பி.எஸ்.என்.எல்- கடிதம்

பி.எஸ்.என்.எல்லில் நிகழ்வது…

 

அன்பின் ஜெ..

பி.எஸ்.என்.எல் பற்றிய கேள்வியையும், பதிலையும் படித்தேன்.

உங்கள் பதிலின் முதல் பத்தி, உயரதிகாரிகளின், கொள்கை வகுப்பாளர்களின் குறைகளைச் சுட்டிக் காட்டுபவர்கள் எவருமே இல்லை எனச் சொல்லியிருந்தீர்கள்.

கடைநிலை ஊழியரின் அலட்சியமும், பொறுப்பின்மையும், மிகச் சரியாக, நிறுவனத் தலைமை மற்றும் உரிமையாளர்களின் கவனமின்மை இவற்றையே குறிக்கிறது. இதற்கு தனியார், பொதுத் துறை எவரும் விதிவிலக்கல்ல.

தனியார் துறையில் நாம் தோல்வியுற்றவர்களைப் பேசுவதில்லை. பொதுத்துறையில் வெற்றி பெற்றவர்களைப் பேசுவதில்லை.

தமிழகத்தில் ஒருகாலத்தில், தமிழ்நாடு அரசும், தனியாரும் (தனியார் நிர்வாகத்தில்) இணைந்து எழுப்பிய ஒரு மாபெரும் நிறுவனம், அது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த போது, தமிழகத்தின் மிகப் பெரும் நிறுவனம்.  தாத்தா துவங்கியது. அப்பா காலத்தில், அவர்  அதன் மேலாண்மையை, தன் வகுப்புத் தோழர் வசம் கொடுத்துவிட்டு, தமிழக முண்ணனி நட்சத்திரம் ஒருவரின் பின்னால் ஓடிக் கொண்டிருந்தார். கண்மூடி முழிக்கும் முன்பு, அவரது சமூக, அந்தஸ்து, தொழிற்தலைமை என எல்லாம் விழுந்து விட்டிருந்தது. தொழில் விழத்துவங்குகையில்,  பேரன் தலையெடுத்தார். இவருக்கு இன்னொரு நட்சத்திரம். அதை ஏற்பாடு செய்து கொடுத்த நபரே, நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பாளரானார். அவர், அந்த நிறுவனத்திற்கு அந்திமக் கடன்களை நிறைவேற்றி விட்டு வெளியேறினார். ஒரு காலத்தில் தென்னாட்டு அம்பானி என அழைக்கப்ட்டவர்களின் அரண்மனை போன்ற வீட்டின் ஒரு பகுதி விற்கப்பட்டது. அப்படியே பா.சிங்காரம் அவர்களின் நாவல் கண் முன்னே நிகழ்ந்தது.

பொதுத்துறை நிறுவனங்களை மிக வெற்றிகரமாக நடத்தியவர்கள் பலர். கிருஷ்ணமூர்த்தி அவர்களுள் மிக முக்கியமானவர்.  பொறியாளராகத் தன் வாழ்க்கையைத் துவங்கிய அவர், 1972 ஆம் ஆண்டு, பாரத கனரக மின் நிறுவனத்தின் சேர்மெனாகி, (Bharat Heavy Electricals) அதை மிக வெற்றிகரமாக நடத்தினார். பின்னர், நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருந்த இந்திய இரும்பு நிறுவனத்தை (Steel Authority of India) லாபத்திற்கு மாற்றினார் – பொதுத்துறை நிறுவனத்தின் மிகப் பெரும் விலங்கு இது. இதை யாராலும் மேலாண்மை செய்ய முடியாது. நஷ்டத்தில் மட்டுமே முடியும் எனக் கணித்த பல பண்டிதர்களின் வாயில் மண்ணை அள்ளிப் போட்டார்.

மாருதி, சஞ்சய் காந்தி துவங்கிய கார் கம்பெனி, ஒரு காரைக்கூடத் தயாரிக்காமல் மரித்திருந்தது. அரசு, அதை உயிர்ப்பிக்கும் பொறுப்பை அரசு இவரிடம் ஒப்படைத்தது. ஹோண்டா, டொயோட்டா முதலிய கார் நிறுவனங்களை அணுகி, பிறகு, கார்த் தொழிலில் சிறிய நிறுவனமாக இருந்த சுசுகியைத் தேர்ந்தெடுத்தார். ஜப்பானிய தொழில்நுட்பம், அதேசமயத்தில், இந்திய அரசு சொல்வதைக் கேட்கும் அளவில் (அலகில்) இருந்த நிறுவனம், இது துவங்கிய நாளில் இருந்தே வெற்றிமுகம் தான். இந்திய கார்த்தொழிலைப் புரட்டிப் போட்ட இந்த நிறுவனம் ஒரு பொதுத்துறை நிறுவனம் தான்.

