பகுதி இரண்டு : குருதிமணிகள் – 4
தீர்க்கசியாமர் பாடிக்கொண்டிருந்தபோதே அப்பாலிருந்த முதிய சேடி ஓலைச்சுவடியில் அதிலிருந்த செய்திகளை பொறித்துக்கொண்டிருந்தாள். அவளுடைய எழுத்தாணியின் ஓசை யாழின் கார்வையுடன் இணைந்தே கேட்டது. யாழிசை பறந்துகொண்டிருக்க அது நிலத்தில் அழுந்த ஊர்ந்துகொண்டிருப்பதுபோலத் தோன்றியது. கனகர் அந்த எழுத்தாணியையும் தீர்க்கசியாமரின் யாழையும் மாறிமாறி நோக்கிக்கொண்டிருந்தார். அவை இரண்டும் ஒன்றையொன்று தொட முயன்றபடி சுழன்றுவந்துகொண்டிருக்கின்றன என்று எண்ணிக்கொண்டார்.
“அன்னைக்கு அரிசிப்பொடியும் மஞ்சள்பொடியும் வேம்பின்தளிரும் செம்மலர்களும் கொண்டு பூசனை செய்க! ஐந்து கான்மங்கலங்களும் எட்டு இல்மங்கலங்களும் அன்னைக்கு படைக்கப்படுக! அன்னையின் களமுற்றத்தில் அவள் மலர்வடிவென எழுக!” என அவர் கூறிக்கொண்டே சென்றார். “அஸ்தினபுரியின் தென்மேற்கு எல்லையில் திகழும் அன்னையின் ஆலயத்தில் பூசனை எழட்டும். முழங்குக முழவுகள்! ஓங்குக சங்கங்கள்! அன்னையை வாழ்த்தி எழுக மகளிர் குரல்கள்! முன்பு செய்ததுபோல் பூசனைகள் நிகழ்க! அப்பூசனை செய்த சூதர்மகளிரே இப்பூசனையையும் நிறைவுற இயற்றுக! நலமே நிகழ்க! ஆம், நன்றே நிகழ்க! ஆம், மங்கலமே எஞ்சுக! ஆம்! ஆம்! ஆம்!”
அவர் பாடி முடித்ததும் கனகர் “ஆனால் அங்கே அவ்வண்ணம் ஓர் ஆலயம் இல்லை” என்றார். காந்தாரி அதை கேட்டதுபோலத் தெரியவில்லை. கனகர் மேலும் உரக்க “அங்கே அவ்வண்ணம் ஓர் ஆலயம் இல்லை, சூதரே” என்றார். தீர்க்கசியாமர் திகைப்புடன் திரும்பி நோக்கி “எங்கே?” என்றார். “நீங்கள் சொன்ன இடத்தில் வஜ்ரநாகினியின் ஆலயம் ஏதுமில்லை… நான் நன்கறிவேன்.” தீர்க்கசியாமர் “நான் என்ன சொன்னேன்?” என்றார். அவர் விழிகளை நோக்கியபின் பேசுவதில் பொருளில்லை என உணர்ந்து கனகர் அமைதியானார். “எந்த ஆலயம்?” என தீர்க்கசியாமர் மீண்டும் கேட்டார். கனகர் ஒன்றும் சொல்லவில்லை.
சத்யசேனை “மெய்யாகவே அங்கே அவ்வண்ணம் ஆலயம் ஏதுமில்லையா?” என்று கேட்க முதிய சேடி “இல்லை அரசி, அங்கே அப்படி எந்த ஆலயமும் இல்லை” என்றாள். இன்னொரு முதுசேடி “அவ்வாறு ஓர் ஆலயம் இந்நகரிலேயே இல்லை. அவ்வண்ணம் ஒரு தெய்வத்தை கேள்விப்பட்டதே இல்லை” என்றாள். “ஆம்” என இணைந்த குரலில் சேடியர் சொன்னார்கள். “அழிந்திருக்கும். இவர் சொல்வது தொல்பழங்காலத்துக் கதையை” என்று சத்யவிரதை சொன்னாள். “எனில் அவ்வண்ணம் ஒன்றை அமைக்கவேண்டும்… உடனே அமைக்கத் தொடங்கினால்கூட…” என்று சத்யசேனை சொல்ல சத்யவிரதை “அது எளிதா என்ன? நாம் பூசனையை நாளையே செய்வதென்றாலும்கூட…” என்றாள்.
