கேள்வி பதில் – 72

கடந்த ஒரு வருடத்தில் வந்த கவிஞர்களை தயவுசெய்து பட்டியல் இடமுடியுமா? தாங்கள் கவிதைக்குக் கொடுத்திருக்கும் அர்த்தத்திற்கும் தினம் தினம் கவிஞர்கள் வருகையை ஆதரித்ததற்கும் உடன்பாடு இருப்பதாகத் தெரியவில்லையே!

— கஜன்.

கடந்த ஒருவருடத்தில் வந்த கவிஞர்களைப் பட்டியலிடவேண்டுமென்றால் நான் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பட்டயச் சன்றிதழ் ஏதும் பெற்றிருக்கவேண்டும். வருடம் நூறு தொகுப்புகளுக்குக் குறையாமல் வெளிவருகின்றன. முக்கியமான கவிஞர்கள் என்றால் என் கணிப்பைச் சொல்லலாம். முதற்தொகுப்புகள் மூலம் சென்றவருடம் முக்கியமாக கவனத்துக்கு வந்தவர்கள் உமாமகேஸ்வரி ‘வெறும்பொழுது’ [தமிழினி பதிப்பகம்], முகுந்த் நாகராஜன் ‘அகி’ [உயிர்மை பதிப்பகம்]

தினம் தினம் கவிஞர்கள் வருவது ஒரு கவிதைச்சூழலை மொழியில் உருவாக்கும். கவிமொழி என்று சொல்லப்படும் மீமொழி [அல்லது குறிமொழி] பரவலான அங்கீகாரம் பெற வழியமைக்கும். ஒரு கலாசார சூழலில் கவிதை என்ற வடிவத்துக்கான முக்கியத்துவத்தை நிறுவிக்கொண்டே இருக்கும். மேலும் நல்ல கவிதை அல்லாத சாதாரண வரிகள்கூட ஓரளவாவது எழுச்சிபெற்ற மனநிலையில்தான் எழுதப்படுகின்றன- கவிதையாக அவை வெற்றிபெறாவிட்டாலும் அம்மனநிலை தொடர்வது அவசியமானதாகும்.

கவிதையின் அலை நீடிக்கவேண்டுமானால் பலர் பலவிதமாக அதைப் பயன்படுத்துவது அவசியமானதே. உதாரணமாக தமிழில் நடந்த சில விஷயங்களைச் சொல்லலாம். புதுக்கவிதை எழுத்து இயக்கத்தால் உருவாக்கப்பட்டது. அதை வானம்பாடி இயக்கம் பிரபலப்படுத்தியது. ஏராளமான இளைஞர்கள் தங்கள் விருப்பப்படி கவிதைகள் எழுதிக் குவிக்க அது வழிவகுத்தது. அவ்வாறு ஏராளமான கவிதைகள் வந்ததனால் ஒரு முக்கியமான விளைவு ஏற்பட்டது. ஏற்கனவே ஒருவகை மேற்சூழல் [elite] சார்ந்து எழுதப்பட்ட புதுக்கவிதை பரவலாகச் சென்றடைந்து பல்வேறு வாழ்க்கைச் சூழல்களைச் சேர்ந்த பலவிதமான மனிதர்கள் புதுக்கவிதை எழுத ஆரம்பித்தனர். புதுக்கவிதை என்ற தளையற்ற வடிவம்தான் அவர்கள் எழுதவே காரணம். அவ்வாறு பலர் எழுதிக்குவிக்க ஆரம்பித்தபோது புதுக்கவிதையில் ஏராளமான குப்பைகள் வந்து குவிந்தன. கவிதை வார இதழ்களில் துணுக்குகளாகச் சீரழிந்தது. கவிதையே அல்லாத அனுபவப் பதிவுகள், வெற்றுச் சீர்திருத்தக் கருத்துகள், சாதாரணமான சொல்விளையாட்டுகள் பிரகடனங்கள் ஆகியவை ஏராளமாக வந்தன.

