இரு கடிதங்கள்

முற்றழிக!

மானுட உரிமைகளும் தனிமனிதர்களும்

அண்ணன், உங்கள் மீது எனக்கு தனிப்பட்ட பிரியம் எப்போதும் உண்டு. எனது பல நண்பர்களுக்கு அது பிடிப்பதில்லை. அவர்களிடம் உங்களை நான் நிரூபிப்பதும் எளிதல்ல.  உங்களில் நான் நிறைவடையும் ஓரிடம் உண்டு. ஆனால் அது பிறர் கண்களுக்கு ஒருபோதும் தெரியாது.

“மானுட உரிமைகளும் தனிமனிதர்களும்” நூறு நாற்காலிகளை கடந்து நிற்கும் ஒரு எழுத்து. ஒரு செய்தி எப்படி நமது கைக்கு வந்து  சேர்கிறது என்பதிலிருந்து மனித மாண்புடன் அதன் உள் ஆழம் நோக்கி செல்லும் உங்கள் இதயம் எனக்குள் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது.  கணாமற்போன ஆட்டை தேடும் மேய்ப்பனின் உள்ளம் இது. இதற்காகவே என்றும் எப்போதும் உங்களை நான் நேசிக்கிறேன்.
மாமியார் மருமகள் சார்ந்து நகைச்சுவை எழுதும் பத்திரிகைகள், பிரபல பேச்சாளர்கள் கட்டமைத்த பிம்பங்களை உடைத்து பூங்கொடியும் தங்கலட்சுமியும் இணைந்து செய்த ஒரு போராட்டம் இது. தங்கலட்சுமி நலமடையவும், வழுவாத நீதி அவர்களுக்கு கிடைக்கவும் உளம் உருகி மன்றாடுகிறேன். எல்லாம் வல்ல கடவுளின் கருணை அவர்களுக்கு அமைதி அருள வேண்டுகிறேன்.

காட்சன் சாமுவேல்

***

வணக்கம் ஜெ

திருவட்டார் கோவிலொடு உங்களுக்கிருந்த உணர்வுப்பூர்வ நிலை, இப்படியொரு அசிங்கம் நிகழ்ந்த போது நீங்கள் சீற்றம் கொள்வதையும் புரிந்து கொள்கிறேன். இன்று பொதுவாக நம் மரபையும் கலைச் செல்வங்களையும் நாம் பேணும் லட்சணம் இதுதான். இதற்கு பெரிய படிப்போ பக்தியோ தேவையில்லை. குறைந்தபட்சம் இது நம் மரபின் பொக்கிஷம், இதை பாதுகாக்க வேண்டும் என்கிற அடிப்படை மனநிலை கூட இல்லாமல் போய்விட்டது இந்த கீழ்மக்களுக்கு. நாம் இந்த மரபில் பிறந்து உருவானதாலேயே நமக்கு ஒருவித பற்றும் பிடிமானமும் இதோடு உண்டு. ஆனால் அதைக்கூட இப்போது இழந்து மலட்டு சமூகமாகிக் கொண்டிருக்கிறோம்.

அவர்கள் பரம்பரையே அழிந்துபோகட்டும் என நீங்கள் சாபம் விட்டதைப் படிக்கும்போது ஒருகணம் திடுக்கிட்டேன். ஜெயமோகனா இப்படிப் பேசுவது என்று. மனிதர்களுடைய கீழ்மைகளை ஆழமாகவே புரிந்து வைத்திருப்பவர் நீங்கள். அதை பல இடங்களில் விவரித்தும் இருக்கிறீர்கள். இங்கு நீங்கள் சீற்றத்தின் உச்சத்துக்கே சென்று சாபம் விட்டது ஒருபக்கம் வியப்பை ஏற்படுத்தினாலும் மறுபக்கம் இதனுடைய பண்பாட்டு ஆழம் எத்தகையது என்றே உணர்ந்தேன்.

நம் மரபில் இந்த சாபம் விடுவது, அது பலிக்கும் விதம், அதற்கான உளநிலை இவையெல்லாம் பிரம்மிப்பூட்டக்கூடிய விஷயம். ஒரு எளிய மனிதன், நிர்க்கதியான நிலையில், பெரிய அநீதிக்கு உள்ளாகும் போது அவன் மனம் வெம்பி வெடித்து எரியும் நிலையிலிருந்து அவன் வெளிவிடும் வார்த்தைகள் எவ்வளவு வல்லமை வாய்ந்தது ! அவன் வாய்திறந்து சொல்லவேண்டியதுகூட இல்லை. எரியும் மனமே எதிராளியை அழித்துவிடாதா ! எப்பேர்ப்பட்ட வீரனாக இருந்தாலும் பெண்ணின் சாபத்தைக் கண்டு அஞ்சுவது இதனால்தானோ !

ஒருபக்கம் மரபிலிருந்து இயல்பாக உருவான எளிய ஜெயமோகன். இன்னொருபக்கம் கல்வியாலும், சிந்தனையாலும் தன்னைக் கட்டமைத்துக் கொண்ட ஜெயமோகன். நான் இங்கே காண்பது எளிய கிராமத்தானான ஜெயமோகனை. இலக்கியவாதி ஜெயமோகனைவிட  சிந்தனையாளன் ஜெயமோகனைவிட இந்த எளிய சாபம் விடும் ஜெயமோகனை நான் எனக்கு அணுக்கமாக உணர்ந்தேன். என் மனிதக் கூட்டத்தில் ஒருவனாக உணர்ந்தேன்.

விவேக்

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-21
அடுத்த கட்டுரைசெங்காட்டுக் கள்ளிச்செடி