காடு – ஒரு வாசிப்பும் மறு வாசிப்பும்- கலைச்செல்வி

காடு அமேசானில் வாங்க

காடு வாங்க

 

இருவாசிப்புகளுக்கு இடைப்பட்ட காலம் கிட்டத்தட்ட நான்காண்டுகள். இந்த நான்காண்டுகளில் நிறைய புத்தகங்கள் வாசித்தாயிற்று. நிறைய எழுதியுமிருக்கிறேன். இடையில் நகர்ந்த காலங்களுக்குள் என்னை ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள தோன்றுகிறது. பொதுவாக ஆழ்ந்த வாசிப்பு அல்லது தன்னை ஒப்புக்கொடுக்கும் வாசிப்பு நேரும்போதெல்லாம் புத்தகத்தின் முதல் பக்கத்தில் அல்லது பின்பக்கத்திலிருக்கும் வெற்றுத்தாளில் யார் யாருக்கு உறவு, அவர்களின் பெயர்கள், பிடித்தமான அல்லது கவனம் கோரும் பக்கங்கள் குறித்த பென்சில் குறிப்புகள் போன்றவற்றறை எழுதிக் கொள்வது என் வழக்கம். (மஹ்ஷர் பெருவெளியில் ஒரு குடும்ப மரமே வரைந்திருந்தேன். பிறகுதான் பின்னட்டை பக்கம் திருப்பினேன். அவர்கள் குடும்பமரத்தை அச்சிட்டே வைத்திருந்தார்கள். ஹாஹா..)  அப்படியாகதான் 2015ல் நான் காடு நாவலை வாசித்திருந்தேன். அன்று நான் குறித்து வைத்திருந்த பக்கங்களுக்கும் இன்று நான் என்னை மறந்து கதைக்குள் ஊடுருவி நின்ற சம்பவங்களுக்குமிருந்த இடைவெளி என் மாற்றத்தை காட்டி நின்றது. (கிண்டிலில் அடிக்கோடிடலாம். ஆனால் முன்னட்டை, பின்னட்டையில் பென்சில் குறிப்புகள் எழுதிக் கொள்ள முடியாதது குறைதான்.)

எழுபது வயதைக் கடந்த பெரியவரின் அனுபவமாக நாவல் விரிகிறது. கல்வெர்ட்டில் மிளாவின் காலடித்தடமும், ஈரம் காயாத கான்கிரிட்டில் கிரிதரனின் பெயரும் அப்படியே நிலைத்திருக்க, காலம் அதன் மீது கண்டதையும் சேர்த்து விடுகிறது. சேர்த்த குப்பைகளை விலக்கி விலக்கி, காடு விரிகிறது. காடு உண்மையில் கற்பனையின் பெருவெளி. அகவிரிவின் புறக்காட்சிகளை தனிமையின் துணையோடு அங்கு அள்ளிக் கொள்ளலாம். ஆகவேதான் நிஜ வாழ்க்கையில் காடு என்னை கவர்ந்துக் கொண்டேயிருக்கும். காட்டை பின்னணியாக்கி நிறைய கதைகள் எழுதியிருக்கிறேன். ஆனால் நான் பார்த்தக்காடுகள் வரையறுக்குட்பட்டவை. நேர கட்டுப்பாடுகள் கொண்டவை. தன்னை மறந்து லயித்து, இஷ்டப்பட்ட இடங்களில் அலைந்து கண்டதை உண்டு, விருப்பப்பட்டதில் கரைந்து விட முடியாது. அதேநேரம் எனது இந்த அனுபவத்தை நான் அத்தனை நெருக்கடியாக கருதிக் கொள்ளவில்லை. கிடைத்த காட்டு அனுபவங்களை நெகிழ்வாகவே ஏற்றுக் கொண்டிருந்தேன், காடு நாவலை படிக்கும்வரை.

