ஆங்கில இலக்கியம் இன்று, ஒரு துளிச்சித்திரம்- நரேன்

எட்கார் ஆல்லன் போ

 

தற்கால ஆங்கில இலக்கியத்தில் குறிப்பாக 2010 க்குப் பிறகான நேரடி ஆங்கில எழுத்துக்களில் சிறுகதைகளின் இடம் மற்றும் அதன் போக்கை வாசகப் பார்வையாக அனுகுவதே இச்சிற்றுரையின் எண்ணம். நவீன இலக்கியத்தில் ஆங்கில எழுத்துலகின் மையமாக உருவெடுத்திருக்கும் அமெரிக்காவின் சிறுகதைகளை முன்வைத்தே ஆங்கில சிறுகதைகளின் இடத்தை அனுமானிக்க வேண்டியிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் சிறந்த ஆங்கில சிறுகதைகளின் பட்டியலை நோக்குங்கால் பெருவாரியான சிறந்த கதைகள், விருது பெற்றவைகள் புலம் பெயர்ந்தவர்களின் கதைகளாகவே இருக்கிறது. அதற்கான காரணத்தை விளங்கிக் கொள்ள முயல்வதும் புலம் பெயர்ந்த ஆசிரியர்கள் ஒரு சிலரை அறிமுகப்படுத்துவதும் கூட இவ்வுரையின் நோக்கம்.

 

14ம் நூற்றாண்டின் மத்தியில் ஆங்கில இலக்கியத்தின் தந்தை என அறியப்படும் Geoffrey Chaucer தொடங்கி 16ம் நூற்றாண்டில் ஷேக்ஸ்பியர் ஆரம்ப காலம் வரை கவிதைகளே பிரதானமாக இருந்தது. பிரெஞ்ச் இத்தாலிய மற்றும் செல்டிக் இலக்கியங்களை ஒத்து ஆங்கில ஈரடிச் செய்யுள்கள் இயற்றப்பட்டது. (Rhyming Couplets). 16ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உணர்ச்சி மிகுந்த பாடல் வரிகளைப் போன்ற கவிதைகள் வெளிவரத் தொடங்கின. Thomas wyatt மற்றும் Henry Howard இத்தாலியர்களைப் பின்பற்றி இயைபுகள் (Rhyming) அற்ற வரிகளை எழுதத் தொடங்கியதுதான் க்ஷேக்ஸ்பியரின் sonnet களுக்கு அடித்தளமாக அமைந்தது. மறுமலர்ச்சி காலகட்டத்தில் பிரபலமான நாடகக் கலையை முழுமையாக தனதாக்கிக் கொண்டவரும் ஷேக்ஸ்பியரே. பின்பு வரலாற்று நாயகர்களை அடிப்படையாக கொண்டு காவியங்கள் இயற்றப்பட்டன. உதாரணமாக ஹோமரின் இலியாட் மற்றும் ஒடிஸ்ஸி, ஜான் மில்டனின் பாரடைஸ் லாஸ்ட். இதன் ஒரு கூறாக உருவான அரசியல் மற்றும் உடலியல் அங்கத நாடகங்கள் ஒரு பிரிவில் கொஞ்சம் உருமாறி உரைநடைகளும் புதினங்களும் தோன்றத் தொடங்கியது.

 

பின்புதான் ஒரு திருப்புமுனையாக 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கற்பனாவாத காலகட்டம் தொடங்கிற்று. வில்லியம் ப்ளேக், வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் தொடங்கி பிற்காலத்தில் ஜான் கீட்ஸ் மற்றும் ஷெல்லி வரை தொடர்ந்தது. ஏறத்தாழ இதே காலகட்டத்தில் சார்ல்ஸ் டிக்கென்ஸ், வாஷிங்டன் இர்விங் போன்ற நாவலாசிரியர்கள் பிரபலமடைகிறார்கள். இவர்களுக்கிடையேதான் எட்கர் ஆலன் போ சிறுகதையெனும் வடிவத்தை முறையாக ஒரு இலக்கிய வகைமையாக முன் வைக்கிறார். சிறுகதைகளின் அழகியல் குறித்து அதன் அவசியத்தின் மீது ஒரு விவாதத்தை உருவாக்குகிறார். அங்கொன்றும் இங்கொன்றுமாக குறுகிய வடிவ சிறுகதைகள் பிரிட்டனிலும் எழுதப்பட்டிருந்தாலும் எட்கர் ஆலன் போவை ஆங்கில சிறுகதை எழுத்தின் தந்தையென்றும் அமெரிக்கா முறையான ஆங்கில சிறுகதை வடிவத்தை தோற்றுவித்த நாடு என்றும் கருதப்படுகிறது. அன்று முதல் இலக்கிய வகை மாதிரிகளை உருவாக்குவதிலும் சிதைப்பதிலும் அமெரிக்காவே முன்னிற்கிறது.

 

ஃபிலிப் ராத்

 

ஆங்கில இலக்கியம் ஆரம்பம் முதலே புதினங்களையே மையமாகக் கொண்டு இயங்கி வந்திருக்கிறது. இடையிடையே சிறுகதைகள் மின்னி மறைந்தாலும் பிரதானமாக நாவல்களை வாசிப்பதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் ஆங்கில வாசகர்கள். இதற்கு பள்ளி பருவம் முதலே அவர்களுக்கு வாசிப்பதும் எழுதுவதும் ஒரு பாடமாகவே அமைவது ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். அன்றாடத்தில இருந்து துண்டித்து தன்னை ஒரு பயணத்தில் தொலைத்துக் கொள்வதைப் போன்ற அனுபவத்தை கொடுக்கும் கருவியாக வாசிப்பை நாடும் பெரும்பான்மையான ஆங்கில வாசகர்களுக்கு இந்த குறுகிய வடிவ கதைகள் உதவவில்லை.

