நாள்தோறும்…
முகில்வண்ணம்
ஆழமில்லாத நீர்
அன்புள்ள்ள ஜெ
ஆழமில்லாத நீர் கட்டுரையை வாசித்தபோதுதான் ஒன்று தோன்றியது- இந்தக்கட்டுரைகள் இயற்கை வர்ணனைகள் அல்ல. ஏற்கனவே இப்படி வந்தா கட்டுரைகளை அவ்வாறு நினைத்துக்கொண்டிருந்தேன். இவை நீங்கள் எதையோ கண்டடைவதன் சித்திரங்கள். இவற்றை வெளியே உள்ளவற்றைக்கொண்டு விளக்குகிறீர்கள். அல்லது உங்களுக்கே சொல்லிக்கொள்கிறீர்கள். பெரும்பாலான வாசகர்களுக்கு அது புரியாது என்றாலும் உங்கள் அணுக்கமான வாசகர்கள் வந்து சேர்ந்துவிடுவார்கள் என நம்புகிறீர்கள். அல்லது உங்களுக்காகவே எழுதிக்கொள்கிறீர்கள்.
ஆழமில்லாத நீர், பசுஞ்சுடர்வு, முகில்கள் எல்லாமே ஆழமான தத்துவ உருவகங்களாகவே எழுதப்பட்டுள்ளன. நீங்கள் இயற்கையைப் பார்க்கிறீர்கள். அந்த உணர்ச்சிகளைக்கொண்டு அந்த இயற்கைக்காட்சியை விளக்க முயல்கிறீர்கள். உருவகங்களாக ஆக்குகிறீர்கள். நினைவுகளுடனும் செய்திகளுடனும் தொடுத்துக்கொண்டு ஏதோ ஒரு அரிய வரியில் முடிக்கிறீர்கள். கடல் பெரிய பறவை, ஓடைகள் அதன் சிறிய குஞ்சுகள் என்னும் வரி அத்தகையது
ஆர். ஸ்ரீனிவாசன்
திரு. ஜெயமோகன் அவர்களுக்கு அன்புடன்,
நலம் விழைகிறேன்.
“ஆழமில்லா நீர்” பதிவைப் படித்து முடித்தபோது, ஒன்று தோன்றியது. சில சமயங்களில் படிக்கும் அனுபவமும் பார்க்கும் அனுபவமும் முற்றிலும் வேறாகத்தானிருக்கிறது. அவை இரண்டையும் மனம் கலக்க இயல்வதில்லை. அதாவது, படிப்பதின் மூலம் வேறோன்றைச் சென்றடைகிறது மனம். அதில் பார்ப்பது இல்லை. கனவின் வெளி. அவ்வகையில் வேறொரு தளத்தில் இன்று காலை நிறுத்தப்பட்டேன்.
ஆழ்ந்த தனிமையில் கொள்வது துயரமா என்று தெரியவில்லை. ஆனால் இத்தகைய தருணங்கள் எனக்கு வாய்க்கையில் நான் அடைவது ஒருவித விடுதலையின் அமிழ்வு. எதிலிருந்து என்று தெரியாது. எதனின்றும் விடுபடும் விழைவு என் ஆழத்துள் இருந்ததா என்றும் யோசிப்பேன். புலப்படாது. ஆனால் ஒரு தனித்த ஏகாந்தம். எதுவுமற்ற ஒருசில கணங்களைத் துய்க்கும் பேறு. மூச்சு விடுவதும் தேவையற்றதுபோல். ஆற்றில் குளிக்கும்போது மூக்கு நுனிக்கு சற்று கீழ் வரை தண்ணீரில் மூழ்கி, கண்ணளவில் எதிர்வரும் நீரோட்டத்தைப் பார்க்கும் கணம். அத்தகைய ஒரு தருணத்தை அளித்தது இந்தப் பதிவு. பச்சையத்தில் அமிழ்ந்த ஒரு உணர்வு.
குறும் புற்களைச் சுழித்துச் செல்லும் கலங்கிய நீரின் அடியிலும் தெரிந்த புற்கள், அவற்றின் ஒப்புக்கொடுக்கும் வளைவு….. நீர் சுற்றி வளைந்து செல்வதனாலேயே அழகுகொண்ட ஒரு புகைப்படம். சிறுவயதில் நீர்ச்சாடிப் பூச்சியை மழைவிட்ட காலங்களில் அதன் நாசுக்கான நீர்மேல் நடனத்தைப் பார்ப்பது என் பொழுதுபோக்குகளில் ஒன்றாக இருந்திருக்கிறது. தண்ணீரில் இருப்பதால் தண்ணீர்ப்பூச்சி. அப்போது அதன் பெயர் தெரியாது. நீர்ச்சாடிப் பூச்சி என்ற அந்த ஒரு வார்த்தை என் பால்யத்தை மீட்டெடுத்தது. நீங்கள் எந்தப்பூச்சியைச் சொல்கிறீர்கள் என்பது உறுதியாகத் தெரியாவிடினும் நான் பார்த்த பூச்சியைச் சென்றடைந்தது அந்தப் பெயர்.
தாய்க்கோளி பதினைந்து கிலோமீட்டரில் இருந்தாலும், அவ்வப்போது போய்ப் பார்த்தாலும், எங்களுக்கு பெரும்பாலும் ‘வெள்ளம் பார்ப்பது” இரண்டுமணி நேரம் மோட்டார் ஓடியபின்னும் சந்தேகத்திற்கு மொட்டைமாடியின் தண்ணீர்த் தொட்டியில் தாவி ஏறி பார்ப்பதுதான்.
எழுத்தின் கனவு வெளிக்கு வணக்கமும் நன்றியும்
நா. சந்திரசேகரன்
சென்னை.