நிஜந்தனின் ’நான் நிழல்’

நிஜந்தனின் நான் நிழல் வாங்க

அன்பு ஜெயமோகன்,

கடந்த செப்டம்பர் மாதத்தின் பிற்பகுதியில்தான் நிஜந்தன் எனக்கு அறிமுகமானார். புதிய வெயிலும் நீலக்கடலும் எனும் அவரின் நாவலை ஓரிரவில் முழுமூச்சாய் வாசித்து முடித்தேன். அசோக்ராஜன் எனும் மையப்பாத்திரத்தைக் கொண்டு கிளைகிளையாய் விரிந்திருந்தன உபபாத்திரங்கள். மனித உடல்களை அல்லது மனங்களை வாட்டி எடுக்கும் காமத்தின் தகிப்புகளைப் பல நவீன நாவல்கள் பேசிவிட்ட பிறகும், நிஜந்தனின் சொல்முறை எனக்கு புதுவிதமான ஈர்ப்பைக் கொடுத்தது. அந்த ஈர்ப்பின் உந்துதலால் அவரின் மற்ற நாவல்களைத் தேடத் துவங்கினேன். பேரலை, நான்:நிழல் எனும் இரண்டு நாவல்கள் கிடைத்தன. மூன்று நாவல்களிலும் நிஜந்தன் மிகச்சுருக்கமான முன்னுரையைத் தந்திருக்கிறார். நாவல்களின் மையச்சரடை அதில் அவர் நமக்கு முன்கூட்டியே சுட்டி விடுகிறார். எனினும், நாவலை வாசிக்கும் போதான பரவசம் ஒருபோதும் சலிப்புக்கு உள்ளாகவில்லை.

மூன்று நாவல்களிலும் எனக்கு முக்கியமானதாகப் பட்டது நான்:நிழல் நாவல்தான். ராமானுஜம் என்பவரின் முதுகுக்கட்டியின் சீழை எறும்புகள் மொய்த்துக் கொண்டிருப்பதில் நாவல் துவங்கும். கட்டி நீக்கப்பட்ட பின், அவர் மனைவியோடு பேசும் சூழலில் நாவல் முடியும். துவக்கமும், முடிவும் ஒரு வெகுஜனப் படைப்பைப் போன்ற தோற்றம் தருவதைத் தவிர்க்க முடியவில்லை. எனினும், நாவலின் சொல்மொழியும் கிளைமாந்தர்களின் வாழ்வுத்தருணங்களும் அந்நாவலை வாசிப்பின்பத்துக்கு உரியதாக்கி விடுகின்றன. புகைப்படம், நோய்க்கூறு எனும் பதங்களை அவற்றின் பொது அர்த்தங்களில் இருந்து மேல்நகர்த்தி வாழ்வின் சம்பவங்களில் அவற்றை அழகாக இடம்பெறச் செய்து விடுகிறார் நிஜந்தன். ஒருமுறை புகைப்படம் மனதுக்கு நிறைவளிப்பதாக இருக்கிறது; பிறிதொரு கணம் மனதை வாட்டி வதைப்பதாகத் தோன்றுகிறது. நோய்க்கூறும் அத்தகைய தன்மையிலேயே நாவல் முழுக்க இடம்பெற்றிருக்கிறது.

ஆண்-பெண் மனித உடல்களைத் தொந்தரவு அல்லது இன்பம் கொள்ளச் செய்யும் கூறாக காமம் இருக்கிறது. காமத்தைத்தான் நோய்க்கூறாக நிஜந்தன் சொல்வதான வாசிப்புச் சாத்தியமும் இருக்கிறது. எனினுன், என் வாசிப்பில் தான் விரும்பும்படியான மனிதர்கள் அல்லது வாழ்க்கை    அல்லது சமூகம் எனும் ஒருவரின் எண்ணமே அவருக்கான நோய்க்கூறாகத் தொனித்தது. ராமானுஜனின் இடுப்புக்கட்டி காரணமாகவே அவரின் மனைவி மகாலட்சுமி உள்ளிட்ட பெண்கள் அவரை ஒதுக்குகின்றனர். தான் அல்லது தாங்கள் எதிர்பார்க்கும் ராமானுஜன் என்பவர், தான் அல்லது தாங்கள் விரும்புகிற மாதிரி இருக்க வேண்டியவர் என்பதான கவனமே அவர்களிடம் மிகுந்திருக்கிறது. அதையே நோய்க்கூறாக நான் கண்டேன். அதைப்போன்றே ராமானுஜத்திடமும் அப்படியான நோய்க்கூறு வேறுவகையில் இருந்தது. இங்கு ஒரு கேள்வி வரலாம். அப்படியான நோய்க்கூறைத் தவிர்த்துவிடுதல் சாத்தியமா? தத்துவங்களிலும், சித்தாந்தங்களிலும் சாத்தியம் உண்டு. வாழ்க்கையில் அறவே சாத்தியம் இல்லை. ஆகவேதான், நிஜந்தன் நோய்க்கூறுகளோடான மனிதர்களை அறிமுகப்படுத்துவதோடு அமைதியாகி விடுகிறார்.

