விந்தையான மனிதன் விந்தன்-வளவ. துரையன்

விந்தன்

கசப்பெழுத்தின் நூற்றாண்டு

புரட்சிப்பத்தினி

திராவிட இயக்க இலக்கியம் – சாதனைகளும் மிகைகளும்

”இருப்பவனைப் பற்றி எழுதி அவன் பணத்துக்கு இரையாவதை விட, இல்லாதவனைப் பற்றி எழுதி அவன் அன்புக்கு உண்மை இரையாவதே மேல்” என்னும் குறிக்கோளுடன் இறுதிவரை இலக்கியப் பணியாற்றியவர்தாம் விந்தன்.

விந்தன் என்னும் புனைபெயரில் எழுதிய கோவிந்தன் 22-09-1916-ஆம் ஆண்டு பிறந்தார். வேதாசலம்-ஜானகியம்மாள் இணையருக்கு மூத்த மகனாக அவர் செங்கற்பட்டு மாவட்டம் நாவலூர் என்ற கிராமத்தில் பிறந்தார். அவர் குடும்பம் வறுமையில் பிடியில் இருந்ததால் அவர் நடுநிலைப்பள்ளிவரை கூடப் படிக்க முடியவில்லை. தந்தையார் செய்து வந்த கருமான் வேலைக்குத் துணையாகச் சென்றார். பிறவியிலேயே வலிமை குறைந்த அவரின் உடலுக்கு அத்தொழில் ஏற்றதாக இல்லை. ஓர் இரவுப்பள்ளியில் இலவசமாகப் போதிய கல்வியறிவு பெற்ற அவருக்கு ஓவியம் கற்க விருப்பம் ஏற்பட்டு சென்னை ஓவியக் கல்லூரியில் சேர்ந்தார்.

அக்கல்வியையும் சூழல் காரணமாக விட்டுவிட்டு ஜெமினி ஸ்டூடியோவில் ஓவியராகப் பணிக்குச் சேர்ந்தார். அதிலும் நிலைபெறாமல் இருந்த கோவிந்தனை அவர் நண்பரான இராஜாபாதர் தமிழரசு அச்சகத்தில் அச்சுக் கோர்க்கும் பணியில் சேர்த்து விட்டார். பிறகு ஆனந்த போதினி, தாருல் இஸ்லாம், போன்ற பல அச்சகங்களுக்கு மாறிய கோவிந்தன் ஆனந்தவிகடன் அச்சகத்தில் கம்பாசிட்டராகச் சேர்ந்தார். இக்காலத்தில்தான் அவருடைய எழுத்துப் பணி தொடங்கியது. பெற்றோர் வற்புறுத்த அவர் 30-04-1939-இல் நீலாவதியை மண்ந்தார். குடும்ப வாழ்வை நடத்தத் தம் பொருளையெல்லாம் விற்று ‘ராயர் ஓட்டல் என்னும் அசைவ விடுதி தொடங்கினார். அதுவும் சில நாள்களில் மூடப்பட குடும்பத்தைத் தம் மாமனார் வீட்டில் பொன்னேரியில் விட்டுவிட்டு வேலூர் போய்ச் சேர்ந்தார். அங்கு சில மாதங்கள் விக்டோரியா பிரசில் பணி புரிந்து வந்தார்.

மீண்டும் அவர் நண்பர் இராஜாபாதர் மூலம் கல்கி அச்சகத்தில் அச்சுக் கோர்ப்பாளராகச் சேர்ந்தார். கோவிந்தன் கதையெல்லாம் எழுதுவான் என்று கல்கியிடம் இராஜாபாதர் கூற கல்கி கோவிந்தனை ஒரு கதை எழுதி வரக் கேட்டார். அதன் மூலம் கல்கியிடம் பாராட்டுப் பெற்றார். தொடர்ந்து கல்கி இதழின் பாப்பா மலருக்கு வி.ஜி என்னும் பெயரில் கதைகள் எழுதத் தொடங்கினார். அந்தப் பெயர் வேண்டாமென்று கல்கிதான் விந்தன் என்று கோவிந்தனுக்குப் பெயர் சூட்டினார். பிறகு கல்கி இதழில் விந்தன் துணை ஆசிரியராக நியமனம் பெற்றார். விந்தன் கல்கியில் ’பாலும்பாவையும்’ நாவலைத் தொடர்கதையாக எழுத அதுதான் அவரை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. விந்தனின் மனைவி இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டுக் காலமாக அவர்

13-07-1944-இல் சரசுவதி என்னும் பெண்மணியை மணந்து கொண்டார்.

