கண்ணீரும் கதைகளும்

சார்,

வணக்கம். தங்களது மதிப்புமிக்க நேரத்தை அறிந்து கொள்கிறேன்.ஆகையால் மிகுந்த தயக்கத்திற்கு பிறகே உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன். எனக்கு ஒரு சந்தேகம். உங்கள் அறம் கதையை படித்து நான் ஒரு அரை மணிநேரம் அழுதிருப்பேன்.நான் அழுததை போலவே அக்கதையை படித்த பலரும் அழுதுவிட்டதாக அவர்களின் கடிதத்தை வைத்து அறிந்துகொண்டேன்.

என் சந்தேகம் என்னவென்றால் டி வி சீரியல் பார்ப்பவர்களும் கூட அழுகிறார்கள். அல்லது பாசமலர் போன்ற படங்களை பார்ப்பவர்களும் அழுகிறார்கள். அப்படி அவர்கள் அழுவதற்கும் அறம் மாதிரியான தீவிர இலக்கியத்தை படித்து அழுவதற்கும் ஏதாவது வித்தியாசம் உள்ளதா?. அல்லது இரண்டு அழுகையும் ஒன்றுதான?. கொஞ்சம் விளக்கமுடியுமா? நேரம் இருந்தால் மட்டும். இல்லையென்றால் விட்டுவிடுங்கள். தொந்தரவுக்கு மன்னிக்கவும்.

அன்புடன்
ஆதவன்.

அன்புள்ள ஆதவன்

சீரியல் பார்ப்பவர்கள் சாமானியர்களாக அழுகிறார்கள், கதைபடிப்பவர்கள் அறிவுஜீவித்தனமாக அழுகிறர்கள் என்று சொன்னால் போதுமா?.

சீரியசாக கேட்டீர்கள் என்றால் முக்கியமான வேறுபாடு உண்டு. பொதுவாக நாம் சாதாரண புனைவில் நம் சொந்த துக்கத்தை அடையாளம் காண்பதன் மூலம் நம்மை அங்கே பொருத்தி வைத்துக்கொண்டு, நம் துக்கத்தை கற்பனைமூலம் பெருக்கிக்கொண்டு அழுகிறோம். இது ஒரு நுட்பமான பாவனை மட்டுமே. நமக்கு அழ வேண்டியிருக்கிறது, அதற்கு புனைவு ஒரு முகாந்திரமாகிறது. ஒரு தூண்டுதலாகிறது. நினைவூட்டலாகிறது.

உதாரணமாக ஒரு கதையில் அம்மா செத்துப்போனால் அம்மாவை இழந்த நான் நான் என் அம்மாவை நினைத்துக்கொண்டு அழுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது என் அம்மாவுக்கான அழுகை அவ்வளவுதான். அதில் அந்த புனைவுக்கு ஒரு தூண்டுதல் காரணம் என்ற பங்களிப்பே உள்ளது. சாதாரணமாக பேசும்போதே கூட நாம் சட்டென்று நம்முடைய மிகையுணர்ச்சிகளுக்கு நாமே ஆளாகி அழுதுவிடுவதுண்டு. டிவி சீரியல் அழுகைகள் அப்படிப்பட்டவை. அவை மெலோடிராமா அல்லது மிகையுணர்ச்சி எனப்படுகின்றன.

மிகையுணர்ச்சிக்கு நிறைய சூத்திரங்கள் உண்டு, அவை நாம் அனைவருக்குமே தெரிந்தவை. முக்கியமானது ரசிகன் அடையாளப் படுத்திக் கொள்ளும் கதாபாத்திரத்தை துக்கத்தின் உச்சத்திற்கு தூக்குவது, அதை தியாகத்தின் சிகரத்திற்கு கொண்டுசெல்வது .