நாவலில், மனிதனின் கற்பனையை காடு வெள்ளமென திரட்டித் தருகிறது. கிரிதரன், சதாசிவம் மாமாவின் பகராளாக காட்டுக்குச் செல்கிறான். காடு முதலில் அவனை வெருட்டுகிறது. அச்சமும் தயக்கமும் ஏதோ ஒரு கவர்ச்சியுமாக காட்டுக்குள் காலடி எடுத்து வைக்கிறான். சிறிது தயக்கத்துக்கு பிறகு சரிந்துக்கிடக்கும் பெருமரத்தைத் தாண்டி சேற்றில் காலை வைத்து உள்ளே இறங்குகிறான். பெருமரம் என்பது மனதின் தடையை போல. வாழ பழகியிருந்த வழி அது. அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு செல்லுமவனுக்கு வழி தப்பி விடுகிறது. அவனுடைய குடிலுக்கருகே நீர் அருந்திச் செல்லும் மிளா அவனுக்கு வழியை மீட்டுக் கொடுக்கிறது. வித்துகளை உடலில் ஏந்தி செல்லுமிடமெங்கும் விதைக்கும் நடமாடும் காடுதான் மிளா. காடு எப்போதுமே மீளா இன்பத்தையே தருகிறது. அதிலிருந்து மீள்வது என்பது அதனுள் ஆழ்ந்து போவதுதான். பிறகு அவன் அவராகி, கிழவராகி விட்டபோதிலும் காடு அவரை விடுவதில்லை. ஒன்றுக்கு பின் ஒன்று.. ஒன்றுக்கு பின் ஒன்று… அடுத்து.. அடுத்து.. இறுதியில் விழுவது ஒன்றுமில்லாத வெளிக்குள். சும்மாயிருக்கும் சுகம். அந்த சுகத்தை காடு அளிக்கிறது. அவனுக்கு அது காமத்தின் சுகம். இளமையான உணர்வுகள் காமத்துக்குள் அடங்கி விடுகிறது. முதிராகாமம், பார்த்த பெண்களை, பார்க்க நேர்ந்த பெண்களை வயது வித்யாசங்களின்றி உடல்களாக, அதை குறித்த எண்ணங்களாக, கற்பனைகளாக விரிய விரிய, காடு அக்கற்பனையின் பருப்பொருளாக மாறி போகிறது.

குட்டப்பன் காட்டின் நெளிவுசுளிவுகள் அறிந்தவன். காட்டை விட்டு அகல விரும்பாதவன். விஷக்காய்ச்சல் வந்த பிறகு மருத்துவமனையில் செய்யும் சேவகம், மாமாவிடமிருந்து கிரிதரனை அணைத்து எடுத்துக் கொள்ளும் மென்மணம், இரட்டையர்களை அப்படியாகவே புரிந்துக் கொள்வது, பெண்ணுடல் மீதான ஈர்ப்பு, ரெசாலத்தின் தேவாங்கை சிறுத்தை கடித்து இழுத்துப்போகும்போது துணிந்து நின்று போராடுவது, தேவாங்கின் கறி தேனாக்கும் என்று சப்புக் கொட்டிய நாக்கை அடக்கி, அதனை ரெசாலத்திடம் விட்டுக் கொடுத்து விடுவதும், பிறகு சிறுத்தையிடமிருந்து அதனை காப்பாற்ற போராடுவதுமாக சரிவிகிதமனிதன். சாவிற்கு பிறகு உணர்விருப்பின், காட்டில், யானையினால் தன் சாவு நிகழ்ந்ததை எண்ணி அவன் மகிழ்ச்சியுற்றிருப்பான். சிநேகம்மை, ரெஜினாள், ரங்கப்பன் போன்ற மண் சார்ந்த பாத்திரங்கள் ஆண் பெண் பேதங்கள், உடல் பிரிவினைகள் என்பதையெல்லாம் கடந்து விடுகிறார்கள். சிறுத்தையின் பிடியிலிருந்து வெளிவந்த தேவாங்கு மந்தென்று மேட்டின் மீது அமர்ந்துக் கொண்டு உயிர் விடுவதும், ரெசாலம் மக்களே.. மக்களே.. என்று கதறி மீளாத்துயரில் ஆழ்வதும், அவரை அழைத்துக் கொண்டு அவர் வீட்டுக்கு செல்லும்போது, மாமா அங்கு உள்ளாடையுடன் உறங்குவதுமாக காட்டின் வேர்களைப்போல, சம்பவங்கள் ஒன்றோடொன்று பின்னி விரிகின்றன.