“ஏன் கல்லிலோ மண்ணிலோதான் அமைக்கவேண்டுமா? மரத்தாலோ துணியாலோகூட அமைக்கலாமே” என்றாள் சத்யசேனை. காந்தாரி “இல்லை, அவர் ஆலயத்தை அமைப்பதைப்பற்றி சொல்லவில்லை. அது அங்கிருக்கிறது என்றார்” என்று மெல்லிய குரலில் சொன்னாள். “அங்கே அது இல்லை என்பதில் ஐயமில்லை. வேண்டுமென்றால் சற்றே இடம் மாறிக்கூட இருக்கலாம். தேடும்படி ஒற்றர்களிடம் ஆணையிடலாம், அரசி” என்றார் கனகர். “வேண்டாம்… அது மண்ணுக்கு அடியில் இருக்கலாம்… இவரை அழைத்துச்செல்க! இவர் காட்டும் இடத்திலேயே குழிதோண்டிப் பாருங்கள்…” என்று காந்தாரி சொன்னாள். “இவர் பாடுகையில் கருவடிவில் சுருண்டு புதைந்திருக்கும் அன்னை என்றுதான் சொன்னார்… பெரும்பாலும் அவ்வாலயம் மண்ணுக்கு அடியில்தான் இருக்கும்.”
அவ்வண்ணம்தான் இருக்குமென உடனே தோன்றினாலும் கனகர் வீணாக அதை எதிர்த்தார். “இவர் மிக இளையவர், கேட்ட கதைகளை பாடுபவர். இவருக்கு தன் நாவிலெழுவதென்ன என்றுகூட தெரிந்திருக்கவில்லை.” காந்தாரி “அவர் அனைத்தும் அறிந்த ஆழம்கொண்டவர்” என்றாள். கனகர் சலிப்புடன் “தங்கள் ஆணைப்படி” என்றார். காந்தாரி “சூதரே, அந்த அன்னையின் ஆலயமிருக்கும் இடத்தை காட்டுக!” என்றாள். “எந்த அன்னை?” என்று தீர்க்கசியாமர் கேட்டார். “ஆலயம் என்றால் எங்குள்ளது?” கனகர் “நான் உரைத்தேனே அரசி, அவர் உளம்குழம்பிப்போன இளையவர். அவருள் வாழும் கதைகளுக்கு அவரே பொறுப்பல்ல” என்றார்.
காந்தாரி “சூதரே கூறுக, உங்கள் உள்ளத்தை சூழ்ந்துநோக்கி சொல்லுங்கள். எங்கே அந்த ஆலயம் உள்ளது? தென்மேற்கிலா? அன்றி வேறெங்கிலுமா?” என்றாள். தீர்க்கசியாமர் பற்கள் தெரிய புன்னகைத்து “நான் என்ன சொன்னேன் என இவர்கள் எவரேனும் என்னிடம் மீளவும் சொல்லமுடியுமா?” என்றார். காந்தாரி கைநீட்டி “அருகே வருக!” என்றாள். “என்ன?” என்றார் தீர்க்கசியாமர். “அருகே வருக, நான் உம்மை தொட்டறியவேண்டும்” என்றாள் காந்தாரி. “நான் எப்படி?” என்றார் தீர்க்கசியாமர். சத்யசேனை அருகணைந்து அவர் கையை பற்றினாள். “இது அரசி அல்ல… இது விழிகொண்டவரின் கை” என்றார் தீர்க்கசியாமர்.