மனிதனை இருவகையாகப் பகுக்கலாம். தனிமனிதன் மற்றும் சமூக மனிதன். சமூக மனிதன் செயற்கையானவன்; அடையாளம் உள்ளவன். தனிமனிதன் இயற்கையானவன்; அடையாளம் அற்றவன். சித்தாந்தங்கள் அடையாளம் கொண்ட சமூகமனிதனை மட்டுமே வேண்டுகின்றன; மெய்யியலோ அடையாளம் தவிர்த்த தனிமனிதனை முன்னிறுத்துகின்றன. இரண்டில் ஏதோ ஒன்றுதான் சரி என்பதான பாவனையை இவ்விரண்டு முறைமைகளும் அவனிடம் ஏற்படுத்தி விடுகின்றன. இலக்கியமே மனிதனுக்குள் இருக்கும் சமூக மனிதனையும், தனிமனிதனையும் புரிந்து கொள்ள அவனைத் தூண்டுகின்றன. நுட்பமான இக்குறிப்பை இன்றைய நவீனத்தலைமுறை உள்வாங்கிக் கொள்ளுமா என்பது ஏனோ எனக்குக் கேள்வியாகவே இருக்கிறது.

மானுடகுலம் தனிமனிதனில் வேர்விட்டு சமூகமனிதனாய் கிளைபரப்பி இருக்கிறது. இன்றைய நவீன உலகு சமூகமனிதனுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை தனிமனிதனுக்கு அளிப்பதில்லை. அல்லது மானுடகுலம் அப்படியாக நகர்ந்து வந்திருக்கிறது. அதனால் ஒருவன் தன் சமூகமனிதனைத் தக்க வைக்க தனிமனிதனைப் பலிகொடுத்தாக வேண்டி இருக்கிறது அல்லது பலிகொடுத்தது போன்று நடிக்க வேண்டி இருக்கிறது. தனிமனிதனை விட்டுக்கொடுக்க முடியாதவர்கள் ஆன்மீகத்தின் பக்கம் நகர்ந்து விடுகின்றனர்; சமூகமனிதனை விட்டுக்கொடுக்க முடியாதவர்கள் சித்தாந்தங்களின் பக்கம் நகர்ந்துவிடுகின்றனர். இரண்டுமே ஒரு கோட்டின் இருமுனைகள் என்று சொன்னால் நம்மை அடிக்க வருமளவு அவர்கள் வடிவமைக்கப்பட்டு விட்டனர். தன் வாழ்வில் இலக்கியங்களைக் கண்டடைந்த ஒருவனுக்கு அப்படியான நிரந்தரத் தங்குமிடங்கள் இல்லை. அவன் வாழ்வை அதன் விசித்திரங்களோடு எதிர்கொள்கிறான். வெயிலில் காய்கிறான்; மழையில் நனைகிறான். சிலநேரங்களில் மாற்றியும் செய்கிறான். பலநேரங்களிம் வெறுமனே இருக்கிறான். சுருக்கமாகச் சொல்வதானால், அவனுக்கான தேர்வுச்சுதந்திரம் அவனிடமே இருக்கிறது. அச்சுதந்திரம் புனிதமானதல்ல எனும் புரிதலும் அவனுக்குத் தெளிவாகவே இருக்கிறது.

நான் : நிழல் என்ற நாவலின் தலைப்பில் நான் தனிமனிதன். நிழல் சமூகமனிதன். தனிமனிதனும், சமூகமனிதனும் வாழ்வின் பிரதிபலிப்பால் கிடைக்கும் தோற்றங்களே. இவ்விரண்டைக் கடந்து நின்று பார்க்கும் ஒருவனுக்கு அது தெளிவாகப் புலப்படும். அப்புலப்படலைச் சாத்தியப்படுத்தும் பணியை இலக்கியங்கள் முன்னெடுக்கின்றன. அப்படி முன்னெடுப்பவையே இலக்கியம் என்பது என் தீர்மானம். அவ்வ்கையில் நான்:நிழல் ஒரு குறிப்பிடத்தகுந்த இலக்கியப்படைப்பு. இந்நாவலை வாசகர்கள் ஒருமுறையேனும் வாசிக்க வேண்டும்.

நாவலை வாசித்துவிட்டு நிஜந்தனிடம் பேசினேன். உற்சாகமாக உரையாடினார். நவீன இலக்கியப்பரப்பில் தன்னைக் கண்டுகொள்ளாமல் தவிர்த்து விட்டார்களோ எனும் ஆதங்கத்தை அவர் பகிர்ந்து கொள்ளவில்லை. என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. பேச்சின் நிறைவில்.. சுவை, மணம், நிறம் எனும் தனது நாவலைப் படித்துவிடுங்கள் என்று அன்பாகக் கேட்டுக் கொண்டார். உயிர்மை வெளியீடான அந்நாவலை இம்மாத இறுதிக்குள் வாசிக்கும் வாய்ப்பு அமையும் என்று நம்புகிறேன்.

சத்திவேல்,

கோபிசெட்டிபாளையம்.

***

முந்தைய கட்டுரைஆழமின்மை – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஓஸிபிசா, ரகுபதிராகவ…