 

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அச்சு ஊடகங்கள் பெருகத் தொடங்கிய காலகட்டத்தில் சிறுகதைகள் அதிகம் எழுதப்பட்டது. 1948 ல் ஷெர்லி ஜாக்ஸன் தொடங்கி ஹெம்மிங்க்வே, ஜே.டி. சாலிஞ்சர், பிலிப் ராத், ப்ராங்க் ஓ கானர் மற்றும் ஜான் அப்டைக் வரை சிறுகதைகளை பிரபலமடையச் செய்தார்கள். மினிமலிசம் பரவி இலக்கிய படைப்புகளின் மீது பெரும் பாதிப்பு செலுத்தியபோது ரேமண்ட் கார்வர் போன்றவர்களின் சிறுகதைகள் பெரும் வரவேற்பை பெற்று சிறுகதைகள் வாசகர்கள் மத்தியில் மீண்டும் செல்வாக்கை அடைந்தது.

 

ஆனால்,1980 க்கு பிறகு அடுத்த முப்பது வருடங்களில் சிறுகதைகள் ஆங்கில இலக்கிய பரப்பில் அதன் இடத்தை இழந்தே இருந்தது. நாவல்கள் தாக்கு பிடிக்க காரணம் வெவ்வேறு வடிவங்களில் அது தன்னை உருமாற்றிக் கொண்டதினால்தான். 2000க்குப் பிறகு நாவல்கள் எழுதப்படுவதே சினிமாவிற்கென்றானது. பிரபலமடையும் நாவல்கள் அனைத்தும் சினிமாவின் திரைக்கதையை ஒட்டியே எழுதப்படுகிறது. கதைக் களங்களும் பாத்திரங்களும் சினிமாத்தன்மையுடன் இயற்றப்பட்டது. மின்னணு ஊடகங்கள் பெரும் புழக்கத்திற்கு வந்த இந்த காலகட்டத்தில் நவீன வாசகனின் கவனத்தைக் கோரவும் வாசிப்பை தக்க வைக்கவும் நாவல்கள் விதவிதமான வடிவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. புத்தகம் வாசிப்பதையே ஒரு விளையாட்டாக மாற்றும் அளவிற்கு ஜாலம் காட்டின. கதைக்கருக்களும் ஆழமற்று பதின்ம வயதினருக்கு ஏற்றவையாக அவர்களின் மனங்களைப் போலவே சட்டென சினுங்கும் தன்மை கொண்டிருந்தன. உதாரணமாக Illustrated Novel எனும் வகை. ஐம்பது சதவிகிதம் எழுத்தாகவும் மீதி படங்களாகவும் தொகுக்கப்படும். ஒரு கதையை நாவலாகவும் காமிக் புத்தகமாகவும் மாறிமாறி வாசித்ததை போன்ற உணர்வை கொடுக்கும். Digi Fiction – முழு நாவலையும் படிக்க வேண்டுமெனில் புத்தகமாக கொஞ்சமும் அதைத் தொடர்ந்து வீடியோ வடிவில் காட்சிகளாகவும், பின்பு வலைத்தளங்களில் மீதி கதையையும் காமிக் வடிவிலோ அல்ல எழுத்தாகவோ தொடர வேண்டும். ஒரு ரிலே ரேஸ் போல தாவி தாவி ஒரு நாவலை படிக்க வேண்டும். பின்பு முக்கியமாக Chick lit or Chick Literature எனும் மிகப் பிரபலமான நாவல் வகை. இளம்பெண்களை நோக்கி எழுதப்படும் நாவல்கள். பெண்களை மையப்படுத்தி எழுதப்படும் இக்கதைகள் மிக இலகுவான கதைக் களங்களையே கொண்டிருக்கும். பெரும்பாலும் பள்ளிப் பருவ காதல் கதைகள். The Fault in Our Stars அப்படி சமீபத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட ஒரு நாவல். திரைப்படமாகவும் பிரபலமானது.

கார்வர்

 

 

இத்தகைய வகை மாதிரிகளோடு மட்டும் நில்லாமல் நாவல்கள் வெறும் 150 பக்கங்களுக்குள்ளாக வெளிவரத் தொடங்கியிருப்பது சிறுகதைகளின் இடத்தை இல்லாமலே ஆக்கிக் கொண்டிருக்கிறது. மேலும் சொல்வதற்கு கதைகள் அற்றவர்களை போல ஒரே தன்மையான கதைகளை மீண்டும் மீண்டும் விரித்து எழுத நாவல்களே அவர்களுக்கு உதவுகிறது. சிறுகதை உத்தியை கிட்டத்தட்ட தொலைத்தவர்களாகவே ஆங்கில எழுத்தாளர்கள் திகைத்து போய் நிற்கிறார்கள்.

 

இதனால் சிறுகதை வாசகர்கள் மீண்டும் வெளிநாட்டு சிறுகதைகளை மொழிபெயர்ப்பின் மூலம் வாசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஆண்டன் செக்காவ் இன்று மீண்டும் பிரபலமான சிறுகதையாசிரியராக அமெரிக்காவில் வலம் வருகிறார். டால்ஸ்டாய் சிறுகதைகள் மீண்டும் பதிப்பிக்கப்பட்டு பரவலாக வாசிக்கப்படுகிறது. மொழிபெயர்ப்பிற்கென்று அமெரிக்காவில் Asymptote விருதுகளை வழங்கி வருகிறது. பிரிட்டானிய Independent விருதும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும் சிறுகதைகளுக்கென்று பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது. பின்னர் இது ‘மேன் புக்கர்’ பரிசுடன் இணைந்தது. அரபு நாட்டிலிருந்து வரும் சிறுகதைகளும் கிழக்காசிய சிறுகதைகளும் இன்று அதிகம் மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்படுகிறது.

