வாசகசாலை- கடிதங்கள்

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

வணக்கம்.

 

வாசகசாலை அமைப்பு பற்றி நீங்கள் எழுதிய பதிவை படித்தேன். நோக்கம் தெளிவாக இருக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறீர்கள். அவர்கள் நோக்கம் தெளிவாகத்தான் இருக்கிறது. உங்களுக்குத்தான் குழப்பம். ஒரு படத்தில் கவுண்டமணி சொல்வார். ஈயம் பூசுன மாதிரியும் பூசாத மாதிரியும் இருக்கனும். அது போல் இலக்கியம் பேசியது மாதிரியும் இருக்க வேண்டும். ஆனால் இலக்கியத்துக்கு தேவையான அறிவார்ந்த உழைப்பையோ அர்ப்பணிப்பையோ கொடுக்கக்கூடாது. அறிவுஜீவி பிம்பத்தை மலிவு விலைக்கு வாங்க வேண்டும் என்பது அவர்கள் நோக்கம். அதை பிசிரின்றி சரியாக செய்கிறார்கள். இமேஜ்தான் அவர்களுக்கு முக்கியமேத் தவிர கற்றல் அல்ல என்பதை யாரும் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். ராக்கெட் சயின்ஸ் ஒன்றும் கிடையாது. அதுக்கூட உங்களுக்கு தெரியவில்லை என்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது.

 

அவர்கள் நடத்துவது இலக்கியக்கூட்டம் அல்ல. கும்பல் அரட்டை. உங்கள் பதிவுக்கு வந்த எதிர்வினைகளை பார்த்தீர்களா? வழக்கமான முத்திரை குத்தல். இந்துத்துவர் என்று. அப்புறம் வசை கேலி கிண்டல்.  அவர்கள் தரமே அவ்வளவுதான். காத்திரமான ஒரு நல்ல பதிவைக்கூட அவர்களால் எழுத முடியாது.  விமர்சனத்தை மறுப்பதாக நினைத்து மீம்ஸ் போட்டு ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  நான் சில சமயம் நினைப்பதுண்டு. எதுக்கு எழுத்தாளர்கள் மேல் இவ்வளவு கசப்பு? வெறுமனே தாழ்வுணர்ச்சி என்று மட்டும் சொல்லிவிட முடியாது. சினிமாக்காரர்கள் மீதோ விஞ்ஞானிகள் மீதோ பொதுமக்களுக்கு இவ்வளவு காழ்ப்புணர்ச்சி வருவதில்லை. ஏன் எழுத்தாளர்களை மட்டும் வெறுக்கிறார்கள் என்றால் மொழிதான் காரணம். எழுத்தாளனிடம்தான் மொழி இருக்கிறது. மொழியறிவை நான் குறிப்பிடவில்லை. மொழியை மீறிய ஒன்றை மொழியால் உணர்த்தக்கூடிய திறன். அதுவே அவர்களை அச்சுறுத்துகிறது.

 

இவர்களிடம் மல்லுக்கட்டுவதில் பிரயோஜனமில்லை. தங்களுக்கு என்ன தேவையோ அதை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். சில விஷயங்கள்தாம் கஷ்டமாகவே இருக்கின்றன. இந்த எம்.எல்.எம் கோஷ்டிகளிடம் போய் இளைஞர்கள் சிக்கிக் கொள்வதை பார்க்கும்போது எதிர்காலம் பீதியூட்டுவதாய் தெரிகிறது. மேலும் இலக்கியம் என்பது மதிப்பீடுகளால் நிலைத்து சாதனைகளால் முன் நகர்வது. இவர்கள் மதிப்பீடுகளை அழித்துவிடுவார்களோ என்பது இன்னொரு பெருங்கவலை.

 

அன்புடன்,

விதூஷகன்.

 

பி.கு : இந்த கடிதத்தை நீங்களே எழுதி வெளியிட்டதாக அவசியம் கூச்சல் போடுவார்கள். பேஸ்புக்குக்கு அப்பால் ஓர் உலகம் இருப்பதையே அறியாதவர்கள். அதுதான் ஆறுதல் அளிக்கும் அம்சமும்கூட. அப்பாலுள்ள உலகத்தில்தான் இலக்கியம் பாதுகாப்பாக இருக்கமுடியும்.

