மொழி, எழுத்து, மதம்- அ.பாண்டியன்

ஜாவி-காட்- வனப்பெழுத்தும் வாய்ச்சண்டையும்

மும்மொழி கற்றல்

வணக்கம் ஜெயமோகன் அவர்களே,

உங்கள் மும்ழொழி கல்வி பற்றிய கட்டுரையை வாசித்தேன். அதில் நீங்கள் கூறிய இரு கருத்துகளை தொட்டு சில விடையங்களை அனுபவப்பூர்வமாக பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன். காரணம் மும்மொழி கல்வி பற்றியும் எழுத்துரு மாற்றம் பற்றியும் மலேசியர்களின் அனுபவம் இந்தியர்களை விட கூடுதலாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

கடந்த அறுபது ஆண்டுகளாக இங்கு ஒரு மொழியா, இரு மொழியா அல்லது மும்மொழியா என்கிற வினாவுக்கு தக்க பதில் இல்லாத ஊசலாட்டத்தோடுதான் கல்வித்துறை இயங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு மொழியின் வரிவடிவ சிக்கலும் இங்கு அண்மையில்தான் பெரும் அரசியல் போராட்டமாக மாறியிருக்கிறது.

மலேசியாவின் தேசிய மொழி மலாய் மொழி என்பதை நீங்களும் அறிந்திருப்பீர்கள். இரண்டாம் மொழியாக ஆங்கிலம் உள்ளது. ஆயினும் சிறுபான்மை மக்களான சீனர்களும் தமிழர்களும் இங்கு தங்கள் தாய்மொழிகளை அரசாங்க அனுமதியுடன் பள்ளிகளில் பயில்கின்றனர். தொடக்க நிலை தமிழ்ப்பள்ளிகளும் சீனப்பள்ளிகளும் இங்கு இன்றுவரை முழு அரச உதவி பள்ளிகளாகவும் பகுதி உதவி பள்ளிகளாகவும் இயங்குகின்றன. தமிழ்ப்பள்ளிகள் ஆரம்பப் பள்ளி அளவில் மட்டும் உண்டு. ஆனால் பல்கலைக்கழகம் வரை தமிழை ஒரு பாடமாக எடுத்து படிக்க தடை இல்லை.

60-ஆம் ஆண்டுகளில் மலாய் தேசிய மொழியாக நிலை உயர்த்தப்பட்ட பின்னர், இந்நாட்டில் வேறு எந்த மொழியும் தேவை இல்லை என்கிற தீவிர முடிவோடுதான் மலாய் தேசியவாதிகள் இருந்தார்கள். ஆனால் உலக நிலைமையும் உள்நாட்டு நிலையும் அதற்கு ஏற்றதாக அமையவில்லை. ஆகவே ஆங்கிலம் தவிர்கவியலா இடத்தைப் பிடித்துக் கொண்டது.

அடுத்து சீன, தமிழ் மொழி கல்வி தாய்மொழிக் கல்வி உரிமை என்ற அடிப்படையில் சில பல போராட்டங்களின் வழியாக இங்கு நிலையான இடம் பிடித்தன. ஆனால் அவை கட்டாயம் இல்லை என்பதால் மக்களின் விருப்ப தேர்வாக உள்ளன. ஆகவே தாய்மொழி கல்வியில் பற்று உள்ளவர்கள் மூன்று மொழிளை மூன்று வெவ்வேறு எழுத்துருக்களில் பயில்கின்றனர்.

தாய்மொழி கல்வியை துறந்தவர்கள் மலாய்ப் பள்ளிகளில் இரண்டு மொழிகளை ஒரே எழுத்துருவில் (மலாய், ஆங்கிலம்) பயில்கின்றனர்.

ஆகவே மொழி எண்ணிக்கையை ஒரு அளவுகோலாக வைத்துப் பார்த்தால் மலாய்ப்பள்ளி மாணவர்கள் சுமை குறைந்த நிலையில் கல்வி கற்க்கும் வாய்ப்பைப் பெருகின்றனர். சீனப்பள்ளி அல்லது தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கூடுதலாக தங்கள் தாய்மொழியைக் கற்கின்றனர். ஒப்பீட்டளவில் இது மாணவர்களுக்கு சுமை என்ற முடிவுக்கு நாம் வரலாம் . ஆனால், இங்கு நடப்பது சற்று மாற்றமாக இருப்பது கவனிக்கத்தக்கது.