 

சிறுகதைகள் இன்று பெரும்பாலும் இணைய பத்திரிக்கைகளில் தான் அதிகம் வெளியிடப்படுகிறது. அதில் பாதிக்கும் மேற்பட்டது மொழிபெயர்ப்பு சிறுதைகள்தாம். தான் அறியாத உலகை வாழ்வை ஊர்களை மனிதர்களை அறிந்து கொள்ள இயலுவதாலேயே மொழிபெயர்ப்பு சிறுகதைகள் பெரும் வரவேற்பை பெறுகிறது இன்று. நேரடி அமெரிக்க ஆங்கில சிறுகதைகள் நியூயார்க்கில் கலிஃபோர்னியாவில் உள்ள பெரு நகரங்களில் அவர்கள் அறிந்த அவர்கள் புழங்கும் பகுதிகளிலிருந்து மட்டுமே கிளம்பி வருகிறது. அக்கதைகளும் சிறு பெட்டிக்குள் அடைபட்ட விசைப் பந்துகளைப் போல குடும்பச் சிதைவுகள், பேய்க் கதைகள், வேற்று கிரக வாசிகள், போதைப் பிறழ்வுகள் என்று தன்னுடைய தேடல் எது தான் கண்டடைவது எது என்பதை அறியாமல் சுற்றி வருகிறது.

 

இந்நிலையில்தான் ஒரு சிறு அலையைப் போல புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் நேரடி ஆங்கில சிறுகதைகள் மேலெழத் தொடங்கியுள்ளன. இவர்கள் அகதிகளாகவோ அல்ல தொழில் நிமித்தமாக 80 களின் தொடக்கத்தில் பிரிட்டனுக்கும் அமெரிக்காவிற்கும் குடி பெயர்ந்தவர்களின் முதல் அல்ல இரண்டாம் தலைமுறை மக்கள். இவர்கள் மேற்கத்திய குடிமகன்களாகவே வளர்ந்தாலும் தன் வேரை கண்டடையும் தேடல் கொண்டிருப்பதினால் இரண்டு கலாசாரங்களுக்கு இடையிலான மோதல் இவர்களுக்குள் கேள்விகளை எழுப்புகிறது. முதல் தலைமுறை தன் இருப்பை நிலை நாட்டும் போராட்டத்தில் தன் பூர்வீகத்தை மொத்தமாக மறந்து மேற்கத்திய வாழ்வில் ஒன்றினையும் முனைப்பில் இருக்க அடுத்த தலைமுறையோ தராசு தட்டின் நடு முள் போல இரு கலாச்சாரங்களையும் அளந்து பார்க்க முற்படுகிறார்கள். வெற்றி பெற்றவர்களின் வெற்றிகளை கேள்விக்குள்ளாக்குகிறார்கள். ஏற்கனெவே விவாதிக்கப்படும் உறவுச் சிக்கல்கள் இவர்கள் பார்வையில் வேறொரு பரிணாமம் பெறுகிறது. வேறொரு தளத்தில் அலசுவதால் அன்றாடப் பிரச்சினைகள் கூட புது உருவம் பெருகிறது. இலக்கியம் பொதுவெளிக்கு எதிராக நின்று உரத்து பேசுவதாலும் சராசரிகளுடன் முரண்படும் முனைப்பில் இருப்பதாலும் உலகம் முழுதும் கிளம்பியிருக்கும் நிற இன பேதங்களின் பூதாகர பயங்களுக்கு எதிர்வினையாற்ற வேண்டியிருக்கிறது. இச்சூழலும் கூட கலாச்சாரங்கள் முயங்கியும் முரண்பட்டும் வெளிப்படும் கதைகள் பரவலாக்கப்படுகிறது என்றும் தோன்றுகிறது.

 

 

மிகப் பிரபலமான பல புலம்பெயர்ந்த சிறுகதையாசிரியர்களின் பட்டியலிலிருந்து நால்வரின் அறிமுகமும் அவர்கள் கதைகளின் பேசுதளங்களை பின்வரும் பகுதிகளில் அறிமுகப்படுத்திக் கொள்வதின் மூலமாக இன்றைய அரசியல் சூழலில் இலக்கியத்தில் இவர்கள் முன்னனியில் வந்து நிற்பதின் அர்த்தத்தை புரிந்து கொள்ளலாம்.

 

யியுன் லீ:

கடந்த பத்தாண்டுகளில் அதிக கவனமும் விருதுகளையும் குவித்த படைப்பாளிகளில் விமர்சகர்களின் பட்டியல்களில் தவறாமல் இடம் பிடிக்கும் பெயர் யியுன் லீ (Yiun Li). இவர் ஒரு சீன அமெரிக்க எழுத்தாளர். தன்னுடைய 28வது வயதில் அமெரிக்காவிற்கு பட்டப் படிப்புகளுக்காக வந்தார். 2005 லிருந்து தொடர்சியாக தன்னுடைய சிறுகதைகளுக்காக விருதுகளை வென்றிருக்கிறார். 2012 ல் பெரும் மன அழுத்தம் காரணமாக இருமுறை தற்கொலைக்கு முயன்று, எழுதுவதையும் முற்றிலுமாக நிறுத்தியிருந்தார். 2015லிருந்து மீண்டு வந்து இப்போது தொடர்ந்து சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதி வருகிறார். இவருக்குள்ளே எஞ்சியிருக்கும் சீனா ஒரு மாய டிராகனைப் போல இவரின் சிறுகதைகளில் இருந்தும் இல்லாமலும் வெளிப்படுகிறது. சீனாவின் தொன்மங்களும் பண்பாடும் மார்க்ஸியத்திற்கு பிறகான குழப்பங்களும் இவரின் கதைகளில் உருவகங்களாக உருமாறுகிறது.

