொடுந்தோறும் கரையும் அவ்விழிப் பாவையை உள்ளத்தில் அழியாது சேர்த்து வைத்துக்கொள்ளும் பொருட்டு எழும் பதற்றம், பின்பு அவரை பார்க்கவே இல்லை எனும் ஏக்கம், பிறிதொருமுறை பார்த்தாகவேண்டும் எனும் தவிப்பு, பார்க்கவே முடியாதோ என்னும் துயரம்… ஒவ்வொருமுறையும் அது மலைப்பாறை உருண்டு வந்து நீரில் விழுவதுபோன்ற ஒரு கொந்தளிப்பு. அறிந்த எந்த இன்பத்துடனும் அதற்கு தொடர்பில்லை. ஆயினும் அறிந்த இன்பங்களில் எல்லாம் அதுவே தலையாயது.
தொலைவில் இளஞ்சிறுவனைப்போல் தெரிபவர் அணுகுந்தோறும் முதியவராகி, அருகே தந்தையுருவென நின்று, அகல்கையில் மீண்டும் இளமைந்தனாகி, நினைவில் குழவியென எஞ்சுவது எவ்வண்ணம்? இதோ இப்போதுகூட அத்தொலைவில் புரவிமேல் அமர்ந்தபடி சிறுவனாகவே தெரிகிறார். நலுங்கும் பீலி. காற்றில் உலையும் மஞ்சள் பட்டாடை. ஒளிகொண்ட கரிய சிற்றுடல். ஒவ்வொன்றையும் அக்கணம் முதன்முறை பார்ப்பதுபோல் உவகையுடன் தொட்டுத் தொட்டு அசையும் விரிந்த கரிய விழிகளா, ஒவ்வொன்றுக்கும் அணுக்கமானவன் என்று எழும் அந்த புன்னகையா, எக்கணமும் புரவியிலிருந்து இறங்கி விளையாடக்கூடும் எனத் தோன்றும் உடல் அசைவுகளா? அவரை இளமைந்தனாக்குவது என்னுள் நான் கொண்டிருக்கும் எண்ணங்களா? பாடிப்பாடி பதிந்த பல்லாயிரம் பாடல்களா?
வாழும்போதே பாடல்தலைவன். உடல்கொண்ட கருவறைத் தெய்வம். அல்லது பிறிதொன்று. எந்த வழியிலும் அவனை அணுகிவிடமுடியாதென்பது. எவ்வகையிலும் புரிந்துகொள்ள முடியாதென்பது. ஒது கொலைவாளின் கூரழகு. பாம்பும் எரியும் பெருநீரும் கொண்ட பேரழகு. புலிக்குட்டி ஒன்றைக் கண்ட நினைவை அவர் அடைந்தார். அது ஓர் அழகிய மலர்மொட்டு போலிருந்தது. மெல்லிதழ்போல் உடல். ஒளிரும் மென்மை. மலர்முள் போன்ற உகிர்கள். வெண்ணிற ஒளிகொண்ட இணைஎயிறுகள். நோக்க நோக்க குழைந்தது நெஞ்சு. தொடத்தொட அகம் பெருகியது. ஆனால் இது குருதிவெறிகொண்ட கொலைவிலங்கு என ஆழம் தவித்தது. அந்தத் தவிப்பே அதை பேரழகு கொண்டதாக ஆக்கியது. நோக்க நோக்க, வருட வருட, கொஞ்சக்கொஞ்ச தீராததாக மாற்றியது.
இளைய யாதவரின் புரவி நான்கு பந்தங்கள் அமைந்த படகுமுற்றத்தை அடைந்தது. சற்றே களைத்த கண்களும் கலைந்து தோளில் சரிந்த குழல்கற்றைகளுமாக அவர் போர்க்களம் ஒன்றிலிருந்து திரும்பி வருவது போலிருந்தார். புரவியிலிருந்து கால்சுழற்றி இறங்கி அவர் நின்றபோது படகுத்துறையின் காவலர்தலைவன் அருகணைந்து வணங்கி முகமனுரைத்தான். பிற வீரர்கள் வாள் தாழ்த்தி வணங்கினர். இளைய யாதவர் துறைக்காவல் தலைவனின் தோளில் கைவைத்து நகையாட்டென ஏதோ கூற அவன் வெண்பற்கள் தெரிய உரக்க நகைத்தான். சூழ்ந்திருந்த படைவீரர்களும் முறைமை மறந்து நகைத்தனர். அவர் ஒவ்வொருவரையும் அறிந்திருந்தார். ஒவ்வொருவரிடமும் ஒரு சொல்லேனும் உரைத்தார். காவலர்தலைவன் அவரிடம் ஏதோ கூற அவர் மறுத்துவிட்டு படகுமேடை நோக்கி சென்றார்.