ஒரு சாதாரண ஆள் தன்னைப்பற்றிச் சொல்லும்போது ‘சார், எனக்கு மனசிலே ஒண்ணுமில்லை. நான் யாருக்கும் எந்த கெடுதலும் நினைக்கிறதில்லை. எல்லாரும் நல்லா இருக்கணும்னு மட்டும்தான் நினைப்பேன். ஆனா இத மத்தவங்க புரிஞ்சுகிடறதில்லை. எனக்கு மத்தவங்க என்னென்னமோ கெடுதல் பண்றாங்க. ஆனா நான் அவங்களுக்கு ஒரு தப்பும் பண்றதில்லை. அவங்களுக்காக நான் சாகக்க்கூட தயாரா இருக்கேன்’ என்று சுய குணச்சித்திரம் ஒன்றை அளிப்பதைக் காணலாம். அது ஓர் அந்தரங்கமான அகங்காரத்தின் சித்திரம் மட்டுமே. அந்த குணச்சித்திரத்தை ஒரு புனைவில் ஒரு கதாபாத்திரத்திற்கு அளித்தால் அவர் அதனுடன் அடையாளம் கண்டு அதன் துயரங்களை தானும் நடித்து அழ ஆரம்பித்துவிடுவார். உதாரணம் சின்னக்கவுண்டர். அவர் நல்லவர், அவருக்கு வராத துக்கம் இல்லை. ஒன்று அவர் புடம்போட்டு மீண்டு வருவார். அல்லது தியாகியாக உயிரை விடுவார்.

நாம் பெண்கள்தான் அம்மாதிரி காட்சிகளுக்கு மிகவும் அழுகிறார்கள் என நினைக்கிறோம். ஆனால் ஆண்களும் அதே அளவுக்குக் கண்கலங்குகிறார்கள் என்பதே உண்மை. உலகமெங்கும் இவ்வகை எழுத்துக்கள் உண்டு. சாதாரணமான உதாரணம் என்றால் ரமணிசந்திரன், லட்சுமி போன்றவர்கள். ஒரே வரியில் இந்த வகையான கண்ணீர் எதிர்வினையை இப்படிச் சொல்லலாம். இதன் ஊற்றுமுகம் தன்னிரக்கம் என்ற உணர்ச்சியால் ஆனது.

ஆனால் அதைக்கூட நான் எதிர்மறையாக இப்போது பார்ப்பதில்லை. முன்பு ஓர் ஏளனம் இருந்தது. ஆனால் இன்றுவரும் கொரியன் சீரியல்களையும் கம்ப்யூட்டர் கேம்களையும் பார்க்கையில் இந்த செண்டிமெண்ட் மெலோடிராமாக்களெல்லாம் தெய்வீகமானவையாக தெரிகின்றன. அறம், கருணை, நீதி ஏதுமில்லாத வெறும் கொலைவெறி, காமம், புதிர் அவ்வளவுதான். திரும்பத் திரும்ப சீரியல் கொலைகாரர்கள், மனநிலை பிறழ்ந்தவர்கள். இவற்றைப் பார்ப்பவர்களுக்கு செண்டிமெண்ட் சீரியல்களை குறை சொல்ல என்ன தகுதி?

புனைவை சிறப்பாக அணுகுபவர்கள் அப்புனைவை வாழ்வென கற்பனைசெய்துகொள்பவர்கள். அதில் வாழ்பவர்கள். அவர்களுக்காகவே புனைவுகள் உருவாக்கப்படுகின்றன. ‘ஆய்வாளர்களுக்கு’ அல்ல. புனைவை பிரக்ஞைபூர்வமாக வெளியே நின்று அணுகுபவர்கள், எப்போதும் தர்க்கபுத்தியுடன் அதை மதிப்பிடுபவர்கள் குழந்தைப்பேறுக்காக மட்டுமே உடலுறவுகொள்ளும் பழங்கால கற்பரசிகள்போல. உச்சங்களை முன்னரே தடுத்துவிடுவார்கள். உணர்ச்சிகளே இல்லாமல் புனைவு எழுதுபவர்கள் காண்டம் போட்டுக்கொண்டு உறவு கொள்பவர்கள். அவர்களுக்கு ஏதோ உற்சாகம் இருக்கிறது, விளைவு ஒன்றுமில்லை.

வாழ்க்கையைப்போல புனைவை வாசிக்கிறோம். வாழ்க்கையில் எல்லாம்தானே இருக்கிறது? அழுகையும் அதில் ஒரு பகுதிதானே? ஆகவே துயரமடைவதில் பிழையொன்றுமில்லை. சாம்பாரில் கிடக்கும் புளியங்கொட்டை போல புனைவில் கிடப்பதை விட அது மேல். செண்டிமெண்ட் அழுகையே ஆனாலும்.