சத்யசேனை அவரை கொண்டுசென்று காந்தாரியின் அருகே நிறுத்தினாள். அவர் கைநீட்ட அக்கையை காந்தாரி பற்றிக்கொண்டாள். “ஆம், இது அரசியின் கை” என்றார் தீர்க்கசியாமர். இரு கைகளும் நடுங்குவதுபோல கனகர் எண்ணினார். காந்தாரியின் முகம் கூர்கொள்ள உதடுகள் அழுந்தியிருந்தன. காந்தாரி பெருமூச்சுவிட்டாள். பின்னர் கைகளை விலக்கிக்கொண்டாள். “பேரரசி அழகாக இருக்கிறார்கள்” என்றார் தீர்க்கசியாமர். காந்தாரி “வெளியே நின்றிருக்கும் யானையை தொடர்ந்துசெல்க… அது சென்று நின்றிருக்கும் இடத்தை அகழ்ந்து நோக்குக!” என்றாள். கனகர் திகைப்புடன் இருவரையும் மாறிமாறி நோக்கினார். பின்னர் “ஆணை, அரசி!” என்றார்.
தீர்க்கசியாமரை அனுப்பிவிட்டு கனகர் வெளியே விரைந்தார். அங்கே சம்வகை நின்றிருக்கவேண்டும் என அவர் விழைந்தார். அவளில்லாமல் அப்பணியை செய்யமுடியாதென்று தோன்றியது. அவளிடம் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டுச் சென்று படுத்துவிடவேண்டும். எச்சமில்லாமல் கரைந்து அழிந்துவிடவேண்டும். அவர் வியர்வையுடன் அங்குமிங்கும் நோக்க ஏவலன் “காவல்பெண்டு இங்குதான் இருக்கிறார்கள். தாங்கள் தேடினால் கூறும்படி உரைத்தார்கள்” என்றான். “நான் உன்னிடம் கேட்டேனா? கேட்டேனா?” என கனகர் கூவினார். “அறிவிலி… உன் பணியை நீ நோக்கு. சவுக்கால் உடலை வரிவரியாக இழைக்க ஆணையிடுவேன்… கீழ்மகனே.”
அவன் பேசாமல் நின்றான். கனகர் மூச்சிளைக்க “அவளை வரச்சொல்” என்றார். அவன் தலைவணங்கி அகன்றான். அவர் எங்கேனும் அமர விழைந்து சூழ நோக்கினார். சம்வகை அருகே வந்து வணங்கியதும் உரக்க “இங்கே பணியாற்றுவதைவிட யானைக்கீழ் தலையை கொடுக்கலாம்” என்று கூவினார். அவள் ஒன்றும் சொல்லவில்லை. “என்ன பேசாமல் நிற்கிறாய்?” என்றார். “கொடுக்கலாம்” என அவள் சொன்னாள். அவர் சீற்றம் அடங்கி புன்னகைத்து “ஏளனம் செய்கிறாயா? நான் இப்போது சேற்றில் சிக்கிய யானை. தவளைகள் ஏறி விளையாடுகின்றன” என்றார். பின்னர் “அரசியின் ஆணை. அந்த வெறியெழுந்த பிடியானையை கொண்டுசென்று தென்மேற்கு கோட்டைப்பகுதியை துழாவவேண்டும். அது நமக்கு மண்ணுக்குள் புதைந்த ஆலயம் ஒன்றை கண்டறிந்து அளிக்கும்” என்றார்.
சம்வகை “ஆணை” என்றாள். “என்ன ஆணை? உனக்கு என்ன செய்வதென்று புரிகிறதா? அந்த பிடியானைக்கு பித்து எழுந்துள்ளது. அது மைந்தரையும் சுற்றத்தையும் இழந்துள்ளது… அது எப்படி…” என்றபின் சலிப்புடன் கையசைத்து “நமக்கென்ன? நாம் ஆணையை நிறைவேற்றுவோம்” என்றார். எழுந்துகொண்டு “அதன் பாகன் என எவரேனும் இருக்கிறார்களா என்று பார்” என ஆணையிட்டார். “தேவையில்லை. நான் நன்கறிந்த யானைதான் அது…” என்றாள் சம்வகை. “ஆம், நீ யானைப்பாகர் குலத்தவளாயிற்றே… நீயே அதை நடத்து” என்ற கனகர் “நானே வியந்துகொண்டிருதேன், நீ இதை இயற்றுவாய் என எனக்கு ஏன் தோன்றியது என… செல்க!” என்றார்.