அவருடன் வந்த வீரர்கள் அணிநிரைகொண்டனர். அவர்களுக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த சிறிய குழுவிலிருந்து கொம்போசை எழுந்தது. தொடர்ந்து இந்திரப்பிரஸ்தத்தின் மின்கொடி பறக்கும் கம்பத்தை ஏந்திய வீரன் புரவியில் வந்தான். அவனுக்குப் பின்னால் நகுலன் முதிய புரவி மேல் அமர்ந்திருந்தான். காவலர்தலைவன் இளைய யாதவருக்கு தலைவணங்கிவிட்டு முன்னால் சென்று நகுலனை வணங்கி வரவேற்றான். நகுலனுக்குப் பின்னால் வந்த புரவிவீரர்களின் நிரையைத் தொடர்ந்து ஒளிச்சரடென தேர்களும் மூடுவண்டிகளும் காவலர்புரவிகளுடன் வருவது தெரிந்தது. அஸ்தினபுரியின் அமுதகலக்கொடி கொண்ட வீரன் ஒருவன் முகப்பில் வருவதை கனகர் கண்டார். நகுலன் புரவியிலிருந்து இறங்கி முகமன்களை உரைத்தபடி இளைய யாதவர் அருகே வந்து நிற்க இளைய யாதவரின் விழிகள் சூழலைத் துழாவி கனகரை பார்த்தன.
கனகர் அவருடைய இனிய புன்னகையை பார்த்தார். உளம் எரிய இரு கைகளையும் விரல் சுருட்டி அழுந்தப்பிடித்து பற்களை கடித்தபடி விழிகளை தாழ்த்திக்கொண்டார். காவலர்தலைவன் அருகே வந்து “இளைய யாதவர் அழைக்கிறார், வருக அமைச்சரே” என்றான். உடலுக்குள் உயிர் இரும்புக்கட்டியென மாறிவிட்டதுபோல் கனகர் உணர்ந்தார். “வருக, அமைச்சரே! இது அரசரின் ஆணை” என்று காவலர்தலைவன் மீண்டும் சொன்னான். இருமுறை இழுத்து மூச்சுவிட்டபோது கனகர் மெல்ல உடல் தளர்ந்தார். “ஆம்” என்றபடி இளைய யாதவரின் அருகே சென்றார். ஒவ்வொரு காலடியும் எடையுடன் தூக்கி வைக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு அடியின் வழியாகவும் உள்ளத்தின் நெடுந்தொலைவை கடக்க வேண்டியிருந்தது. அருகணைந்து நின்று முகமன் உரைக்காமல் தலைகுனிந்து நிலம் நோக்கினார். இளைய யாதவர் “வணங்குகிறேன், அமைச்சரே” என்றார். கனகர் அதற்கும் மறுமொழி கூறவில்லை.
இளைய யாதவர் “தங்களை இங்கு எதிர்பார்க்கவில்லை. அஸ்தினபுரியிலிருந்து தங்களை பிரித்துப்பார்க்க இயலவில்லை” என புன்னகைத்து “தாங்கள் அரசியுடன் வந்தது ஒருவகையில் நன்று” என்றபின் இயல்பாக கைநீட்டி கனகரை தொட வர தன் உடலை விலக்கி கனகர் பின்னடைந்தார். சினத்துடன் நகுலன் ஏதோ சொல்ல முன்னெழ தன் உடற்பாவனையினால் அதை விலக்கி இளைய யாதவர் சிற்றொலியெழ நகைத்து “நன்று, சினம் கொண்டிருக்கிறீர்கள். தங்கள் அரசரின் பொருட்டு தாங்கள் அவ்வாறு சினம் கொள்வது இயல்பானதே” என்றார். கனகர் மூச்சை விழுங்கி நெஞ்சை நிரப்பி, தன் உடலை உந்தி பின்னெடுக்க முனைந்தார். அது அங்கு கற்பாறையென மண்ணில் புதைந்ததுபோல் நின்றிருந்தது. இளைய யாதவர் காவலர்தலைவனிடம் திரும்பி “முறைமைகள் நிகழ்க!” என்றார். நகுலன் பெருமூச்சுவிட்டான்.