இச்சூழலில் கல்கியில் செய்து வந்த பணியை விட்டுவிட்டு விந்தன் ஏ.வி.எம்மின் கதை இலாகாவில் சேர்ந்தார். 1953-ஆம் ஆண்டு ‘வாழப்பிறந்தவள்’ திரைப்படத்திற்கு வசனம் எழுதிய அதே ஆண்டில் ‘அன்பு’ திரைப்படத்துக்குக் கதை வசனம் எழுதியதோடு ஒரு பாடலும் எழுதினார். 1954-இல் கூண்டுக்கிளி படத்துக்குக் கதைவசனம் மற்றும் மூன்று பாடல்களும் எழுதினார். இப்பொழுது கொஞ்சம் பணம் சேரத் தொடங்கியதால் விந்தன் ‘மனிதன்’ என்னும் இதழ் நடத்தத் தொடங்கினார். விந்தனால் ஒன்பது இதழ்கள்தாம் கொண்டு வர முடிந்தது. பெருத்த நட்டம் அடைந்தாலும் அவர் மனம் தளரவில்லை. ஒரு திரைப்படம் எடுக்கத் தொடங்கி அம்முயற்சியும் தோல்வியடைந்தது. மணமாலை. சொல்லு தம்பி சொல்லு. பார்த்திபன் கனவு குழந்தைகள் கண்ட குடியரசு ஆகிய படங்களுக்கு வசனம் எழுதினார்.

விந்தன் புத்தகப் பூங்கா என்ற பெயரில் ஒரு பதிப்பகம் தொடங்கி, சாண்டில்யன், ஜெயகாந்தன், இளங்கோவன், க.நா.சுப்பிரமணியம் போன்றோரின் நூல்களை வெளியிட்டார். இறுதியாக விந்தன் தினமணிகதிர் ஆசிரியர் குழுவில் சேர்ந்தார். பல தொடர்களையும், நடிகர்கள் சிலரின் வரலாற்றையும் அதில் அவர் எழுதினார். இறுதியாக 30-06-1975-இல் திடீரென மாரடைப்பால் காலமானார்.

விந்தன் என்றாலே அவரின் ‘பாலும் பாவையும்’ புதினம்தான் நினைவுக்கு வரும். 1964-இல் நாடகமாக மேடையேற்றப்பட்ட அது வானொலியிலும் நாடகமாக 1967-இல் ஒலிபரப்பானது. அது கன்னடம், மலையாளம், ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பல்வேறு பதிப்பகங்கள் சார்பாக அப்புதினம் சுமார் இருபது பதிப்புகள் கண்டுள்ளது. இந்திரன், அகல்யா, தசரதகுமாரன் என்று இராமாயணப் பாத்திரங்களை மறைமுகமாகச் சுட்டும் வண்ணம் அதில் பாத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்திரனால் கற்பிழந்த அகல்யாவிற்குப் புது வாழ்வு தர கனகலிங்கம் என்பவன் மூலம் விந்தன் முயல்கிறார். யதார்த்தத்தில் அதுவும் தோற்றுப் போக அகல்யாவை ஏற்க தசரதகுமாரன் வருகிறான். அவனும் இது கெட்டுப்போன பால் என்று கதவைச் சாத்துகிறான். இறுதியில் அகல்யா கடலில் சங்கமமாகிறாள். விந்தன் மரபையொட்டி எழுதுபவர். ஆனால் அதே நேரத்தில் புதுமையை விரும்புபவர். இவை இரண்டும் போட்டி போடும் பாலும் பாவையும் புதினத்தில் சமூகத்தில் நிலவும் யதார்த்த நிலையால் விந்தன் கருதும் போராட்டம் வெற்றி பெறவில்லை. ஆனாலும் அது வெற்றியின் தொடக்கம்தான் என்று கூற வேண்டும். அவலத்துக்கு ஆளான பெண்களை ஆண்கள் ஏற்று ஆதரிக்க வேண்டும் என்று சொல்ல வந்த முதல் நாவல் அது என்று கூறலாம்.

அகிலன் எழுதிய ‘சிநேகிதி’ நாவலுக்குக் கொள்கையின் அடிப்படையில் பதிலாகத்தான் விந்தன் “அன்பு அலறுகிறது” என்னும் நாவலை எழுதினார். மேலும் ”கண்திறக்குமா?” ”மனிதன் மாறவில்லை”, ”காதலும் கல்யாணமும்” ”சுயம்வரம்” என்னும் நாவல்களும் அவர் எழுதியவனாகும்.

விந்தனின் சிறுகதைகளில் உண்மையும் சமுதாய உணர்வும் இழையோடியிருக்கும். தண்டலுக்குப் பணம் வாங்கி பழ வியாபாரம் செய்யும் அம்மாயி தனக்கேற்றவாறு பெரும் ஆசையின்றி வணிகம் செய்து வருகிறாள். ஆனால் அதில் மண் விழுந்தாற்போல சுகாதார அதிகாரிகள் அவளது பழக்கூடையை  லாரியில் தூக்கிப் போட்டுக்கொண்டு போய்விடுகிறார்கள் அவள் தேம்பித்தேம்பி அழும்போது நாமும் அழுகிறோம். அவளைத் தேற்றுவார் யார் என்ற கேள்வி கேட்கும் விந்தன் அக்கேள்வியையே கதைக்குத் தலைப்பாக வைக்கிறார்.

