விஷ்ணுபுரம்- கடிதம்

விஷ்னுபுரம் நாவல் வாங்க

https://vishnupuram.com/

விஷ்ணுபுரம் கடிதம்

விஷ்ணுபுரம் கடிதம்

 

அன்புள்ளஜெ,

நான் பெரிய வாசிப்பாளன் கிடையாது. 2010 வரை பாலகுமாரன், சுஜாதா போன்றவர்களின் சில நாவல்கள் வாசித்ததோடு சரி. எதோ ஒரு தேடலில் கிடைத்த உங்களின் இணையதளம் தினம்தோறும்கண்டிப்பாக தொடரும் வாசிப்பாக ஆகியது. அதன் தொடர்ச்சியாக விஷ்ணுபுரத்தை வாங்கிவைத்திருந்தாலும் வாசிக்க ஆரம்பித்தது என்னவோ சிறிது காலத்திற்கு முன்பு தான்.

நாவலின் முதல் பகுதியான தோற்றுவாய் படித்ததும் இரண்டுமாதம் இடைவெளி. புரியாததினாலோ பிடிக்காததினாலோ அல்ல அதன் செறிவினால், அதன் உள்ளிழுக்கும் தன்மையால், அதுகேட்கும் மனக்குவிப்பினால். பிறகு அவ்வாறு மனம் ஒருமுகம் கிடைக்காத தருணங்களில் வாசிக்க எடுக்கவில்லை. சில பகுதிகள் இரண்டு மூன்று முறைவாசிக்கவேண்டி இருந்தது.

குறிப்பாக கெளஸ்துபம் ஞானசபை விவாதங்கள் கொஞ்சம்கூடபுரியவில்லை. அதனாலேயே வாசிக்கவும் இயலவில்லை. பின்பு நண்பரின் சொல்படி கிண்டில் செயலியை கைபேசியில் நிறுவி இந்தியஞானம் வாசித்தேன். அதன் பிறகே கொஞ்சமாவது வாசிக்க முடிந்தது (முழுவதும் புரியவில்லை என்றாலும்). அதனாலேயே நீண்ட காலம்.

கண்டிப்பாக எழுதவேண்டும் என்று தோன்றினாலும் அதனை எப்படி கோர்வையாக எழுதுவது என்று தெரியவில்லை. என்றாலும் என்போக்குக்கு எழுதிவிட முடிவு செய்துவிட்டேன்.

விஷ்ணுபுரம்நாவல்:

நாவல் ஸ்ரீபாதம், கெளஸ்துபம் மணிமுடி என்ற மூன்று பாகங்களாக, வேறுவேறு காலங்களில் நடப்பதாக வருகிறது என்றாலும் விஷ்ணுபுரத்தில் எதுவும் புதிதாக நடப்பது இல்லை. அவை கால ஓட்டத்தில் மறுபடி மறுபடி நடந்துகொண்டிருக்கிறது. மறுபடி மறுபடி பாடப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

ஒவ்வொரு காலத்திலும் விஷ்ணுபுரத்தை தேடிக்கொண்டே இருக்கிறார்கள். ஸ்ரீபாதத்திற்கு முன்பு “தோற்றுவாய்”. அதில் பிரமாண்டமான ஒரு “கற்சிலையின்” பாதத்தை, இருவர் சோனாநதிக்கரையில் கண்டடைகிறார்கள் (அதை சிற்பி கனவு எனக் காண்கிறார்). போலவே கெளஸ்துபம் பகுதிக்கு முன்பு இருவர் காடுகளின் வழியாக விஷ்ணுபுரத்தை தேடிக்கொண்டிருக்கிறார்கள். இங்கு வந்தவர்களைக்காட்டிலும் பிரியதாராவில் உயிர்விட்டவர்கள் அதிகம் என்கிறார் ஒருவர்.

நாவல் முழுதும் நாய் (கிருஷ்ணபைரவன்) ஒரு (mystic) மறைபொருளாக வருகிறது. கிருஷ்ணபைரவன் விஷ்ணுபுரத்தின் ஒரே உரிமையாளன். விஷ்ணுபுரத்தை வழிநடத்திச் செல்கிறான். ஸ்ரீபாதத்தில் விஷ்ணுவை கண்டறிய வழிநடத்துபவன் நாவலின் ஒவ்வொரு முக்கிய நிகழ்விலும் திகழ்ந்து இறுதி அழிவுவரை இருக்கிறான்.

ஸ்ரீபாதம்.

ஸ்ரீபாதம் முழுவதும் விஷ்ணுபுரம் என்ற பிரமாண்ட கோவிலிலும் அதனை ஆதாரமாகக் கொண்ட நகரத்திலும் நடக்கும் பிரமாண்ட திருவிழாவை முன்னின்று நடக்கும் நிகழ்வுகள்.

வாசிக்கும் தோறும் மத்தியக்கிழக்கு நாடுகளில் ஒன்றில் இருப்பதாய் உணர்வு.

சங்கர்ஷணன் போன்றோர்களை கனவுகளோடு உள்நோக்கி இழுப்பதிலாகட்டும், அதன் சுழட்சியில் சுற்றவிட்டு ஒரு கணத்தில் தூக்கி வீசுவதிலாகட்டும். விஷ்ணுபுரத்தின் பிரமாண்டம், செல்வவளம் அங்கு நிலைநிறுத்தப்படும் சட்டஒழுங்கு, அதன் அமைப்பு மற்றும் அதன் உள்ளார்ந்தே இருக்கும் அதிகார வட்டம் அதன் பின்புறமுள்ள அமைப்பு சார்ந்த அரசியல் எல்லாம் இன்று நான் இருக்கும் இடத்தை நினைவு படுத்திக்கொண்டே இருந்தது. (ஆனாலும் வீரன் என்ற யானையை வீரபைரவன் என்ற யானை கொல்லும் சித்திரமும் பெருந்தச்சனுக்கு கொடுக்கும் தண்டனையும் மனதை பதைபதைக்கச் செய்வது).

ஆனால் விஷ்ணுபுரத்தில் அங்கெனவே இருக்கும் தனித்தன்மைகள் உண்டு.

விஷ்ணுபுரக் கோவிலின் பிரமாண்டம்.

விஷ்ணுபடுத்திருக்கும் சிலையின் நீளம் அறுநூறு கோல் அளவு. மூன்றுபிரமாண்டவாயில்கள். ஒவ்வொரு வாயிலும் நான்கு ஆண்டுகளுக்கு திறந்திருக்கிறது. கோவிலின் மைய ராஜகோபுரம் வானை முட்டி மேகத்துக்குள் இருக்கிறது, நூற்றெட்டு அடுக்குகளில் முப்பத்தாறாவது அடுக்கு மேகத்தை தொட்டுவிடுகிறது. தேவர்கள் அதன் வழியாக இறங்கி வருகிறார்கள். வானை முட்டி நின்றாலும் எல்லோராலும் எல்லா இடங்களிலிருந்தும் பார்க்க முடிவதில்லை.

இந்த பிரமாண்டண்டத்தை வாசிக்கும் தோறும் மனம் அங்கோர்வாட் கோவிலை கற்பனை செய்து கொண்டது.

பழனிவேல்ராஜா

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-7
அடுத்த கட்டுரைபொதிகை தொலைக்காட்சியில் காந்தி