“பேரரசி அணுகிக்கொண்டிருக்கிறார்கள்” என்று காவலர்தலைவன் சொன்னான். இளைய யாதவர் “அரச முறைமைகள் குறைவிலாது நிகழட்டும்” என்று சொல்லி காலடி எடுத்து முன்னால் வைக்க உரத்த குரலில் கனகர் “நில்லுங்கள்!” என்றார். இளைய யாதவர் நிற்க நகுலன் கைநீட்டியபடி கனகரை நோக்கி வந்தான். இளைய யாதவர் இடக்கையால் அவன் தோளைத்தொட்டு தடுத்தார். கனகர் நடுங்கி எழுந்த உரத்த குரலில் “அரசே, நான் எளிய அந்தணன். அறமுணர்ந்தவன் அல்ல. அரசுசூழ்தல் அறிந்தவனும் அல்ல. அரண்மனைக் கடையூழியன். வாழ்நாளெல்லாம் அடிபணிதல், ஆணைபேணுதல் அன்றி வேறேதும் அறியாது வாழ்ந்து இன்று கீழ்மையன்றி எதுவும் எஞ்சாமல் இங்கு நின்றிருக்கிறேன். எனினும் இதோ இதை சொல்லத் துணிகிறேன். ஏனென்றால் இப்புவியில் வாழும் எக்கடையனை விடவும் கடையனாக உங்களை இத்தருணத்தில் உணர்கிறேன். மானுடரை வைத்தாடும் இழிந்தோன் நீங்கள். இதோ இக்குருதி அனைத்திற்கும் பொறுப்பேற்கவேண்டிய கொடுந்தெய்வம்!” என்றார்.
“நெஞ்சில் இரக்கமற்றவனை கடையன் என்கின்றன நூல்கள். அறம் மீறியவன் அவன். கால்தூளியென கருதப்படத்தக்கவன். கற்றறிந்தபின் அளியும் அறமும் அல்லன செய்பவனோ கடையருக்கும் கடையன். அனைத்தும் அறிந்தும் அறிவை வெறும் படைக்கலமாகக் கொண்டு கீழ்மை புரிந்து வென்று தருக்கி இங்கே நின்றிருக்கும் நீங்கள் இப்புவி கண்டவரில் கீழோன். இதை உங்கள் முகம் நோக்கி சொல்லிவிட்டேன். இனி இக்கங்கையில் குதித்து உயிர் துறந்தால் நிறைவுறுவேன்” என்றார் கனகர். இளைய யாதவரின் விழிகளில் எந்த உணர்வுமாற்றமும் உருவாகவில்லை. இன்சொல் கேட்கும் சிறுவனின் மென்நகைப்பும் வியப்புமாக அவை மலர்ந்திருந்தன. அவ்விழிகள் அவரை திகைக்க வைத்தன. வரைந்து ஒட்டப்பட்ட இரு அழகிய ஓவிய வடிவங்கள். அவற்றுக்குப் பின்னால் ஓர் ஆத்மா இல்லை. அவை காட்டும் உணர்வுகள் எவ்வகையிலும் அகமுறைவோனால் அடையப்பட்டவை அல்ல. அவை வெறும் கைத்திறன் வெளிப்பாடுகள். இரு வைரங்கள். வைரங்களின் ஒளிபோல் பொருளற்ற பிறிதொன்றுண்டா என்ன?
