கதைகள், கடிதங்கள்

வணக்கம் ஜெயமோகன்,

உங்களது ”தமிழ் இலக்கிய வடிவங்கள் : நேற்று இன்று நாளை” சிறுகதை கொடுத்த
உணர்வில் 2009ல் நான் எழுதிய சிறுகதை இது :

பேசுதல் அதற்கின்பம் – நூல் வரலாறு

இதை எழுதிய உடனேயே உங்களுக்கு அனுப்பவேண்டும் என்று நினைத்து பின் தயங்கி
விட்டுவிட்டேன். இன்று, நேற்று இன்று நாளை சிறுகதை குறித்து பேச்சு வந்த
பொழுது எனது கதை குறித்த உங்களது கருத்தை தெரிந்துகொள்ளவேண்டும் என்று
தோன்றியது… நேரம் கிடைக்கும் பொழுது படித்துப்பாருங்களேன்.

சித்தார்த்.

அன்புள்ள சித்தார்த்

கற்பனை சுவாரசியமாக உள்ளது. ஆனால் கதை என்று இது ஏன் ஆகவில்லை என்று யோசித்தால் தெரியும். கதை என்பது ஒரு நகர்வு. ஒன்றில் இருந்து இன்னொன்றாக ஆகி ஓர் உச்சத்தை அடைந்து புதிய ஒரு திறப்பை உருவாக்கி முடியவேண்டும். அது நிகழவில்லை. ஒரு காலகட்டத்தின் ஒரு சித்தரிப்பு மட்டுமாகவே நின்றுவிட்டிருக்கிறது.

நீங்கள் கூறும் கலவை வடிவம் என்ற இலக்கியமுறை இன்னொன்றாக ஆகி அதன்மூலம் ஒரு மையத்தை முன்வைத்து மேலே செல்லும் கற்பனை வாய்ப்பை அளித்திருந்தால் இது கதை

ஒரு பேச்சுக்குச் சொல்கிறேனே. 2045ல் கலவை வடிவங்கள் உருவாகின்றன. 2100ல் அக்கலவை வடிவங்களே சாதாரணமாக இலக்கியமாக உள்ளன, முற்றிலும் கற்பனையே இல்லை. 2150ல் அந்தக்கலவை வடிவங்களில் இருந்து மீண்டும் ஒருமை கொண்ட வடிவத்தை தொகுத்து உருவாக்கும் கலை உருவாகிறது. ஒருவர் அச்சுஅசலாக புறநாநூற்றை அப்படியே ‘மீட்டு’ எழுதிவிடுகிறார். அது ஒரு மாபெரும் கலை வெற்றியாக கொண்டாடப்படுகிறது- கதை உச்சம்

இது ’கதை’ அதாவது நிகழ்வுகள் அல்ல நிகழ்வுகளின் பரிணாமமே கதை

ஜெ

அன்புள்ள ஜெ,

தர்க்க-சொல் விளையாட்டு குறித்து எனக்கும் அடிக்கடி சந்தேகம் வர்றது உண்டுதான். உண்மையில், ஒரு நிலைப்பாடு எடுத்து ஒரு விஷயத்தை ஆராய்ஞ்சிட்டு வர்றப்பவே, “ஒருவேளை, நம்மளை அறியாமலே, எப்பவோ நாம எடுத்த முன்முடிவு ஆழ்மனத்துல உக்காந்து நம்மள இப்படி யோசிக்க வைக்குதோ” அப்படீன்னு ஒரு நம்பிக்கையிழப்பு ஏற்படுது. அதீத தன்னம்பிக்கையை விட ஐயங்கள் தான் மனிதனை முன்னுக்கு நகர்த்துதோ (எல்லா வகையிலுமே) என்றும் ஒரு எண்ணம் உண்டு. (நீங்க முன்பொரு மடலில் எனக்கு “கலையை உருவாக்கும்போது மன எழுச்சியும் முடிந்ததுமே ஐயமும் எந்தக்கலைஞனுக்கும் வரும். அந்த ஊசல் வழியாக நீங்கள் எப்போதுமே கடந்துசென்றுகொண்டேதான் இருக்கவேண்டும்” என்று சொன்னது போல, எதையும் புரிந்து கொள்ளுதலிலேயே கூட தன்னம்பிக்கைக்கும் ஐயத்துக்கும் இடைப்பட்ட முரணியக்கம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது போல!)

நான் கொஞ்சம் நேரம் எடுத்து எலியட், எஸ்ரா பவுண்ட், மற்றும் அரவிந்தரையும் இன்னும் சில கோட்பாட்டாளர்களையும் படிச்சிட்டு திரும்ப வரேன். அதுக்குள்ள ஒரு சின்ன சேதிய உங்ககிட்ட பகிர்ந்துக்கலாம்னு தான் இந்த மடல்.

இன்று ஒரு சின்ன நிகழ்ச்சியில கவிதை படிக்கிறேன். (பார்க்க: இணைப்பு) இங்கிலீஷ் தான். எழுத ஆரம்பிச்சது என்னவோ தமிழ்; ஆனா, படிச்சது ஆங்கில இலக்கியம் என்பதாலோ என்னவோ, சீக்கிரமே இங்கிலீஷுக்கு மாறிட்டேன். (தயவுசெய்து, உங்க தளத்தை என்னுடைய விளம்பரப் பலகையா பயன்படுத்த நினைக்கிறேன்-னு தப்பா நெனச்சிடாதீங்க. இது உங்க கிட்ட பகிர்ந்துக்க நினைக்கிற விஷயம்; அவ்வளவு தான். உங்க தளத்துல வெளியிட வேண்டியது கூட இல்ல. உங்க ஆசிகள் என் கூட இருக்கிறது மட்டும் தான் வேணும். கவிதை படிக்கிறேன்-னு உங்க கிட்ட சொல்லவே தயங்கினது தான் இவ்வளவு கடைசி நேரத்துல சொல்வதற்குக் கூடக் காரணம்!)

நன்றி.

அன்புடன்
விஜய்

வணக்கம் ஜெயமோகன்,

நலம் தானே?

நாஞ்சில் நாடனின் “சூடிய பூ சூடற்க” தொகுப்பில் ‘யாம் உண்பேம்’ என்ற சிறுகதையை வாசித்தேன்.

பல நாட்களாக மனம் நிலைகொள்ளவில்லை எனக்கு.

விவசாய வாழ்வு பொய்த்துப்போனதும்,உழவு செய்து கம்பீரமாக வாழ்ந்த அக்குடிமக்கள் இன்று விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டதும் ஆன வாழ்வை தேர்ந்த மொழிக்கூர்மையில் நாஞ்சில் நாடன் கூறியிருக்கிறார்.

பஞ்சத்தை விவரிக்கும் போது வயது முதிர்ந்த வேசியின் மயிரடர்ந்த யோனியைப் பற்றியதான சித்தரிப்பை மனம் மீண்டும் மீண்டும் நினைவில் கொண்டு பிதற்றுகிறது.அகங்காரங்கள் ஒடுங்கி புத்தி நிலையாமை பற்றியே யோசித்துக்கொண்டிருக்கிறது.

வாழ்வின் சிதைவுகளை இத்தனை அழகாய் கலையாக்க முடியுமெனில்,,,,, நான் வாசிப்பின் பேருலகில் நுழைந்ததற்காக பேருவகை கொள்கிறேன்

நாஞ்சில் நாடனுக்கு என் அன்பும் வாழ்த்துக்களும்,,,

பேரன்பு,

சரவணன்.ம

முந்தைய கட்டுரைஉலகம் யாவையும்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைஎழுதுதல்-கடிதங்கள்