ஆனால் அதன் விளைவாக அதுநாள்வரை அச்சில்வராத தமிழ் வாழ்வனுபவங்கள்கூட கவிதையில் வெளிவந்தன. முற்றிலும் புதிய மொழிவழக்குகள் கவிதையில் இடம்பெற ஆரம்பித்தன. அத்தனை குப்பைகளையும் மீறி அவை நல்ல வாசகர் கண்களுக்குப் பட்டன. அழுத்தமான மாறுதல்களை அவை உருவாக்கின. ஆரம்பத்தில் இந்த அலையின் மொழியை வானம்பாடி இயக்கத்தின் மேடைப்பிரகடன மொழி பெரிதும் பாதித்தாலும் மெல்ல அது ஆழமும் மௌனமும் கொண்ட கவிமொழியாகத் தன்னை வலிமைப்படுத்திக் கொண்டது. நமது இன்றைய முக்கியக் கவிஞர்களில் பலர் வானம்பாடி மூலம் உருவான இந்த அலையினால் கவிதைக்குக் கொண்டுவரப்பட்டு தங்கள் தனித்துவத்தை மெல்ல அறிந்துகொண்டு நிலைநாட்டிக் கொண்டவர்கள்தான்– மிகச்சிறந்த உதாரணம் மனுஷ்யபுத்திரன். தமிழ்க்கவிதையில் புதிய மாற்றம் இந்த அலைமூலம் உருவானது. பழமலை முதல் இளம்பிறை வரையிலான கவிஞர்களின் நாட்டார்மொழிக் கவிதைகள் இந்த அலை மூலம் உருவானவையே.

ஒரு கலையை மக்கள் பரவலாகப் பயன்படுத்தும்போது பலவகையான சிதைவுகளுக்கும் சரிவுகளுக்கும் அது உள்ளாகத்தான் செய்யும். ஆனாலும் மக்கள் பயன்படுத்தும்போதுதான் புதிய திறப்புகள் உருவாகும். அக்கலையின் உச்சங்கள் அடையாளப்படுத்தப்படும். அப்படிப்பட்ட ஓர் அலை நிகழும்போது அதைக் கூர்ந்து அவதானிப்பதும், திறனாய்வுநோக்கைத் துல்லியமாக வைத்துக் கொண்டு நல்ல கவிதைக்காக வாதாடியபடியே இருப்பதும்தான் அவசியமானது. வானம்பாடி வழியாக வந்த இளைஞர்களில் பலர் தங்கள் சுயக்குரலை அடைந்தமைக்குக் காரணம் அன்றைய கவிதைவாசகர்களும் திறனாய்வாளார்களும் கொண்ட கவனமும் தொடர்ந்து நல்லகவிதைக்காக அவர்கள் பேசியதும்தான். இன்று இணையம் எல்லாரும் எழுதிக்குவிக்கும் ஊடகமாக உள்ளது. இது ஓர் அலையை உருவாக்கியுள்ளது. இங்கும் நாம் கைக்கொள்ள வேண்டிய நிலைப்பாடு இதுவே.

முகுந்த் நாகராஜனை உதாரணமாகச் சொல்லலாம். இணையம் மூலம் இலக்கியமறிந்து எந்த இதழிலும் ஒரு கவிதைகூட வெளியிடாமல் முதல்தொகுதியை வெளியிட்டவர் அவர். விற்பனை உரிமை உயிர்மைக்கு. சென்னை புத்தகக் கண்காட்சியில் அதிகம் விற்ற கவிதை நூல்களில் அதுவும் ஒன்று. யாருக்குமே ஆளைத்தெரியாது. ஆனால் புரட்டிப்பார்த்து கவிதை பிடித்ததும் ஒரு பிரதி வாங்கிக் கொண்டார்கள். உயிர்மையில் அவரது கவிதைகள் பிறகு வந்தபோது அவை கவனிக்காமல் போய்விடக்கூடாது என நான் ஒரு கடிதம் எழுதினேன். ஆனால் அவ்விதழுக்கு எதிர்வினையாக அதிகம்பேர் அக்கவிதைகள் குறித்துத்தான் எழுதினார்கள். இன்றைய அலைதான் முகுந்த் நாகராஜன் போன்ற கணிநிரலாளரைக் கவிதைக்குக் கொண்டுவருகிறது.

நல்ல கவிதை என்றுமே அபூர்வமானது. நல்ல கவிஞன் எழுதும்போதுகூட நல்ல கவிதை எப்போதும் நிகழ்வது இல்லை. நல்ல கவிதை ஒரு கலாசாரத்தின் ஆழ்மனதின் குரலாக ஒலிப்பது. மகத்தான கவிதை அக்கலாசாரத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளின் சாரமாகவே ஒலிக்கும் தன்மை கொண்டது. ‘அற்றைத்திங்கள் அவ்வெண்நிலவில்’ [பாரிமகளிர்] ஒரு நல்ல கவிதை. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ [கணியன் பூங்குன்றனார்] மகத்தான கவிதை. ‘ஆத்தூரான் மூட்டை’ [ந.பிச்சமூர்த்தி] நல்ல கவிதை. ‘காவியம்’ [பிரமிள்] மகத்தான கவிதை.

எல்லாரும் கவிதை எழுதுவோம். நல்ல கவிதையை தேடி ரசிப்போம். மகத்தான கவிதைக்காக எக்கணமும் காத்திருப்போம்.

முந்தைய கட்டுரைகேள்வி பதில் – 71
அடுத்த கட்டுரைகேள்வி பதில் – 74