ஆனால் இன்னொரு வகை அழுகை உண்டு. நான் பல இடங்களில் வாசிக்கையில் கண்ணீர் விட்டிருக்கிறேன். பிரின்ஸ் ஆண்ட்ரூ [போரும் அமைதியும்] போர்க்களத்தில் படுத்து வானைப்பார்க்கும் காட்சியில். ரஸ்கால்நிக்காஃப் [குற்றமும் தண்டனையும்] சோனியாவை விபச்சார விடுதியில் சந்திக்கும் காட்சியில், ஆத்தர்பௌ [ ஆரோக்கிய நிகேதனம்] ஜீவன் மொஷாய் மீது விழுந்து உயிர்விடும் காட்சியில்…. அப்படி பல இடங்கள். அவை முந்தையவகை கண்ணீர் அல்ல. அவற்றை மிகையுணர்ச்சி[ மெலோடிராமா ] என்று சொல்வதில்லை. மாறாக உச்ச உனர்ச்சி [ஹை இமோஷன்] என்றுதான் சொல்வார்கள் இலக்கிய விமர்சனத்தில். சொல்லப்போனால் ஓரு நல்ல இலக்கியவாசகன் என்றால் இந்த வேறுபாடென்ன என்று தெரிந்தவன், அதை அடையாளம் காண முடிந்தவன் மட்டுமே.

மேதைகளின் கண்ணீரை பல இடங்களில் வாசிக்கிறோம். தல்ஸ்தோய் ஒரு குதிரைப்படைவீரன் அழகிய சீருடையுடன் ஒரு ஓடையை கடந்து தாவிக்குதிப்பதைக் கண்டு கண்ணீர்விட்டார்- எத்தனை கம்பீரமானவன் மனிதன் என்று. ராமாயணம் வாசிக்கக் கேட்கையில் கோசலையின் துயர் கண்டு நித்யா உடைகளில் கண்ணீர்த்துளிகள் சொட்ட அழுவதை நான் கண்டிருக்கிறேன். தாய்மையின் துயரத்தை அவரது மனம் சென்று தொட்டதன் விளைவு அது.

கு.அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார், அன்பளிப்பு போன்ற கதைகளை எண்ணிக்கொள்கிறேன். லா.ச.ராமாமிருதத்தின் பாற்கடல், தி.ஜானகிராமனின் பரதேசி வந்தான், வைக்கம் முகமது பஷீரின் ‘ஜென்மதினம்’ போன்ற கதைகள் நினைவிலெழுகின்றன. அவை அளிக்கும் உணர்ச்சி என்பது கண்ணீர்த் துளிக்கச் செய்யும் உச்சகணங்கள்தான்.

உச்ச உணர்ச்சியின் ஊற்றுமுகம் தன்னிரக்கம் அல்ல. பலசமயம் அதில் துக்கமே இருப்பதில்லை. அது ஒருவகை ஆழமான உவகைதான்.மானுட மேன்மையை உணரும் தருணம், வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக அறியும் தருணம், சாராம்சமான ஒன்றை கண்டுகொள்ளும் தருணம் உருவாக்கும் மன எழுச்சியே அங்கே கண்ணீர் ஆக மாறுகிறது. அது ஒரு வகை பரவச எழுச்சியே ஒழிய ’அழுகை’ அல்ல.

மிகையுணர்ச்சி லௌகீகமானது, உச்ச உணர்ச்சி லௌகீகத்திற்கு அப்பாற்பட்டது. செண்டிமெண்ட் அல்லது மெலோடிராமா செயற்கையானது. பெரும்பாலும் அவ்வுணர்ச்சியை அடைபவரின் சொந்த வாழ்க்கை சார்ந்த நினைவுகளை தூண்டிவிடுவதனாலோ, அந்தப் பண்பாட்டிலேயே உள்ள சில உணர்ச்சிநிலைகளை தொட்டுவிடுவதனாலோ உருவாவது. மாறாக இமோஷனாலிட்டி வாழ்க்கையின்  வாழ்க்கையை வழிநடத்தும் அடிப்படையான சில விழுமியங்களைச் சார்ந்தது. நம் இயல்பான உணர்வுநிலையை கடந்துசெல்லும் நிலை அது. வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக அணுகும் தரிசனம் உருவாக்கும் நெகிழ்ச்சியின் விளைவு.

