இந்தக் குறிப்பை பெங்களூர் விமானநிலையத்தில் இருந்து எழுதுகிறேன். கழிவறைக்குச் செல்லவேண்டும். எனக்கு முன்னால் சென்றவர் ஏகப்பட்ட பெட்டிகள் ஏற்றிய ஒரு தள்ளுவண்டியை கழிவறை வாயிலை முழுமையாக மூடும்படி நிறுத்திவிட்டு சென்றுவிட்டார். உள்ளே எவருமே போக முடியாது. இப்பால் நின்று இருவர் தவிக்க ஒருவர் சத்தம்போட்டார். உள்ளே போனவர் திரும்பி வந்து பொறு என கைகாட்டிவிட்டு துடைக்கும்தாளை எடுத்து நிதானமாக துடைத்துவிட்டு அதை தள்ளி வைத்தார். அப்போது மனிதர்கள் அவசரப்படுவதைப்பற்றி ஒரு புலம்பல் வேறு- ‘என்ன மனிதர்களோ, மரியாதையே தெரியவில்லை’ என்னும் தொனியில்
இப்படி ஒவ்வொரு நாளும் மனிதர்களைப் பார்க்கிறேன். ரயிலில் இவர்களுடன் பயணம் செய்ய இவர்களை ஒவ்வொரு கணமும் மன்னித்துக்கொண்டே இருக்கவேண்டும். பெங்களூர் வந்தபோது ஒருவர் சாப்பிட்டுவிட்டு அந்த அலுமினியத்தாள் கோப்பையிலேயே கையையும் கழுவிவிட்டு கெத்தாக அமர்ந்துகொண்டார். அவர் மனைவி அந்தக்கோப்பையை எடுத்து குப்பையில்போட கொண்டுசென்றார். செல்லும்வழியெங்கும் அது சொட்டியது. அவர் அவளிடம் “பாத்துக் கொண்டுபோடி” என அதட்டினார்.
இந்தியாவில் சுயமுன்னேற்ற வகுப்புகள், மனஅமைதிக்கான தியான வகுப்புகள் நடந்தபடியே இருக்கின்றன. பல்லாயிரம் ரூபாய் செலவில் அதில் பங்குகொள்கிறார்கள். அவை இரண்டுக்கும் முன் இங்கே அவசியமானவை, அடிப்படைநாகரீகம் கற்பிக்கும் வகுப்புக்கள். சொல்லப்போனால் அதில் ஒரு சான்றிதழ்பெறாதவர்களுக்கு பட்டமே தரக்கூடாது, எங்கும் வேலை அளிக்க்க்கூடாது, பாஸ்போர்ட் கொடுக்கக்கூடாது என சட்டமே போடலாம். ஐயமே இல்லாமல் சொல்வேன், உலகிலேயே பொதுநாகரீகம் அறியாத மக்கள்கூட்டம் இந்தியர்களாகிய நாம்தான்.
இதற்குப் பலகாரணங்கள் இருக்கலாம். நமது மிதமிஞ்சிய மக்கள்தொகையும் நெரிசலும் ஒருகாரணம். எங்கும் முட்டி மோதியே நமக்குப் பழக்கம். ஆகவே பிறன் என்னும் உணர்வே இல்லை. தன்னைப்பற்றி அன்றி எண்ணமே இல்லை. அப்படி இருந்தால்தான் வாழமுடியும் என்னும் நம்பிக்கை நம்முள் வேரூன்றியிருக்கிறது.
இன்னொரு காரணம், நாம் நிலப்பிரபுத்துவ கால சமூகமாக இருந்து எந்த பண்பாட்டுமாற்றக் காலகட்டமும் இல்லாமல் நேரடியாக முதலாளித்துவ நவீன காலகட்டத்திற்கு வந்தவர்கள் என்பது. நிலப்பிரபுத்துவகாலம் ஒவ்வொருவரையும் அவரவர் சிறுவட்டத்திற்குள் மட்டுமே வாழும்படி பழக்கி வைத்திருந்தது. சாதி, இனம், குடும்பம் என அந்தக்கோழிமுட்டைக்குள் வாழ்வதற்குரிய ஆசாரங்களே நமக்குத்தெரியும். நாம் நவீனகாலகட்டத்தில் சட்டென்று பொதுச்சமூகமாக ஆனோம். ஒரு பொதுச்சமூகம் கடைப்பிடிக்கவேண்டிய நெறிகளை எவருமே நமக்குச் சொல்லித்தரவில்லை. ஆகவே நாம் வெற்றுக்கும்பலாகவே திரள்கிறோம். எல்லா இடத்திலும். கோயில்களில் நாம் போடும் கூச்சல், முட்டிமோதல், ஊடாகப்பாய்தல்களை அன்னியர் கண்டால் ஒரு வழிபாட்டிடத்தில் இப்படி நடந்துகொள்ளும் இவர்கள் எந்த வகையான மக்கள் என திகைப்பையே அடைவார்கள்.