பெற்றோரை விட்டு வேற்று நாடு புகும் அனைவருக்கும் தாய் தந்தையுடனான உறவுதான் மிகச் சிக்கலாக மாறுகிறது. உறவுகளை இறுகக் கட்டி அதன் மீது எழும்பி நிற்கும் பண்பாடுகளிலிருந்து வளர்ந்து வரும் இடம் பெயர்ந்தவர்கள் பெற்றோரை விட்டு கடல் தாண்டி நிற்கும் குற்ற உணர்வும் எதிர் முனையில் நாகரீகங்களின் மாற்றங்களையும் தனிமனித சுதந்திரம் எனும் நவயுக கோட்பாட்டை புரிந்துகொள்ள முடியாத பெற்றோர்களின் மரபார்ந்த மனங்களும் காரணங்களாகிறது.

இங்கு வெளியான ஆயிரமாண்டுப் பிரார்த்தனைகள் – https://www.jeyamohan.in/109212#.XW-9zZMzaT8  கதையிலும் முதல் தளத்தில் பிரதானமாக நிற்பதுவும் இதுவே. தந்தை மகளுக்கான பிரிவு அவர்கள் புரிந்து கொண்ட காலாசாரத்தின் அடிப்படையில் தொடங்குகிறது. திருமணத்தை மீறிய உறவின் தொடக்கமும் அதை எதிர்க்கும் பண்பாட்டு அடக்குமுறையினாலும், அப்பா தன்னுடைய அடையாளத்தை மறைத்து ஒரு பொய்யான வாழ்கையை அந்நிய நாடு வரையிலும் தொடர்கிறார். மகள் தன்னுடைய உறவை மறைக்க கூட அவசியமில்லாத ஒரு பண்பாட்டில் வாழ்கிறார். இரண்டாம் தளத்தில் மொழி, உரையாடலின் முக்கியத்துவம் அல்லது அதன் அவசியமின்மை. அது உறவுகளை உடைக்கும் கண்ணியாக மாறுவது அல்லது உறவுகளை உருவாக்கும் காரணியாக மாறுவது. உரையாடலே ஒரு உறவை உருவாக்கும் அடிப்படை காரணியென்று மகள் தன் திருமண உறவை முறித்துக் கொள்கிறாள். அதன் காரணமாகவே தன் புது உறவையும் அமைத்துக் கொள்கிறாள். ஒரு புது மொழி ஒருவனை புது மனிதனாக்கும் என்று நம்புகிறார். அந்நிய மொழியில் தன்னை கண்டடைகிறாள். ஆனால் தந்தையோ ஆத்மார்த்தமான உறவிற்கு மொழி அவசியமில்லையென்று நினைக்கிறார். அவர்கள் ஆயிரமாண்டு பிரார்த்தனை செய்திருந்தாலே போதும் அவர்கள் இவ்வாழ்வில் ஒன்று சேர்வதற்கு என்று நம்புகிறார். இது நம்மை மூன்றாம் தளத்திற்கு இட்டுச் செல்கிறது. மூன்றாம் தளத்தில் சீனத் தொன்மக் கதை ஒரு அந்நிய நாட்டில் புரிந்து கொள்ள முடியாத ஒரு பண்பாட்டில் தரும் ஆசுவாசம். ஆயிரம் ஆண்டு பிரார்த்தனை என்ற தொன்மமே உறவுகள் பிரிவதற்கும் சேர்வதற்கும் காரணம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த குடும்பச் சிதைவுகளை அர்த்தப்படுத்திக் கொள்ள முயல்கிறார் தந்தை. மகளுக்கு இந்த தொன்மத்தை கேள்வி கேட்கும் பார்வைதான் உண்டு. சிதைவுற்ற தன் வாழ்விலிருந்து தான் தஞ்சம் அடையும் இடம் இதுவல்ல என்று இவர் உணர்கிறார். இக்கதை முழுதும் இந்த இரட்டை நிலை பிரதானமாக இருக்கிறது. மிகச் சன்னமாக இந்த விவாதம் இக்கதை முழுதும் தொடர்கிறது. இத்தகைய மறைபிரதிகளும் உருவகங்களும் இவரது கதைகள் அனைத்திலும் காணமுடியும்.

டினா நயேரி (Dina Nayeri) – இவர் ஈரானிய அமெரிக்க எழுத்தாளர். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என்று பல்வேறு தளங்களில் இயங்கி வருகிறார். தன்னுடைய 8வது வயதில் தன் தாய் கிறித்துவ மதத்திற்கு மாறியதன் விளைவாக எழுந்த இஸ்லாமிய அடக்குமுறையிலிருந்து தப்பித்து துபாயிலும் ரோமிலும் அகதிகளாக சிறிது காலம் வாழ்ந்து பின்பு அமெரிக்காவில் தஞ்சமடைகிறார்கள். இவரின் தந்தை ஈரானிலேயே இருந்துவிட, இவர் தன் தாய் தம்பியுடன் நீண்ட அகதி வாழ்விற்கு பிறகு அமெரிக்க குடிமகன்களாக மாறுகிறார்கள். தற்போது லண்டனில் வசித்து வருகிறார். தன்னுடைய கதைகள் அனைத்தையும் தன்னுடைய வாழ்விலிருந்தே எடுப்பதாக சொல்கிறார். தன் வாழ்வைப் போலவே தாய்-மகளிடம் இருக்கும் பிணைப்புகளும் பினக்குகளும் இவரின் கதைகளின் மையமாக அமைகிறது. அவற்றில் இவர்கள் அலைந்து திரிந்த நிலங்கள் பெரும் படிமங்களாக மாறுகின்றன.