சம்வகை திரும்பிச்செல்ல “துரட்டி, குத்துக்கம்பு எதுவும் வேண்டியதில்லையா என்ன?” என்றபடி கனகர் உடன் சென்றார். “தேவையில்லை. நான் யானைக்கு ஆணையிடப் போவதில்லை. யானைமேல் ஊர்வதும் இயல்வதல்ல…” என்றாள் சம்வகை. அவர்கள் காந்தாரியின் மாளிகையை ஒட்டிய முற்றத்தை அடைந்தனர். அவர்களின் வருகையை மணத்தால் உணர்ந்த யானை செவிமடித்து கூர்ந்தது. அதன் துதிக்கை நீண்டு வந்து காற்றை அள்ளியது. சம்வகை திகைப்புடன் நின்று “அது நோக்கிழந்திருக்கிறது!” என்றாள். “என்ன சொல்கிறாய்?” என்றார் கனகர். “அது துதிக்கையை நீட்டும்போதே தெரிகிறது.”
கனகர் “ஆனால் அது போருக்குச் சென்ற யானை” என்றார். “அங்கிருந்து திரும்பும்போதே நோக்கை இழந்திருக்கலாம். நாம் அதை உணரவில்லை” என்றாள் சம்வகை. “யானைகள் நோக்கிழந்தால் நன்கு உற்று ஆராய்ந்தாலொழிய கண்டறிய இயல்வதில்லை.” அவள் அதனருகே சென்றாள். அவர் தள்ளி நின்று நோக்கிக்கொண்டிருந்தார். அவள் கையை நீட்டியபடி மெல்லிய குரலில் ஏதோ சொல்லியபடி அருகணைந்தாள். யானை துதிக்கையை நீட்ட அவளுடைய கையும் நீண்டு செல்ல இரண்டு நுனிகளுக்கும் நடுவே இருந்த வெளி அச்சொற்களால் அதிர்வதுபோலிருந்தது. மெல்லமெல்ல இடைவெளி குறைந்தது. இரு முனைகளும் தொட்டுக்கொண்டன.
சம்வகை அருகே சென்று யானையின் செவியை வருடினாள். அதனிடம் ஏதோ சொன்னாள். யானை செவிமடித்து ஒலிகூர்வதை அவர் கண்டார். பின்னர் அது காலெடுத்துவைத்து நடக்கத்தொடங்கியது. அவள் அதனுடன் செல்ல கனகர் பின்னால் சென்றார். தன்னைத் தொடர்ந்த ஏவலனிடம் மெல்லிய குரலில் “ஐம்பது பேர்கொண்ட ஏவலர்படை ஒன்று பின்தொடர்ந்து வரவேண்டும். அங்கே ஆழமாக தோண்டவேண்டியிருக்கும்… செல்க!” என ஆணையிட்டார். முதிய ஏவலனின் ஒருங்கிணைப்பில் மண் அகழும் கருவிகளுடன் ஏவல்பெண்டுகளின் படை ஒன்று வந்தது. அவர்களின் காலடியோசைகளன்றி வேறேதும் ஒலிக்கவில்லை. அவர்கள் பெருகிக்கொண்டே இருந்தனர்.
யானை சூதர்தெருக்களினூடாகச் சென்றது. அங்கே அவ்வேளையில் எவருமிருக்கவில்லை. தெருக்களில் குழந்தைகள் ஒன்றிரண்டு புழுதியில் விளையாடிக்கொண்டிருந்தன. கனகர் சாலையின் ஓரமாக சிறிய சந்து ஒன்றின் முகப்பில் அந்தக் கூன்விழுந்த முதிய சூதப்பெண்ணை பார்த்தார். அவள் மங்கலடைந்த விழிகளால் யானையை பார்த்தபின் திரும்பிக்கொண்டு விலங்குபோல் மடிந்து நடந்து அப்பால் சென்றாள். தென்மேற்கு கோட்டைமடிப்பை நோக்கி யானை சென்றது. அதன் உடல் ஊசலாடிக்கொண்டே இருந்தது. அது நின்று நாற்புறமும் மோப்பம் கொண்டது. மீண்டும் துதிக்கையை வீசியபடி நடந்தது. அதன் நடை தளர்ந்தது. கோட்டையருகே இருந்த சிறிய புதர்க்காடு ஒன்றை நோக்கி சென்றது. அங்கிருந்த சிறிய சிதல்புற்றின் அருகே நின்றது. மும்முறை அந்தப் புற்றை தொடமுயன்று துதிக்கை விலக்கிக்கொண்டது. பின்னர் தலைமேல் துதி வளைத்து பிளிறியது.