கனகர் தன் சினம் முற்றடங்கிவிட்டிருப்பதை உணர்ந்தார். தன் சினத்தை விரைவில் இழந்ததைக் குறித்த உணர்வை அடைந்தபோது மீண்டும் சீற்றம் கொண்டார். “இதோ என் தலைவனின் ஏவலனென நான் இங்கு நின்றிருக்கிறேன். அவனை அறம் மீறி கொன்றுவீழ்த்தியவர் நீங்கள். பிதாமகர்களையும் ஆசிரியர்களையும் களத்தில் வீழ்த்தியவர் நீங்கள். அவர்கள் எவரையும் நீங்கள் வெல்லவில்லை என்று உணர்க! அவர்களின் குரலென நான் இங்கு நின்றிருக்கிறேன். இன்னும் பல்லாயிரவர் இப்பாரதவர்ஷத்தில் பிறந்து அவர்களின் பெயர் சொல்வார்கள். வழிவழியாக எழுவார்கள். ஆயிரம் ஆண்டுகள், பல்லாயிரம் ஆண்டுகள், பல்லாயிரம் பல்லாயிரம் ஆண்டுகள். அவர்கள் சொல்லில் அழியாமல் வாழ்வார்கள். இன்று அவன் பொருட்டு அறம் கூற, அவன் பொருட்டு தெய்வங்களுக்கே தீச்சொல்லிட, அவனை எண்ணி விழிநீர்விட, அவனுக்காக சங்கறுத்து உங்கள் முற்றங்களில் விழ, நான் எழுந்துள்ளேன். என்னைப்போல் மானுடர் வந்துகொண்டேதான் இருப்பார்கள். உங்கள் அரசுமுற்றத்தில் ஒருபோதும் பழிச்சொல் ஒழியாது. உங்கள் அரியணைக்கால்களில் ஒருபோதும் குருதி மறையாது” என்று கனகர் கூவினார். அவர் தொண்டை அடைத்தது. குரல் உடைந்து பிறிதொன்றாக ஒலித்தது. “களம்வீழ்பவர்கள் சொல்லில் எழுவது மரபு. அறம் பிழைத்து களம் வீழ்த்தப்பட்டவர்கள் ஆயிரம் மடங்கென சொல்லில் பேருருக்கொள்கிறார்கள் என்று அறிக! நீங்கள் ஒருபோதும் என் தலைவனை வீழ்த்தவில்லை. அவன் இந்த மண்ணில் என்றுமிருப்பான். மாவலி அழுத்தி செலுத்தப்பட்ட மண் இது. அங்கிருந்து அவன் முளைவிட்டெழுவான். ஒருபோதும் அழியமாட்டான்!”
இளைய யாதவர் முகத்தில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை. நகுலன் தளர்ந்ததுபோல் கைகள் இருபுறமும் தழைய, தோள் குழைய, பின்னடைந்தான். சூழ்ந்திருந்த அத்தனை வீரர்களும் வெறித்த நோக்குடன் கனகரை நோக்கிக்கொண்டிருந்தனர். கனகர் மூச்சு தளர்ந்தார். வலிமிக்க கேவல் என, தனக்குத்தான் என ஒலித்த சொற்களால் “என்னை நீங்கள் கொல்லலாம். அன்றி என் முகத்தில் கீழ்க்குடியினனென தீச்சுட்டு வடுபொறித்து இழிசினரிடம் விற்றுவிடலாம். எனினும் சித்தம் உள்ள கணம் வரை இதை சொல்லிக்கொண்டிருப்பேன். முற்றழிக! உங்கள் குலம் முற்றழிக! உங்கள் குருதி ஒருதுளியேனும் இப்புவியில் எஞ்சாதழிக! இது அந்தணன் சொல்! வேதமொன்று இப்புவியில் நிகழ்ந்ததென்றால் உளம்தொட்டு அந்தணன் விடும் சொல்லும் நிகழ்ந்தாகவேண்டும்! அழிக! முற்றழிக!” என்றார். நடுக்கு தாளாது அவர் பின்னடைந்தார். விழப்போன அவரை எவரும் பற்ற வரவில்லை. உடல் உலைந்தபின் அவர் தன்னை நிலைப்படுத்திக்கொண்டார்.
இளைய யாதவர் “அச்சொல் இங்கு திகழும், அந்தணரே” என்றார். “அதுவே அறம் பிழைத்தார்க்கு என்றும் படிப்பினை என்று ஆகுக!” அவர் முகத்தில் துயரிலாச் சிரிப்பே இருந்தது. “அத்தீச்சொல்லை உங்கள் அனைவருக்கும்முன் நானே எனக்கு விடுத்துக்கொண்டுவிட்டேன்.” கனகர் விழிநீர் வழிய கால்கள் மடிந்து நிலத்தில் அமர்ந்து முழங்கால்களில் தலைவைத்து விம்மி அழத்தொடங்கினார். இளைய யாதவர் அவரை ஒருகணம் நோக்கிவிட்டு கங்கையைப் பார்த்து “அரசியர் அணுகிவிட்டனர். பாண்டவரே, வருக!” என்றபின் நகுலனின் தோளை ஒருமுறை தொட்டுவிட்டு முன்னால் நடந்தார். கனகரைச் சூழ்ந்திருந்த வீரர்களும் உடன் சென்றனர். நதிநீர் பாறையை சுழிசுற்றிச் செல்வதுபோல அவர்கள் அவரை அணுகாது தவிர்த்து அகன்றனர்.