 

 

 

வணக்கம் ஜெ

 

நலமா, நான் மிக்க நலம். நேற்று வாசகசாலை பற்றி நீங்கள் எழுதியிருந்த கட்டுரை உங்கள் தளத்தில் படிக்க நேர்ந்தது. நீங்கள் சொல்லியுள்ளது நூறு சதவீதம் உண்மை.

 

இன்று அந்த கட்டுரை வந்தபின்பு வாசகசாலை அமைப்பின் தலைமை பொறுப்பில் உள்ள இரண்டு பேர் மற்றும் அதன் சில உறுப்பினர்கள் உங்கள் மீது முகநூலில் வன்மத்தை கொட்டித் தீர்த்துள்ளனர்.

(அவர்களுடன் சேர்ந்துக் கொண்டு வழக்கம்போல உங்களை எதிர்க்கும் அரசியல்வாதிகள்)

மிக மிக மேசமான சொற்கள் அவை படிக்க படிக்க உண்மையில் கோபம் வந்தது.

 

அவர்கள சொல்ல வருவது.

 

நாங்கள் இலக்கிய அமைப்பு அல்ல வாசகர் அமைப்பு மட்டும்.

 

பின்பு எதற்காக இத்தனை நாள் இலக்கிய அமைப்பு என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் கூட்டங்களை ஒருங்கிணைப்பு செய்தனர்.இன்று ஒரேநாளில் இலக்கியம் இல்லை என்று சொல்வது எதனால்.

 

வாசிப்பை வளர்ப்பதாகச் சொல்லும் இவர்கள் மறுபுறம் எல்லா எழுத்தாளர்களை பொதுவெளியில் அவமானப்படுத்துகிறார்கள் ( நேற்று உங்களையும், தஸ்தாயேவ்ஸ்கி பற்றி எத்தனை நாள் பேசுவீங்க என்று எஸ். ராமகிருஷ்ணன் அவர்களையும்)

 

பெரியாருக்கு நிகழ்வு நடந்தி விட்டதால் உங்களுக்கு அவர்கள் மீது இந்த காழ்ப்புணர்ச்சி என்று அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஒருவர் உங்களை மிக மேசமான வார்த்தைகளால் வசைபாடிக் கொண்டிருக்கிறார்.

 

அமைப்பின் அத்தனை பேரின் குரலிலும் அவ்வளவு வன்மம் தெரிகிறது. ஏன் இந்த வன்மம் என்று தெரியவில்லை இதில் இருக்கும் அனைவரும் இளைஞர்கள்  இவர்களிடமிருந்து இந்த வயதில் வெளிப்படும் சொற்கள் வருத்தங்களை அளிக்கிறது.

 

இவ்வளவு கூட்டம் நடத்தியிருக்கிறோம் என்று பெருமையாக சொல்லிக் கொள்ளும் இவர்களிடம் கருத்தை கருத்தாக எடுத்துக் கொள்ளும் பக்குவமும் மிக முக்கியமாக உண்மை தன்மை இல்லை. உண்மை தன்மை இருந்திருந்தால் அமைப்பின் வழியாக சரியான பதில் தந்திருக்க வந்திருக்கும்.

 

( உண்மை தன்மை இல்லாததால் தான் இத்தகைய வெறியாட்டங்கள். இதன் வழியே தங்களை மறைந்துக் கொள்கிறார்கள்.)

 

இவர்களின் பின்புலம் அச்சமூட்டும்படி இருக்கிறது. நீங்கள் மட்டுமல்ல யார் இவர்கள் பற்றி எழுதினாலும் அல்லது விமர்சனம் சொன்னாலும் அவர்களுக்கு பொதுவெளியில் இதுதான் நிலை அவர் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தால் சரி.மொத்தமாக அவர்கள் மீது வார்த்தை வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது.இதற்காக பயந்துகொண்டு நிறைய எழுத்தாளர் இவர்களிடமிருந்து தள்ளியே நிற்கின்றனர்.

 

அரசியல் சக்திகள் மற்றும் சினிமா முதலீடுகளை வைத்துக் கொண்டு யாரை எப்படி வேண்டுமானாலும் அவமானம் செய்யலாம் என்கிற நிலை இலக்கியத்திலும் வந்துவிட்டது.

 

தமிழ் இலக்கியம் என்பது ஒரு அறிவியக்கம். அதில் இத்தகைய அமைப்புகளுக்கு இடம் இல்லை.

 

அன்புடன்.