சம்வகை “இந்த இடம்தான்” என்று திரும்பி கனகரிடம் சொன்னாள். கனகர் திரும்பி கைகாட்ட காவலர்கள் அருகே சென்று அப்பகுதியை நோக்கினர். சம்வகை யானையை அகற்றிக்கொண்டுசென்றாள். “பாம்பு உள்ளது” என்றான் ஒரு காவலன். சம்வகை “அகழ்க, பாம்பு அகன்றால் நன்று! சீறிப்படமெடுத்தால் என்ன செய்வதென்று எண்ணிப்பார்ப்போம்” என்றாள். கனகரை ஏவலர் நோக்க அவ்வண்ணமே செய்க என அவர் கைகாட்டினார். அந்த இடத்தில் மண்ணுக்கு அடியில் ஓர் ஆலயமிருக்கிறது என்ற எண்ணமே சிறிய பதற்றத்தை உருவாக்கியது. அங்கே உள்ளே ஏதுமிருக்கக் கூடாது என அவர் விழைந்தார். அந்த எண்ணம் ஏன் ஏற்படுகிறது என அவரால் கண்டடைய இயலவில்லை.
யானையை இரு ஏவலர் அகற்றி கொண்டுசென்றார்கள். அதன் உடலில் தசை விதிர்த்துக்கொண்டே இருந்தது. நோயுற்றதுபோல அது அவ்வப்போது உறுமிக்கொண்டது. அது அகன்றுசெல்வதை கனகர் வெறுமனே நோக்கினார். ஏவல்பெண்டுகள் அந்தப் புற்றை மண்வெட்டியால் வெட்ட உள்ளிருந்து நாகம் சீறி மேலெழுந்தது. அவர்கள் பின்னடைந்தனர். நாகம் அவர்களை நோக்குவதுபோல தலைதிருப்பியபின் வழிந்து இறங்கி நெளிவுகளாக அலைகொண்டு அப்பால் சென்று புதர்களுக்குள் மறைந்தது. “தோண்டுக!” என்று அவர் ஆணையிட்டார். அவர்கள் ஐயத்துடன் ஒருவரை ஒருவர் நோக்கியபடி அகழத் தொடங்கினர்.
புற்றுக்குள் பாம்பின் முட்டைகள் இருந்தன. சுண்ணக்கற்கள்போல விந்தையான கோடுகளும் வடிவங்களும் கொண்ட சிறிய உருளைகள். “அவற்றை எடுத்து அப்பால் வையுங்கள். ஒன்றுகூட உடையக்கூடாது” என்றார் கனகர். அவர்கள் முட்டைகளை ஒவ்வொன்றாக எடுத்துச்சென்று மிகத் தொலைவிலிருந்த சிறிய புதருக்குள் வைத்தனர். பதினெட்டு முட்டைகள் இருந்தன. அதன்பின் புற்றை அவர்கள் தோண்டி அகற்றத்தொடங்கினர். உள்ளே வெண்ணிறமான சிதல்கள் நிறைந்திருந்தன. அரிசிமணிகள்போல அவை ஊர்ந்தன. தோண்டி விலக்கி அகற்றிக்கொண்டிருந்த ஏவல்மகளிர் நின்று “அமைச்சரே” என்றார்கள்.
கனகர் சற்று முன்னால் சென்று நோக்கினார். ஒரு கல்முகடு தெரிந்தது. மண்படிந்து சற்றே பெரிய உருளைக்கல் என்றுதான் அது தோன்றியது. ஆனால் சற்று நோக்கியபோதே அதன் மேலிருந்த கல்செதுக்குகள் புலப்பட்டன. அது ஒரு ஆலயத்தின் உச்சிகோபுரக்குடம் என அவருக்கு தெரிந்தது. “மெல்ல அகழ்ந்தெடுங்கள்… கல்லில் இரும்பு பட்டுவிடக்கூடாது” என்றார். ஏவல்பெண்டுகள் மெல்லிய குரலில் பேசியபடி தோண்டத் தொடங்கினர். மெல்ல நீரிலிருந்து எழுவதுபோல் சிறிய கோபுரம் ஒன்று தோன்றியது.