அய்யருக்கு காட்டின் மீதும் கபிலர் மீதும் பித்து. எல்லாமிருந்தும் ஏதோவொன்றுக்காக ஏங்குகிறார். அதை பேசிபேசி கழிக்க முயல்கிறார். “எல்லாம்“ என்பது உலகியல் பார்வை. அது அவரின் மேம்போக்கான வாழ்க்கை. காட்டில் அடர்ந்திருக்கும் மரங்களைபோல, புதர்களைப்போல. ஆனால் அதற்கான வேர்கள் அல்லது பிடிமானத்தை அவர் மனம் எங்கோ தவற விட்டிருக்கிறது. அவரின் ஏக்கம் அந்த புள்ளியை தொட்டு விட இயலாததாக இருக்கலாம். சாமியாராக மாறிப்போவதும் அய்யராக அலைந்து திரிவதிலும் உடைகள் வேண்டுமானால் வேறுபடலாம். எதிலும் அவர் தேடல் முடிவுறாமலேயே நீடிக்கிறது. நீடிக்கதான் செய்யும்.

நீலியிடம், பேசிப்பழகிய நாட்களை கைவிரல்களுக்குள் அடக்கி விடலாம். ஆனால், கிரிதரனின் ஜென்மத்துக்குள் அடங்காமல் திமிறித் தெறிக்கும் நினைவுகள் காடுடன் பிணைந்தவை. அவன் அவளுள் எதையுமே காணவில்லை. ஆனால் எல்லாமும் கண்டிருக்கிறான். அவளை ஒன்றுமற்ற வெளிக்குள் இருத்தியிருக்கிறான். அவ்வெளி காதல் காமம் அனைத்தையும் கடந்தோ அல்லது கடக்காமலோ இருக்கும் மாயவெளி. ஆனால், அவர்களுக்குள்ளான உரையாடல்கள் சாதாரண காதலர்களுக்குள்ளிருக்கும் செல்ல சிணுங்கல்கள், கோபங்கள் தவிர்த்து ஏதுமில்லை. அவை மேம்போக்கானவை. ஆனால் சொல்லாமல் விட்ட தருணங்கள் அவனுள் காடாய் மண்டிக்கிடக்கிறது. அது அமிழ்த்தி வைத்திருக்கும் மணம் சந்தனமாய் மணக்கிறது. உயிர்ப்பு இறப்பு என்ற நிலைகளற்று நீலி அதிலிருந்துதான் எழுகிறாள்.

டார்ஸான் போல தாவியோடுவது தம்புரானாக சாத்தியம். ஆனால் சீறிவரும் இருபதுக்கும் மேற்பட்ட காட்டோடைகளை தாண்டி குலசேகரம் சென்று மருந்துகளை எடுத்து வருவது, கிரிதரனுக்கு சாத்தியப்படுமா என தெரியவில்லை. ஒருவேளை மூன்றாவது வாசிப்பிற்கு பிறகு அதற்கான பிடி கிடைக்கலாம்.

 

முந்தைய கட்டுரைவிந்தையான மனிதன் விந்தன்-வளவ. துரையன்
அடுத்த கட்டுரைகீதையை எப்படிப் படிப்பது? ஏன்?