 

தன்னுடைய சொந்த வாழ்க்கையையே கிட்டத்தட்ட வேறொரு கோணத்தில் ‘A Ride out of Phrao’  –  https://aqreview.org/a-ride-out-of-phrao/ என்ற அவரின் சிறுகதையில் வெளிப்படுகிறது. ஈரானிலிருந்து வெளியேறும் தாய் அமெரிக்க வாழ்க்கையோடு இயைந்து போக முடியாமல் மகளை விட்டு தாய்லாந்துக்கு அமைதிப்படையினரோடு சேர்ந்து செல்கிறார். ராபர்ட் ஃப்ராஸ்ட்டின் கவிதைகளைப் போல தன்னை பிரதிபலிக்கும் நிலங்களிலிருந்தும் மக்களிடமிருந்தும் தன்னை கண்டடைகிறார் தாய் ஷிரின்.  ஒரு நேரடியான சாதாரண கதை போல இது தெரிந்தாலும் இது தனித்திருக்கும் பேசுதளங்கள் கொஞ்சம் வித்தியாசமானது.

 

  1. Ethnomethodology – ஒரு சமூகத்தின் இயல்பில் லேசாக ஊடுறுவி அச்சமூகத்தின் நடைமுறைத் தன்மையை அறிந்து கொள்வது. கலைத்து போட்ட பின் அது தன்னை மீண்டும் எப்படி ஒழுங்குபடுத்திக் கொள்கிறது என்று பார்ப்பது. தாய்லாந்திலிருக்கும் ஒரு சிறு கிராமத்தில் அந்நியராக வந்து சேரும் டாக்டர் ஷிரின், கொஞ்சம் கொஞ்சமாக அச்சமூகத்தை அவரும் அக்கிராமம் அவரையும் உள்ளிழுத்துக் கொள்கிறது. இவர் அசைந்து கொடுக்கும் இடமெல்லாம் தன் பூர்விக நிலமான ஈரானை ஒத்திருக்கிறது. ஒத்து போக முடியாத இடங்களில் இவர் ஒதுங்கி வாழ நேர்கிறது. இப்படி ஒருவரின் பூர்வீக சமூகத்திற்கும் புலம் பெயர்ந்த சமூகத்திற்கும் இருக்கும் ஒற்றுமையின் அளவுகோளின்படி ஒருவரையொருவர் புதிதாக மாற்றி அமைத்துக் கொள்கிறார்கள். அமெரிக்காவிலிருந்து வரும் அவரது மகளால் அது முடிவதேயில்லை. வெளியேறி வசதியான ஒரு ஓட்டலில் தங்கிய பிறகு தான் அவரால் சகஜமான நிலைக்கே திரும்ப முடிகிறது.
  2. நம்பிக்கைகள்/ உருவகங்கள் – உருவ வழிபாடு அற்ற முஸ்லிம் மதத்தில் பிறந்த ஷிரின் தாய்லாந்து முழுக்க நிறைந்திருக்கும் புத்தர் சிலைகள் புன்னகைத்துக் கொண்டிருப்பதை பார்க்கிறார். கொஞ்சம் ஆட்டிஸ்டிக்காக இருக்கும் மகனின் மீது வன்முறையை நீட்டும் தந்தையை கண்டும் அந்த புத்தர் சிரித்துக் கொண்டுதான் இருப்பார் என்பதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உலவுவதாக சொல்லப்படும் பேய்களை இரக்கமற்ற அந்த தந்தையாகத் தான் பார்கிறார். அல்லது எத்தனை முறை கொன்றாலும் மீண்டும் மீண்டும் தன் வீட்டுச் சுவற்றில் உலவும் பல்லியாக பார்கிறார். அந்நிய நிலங்களில் ஒன்றியலமுடியாத அத்தனையும் பூதங்களாக தொல்லுலகின் பேயுருவங்களாகத் தெரிகிறது.
  3. இது ஒரு வகையில் கதாசிரியரின் தன் தாயின் மீதான படிப்பாய்வும் கூட. இக்கதையில் வரும் டாக்டர் ஷிரின் ஈரானில் பிறந்து அமெரிக்காவை கடந்து வந்தாலும் தன் சுயத்தை அவர் தாய்லாந்து கிராமத்தில் தான் கண்டடைகிறார். அங்குதான் தன் முழு ஆளுமையும் வெளிப்படுவதாக உணர்கிறார். தாய்லாந்தில் முதியவர்களுக்கு கொடுக்கப்படும் மரியாதை அவருக்கு பிடித்திருக்கிறது. தான் முதியவள் என்பதை மறைக்க வேண்டிய அவசியமற்றவராகிறார். தன் நரை முடிக்கு கூட இனி பூச்சு தேவையில்லை என்று விடுதலையடைகிறார். அச்சமூகத்தில் தனக்கு கிடைக்கும் உயர்ந்த இடத்தையே இனி தன் வாழ்வாக மாற்றிக் கொள்கிறார் ஷிரின். இக்கதாசிரியரின் தாய்க்கு உண்மையில் அப்படி ஒரு வாய்ப்பு அமையவில்லை. அமெரிக்காவில் ஒரு அம்மாவாக மட்டுமே தன் வாழ்வை கழித்தவர் தொலைத்தது என்ன என்ற ஒரு சிறு ஆய்வே கதையாக விரிகிறது.