தன் தந்தையே கள்ளச் சாராயம் காய்ச்சுவதைக் கண்டு மனம் பொறுக்காத புஷ்பராஜி அவரைப்போலீஸ் வசம் ஒப்படைக்கிறான். அப்பொழுது அவன் “அப்பனைவிட அரசாங்கத்தைவிடச் சமுதாயம் பெரிது” எனப் பேசுகிறான். ”சமுதாய விரோதி” சிறுகதை காட்டும் உண்மை இது.

விந்தன் ஏழ்மையின் கசப்பை அனுபவித்தவர். சாதாரண அச்சுக் கோர்க்கும் தொழிலாளியாய் வாழ்க்கையைத் தொடங்கியவர். அதனால்தான் வறுமையில் வாடும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை அவரால் படம் பிடிக்க முடிகிறது. குழந்தைக்குப் பால் வாங்கவும் காசில்லாத ஏழை மாந்தன் தன் அழும் குழந்தைக்கு ‘அபின்’ கொடுத்துத் தூங்க வைப்பதாக ’மவராசாக்கள்’ என்னும் கதையில் விந்தன் காட்டுகிறார். இதைவிட வறுமையை எழுத்தில் காட்ட முடியாது.

விந்தன் எழுத்தில் புதிய வடிவங்களை எழுதிப் பார்த்தவர். சுருக்கமாக ஆனால் சுருக்கென்று குத்தும் வகையில் குட்டிக்கதைகள் எழுதினார். ”ஓ மனிதா”, ”மிஸ்டர் விக்கிரமாதித்யன்”, ”சட்டம்”, ’சமதர்மம்” போன்றவற்றை முக்கியமாகக் கூறலாம்.

விந்தன் பல எழுத்தாளர்களையும் போலத் தொடக்கத்தில் கவிதைகள்தாம் எழுதினார். சிறு கதைகள் பக்கம் திரும்பியதும் கவிதைகள் அதிகம் எழுதவில்லை. அரிசிப் பஞ்சம் ஏற்பட்டபோது ”அரிசி” என்னும் பெயரில் எழுதிய கவிதை முக்கியமானது. பஜகோவிந்தத்தைப் பகடி செய்து ”பசிகோவிந்தம்” எழுதினார். இலக்கணம் பிறழாமல் மகாபாரதக்கதையைப் பாட்டில் பாரதம் என்றெழுதினார். ஏழு திரைப் படங்களுக்கு வசனம் எழுதிய அவர் ஆறு திரைப் பாடல்களும் எழுதி உள்ளார்.

விந்தன் ஒரு சிலக் கட்டுரைகள்தாம் எழுதினார். ஆனால் அவை மிகவும் செறிவானவை. தொழிலாளர் பிரச்சனைகளைத் தெரிவிக்க ஒரே இரவில் எழுதிய “வேலை நிறுத்தம் ஏன்?” என்னும் கட்டுரை மிக முக்கியமானது. சேரியில் வாழும் மக்களைச் சந்தித்த விந்தன் அவர்கள் நிலையை “சேரிகள் நிறைந்த சென்னை மநகரம்” எனும் கட்டுரையை எழுதினார்.

”புதுமைப் பித்தன் புகையிலையைப் புகையாகவும், காரமாகவும் பயன்படுத்தினார். அதுதான் அவர் உயிரைக் குடித்துவிட்டது. கவி பாரதியார் இறந்ததற்குக் காரணம் கஞ்சா என்று சொல்லவில்லை? அந்த மாதிரி” என்று ”புதுமைப்பித்தனும் புகையிலையும்” கட்டுரையில் அவர் எழுதுகிறார்.

புதுமைப்பித்தன் போல வாழ்வில் எதிர்நீச்சல் போட்டு அதனுடன் போராடியவர்தாம் விந்தன். பாரதியின் நேர்மையும், வ.ராவின் ஆர்வமும், ஜெயகாந்தனின் துணிவும் அவரிடம் குடிகொண்டிருந்தன. தான் மேற்கொண்ட வழியினாலும், தன் படைப்புகளினாலும் பலபேரின் தூற்றுதலுக்கு ஆனாலும் விந்தன். ஆயினும் கொண்ட கொள்கையிலிருந்து இறுதிவரை மாறாமல் விந்தையான வாழ்க்கையை வாழ்ந்தவர் என்று அவரைக் கூறலாம்.

[விந்தன் பிறந்த நாள் 22-09-1916]

***

முந்தைய கட்டுரையுவன் சந்திரசேகர் கருத்தரங்கு- மதுரை
அடுத்த கட்டுரைகாடு – ஒரு வாசிப்பும் மறு வாசிப்பும்- கலைச்செல்வி