அரசாங்கம் தேசிய மொழி கொள்கையை தீவிரமாக கடைபிடித்து வருகிறது. ஆங்கிலம் உலக மொழியாக அத்தியாவசிய தேவையாகிவிட்டது. ஆகவே இந்த இரண்டு மொழிகளோடு மலேசியர்கள் நிறைவாக வாழ முடிகின்றதா என்ற கேள்விக்கு இல்லை என்பதே பதிலாக அமைகின்றது.  காரணம், மலேசியர்களில் பலர் மூன்றாவதாக ஒரு மொழியை தங்கள் சுய தேவையை முன்வைத்து கற்றுக் கொள்வதில் முனைப்பு காட்டுகின்றனர். மிக முக்கியமாக எல்லா இனத்தவர்களும் சீன மொழி பள்ளிகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்புகின்றனர்.  தமிழை கைவிட்டாலும் சீனம் பயில விரும்பும் தமிழர்கள் அதிகம் உள்ளனர். அதைவிட வியப்பு மலாய்காரர்களும் சீன பள்ளியைத் தேர்வு செய்வதாகும். அவர்களாகவே மூன்று மொழிச் சுமையை சுமக்க முன்வருகிறார்கள். எதிர்கால வேலை வாய்ப்பு, குறிப்பாக தனியார் நிறுவனங்களில் மலாய், ஆங்கில மொழிகளை விட சீன மொழிக்கே அதிக முக்கியத்துவம் உள்ளது என்றே மக்கள் நம்புகின்றனர். இதன் அடிப்படையிலேயே சீன மொழி அரசாங்கம் வகுத்த எல்லா கொள்கைகளையும் சட்டங்களையும் இலகுவாக கடந்து அவசியமான மொழியாக மலேசியர்களால் தேர்வுசெய்யப்படுகின்றது. தமிழ் மொழிக்கு இங்கு பெரிய பொருளாதார பலம் இல்லை. ஆயினும் மொழி உணர்வின் அடிப்படையில் தமிழ்ப்பள்ளிகள் இங்கு தொடர்ந்து இயங்குகின்றன. தமிழ்ப்பள்ளியை விட்டுக் கொடுப்பது இனத்தின் எல்லா உரிமைகளையும் இந்நாட்டில் விட்டுக் கொடுப்ந்தற்கு ஈடானதாகவே மொழி உணர்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆகவே, அரசு வகுத்த கோட்பாடுகளையும், கல்விச்சூழலில் நிகழும் சிக்கல்களையும், பொருட்படுத்தாமல், எதிர்காலம் பற்றிய சிந்தனைதான் இங்கு மூன்று மொழிகள் கற்க மக்களை ஊக்குவிக்கின்றது.

அடுத்து, ஒரே எழுத்துருவில் வெவ்வேறு மொழிகளை எழுதுவதால் விளைந்த மிகப்பெரிய சிக்கலை மலேசியர்கள் இபோதுதான் எதிர்நோக்கியுள்ளனர். அது இதுவரை யாரும் எதிர்பாராதது. அதுபற்றி சுருக்கமாக சொல்லிவிடுகிறேன் (விரிவாக வாசிக்க http://vallinam.com.my/version2/?p=6327)

மலாய் மொழி தனக்கென நிரந்தர எழுத்துரு கொண்ட மொழியன்று. அது, சமஸ்கிருதம், தமிழ் போன்ற இந்திய மொழிகளை உள்வாங்கிக் கொண்ட பிராந்திய மொழி. தென்கிழக்காசியாவை இந்து-பெளத்த அரசுகள் ஆண்ட போது, பல்லவ எழுத்துருக்களும் தேவ நாகிரி போன்ற எழுத்துவடிவங்களும் பண்டைய மலாய் மொழியை எழுத பயன்பட்டுள்ளன. ஶ்ரீவிஜய பேரரசு வீழ்ந்த பிறகு, 11ஆம் நூற்றாண்டு முதல், மலாய் தீவுக் கூட்டங்களில் இஸ்லாம் மதம் பரவியது. இஸ்லாமிய அரசுகள் உருவாகின. மலாய் மொழியில் அரபு சொற்கள் அதிகம் புழங்கத்தொடங்கின. ஆகவே மலாய் மொழியை இஸ்லாமிய பண்பாட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு அது முன்னர் பயன்படுத்திய எழுத்து வடிவங்களுக்கு மாற்றாக புதிய எழுத்து உருவாக்கப்பட்டுள்ளது. அது அரபு மொழி எழுத்துக்ளை மூலமாக கொண்டு தயாரிக்கப்பட்ட எழுத்தாகும். அதையே ஜாவி எழுத்து என்கின்றனர். ஜாவி எழுத்து அதன் எழுத்து வடிவிலும் இலக்கண விதிகளிலும் பெரும் மாற்றங்களைக் கண்டுவந்துள்ளது. கடந்த 700 ஆண்டுகளாக மலாய் மொழி ஜாவி எழுத்துகளில் எழுதப்பட்டு வந்தது.

ஆயினும் ஐரோப்பியர்கள் தென்கிழக்கு நாடுகளுக்கு வரத்துவங்கியதும் அவர்கள் தங்கள் வசதிக்கேற்ப மலாய் மொழியை லத்தின் லிபியில் (ஆங்கில எழுத்துகள்) எழுதியுள்ளனர். பின்னர் ஆங்கிலேயர் வருகையின் பின்னர் மலாய் மொழியை ஜாவி எழுத்தில் எழுதுவது மெல்ல குறைந்து ஆங்கில எழுத்தில் (ரூமி அல்லது ரோமனைஸ் என்று குறிப்பிடப்படுவது) எழுதுவது அதிகரித்துள்ளது. மலாய் மொழி அறிஞர்கள் ரூமி எழுத்துக்கூட்டலில் மலாய் மொழியை எழுதும் இலக்கணங்களை சிறப்பாக அமைத்துக் கொடுத்தனர்.