இலக்கிய ஆக்கங்கள் பலவாகை உண்டு. அறிவார்ந்த நுண்ணிய சலனத்தை உருவாக்கி சிந்தனையை எழுப்பக்கூடியவை [ சுந்தர ராமசாமியின் பல்லக்குதூக்கிகள் போல] உயர்அங்கதத்தின் மூலம் வாழ்க்கை நோக்கை மாற்றியமைக்கக்கூடியவை [ புதுமைப்பித்தனின் கடவுளும் கந்தசாமிபிள்ளையும்போல] கவித்துவமான மனஎழுச்சியை மொழியாளுமை மூலம் உருவாக்கக்கூடியவை [ லா.ச.ராமாமிர்தத்தின் பச்சைக்கனவு போல] தத்துவார்த்த தரிசனத்தின் பலத்தால் நிற்கக்கூடியவை [ ஜெயகாந்தனின் விழுதுகள் போல] .

அதே போல வாழ்க்கையின் உச்சதருணங்களத் தொட்டு ஆழமான மன எழுச்சியை உருவாக்கக்கூடிய கதைகள் உண்டு. மேலே சொன்ன எல்லா வகை கதைகளையும் விட ஒரு படி மேலானவையாகவே அவை உலக இலக்கியத்தில் எண்ணப்படுகின்றன. அவை நேரடியானவை, எளிமையானவை, உத்வேகத்தால் மட்டுமே நிலைநிற்கக்கூடியவை. ஆனால் ஆசிரியன் அடைந்த ஆழமான அற எழுச்சியை, கருணை விரிவை அவை பதிவுசெய்கின்றன. சொல்லப்போனால் அந்த எளிமையின் அளவுக்கு மகத்துவமானதாக எந்த அறிவுநுண்மையும் அங்கதக்கூர்மையும் தத்துவச்செழுமையும் கருதப்படுவதில்லை. மற்ற அனைத்தும் காலப்போக்கில் பழமையாகும். இந்த எழுச்சி அப்படியே அழியாமல் நிற்கும். சொல்லப்போனால் இவை ஒருவகை தொன்மம் [ லெஜெண்ட்] மாறி காலத்தில் நின்றுகொண்டே இருக்கும்.

ஃபாக்னரை விட வில்லியம் சரோயனை விட ரேமண்ட் கார்வரை விட மகத்தானவராக ஐசக் பாஷவிஸ் சிங்கர் கருதப்படுவதற்குக் காரணம் அதுவே. தகழியை விட எம்.டியை விட பஷீர் மேலானவராக கருதப்படுவதற்கான காரணம் அதுவே

தமிழில் அத்தகைய கதைகளுக்குச் சிறந்த உதாரணம் கு அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார், இருவர் கண்ட ஒரே கனவு, அன்பளிப்பு முதலிய கதைகள். தி.ஜானகிராமனின் பரதேசி வந்தான் போன்ற கதைகள். அவை ஒரு பண்பாட்டின் உச்சமான தார்மீகத்தை தொடுகின்றன. வாசகனின் கூரிய புத்தியையோ அவனுடைய கற்பனையோ சென்று தொடுவதற்குப் பதில் அவற்றை தாண்டிச்சென்று அவனுடைய மனசாட்சியை தொட்டு விடுகின்றன.

அவ்வகை கதைகளுக்கு முன் கண்கலங்கி நெகிழாதவர்கள் இலக்கியம் வாசிப்பதை விட மோட்டார் மெக்கானிசம் போன்ற துறைகளில் ஈடுபட்டு தேசப்பொருளாதாரத்துக்கு பங்காற்றலாம்

ஜெ

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Feb 18, 2011 

முந்தைய கட்டுரைமகாராஜன் வேதமாணிக்கம்
அடுத்த கட்டுரைவெண்முரசுக் குறிப்புகள் -கடிதம்