கனகர் மீண்டும் தன்னை உணர்ந்தபோது அவரைச் சுற்றி எவரும் இருக்கவில்லை. தரையில் கையை ஊன்றி உடலைத் தூக்கி எழுந்து நின்று நோக்கியபோது அனைவரும் அகன்று சென்றுவிட்டிருந்தனர். படித்துறையில் கொம்புகள் ஒலித்தன. உடனெழுந்து முரசுகள் முழங்கின. ஒளிச்சுழல்கள் வழியாக ஆணைகள் செல்ல தொலைவில் காந்தாரியின் அரசப்படகு மறுசொல் எழுப்பியபடி அலைகளின்மேல் எழுந்தமைந்து அணுகி வந்தது. அவர் பிறிதெங்கோ நிகழும் ஒன்றை பார்ப்பதுபோல் நின்றார். அக்கூட்டத்திலிருந்து உதிர்ந்து வேறெங்கோ சென்றுவிட்டதுபோல் உணர்ந்தார். பந்தங்களின் ஒளியில் கீழிருந்து பெரிய வடம் சீறிப் பறக்கும் நாகமென எழுந்து படித்துறைமேல் விழுவதைக் கண்டார். அந்த ஒலியை அவர் உடல் விதிர்ப்புடன் கேட்டது. படகுத்துறையில் ஆணைகள் ஒலித்தன. காந்தாரியின் படகு குலுங்கியபடி அணுகி படித்துறையை முட்டி நின்றது.
படகிலிருந்து கொம்பு முழங்கியது. அதிலிருந்து சேடியர் இறங்கி படகுமேடை மேல் வந்தனர். நகுலனும் இளைய யாதவரும் படகுமேடையில் கைகூப்பியபடி நிற்க சேடியர் தாலங்களுடன் இரு நிரைகளாகி விரிந்தகன்றனர். நிமித்தப்பெண்டு அறிவிப்பொலிக்க சத்யசேனையின் தோள்பற்றியபடி மெல்ல காந்தாரி பலகையினூடாக படித்துறைக்கு மேல் வந்தாள். இளைய யாதவர் குனிந்து வணங்கி முகமன் உரைப்பதை கனகர் கண்டார். காந்தாரியின் முகம் பந்தங்களின் ஒளியில் அருகிலெனத் தெரிந்தது. அதில் எந்த உணர்வும் வெளிப்படவில்லை. இளைய யாதவர் கூறிய முகமனுக்கு மறுமொழியாக அவள் கூறிய சொற்களைக்கூட உதடசைவிலிருந்து கேட்டுவிடலாம் என்று தோன்றியது. கைகூப்பியபடி அவள் நகுலனை அடைந்தாள். நகுலன் குனிந்து அவள் கால்களைத் தொட்டு வணங்க அவன் தலைக்குமேல் கைவைத்து அவள் வாழ்த்துரைத்தாள்.
தொடர்ந்து இணையரசியர் இருவராக நடந்து பலகையினூடாக படித்துறைக்கு மேல் வந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் இளைய யாதவரை அணுகி அவர் உரைத்த முகமன் சொற்களைக் கேட்டு மறுவாழ்த்துரைத்து அப்பால் சென்றனர். அவர்கள் ஒவ்வொருவரையும் நகுலன் கால்தொட்டு வணங்கினான். அவர்களும் காந்தாரியைப் போலவே வாழ்த்துச்சொல் உரைத்தனர். காந்தாரி கைகூப்பியபடியே நடந்து துறைமுற்றத்துக்கு வந்தாள். அவள் செல்ல வேண்டிய தேர் வந்து நின்றது. அதை காத்துவந்த புரவியில் இருந்து இரு வீரர்கள் இறங்கி தலைவணங்கினர். மூவர் மட்டுமே அமரக்கூடிய சிறு தேரில் முதலில் சேடி ஏறிக்கொள்ள சத்யசேனை காந்தாரி ஏற உதவினாள். காந்தாரி ஏறி அமர்ந்துகொண்டதும் சத்யசேனை அவளுக்கு வலப்புறம் அமர்ந்தாள். தேர் அவர்கள் எடையால் சற்று அழுந்தி உலைந்தது. சத்யசேனையின் கையசைவில் பாகன் தலைவணங்கி புரவியை சவுக்கினால் தட்ட தேர் முடுக்கு கொண்டு குளம்படி ஓசைகளுடன் மரப்பலகையிட்ட பாதையில் சகடங்கள் ஒலிக்க கடந்து சென்றது.