தமிழகத்தில் ஈ.வெ.ரா தமிழை ஆங்கில எழுத்தில் எழுதும் ஆலோசனையைச் சொன்ன அதே காலகட்டத்தில் மலேசியாவில் சில முன்னோடி தேசியவாதிகள் அதே ஆலோசனையை மலாய் மொழிக்கு வழங்கியுள்ளது வியப்பு. ஒரே வேறுபாடு தமிழ் அந்த ஆலோசனையை ஏற்கவில்லை. ஆனால் மலாய் மொழி ஏற்றுக் கொண்டது. அன்றிருந்த முற்போக்கு மலாய் எழுத்தாளர் இயக்கம் தீவிரமாக முயன்று அரசை ஏற்க வைத்துள்ளது.

நாடு சுதந்திரம் பெற்ற பின்னர், ஒரு இனத்தின் மொழியாக இருந்த மலாய் மொழி நாட்டின் தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டது. அதோடு அது கட்டாய மொழியாகவும் சட்டம் இயற்றப்பட்டது. ஆகவே இந்நாட்டில் குடியிருந்த எல்லா இன மக்களும் மலாய் மொழியைப் பயில ஜாவி எழுத்து தடையாக இருக்கும் என்று உணர்ந்த அரசு ரூமி எழுத்தையே மலாய் மொழியின் நிரத்தர எழுத்தாக்கியது. ஆயினும் மரபை விட்டு முற்றாக நீங்காமல் ஜாவியை தேவையான இடங்களில் மட்டும் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தது. ஆகவே பொதுவெளியில் மலாய்மொழி ரூமியில் மட்டுமே எழுதப்படும் மொழியானது. ஜாவி எழுத்து இஸ்லாமிய பள்ளிகளில் மட்டுமே பயிலும் ஒரு எழுத்தாகிவிட்டது. இஸ்லாம் பாடத்தின் போதுதான் ஜாவி எழுத்து பயிற்றுவிக்கப்படுகின்றது.

நவீன மலேசியாவில் மலேசியர்கள் மலாய் எழுத்தை ரோமனைஸ் எழுத்தில் மட்டுமே எழுதி பழகிவிட்டனர். குறிப்பாக மலாய்காரர் அல்லாதவர்கள் ஜாவியோடு எந்த தொடர்பும் அற்றவர்கள். அவர்களுக்கு ஜாவி எழுத்து என்பது அரபு மொழியோடு தொடர்புடையதாகவும் ஆகவே இஸ்லாம் மதத்துக்கு மட்டுமே உரிய ஒன்று என்ற புரிதலே எஞ்சி நிற்கின்றது. இதற்கு அரசும் கல்விச்சூழலும்தான் காரணம்

இச்சூழலில்தான், அரசு திடீர் என்று மலாய் மொழியின் பாரம்பரிய மரபை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியாக பள்ளிகளில் மீண்டும் ஜாவி எழுத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இது இஸ்லாம் அல்லாதோரிடையே மிகப்பெரிய அதிருப்தியையும் போராட்டங்களையும் வெடிக்கச்செய்துள்ளது. மலாய் மொழியில் மீண்டும் ஜாவி எழுத்தை அறிமுகப்படுத்துவது இஸ்லாமியமயமாக்களின் ஒரு திட்டம் என்பதே பரவலாக எழும் குற்றச்சாட்டு.

மலாய்காரர்கள் ஜாவி எழுத்தை தங்கள் மொழியின் பாரம்பரிய  அடையாளம் என்று விளக்கி சொன்னாலும் மலாய்காரர் அல்லாத சிறுபான்மையினர் அதை ஏற்பதாக இல்லை. மலாய் மொழிக்கும் ஜாவி எழுத்துக்கும் என்ன தொடர்பு என்று கேட்கும் நிலையில்தான் அவர்கள் உள்ளனர். அரசின் இந்த மாற்றங்களை மிகுந்த சந்தேகத்துடந்தான் நோக்குகின்றனர். பெரும் விவாதங்களும் போராட்டங்களும் தொடர்கின்றன.  அறுபது ஆண்டுகளில் மலாய் மொழி இழந்த ஜாவி எழுத்தை இன்று அதுவே விரும்பினாலும் மீட்கமுடியாத நிலை உருவாகி இருப்பதை கவனிக்கவேண்டியுள்ளது.

அ.பாண்டியன்

***

முந்தைய கட்டுரைஊட்டி கடிதங்கள்
அடுத்த கட்டுரைஆழமில்லாத நீர்