 

குழந்தை பருவத்தை அகதி முகாம்களில் கழித்ததின் வலிகளையும் வாழ்வு தன்னகத்தே மறைத்து வைத்திருக்கும் கைவராத விடுதலையுமே இவர் கதைகளின் பேசுபொருட்கள்.

வியட் தன் ங்குவேன் (Viet Than Nguyen) – குவென் வியட்னாமை பூர்வீகமாகக் கொண்டவர். தன்னுடைய நாலு வயதில் அவருடைய குடும்பம் சாய்கானின் வீழ்ச்சிக்குப் பிறகு அமெரிக்காவிற்கு தஞ்சம் புகுந்தது. 2010 ல் சிறுகதைகளின் மூலம் இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். 2016ம் ஆண்டு தன்னுடைய நாவலுக்காக புலிட்ஸர் பரிசை வென்றிருக்கிறார். 2017 ல் வெளிவந்த இவரின் சிறுகதைத் தொகுப்பு பெரும் வரவேற்பை பெற்றது. அமெரிக்காவின் வியட்னாமிய காலனிகளில் அகதிகளின் கதை கேட்டே வளர்ந்தவர். அவர்களின் உண்மைக் கதைகளையே தன்னுடைய நாவல்களிலும் சிறுகதைகளிலும் மீட்டுருவாக்கம் செய்கிறார்.

சாய்கானின் வீழ்ச்சிக்குப் பிறகு தெற்கு வியட்னாம் மக்கள் பலரும் re-education camp என்ற பெயரில் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் சிலர் 17 ஆண்டுகள் கூட சிறையில் இருந்திருக்கிறார்கள். அங்கிருந்து கிளைத்து எழும்பும் வாழ்க்கைக் கதைகள் விசித்திரமானவை. அப்படியொரு விசித்திரமான வாழ்க்கைப் போக்கை சித்தரிப்பதாலேயே Fatherland – https://vietnguyen.info/wp-content/uploads/2013/07/NguyenViet_Fatherland.pdf என்ற இந்த சிறுகதை முக்கியமான கவனத்தைப் பெறுகிறது. போர் காலங்களிலேயே தன் கணவனுக்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதை அறிந்து மனைவி தன் மூன்று குழந்தைகளோடு அமெரிக்காவிற்கு வெளியேறுகிறாள். போர் முடிந்ததும் சிறையிலடைக்கப்படும் லய் மீண்டு வந்து மறுமணம் புரிந்து அதில் பிறக்கும் மூன்று குழந்தைகளுக்கும் முதல் மனைவியின் குழந்தைகளின் பெயரையே வைக்கிறான். அமெரிக்காவில் இருக்கும் குடும்பத்தின் மூத்த பெண் வியட்னாமில் தன் பெயர் கொண்டிருக்கும் தங்கையை காண வருகையில் கதை தொடங்குகிறது. இருவருக்குமான கனவுகள், பொய் முகங்கள், இருவருக்கும் ஒன்று போலவே அமையும் ஏமாற்றங்களையும் விவரிக்கிறது.

சொந்த நாட்டிலேயே அகதிகளாக திரிந்து தன் வாழ்வை சேர்த்து கட்டியமைக்க முயலும் இவர்களுக்கும் வல்லரசு நாடுகளில் வாழும் அகதிகளும் வாழ்வு தரத்தில் பெரிய வித்தியாசமில்லை என்பதை இந்தக் கதை அடிக்கோடிடுகிறது. வியட்னாமிற்கு வரும் மேற்கத்திய சுற்றுல்லாவாசிகள் இவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொள்வதும் போர்க் காலங்களில் இவர்கள் பதுங்கியிருந்த குழிகளுக்குள் சென்று வருவதுமென தன் சொந்த நாட்டிலேயே இவர்கள் வாழ்வு காணுலா காட்சியாக மாறியிருக்கிறது. புலம் பெயர்ந்த நாட்டில் அகதிகளின் மீதூறும் கண்களைத் தான் தன் நாட்டிலும் சந்திக்க வேண்டியிருக்கிறது.

இந்த இரண்டு குடும்பங்களுக்கிடையில் கண் அறியாத ஒரு இணைப்புக் கம்பியை போல அவர்களின் பெயர்கள் இருக்கிறது. அது அவர்களை மீண்டும் ஒன்று சேர்க்கும் என்பது லய் யின் நம்பிக்கை. தன்னுடைய நாட்டிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கும் தான் ஒரு காட்சி பொருளாக இருப்பதை போலதான் வேறு நாட்டில் வாழ்வதும் இருக்கும் என்ற கசப்பு தட்டுப்படும் போது, கெட்ட கனவுகளை கொடுக்கும் சாத்தானை அழிப்பதைப் போல் தன் அமெரிக்க அக்காவின் புகைப்படங்களை எரித்து விடுகிறாள். கவிழ்த்து வைத்த நீல கிண்ணத்தைப் போன்ற வானத்தின் அடியில் அப்புகை பரவுவதை காண்கிறாள். இந்த நீல கிண்ணம் அனைவருக்கும் ஒன்றுதானே என்று உணர்கிறாள்

கென் லியு (Ken Liu) – இவரும் சீனாவில் பிறந்தவர். தன்னுடைய 11வது வயதில் இவர் குடும்பம் அமெரிக்காவில் குடியேறியது.  மைக்ரோசாஃப்டில் பணிபுரிந்து பின்னர் ஹார்வர்டு சட்டக் கல்லூரியில் சட்டம் முடித்து தற்போது கார்பொரேட் கம்பெனிகளின் வக்கீலாக பணியாற்றி வருகிறார். 2002 லிருந்து புனைவுக் கதைகளை பதிப்பித்து வரும் இவர் அறிவியல் புனைவு, ஃபேண்டஸி வகை கதைளின் மூலம் பிரபலமாக அறியப்படுகிறார். பல சீன இலக்கியங்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வருகிறார். இவரின் இந்த காகித மிருகச் சாலைhttps://io9.gizmodo.com/read-ken-lius-amazing-story-that-swept-the-hugo-nebula-5958919 என்ற சிறுகதை 2013ல் ஃபேண்டஸி வகை கதைகளுக்கு வழங்கப்படும் அத்தனை விருதுகளையும் வென்றது.