கனகர் பெருமூச்சுடன் சம்வகையின் அருகே வந்தார். “இங்கே ஆலயங்கள் இல்லாத இடமே இருக்காது. இந்நகரமே முன்னர் இருந்த இன்னொரு நகர்மேல் எழுந்தது என்று சொல்லப்படுவதுண்டு… அறிந்திருப்பாய். இங்கேதான் குருநகரி இருந்தது. மாமன்னர் யயாதி ஆண்டது. அது ஏழுமுறை அழிந்து மீண்டும் கட்டப்பட்டது என்கிறார்கள். மாமன்னர் ஹஸ்தி இங்கே தன் நகரைக் கட்டியது இது அவருடைய தொல்நிலம் என்பதனால்தான்” என்றார். “ஆம், அறிந்திருக்கிறேன்” என்று அவள் சொன்னாள். “இந்த தெய்வம் என்ன, இதன் இயல்புகள் என்ன என்று எவருக்கும் தெரியாது. ஆனால் நீள்துயிலில் இருந்து அதை எழுப்பிவிட்டோம்” என்றார் கனகர். “நாம் வரலாறெங்கணும் செய்வது இதுதான். அறியாத் தெய்வங்களை எழுப்பிக்கொள்வது.”
“அது அன்னைதெய்வம்… எந்நிலையிலும் அது நலம்பயப்பதே” என்று சம்வகை சொன்னாள். “ஆம்” என்றபின் கனகர் “ஆனால் நாகினி” என்றார். “பேரன்னையர் கத்ருவும் வினதையும் நாகினியரே. அவர்களிடமிருந்தே புடவி பிறந்தது” என்று அவள் சொன்னாள். அவர் அவளை கூர்ந்து நோக்கியபின் விலகிச் சென்று நின்றார். அங்கே நின்றிருக்க அவர் விழையவில்லை. ஆனால் அங்கிருந்து அகலவும் முடியவில்லை. ஏவல்பெண்டுகள் மூச்சிரைப்பின் ஒலியில் ஒத்திசைவுக்குரிய சொற்களை உரைத்தபடி கூடைகளில் மண்ணை அள்ளி அப்பால் கொட்டினர். மண் சிறு குன்றென மேலே எழ உள்ளிருந்த ஆலயம் துலங்கி உருவம் காட்டியது.
நெடுங்காலம் அது விதையென புதைந்து அங்கு கிடந்திருக்கிறது. அதை அகழ்ந்து விண்ணை காட்டுகிறார்கள். இனி அதனுள் கருவென வாழும் அன்னைக்கு பூசனைகள் நிகழும். சடங்குகளால், ஊழ்கநுண்சொற்களால் விதை முளைத்தெழப்போகிறது. விதையுறைகள் வெடித்து உள்ளிருந்து புது ஈரிலை முளை என அன்னை எழப்போகிறாள். விழியிழந்த அன்னை. அவர் ஒரு புதிய எண்ணத்தை அடைந்து திகைப்புகொண்டு சூழ நோக்கினார். விழியுடையோர் எதையும் காணாதவர்களாக ஆக விழியிலாதோரால் அனைத்தும் முடிவுசெய்யப்படுகின்றனவா இங்கே? விழியின்மையால் அறியும் நகரம் ஒன்று இந்நகருக்குள் இருந்திருக்கிறது.