அரசியரும் தேர்களில் ஏறி அகன்றனர். பிற அரசியர் ஊர்ந்த படகுகள் ஒவ்வொன்றாக வரத்தொடங்கின. படகுகள் வந்து கரையணைந்து நிற்க அவற்றிலிருந்து கௌரவ இளவரசியர் நால்வராக இறங்கி படலை வழியாக துறைமேடை மேல் ஏறினர். இளைய யாதவர் அவர்களையும் கைகூப்பி முகமன் உரைத்து வரவேற்றார். அவர்களில் பலர் இளைய யாதவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. நிலம் நோக்கியவர்களாக தளர்ந்து அவரைக் கடந்து சென்றனர். சிலர் முகம் தாழ்த்தி வசைச்சொற்களையும் பழிச்சொற்களையும் உரைப்பதுபோல் தோன்றியது. கூப்பிய கைகளுடன் இளைய யாதவர் அசையாமல் நின்றார். அவர் புன்னகை மாறாமலிருப்பதை தொலைவிலேயே முகத்தின் பக்கவாட்டுத்தோற்றமே காட்டியது.
எண்ணியிராக் கணம் ஓர் இளவரசி இரு கைகளையும் விரித்து வெறிகொண்டவள்போல் வீறிட்டபடி இளைய யாதவரை நோக்கி வந்தாள். பிற இளவரசியர் இருவர் அவளை பற்றிக்கொண்டனர். “பழிகொண்டவனே! அறப்பழி சூடியவனே! கீழ்மகனே! குருதியுண்ணும் கீழ்மகனே!” என்று அவள் வெறியுடன் கூவினாள். உடல் துள்ள, நரம்புகள் தெறிக்க தொண்டை புடைத்திருக்க, பற்கள் வெறித்துத் தெரிய கூச்சலிட்டுத் துடித்து அறுபட்டதுபோல் விழுந்து மயங்கினாள். அவளை அவர்கள் இழுத்துச் சென்றனர். அதுவரை ஓசையில்லாத நிரையாக வந்துகொண்டிருந்த இளவரசியரிடமிருந்து சொல்லெனத் திரளாத முழக்கமொன்று எழத்தொடங்கியது. அக்கூக்குரலின் எதிரொலிக் கார்வையென இளவரசியரின் படகுகளிலும் ஓசை எழுந்தது. மேலும் மேலும் படகுகள் வந்தணைந்து இளவரசியர் இறங்கி படித்துறையில் ஏறி கடந்து செல்ல அந்த மாபெரும் பழிச்சொல் பெருமுழக்கமென்றாகி சூழ்ந்துநின்றது.
கொடுந்தெய்வம் ஒன்றைக் கண்டு அஞ்சியவர்கள்போல அங்கிருந்த காவலர்தலைவனும் படைவீரனும் மெல்ல மெல்ல பின்னடைந்தனர். பின்நிரையினர் படகுமுற்றத்தின் விளிம்புவரை வந்து காட்டுக்குள் நுழைந்துவிட்டனர். இளைய யாதவருக்கருகே நின்றிருந்த நகுலனும் காற்றில் மூழ்கி அகன்று செல்பவன்போல் இளைய யாதவரிடமிருந்து சென்றான். முதலில் படைவீரர்கள் நடுவே வந்து நின்றான். சற்று நேரத்தில் படைவீரர்களுக்குள் புகுந்து முற்றாகவே மறைந்துகொண்டான். கூப்பிய கைகளுடன் இளைய யாதவர் மட்டும் படித்துறையில் தனித்து நின்றார். கங்கையின் குளிர்ந்த காற்றுபோல அவரைச் சூழ்ந்திருந்தது அப்பழிச்சொல் என்று தோன்றியது. அவரது ஆடையை உடலைச்சுற்றி பறக்கச் செய்தது. மேலாடை நுனியை நாகநாவென எழுந்து உலையச் செய்தது. குழல்கற்றைகளை குலைந்து உலையச் செய்தது.