சிறு நிறப்பேதங்களையும் உடலமைப்பின் வித்தியாசங்களையும் சகித்துக் கொள்ளமுடியாத ஒரு உலகில் இந்த வேற்றுமைகளையே தன் அடையாளங்களாக சுமந்து திரிவதின் சிரமங்களை சொல்லும் கதையிது. பெற்றோர் இருவரும் வேற்று இனத்தவர்களாக இருக்க இரண்டிலும் சேர முடியாமல் தனித்து நிற்கும் பிள்ளைகளின் மனச் சிக்கல்கள் “Three Body Problem of identity” – என்று அழைக்கப்படுகிறது. மகன் பெற்றோர்களின் இருவேறு கலாச்சாரங்களின் பக்கமும் இழுபடுகிறான். அமெரிக்க அப்பாவிற்கும் சீன அம்மாவிற்கும் பிறக்கும் ஜாக் அமெரிக்க முகமாக தன்னை மாற்றிக் கொள்வதற்காக அம்மாவின் அன்பெனும் மாயங்களை முற்றிலுமாக உதறுகிறான். ஆங்கிலத்தில் தன் அன்பை வெளிப்படுத்த இயலாத அம்மா அவனுக்கு செய்து கொடுக்கும் சீன ஒரிகாமி விலங்கு பொம்மைகள் மூலம் வெளிப்படுத்துகிறாள். தன் மூச்சினால் அவற்றிற்கு உயிர் கொடுக்கிறாள்.  தான் வளர வளர நண்பர்களிடமிருந்து உருவத்திலும் கலாச்சாரத்திலும் விலகி நிற்பதை உணர்ந்தவுடன் மகன் முழுவதுமாக அமெரிக்கனாகிறான். மாற முடியாத அம்மாவை முற்றிலும் விலக்கி வைக்கிறான். அம்மாவின் இறப்பிற்கு பிறகு அவன் கையில் அகப்படும், சிறுவயதில் தோழனாகவே உடனிருந்த புலி ஒரிகாமி உயிர்பெருகிறது. அவன் அம்மாவின் நினைவுகளும் மீண்டு எழுகிறது.

புலம் பெயர்ந்த வாழ்க்கையில் சிறுவர்களின் முதல் தழும்பு அவர்களுக்கு பள்ளியிலோ நண்பர்களிடமோ தன் உருவம் மீதான கிண்டலும் கேலியும்தான். அந்த அவமானம் அவர்கள் வயதில் அவர்கள் கண்டடைய வேண்டிய மாயங்களை காணாமல் செய்துவிடுகிறது. அவன் கற்பனையில் அவனுடன் உலாவிக் கொண்டிருந்த அத்தனை காகித மிருகங்களும் காணாமல் போனது அவன் பால்யத்தையே இழந்தது போலத்தான். நாடோடிக் கதைகள் கொண்ட கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தை அவள் அம்மா அறிந்திருக்கிறாள். கற்பனை உலகில் தன் அன்பை பூரணமாக வெளிப்படுத்துகிறாள். இறந்தவர்கள் மீண்டெழும் நாள் குறித்து அவள் அழுந்திக் கூறுவது அப்படியொரு நாளில் தான் மீண்டும் தன் பிள்ளை ஜாக்கிடம் வந்து சேர்வோம் என்ற நம்பிக்கையில்தான். மூதாதையர்கள் உயிர் பெறும் நாள்தான் அவன் தன் அம்மாவை புரிந்து கொள்ளும் நாளாகவும் மாறுகிறது. அவளின் கடிதத்தில் சீன மொழியில் ‘அன்பு’ என்ற வார்த்தையை தேடி தெரிந்து கொள்கிறான். அவனுக்கு சீன கலாச்சாரத்திலிருந்து கிடைத்தது அதுவொன்றே.

 

 

 

ஒருசில அடிப்படை கூறுகளை கொண்டு இவர்களின் கதைகள் மூலம் ஆங்கில இலக்கியத்தில் சிறுகதை மீண்டும் உயிர்ப்படைந்திருப்பது ஏன் என்று புரிந்து கொள்ளலாம்.