இயகாகோ சுப்ரமணியம் கோவையின் அடையாள முகங்களில் ஒன்று. தன் உழைப்பால், தொழில்திறனால் உயர்ந்த தொழிலதிபர். உலகம் சுற்றியவர். பல்வேறுவகையான மனிதர்களுடன் பழகியவர். தனிப்பட்ட முறையில் எட்டாண்டுகளாக அவரை நான் அறிவேன். குன்றாத ஊக்கம் கொண்டவர். இளமைதீராத சிரிப்பு என்பதே அந்த ஆற்றலின் அடையாளம். சொல்வதை நயம்படச் சொல்பவர், மிகமிகக் கடுமையான கருத்தைக்கூட இனிதாக நட்பாக அவர் சொல்வதை கவனித்திருக்கிறேன். நான் கற்றுக்கொள்ள விழையும் பண்பு அது
நான் மேலே சற்றே எரிச்சலுடன் சொல்லியிருக்கும் அதே கருத்துக்களைத்தான் நட்பார்ந்த தொனியில் சுப்ரமணியம் அவர்களும் சொல்கிறார். நாம் பொதுச்சூழலில் எப்படி நடந்துகொள்கிறோம், அது உருவாக்கும் நடைமுறைச்சிக்கல்கள் என்ன என்பதைச் சுட்டிக்காட்டி அவற்றைத் திருத்திக்கொள்ளும்படி சொல்லாமல் உணர்த்துகிறார். உதாரணமாக முதல்கட்டுரை, பெயர்சொல்லாமல் வந்து நம் முன் நின்று “யாரு தெரியுதா? என்ன மறந்துட்டீங்களா?” என படுத்தி எடுப்பவர்களைப் பற்றியது. என் பிரச்சினை என்னால் குரல்களை அடையாளம்காண முடியாது என்பது. தொலைபேசியில் அழைத்து நேரடியாக பேச ஆரம்பிப்பார்கள். நான் தட்டுத்தடுமாறி ஆளைப்பிடிக்க நெடுநேரமாகும், அதற்குள் சொன்னசெய்தி நழுவிவிட்டிருக்கும். நான் செல்பேசியில்கூட, எப்போதுமே என்னிடம் பேசும் நண்பர்களிடம்கூட, வணக்கம் நான் ஜெயமோகன் பேசுறேன்’ என்றுதான் ஆரம்பிப்பேன். அதைக் கிண்டல்செய்பவர்களும் உண்டு
விமானங்கள் வந்து நின்றதுமே பாய்ந்து எழுந்து முட்டிமோதி வெளியேறத் துடிப்பவர்கள், பெட்டியை பிறர் தலைக்குமேல் சுழற்றி உருவி எடுப்பவர்கள் இந்தியாவில் மிகுதி. எப்படி பாய்ந்து எழுந்தாலும் விமானக்கதவு திறக்காமல் வெளியே செல்லமுடியாது. வரிசையையும் மீறமுடியாது. ஆனாலும் எழுந்து நின்றுகொண்டிருப்பார்கள். சுப்ரமணியம் அதை வேடிக்கையாகச் சுட்டிக்காட்டுகிறார். திரையரங்குகளில் படம் ஓடிக்கொண்டிருக்கும்போது செல்பேசியில் “ஆமா, இப்பதான் வந்தேன் . ஆமா படம் பாக்க வந்தேன்” என்றுகூச்சலிட்டு பேசுபவர்கள் என நம் நடத்தையின் பல முகங்களைச் சுட்டிக்காட்டுகிறார்
நம் பொதுக்கூட்டங்களைப்பற்றிய கட்டுரையே இவற்றில் உச்சம். நம் கூட்டங்களில் எவர் வேண்டுமென்றாலும் என்ன வேண்டுமென்றாலும் பேசலாம். அறிவிக்கப்படாதவர்கள் பேசலாம். கேள்விகேட்கிறேன் என பேருரை ஆற்றலாம். பேசிக்கொண்டிருப்பவர் முன் அமர்ந்து நாளிதழ் படிக்கலாம். இன்னொருவரிடம் பேசலாம். எந்த ஒழுங்குமற்ற ஒரு கூட்டம் என்பதே இங்கே பொதுக்கூட்டம் எனப்படுகிறது. அக்கூட்டங்களின் அனுபவங்கள் வழியாக பேணப்படவேண்டிய நெறிகளை சுப்ரமணியம் அவர்கள் சொல்கிறார்
ஆனால் கடிந்துரைக்கவேண்டிய இடங்களைக்கூட வேடிக்கையாக, ‘இப்படித்தானுங்க நாமள்லாம்’ என்னும் தொனியில் சொல்கிறார். ஒருவகையில் அதுவும் சரிதான். ஒரு குறை சுட்டிக்காட்டப்பட்டால் ‘அதெப்டீங்க, நாமள்லாம் மூத்தகுடி தொல்குடி இல்லீங்களா?” என சீறுபவர்கள் நாம். வாழ்க்கையை அறிந்த பெரியவர்களுக்கு அவர்களுக்கே உரிய ஒரு விலக்கமும் சிரிப்பும் அமைந்துவிடுகிறது.
தமிழில் வெளிவந்துள்ள நல்ல சுயமுன்னேற்ற நூல்களில் ஒன்று இது என தயங்காமல் சொல்வேன். சுயமுன்னேற்றம் என்றால் வேலை, தொழில் ஆகியவற்றில் முன்னேறுவது மட்டும் அல்ல, பண்புநலன்களில் அடையும் முன்னேற்றமும்கூடத்தான்
[இயக்காக்கோ சுப்ரமணியம் எழுதிய விந்தை மனிதர் என்னும் நூலுக்கு எழுதிய முன்னுரை]