 

 

தேவி ஸ்ரீராம்.

 

 

அன்புள்ள ஜெ

 

நீங்கள் வாசகசாலை பற்றிச் சொல்லியிருந்ததை வாசித்தேன். நீங்கள் அது வெல்லவேண்டும், நின்றுவிடக்கூடாது என்ற அக்கறையையே உங்கள் பதிவில் பார்த்தேன். இது தமிழில் எந்த இலக்கிய அமைப்பு தொடங்கப்பட்டாலும், எந்த சிற்றிதழ் தொடங்கப்பட்டாலும் நீங்கள் சொல்லிவருவதுதான். அதற்கான காரணத்தையும் நீங்கள் பலமுறை எழுதிவிட்டீர்கள். ஓர் ஆர்வத்தில் தொடங்கிவிட்டு அதைத் தொடரமுடியாமல் நிறுத்திவிட்டால் ஒரு சோர்வு உருவாகிறது. இன்னொருவருக்கு ஆர்வம் இல்லாமலாகிறது. ஆகவே தொடங்கப்படுபவை எதுவும் தொடர்ச்சியாக நிகழவேண்டும். அதற்கு தொடங்கியபின் என்ன நிகழ்கிறது என்பதைக் கூர்ந்து நோக்கி அதை மேம்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். என்ன குறைகிறது, என்ன சிக்கல் வருகிறது, என்ன பயன் என்று பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்கிறீர்கள். இதை நீங்கள் இதுவரை எல்லா இலக்கிய அமைப்புக்களைப்பற்றியும் சொல்லியிருக்கிறீர்கள்

 

ஆனால் வாசகசாலை அதை புரிந்துகொள்ளவில்லை. நீங்கள் சொல்லியிருக்கும் ஆலோசனை அதை மேலும் சிறப்பாக நடைபெறச்செய்வதற்காகத்தான் என்று அவர்களுக்குப் புரியவில்லை. நீங்களும் அதை ஓர் தீவிர இலக்கியக் கூட்டங்கள் நடத்தும் அமைப்பு என்று சொல்லவில்லை என்பதே என் புரிதல். அது உற்சாகமாக , வெகுஜனப்பங்கேற்புடன் நடக்க என்ன செய்யவேண்டும் என்றுதான் சொல்கிறீர்கள்.

 

அவர்கள் அதைப்புரிந்துகொள்ளாமைக்குக் காரணம் ஒன்று, சில்லறை எழுத்தாளர்கள் வழக்கம்போல இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு அரசியல் செய்வது. இன்னொன்று, அவர்களுக்கே இலக்கியத்தைவிட அரசியல் முக்கியமாகப் போவது. நீங்கள் 2009ல் இங்கே அமெரிக்கா வந்தபோது ஒரு அலை உருவானது. இங்கே உள்ள வழக்கமான தமிழ்ச்சங்கச் சூழலுக்கு வெளியே இலக்கியம்பேச ஒரு அமைப்பு திரண்டு வந்தது. உடனே அந்த அமைப்பை இந்துத்துவ அரசியலமைப்பாக மாற்ற முயன்றனர். நீங்கள் விலகிக்கொண்டீர்கள் .அது நின்றுவிட்டது. இந்தமுறை வந்தபோது அதனுடன் சம்பந்தமே வைத்துக்கொள்ளாமல் சென்றுவிட்டீர்கள்.வாசகசாலைக்கும் அதுதான் நிகழ்கிறது. அவர்கள் வாசகசாலைக்கு ஒரு சின்ன வட்டம் உருவானதுமே அதனை பெரியாரிய அமைப்பாக மாற்ற முயல்கிறார்கள். அதுதான் பிறரிடம் கசப்பை உருவாக்குகிறது என நினைக்கிறேன்

 

அடிப்படையில் இவர்களுக்கு இலக்கியம் மேல் நம்பிக்கை இல்லை. இலக்கியம் அரசியலுக்கான ஒரு வழி, அதிகார அரசியலுக்கான ஒரு குறுக்குச்சால் என்று நினைக்கிறார்கள். நீங்கள் இலக்கியம்  பற்றி மட்டும் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். அதை அவர்கள் ‘தூய இலக்கியம்’ என்று இகழ்கிறார்கள்.

 

செந்தில்குமார்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-15
அடுத்த கட்டுரைகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா?- எதிர்வினை