அதேபோல் இந்த இந்திய பெட்ரோ கெமிக்கல் கார்ப்பரேஷன் – இது தனித்துவமான பெட்ரோ பொருட்களை உற்பத்தி செய்வதற்காக, இந்தியாவில் துவங்கப்பட்ட நிறுவனம். இத்தொழிலின் மிக உயர் தொழில்நுட்ப நிறுவனமான அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்களுடன் தொழில்நுட்ப உறவுகளைக் கொண்டிருந்த நிறுவனம். இந்திய  பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களில் மிக உன்னதமான தொழில்நுட்பம் கொண்டிருந்த நிறுவனம் எனச் சொல்லலாம்.

(https://economictimes.indiatimes.com/indian-petrochemicals-corporation-ltd/infocompanyhistory/companyid-11955.cms)

இதை எந்தத் தனியார் நிறுவனமும் துவங்கவில்லை. மாறாத, இந்த அரிய ரத்தினத்தை, ஒட்டுண்ணித் தொழிற்குழுமத்துக்குத் தாரை வார்த்தார்கள். இன்றுதான் அவர்களின் இணைய தளத்துக்குச் சென்று பார்த்தேன். இன்று அதன் வரலாறே முகேஷ் அம்பானியில் இருந்துதான் துவங்குகிறது.

இந்தியப் பெட்ரோலியத் துறையில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும், உயர் தொழிநுட்ப, மேலாண் தலைமையைக் கொண்டவை.

2000 முதல் கொண்டு, இந்தியாவின் மிக அதிக லாபமீட்டும் பெட்ரோலிய நிறுவனமாகிய ONGC ஐ, மெல்ல மெல்ல ஒட்டுண்ணி தனியார் நிறுவனங்கள் உறிஞ்சி (அரசுகளின் துணையுடன் தான்) இன்று அதை லாபம் குறைவான ஒன்றாக ஆக்கி விட்டார்கள்.

இன்றும், பொதுத்துறை நிறுவனங்களின் பால் இருக்கும் செல்வங்கள் (நிலம், தொழில், நுட்பம், இயங்கும் பரப்பு)  அளவிட முடியாதவை. அவற்றை, அரசு ஒட்டுண்ணி முதலாளிகளுக்குத் தாரை வார்க்காமல் தடுக்கப்பட்டாலே அவை லாபத்தில் இயங்கும்.

இப்போது பி.எஸ்.என்.எல்லுக்கு வருவோம் – பி.எஸ்.என் எல் மட்டுமல்ல, இத்தளத்தில் இயங்கும் பல தனியார் நிறுவனங்கள் கூட இன்று சாம்பலாகிவிட்டன.  4G ஐக் கொடுத்தால், கொஞ்சம் நிதியை அளித்தால், அது பிழைத்து, ஊரக மக்களுக்குச் சேவை செய்யும் அளவுக்குத் திரும்பும் (இந்த ஆண்டு 1.4 லட்சம் கோடி தனியார் துறைக்கு ஸ்பெஷல் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது).

இன்று, இந்தியாவின் மிகப் பெரும் பிரச்சினை – ஒட்டுண்ணி முதலாளித்துவம் (crony capitalism).  அதற்கு அளிக்கப்படும் சலுகைகள்; மறைமுகமாக, இன்று பெரும் வணிகத் திருவிழாவாகிவிட்ட இந்தியத் தேர்தலுக்கான முதலீடாக, சட்டபூர்வமாக மடைமாற்றப்படுவதாக மாறியுள்ளது.

தொழிற்துறையைப் பாதிக்கும் மற்ற பிரச்சினைகளாக விவாதிக்கப்படுவதெல்லாம், அதன் symptoms மட்டுமே.

அன்புடன்

பாலா

பி.கு: டாட்டா குழுமத்தில் 100 க்கும் மேற்பட்ட கம்பெனிகள் உள்ளன. ஆனால், அக்குழுமத்தின் 90% லாபம், இரண்டே கம்பெனிகளில் இருந்து மட்டுமே வருகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டமடைவதன் ஒரே காரணம் ஊழல் எனச் சொல்வது ஊதிப் பெருக்கப்பட்ட, உள்நோக்கம் உள்ள ஒரு சொல்லாடல்.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-12
அடுத்த கட்டுரைஃபாசிசம் -கடிதங்கள்