அவர் மீண்டும் சலிப்பை அடைந்தார். எத்தனை தெய்வங்கள்! அழிப்பவை, ஆக்குபவை, ஊட்டுபவை, கொல்பவை, கனிபவை, சினப்பவை… இத்தனை தெய்வங்களை அகற்றிவிட்டு எங்கேனும் ஏதேனுமின்றி வாழும் நிலை ஒன்று அமைந்தால் நன்று. ஒவ்வொரு கணமும் ஏதேனும் ஒரு தெய்வத்திற்கு நாம் அளிக்கும் திறை என்று சூதர்கள் சொல்வதுண்டு. அவ்வாறே இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு கணமும் ஒரு தெய்வத்தை உணர்ந்தபடி வாழ்வதுபோல் எடைமிக்க வாழ்வு பிறிதில்லை. யானை ஒன்றை தோளில் சுமந்துகொண்டிருப்பதைப்போல். ஒவ்வொரு காலடியும் யானைக்குரியது. ஒவ்வொரு கால் பிறழ்வும் யானைக்குரியது. ஒவ்வொரு வீழ்ச்சியும் யானைக்குரியது. எண்ணங்களும் விழிகளும் மட்டும் மானுடர்க்குரியவை.
இன்னும் எத்தனை நூறு தெய்வங்கள் இந்த மண்ணுக்குள் புதைந்துகிடக்கக்கூடும்! இந்த மரங்களின் வேர்கள் தொட்டறியும் தெய்வங்கள் இருக்கலாம். இவ்விலைகள் அனைத்திலும் திகழ்வது அவற்றின் நுண்சொற்களாக இருக்கலாம். இந்த இல்லங்கள் அனைத்திற்கும் அடித்தளமாக அமைபவை. இந்த அரண்மனை கோட்டை அனைத்தும் அவற்றின்மேல் அமைந்தவை. இந்நகரே ஒரு மாபெரும் தெய்வத்தின் உடல்மேல் எழுந்த சிறு கொப்புளமாக இருக்கலாம். விண்ணிலிருந்து நோக்கும் தெய்வங்கள் கோடி. காற்றென்றும் ஒளியென்றும் மணமென்றும் இங்குலாவும் தெய்வங்கள் வேறு. இங்கு இத்தருணத்தில் எத்தனை தெய்வங்கள் செறிந்திருக்கின்றன என்று எவருக்குத் தெரியும்? தெய்வங்கள் ஊசி முனையில் ஒருகோடி என வசிக்கக் கற்றவை எனில் இப்புடவி எவ்வளவு தெய்வங்களின் இருப்பிடம்!
அவர் திரும்பச்சென்று துயில்கொள்ள விழைந்தார். சம்வகையிடம் கைகளால் ஆணையிட்டுவிட்டு தன் புரவியில் ஏறிக்கொண்டார். மாளிகைக்குச் செல்ல விரும்பினாலும் ஒற்றர் செய்திகளை நோக்கி நெடும்பொழுதாகிறது என உணர்ந்து தன் அமைச்சு அறைக்குத்தான் திரும்பினார். ஒற்றுச்செய்திகள் குவிந்துகிடந்தன. அவர் இலக்கில்லாமல் ஓலைகளை அள்ளிப் படித்தார். சின்னாட்களாகவே அவர் செய்திகளை அவ்வாறுதான் புரிந்துகொண்டார். கையில் தற்செயலாகச் சிக்கும் ஓலைகளிலிருந்து உருவாகும் உளச்சித்திரத்தையே அவர் மெய்மை எனக்கொண்டார். அதில் பிழைகள் நிகழவில்லை. உண்மையில் பிழை என ஏதேனும் உண்டா என்ன? ஏனென்றால் சரி என ஏதும் இங்கில்லை.
ஒருவேளை காலையில் பூசனை செய்ய சூதர்மகளிர் தேவைப்படலாம். ஆனால் சூதர்மகளிருக்கு இப்பூசனை முறை தெரிந்திருக்கவேண்டும். நாகசூதர்கள் ஒருவேளை பூசனையை ஆற்றக்கூடும். நாகசூதர்கள் நகரில் வாழ்வதில்லை. அவர்கள் வந்து செல்பவர்கள். இமையா விழிகள் கொண்டவர்கள் அவர்கள். நாகசூதர்கள் எங்கேனும் இருந்தால் தேடிவரச் சொல்லலாம். ஆனால் இனிமேல் பொழுதில்லை. நாளையே பூசனைகள் நிகழ்ந்தாகவேண்டும். இந்திரப்பிரஸ்தத்தின் ஆணைக்கு காத்திருக்கிறது அஸ்தினபுரி. சூதர்பெண்கள் பூசனை செய்வார்கள் என்றார் தீர்க்கசியாமர். அவருடைய சொற்களையே தொடர்ந்துசெல்லலாம். அது ஒன்றே செய்யக்கூடுவது.