கனகர் இளைய யாதவர் முகத்தை பார்க்க விழைந்தார். அதில் அதே மாறாத புன்னகைதான் இருக்கும் என்று எண்ணினார். விழிகளில் இளமைந்தருக்குரிய ஒளி நிறைந்திருக்கும். இறுதியாக பானுமதியின் படகு வந்து நின்றபோது கனகர் நெஞ்சத்துடிப்பை உணர்ந்தார். பானுமதி பலகையினூடாக கைகளைக் கூப்பியபடி வர அவளுக்குப் பின்னால் அசலை வந்தாள். இருவரும் இளைய யாதவரை அணுகியதும் நின்றனர். கைகூப்பியபடி நின்ற இளைய யாதவர் உரைத்த முகமனுக்கு பானுமதி மாற்றுரை சொன்னாள். பின்னர் மேலாடையால் தன் முகத்தை இழுத்து மூடியபின் அவரைக் கடந்து அப்பால் சென்றாள். அவளைப் போலவே நின்று ஒரு சொல்லில் மறுமொழி உரைத்து மேலாடையை இழுத்து முகத்திட்டு அசலை கடந்து சென்றாள். அவர்களிருவருக்கும் பின்னால் வந்த நான்கு இளவரசியர் சொல்லடங்கி அமைதி கொண்டனர்.
இளவரசியர் நிரை அத்துடன் அமைதியாகியது. ஓசை இல்லாத ஒழுக்கு எனச் சென்றது. அங்கு வந்து நின்றிருந்த வண்டிகளிலும் தேர்களிலும் ஏறிக்கொண்டு அரசியரும் இளவரசியரும் அகன்றனர். அவர்களை இறக்கிவிட்ட படகுகள் மீண்டும் கங்கைக்குள் மீண்டு ஒழுக்கில் ஏறி அப்பால் சென்று கரையோர மரங்களை அணுகி கட்டப்பட்டன. படித்துறை ஒழிந்தது. இளைய யாதவர் திரும்பி எவரையும் பார்க்காமல் நடந்து தன் புரவி நோக்கி சென்றார். அப்போதும் அவர் கைகள் நெஞ்சில் கூப்பியிருந்தன. அந்த முகத்தை அங்கு நின்று கனகர் நோக்கிக்கொண்டிருந்தார். அதே புன்னகை, அவ்வண்ணமே மலர்ந்த விழிகள். அவர் உடல் மெய்ப்பு கொண்டது. கண்களிலிருந்து நீர் வழியத்தொடங்கியது. தன் இரு கைகளையும் நெஞ்சோடு கூப்பி ஆலய முற்றத்தில் கருவறைச் சிலை நோக்கி நிற்பவர்போல் நின்றார்.
இளைய யாதவர் தன் புரவியிலேறிக்கொள்ள முன்னால் சென்ற வீரன் சங்கொலி எழுப்பினான். அவர் சென்று மறைந்த பின்னர் நகுலன் தன் புரவியில் ஏறிக்கொண்டான். அவர்களும் சென்று இருளுக்குள் மறைந்தனர். அதுவரை அங்கிருந்த ஒளி மறைந்து துறைமுற்றம் இருட்டானதுபோல் தோன்றியது. கனகர் அந்த முற்றத்தை நோக்கியபடி அங்கு நின்றிருந்தார். ஓரடி வைத்து முன் நகரக்கூட தன்னால் இயலாதென்று தோன்றியது. பின்னர் திரும்பி கங்கையை பார்த்தார். இருண்ட நீர்ப்பரப்ப்பின்மேல் அலைகளின் வளைவுகளில் ஒளி இருந்தது. நோக்க நோக்க அது தெளிவு கொண்டது. உள்ளம் தெளிந்தவர்போல கனகர் கங்கை நோக்கி நடந்தார். படித்துறையில் அலைந்தாடிக்கொண்டிருந்த சிறுபடகொன்றில் சாத்தன் அமர்ந்திருப்பதை கண்டார். அருகணைந்து “சாத்தரே, என்னை அலைகளுக்கு மேல் கொண்டு செல்க!” என்று ஆணையிட்டார்.