களைத்து பீடத்திலேயே பின்னால் சரிந்து அவர் துயில்கொண்டார். நெடுநேரம் கழித்து உணர்வடைந்தபோது இருண்ட அமைச்சு அறையில் பீடத்திலிருந்து விழுந்து தரையில் கிடந்தார். அறைக்குள் எவரேனும் இருக்கிறார்களா என எண்ணி எழுந்தமர்ந்தார். எவரோ உடனிருக்கும் உணர்வு ஏற்பட்டது. ஆனால் இவ்வரண்மனையில் எல்லா இடங்களிலும் அவ்வுணர்வே நிறைந்திருக்கிறது. இந்நகரெங்கும் அவ்வுணர்வு திகழ்கிறது. அவர் எழுந்து உடைகளை சீரமைத்துக்கொண்டு வெளியே வந்தார். முன்புலரி எனத் தெரிந்தது. விண்மீன்கள் இடம் மாறியிருந்தன.
அவர் புரவியை அணுகி அதன்மேல் ஏறிக்கொண்டார். அதன் மென்மயிர்ப்பரப்பு குளிர்ந்து ஈரம் படிந்திருந்தது. அவருடைய தொடுகையில் அது நடுக்கு கொண்டது. அவர் ஏறிக்கொண்டதும் அவர் எங்கெனச் சொல்லாமலேயே செல்லத்தொடங்கியது. அவர் மீண்டும் துயில்கொண்டுவிட்டிருந்தார். குதிரை நின்றபோது விழித்தார். அது அந்த ஆலயமிருக்கும் இடத்தை அடைந்து நின்றிருந்தது. அவரை அணுகி வந்த சம்வகை “அகழ்வுப்பணி பெரும்பாலும் முடிந்துவிட்டது, அமைச்சரே. சிறிய ஆலயம். ஓர் ஆள் உயரம்தான். கல்லால் கட்டப்பட்டது” என்றாள்.
அவர் இறங்கி அதை நோக்கியபடி நின்றார். சிறிய ஆலயம், விதைபோல. இதை இங்கிருந்து கொண்டுசென்று எங்கேனும் விதைத்தால் கல்பெருகி மாளிகைகளும் அரண்மனைகளும் ஆலயங்களும் கோட்டைகளுமாகி நகர் என முளைக்கும். “அமைச்சரே!” என்று ஏவல்பெண்டு சொன்னாள். சம்வகை அருகே செல்ல சற்று தயங்கியபடி கனகர் கூடவே சென்றார். வெட்டி அகற்றப்பட்ட மண்ணின் மணம். அவருடைய காலடிகள் புதைந்தன. சரிவில் இறங்கி அருகணைந்தனர். ஆலயத்தின் வாயில் திறந்திருந்தது. முதிய சூதப்பெண் உள்ளிருந்து கைகளால் மண்ணை அள்ளி அகற்றினாள். உள்ளிருக்கும் சிறிய கற்சிலை தெரியத் தொடங்கியது.
மண்திரை விலக விலக சிலை தெளிவுகொண்டது. வழுவழுப்பான கரிய கல்லில் செதுக்கப்பட்டிருந்தது. இடக்கையில் மின்படை. வலக்கையில் ஒரு சிறிய கலம். அமுதகலமா? அமர்ந்த கோலம். அப்பீடத்தில் நாகம் பத்திவிரித்திருந்தது. தலைக்குமேல் பத்துதலை நாகம். நாகவிழிகள் அனைத்தும் நோக்கு கொண்டிருந்தன. ஆனால் அன்னையின் முகம் நோக்கிலா விழிகளுடன் தன்னுள் ஆழ்ந்திருந்தது. உதடுகளில் புன்னகை இருந்தமையால் அவள் ஏதோ ஆழ்ந்த இனிய நினைவில் இருப்பதுபோலத் தோன்றியது.