  1. கதைக் களங்கள் – சிதைவுற்ற குடும்பங்கள், போதை அடிமை பழக்கம், பதின்பருவ காதல்கள், உடற் மோகங்கள் இவையே நவீன ஆங்கில சிறுகதைகளின் அடிப்படைகளாக மீண்டும் மீண்டும் பேசப்படுகிறது. சிதைவுற்ற குடும்பங்கள் – இது பெரும்பாலும் தனி மனித சுதந்திரத்தை நோக்கியே உருவாகும் முரண்பாடுகளாக இருக்கும். இந்த பிளவுகள் ஒரு கட்டத்தில் சலிப்பையே கொடுக்கும். தேடுதல் உள்ள எவருக்கும் இது அர்த்தமற்றதாகப் படும். ஆனால் இடம் பெயரும் வாழ்வினால் உண்டாகும் குடும்ப முரண்கள் முற்றிலும் மனித மனங்களின் செயல்பாட்டை வாழ்ந்து பார்க்கமுடியாத தருணங்களின் அடிப்படையில் உருவாகிறது. வாசகன் தன்னை அதில் பொருத்தி பார்த்துக் கொள்ளமுடியாவிட்டாலும் கற்பனையில் அது மிகப் பிரம்மாண்டமானதாக விரிகிறது. வெறும் ஆண் பெண் உறவுகளைப் பற்றி மட்டுமே பேசி வரும் கதைகளினூடே தாய் – மகன், தந்தை – மகள் உறவுகளின் சிக்கல்கள் ஆங்கில வாசகனுக்கு அதுவரை இல்லாத பெரும் திறப்பை கொடுக்கிறது. மேலே சொன்ன கதைகளில் வரும் குடும்ப சிக்கல்கள் அசாதாரணமான தளங்களில் நிகழ்கிறது. உடனே திருத்தி அமைக்க முடியாத வாழ்க்கை போக்குகளாக உள்ளது. சீனாவின் மிஸ்டர் ஷீயும், வியட்னாமின் மிஸ்டரி லய்யும் அவர்களின் சிதைவுக்கு மாவோவின் கலாச்சார கட்டுப்பாடுகளும் வியட்னாமிய போரின் பின் விளைவுகளும் காரணமாக அமைகிறது.
  2. வரலாறு – வரலாற்று பார்வை இக்கதைகளின் அடுத்த முக்கிய கவனம் ஈர்க்கும் கூறாக இருக்கிறது. இக்கதைகள் தன்னியல்பாகவே வரலாறை தொட்டு பேசுகிறது. ஆங்கில இலக்கிய வாசகனுக்கு பரிச்சயமில்லாத சில வரலாறுகளையும். இக்கதைகளின் மூலம் அவன் காலத்தில் பின் சென்று வரலாறும் மனிதர்களும் முட்டி மோதிக் கொள்வதைக் காண்கிறான். அத்தனை அல்லல்களினூடாக மனித தரிசனங்களை கண்டடைகிறான். பெரும் வராலாற்று பின்புலத்தில் இக்கதைகள் நிகழ்வதால் இச்சிறுகதைகள் நாவல்தன்மையை நோக்கி நகருகிறது. கதைகள் முன்னும் பின்னும் கிளை விரித்து பரவுகிறது. தனிமனிதனுக்கு எதிராக வரலாறே ஒரு தனி மனிதனாக உருவம் பெற்று அவனோடு முரண்பட்டு நிற்கிறது. ஒருவரை ஒருவர் மாற்றியமைக்கிறார்கள். எப்போதுமே வரலாறுதான் வெற்றி பெருகிறது. ஆனால் அதற்கெதிரான போராட்டத்தை எந்த தனிமனிதனும் கைவிடுவதில்லை. அது ஏன் என்ற கேள்விக்கும் வரலாறே சிரித்தபடி பதிலளிக்கும்.
  3. தொன்ம மீட்டுருவாக்கம் – புலம் பெயர்ந்தவர்களின் மரபார்ந்த நாகரீகங்களும் தொன்மங்களும் அமெரிக்க அல்ல ஆங்கில வாழ்வு முறைக்கு முற்றிலும் மாறானாது. புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் தங்கள் கதைகளில் தொன்மத்தை மீட்டெடுக்கிறார்கள் அல்லது அது உருவாவதை மீள் கற்பனை செய்கிறார்கள். யியுன் லீயின் கதைகளில் பாட்டி கதைகள் போல ஏதாவது ஒரு தொன்மக் கதையோ அல்ல நாடோடிக் கதைகளோ தவறாமல் வந்துவிடும். ஒரு ஏரியை கடக்க ஒரே படகில் இருவர் செல்ல நேர்ந்தால் அப்பயணத்துக்காக அவர்கள் 300 வருட பிரார்த்தனை செய்திருக்க வேண்டும் என்ற தொன்மம், தன் சிறு வாழ்வையும் மீறி உலகம் அவனுக்கு அப்பால் உழல்வதை வாசகன் உணர்கிறான். சீனாவின் மறைந்தவர்கள் உயிர்த்தெழும் நாளைப் போல, மெக்ஸிகோவின் மாயன் நாகரீக்கத்தின் தொடர்ச்சியாக மயானக் கொண்டாட்டங்கள் என்பன போன்ற தொன்ம கதைகளும் சடங்குகளும் பல்வேறு கதைப் படிமங்களாக அமெரிக்க குழந்தைகளை வந்தடைந்துக் கொண்டிருக்கின்றன. மாய எதார்த்தக் கதைகளை தேடித் தேடி லத்தீன் அமெரிக்க கதைகளை மொழிபெயர்த்து வாசித்த வாசகர்களை இன்று இச்சிறுகதை ஆசிரியர்களால் நேரடி ஆங்கில சிறுகதைகளாக, அமெரிக்காவிலேயே நிகழும் கதைகளென வந்து சேர்கிறது.
  4. மொழி – இளம் அமெரிக்க எழுத்தாளர்களின் மொழி பேச்சு வழக்கை ஒத்தியிருப்பது தொடர் வாசிப்பிற்கு பெரும் தடையாக அமைந்து விடுகிறது. உதாரணமாக ‘f’ வார்த்தைகளும் ’s’ வார்த்தைகளுமான வசவு சொற்கள் அத்தனை உரையாடல்களிலும் தொடர்ந்து வருவது எதார்த்தத்தை நெருங்கிய படைப்பு என்ற உணர்வை ஆரம்பத்தில் தந்தாலும் அன்றாடத்தின் சலிப்பையும் தந்து விடுகிறது. இது இலக்கிய வாசகனை எந்த விதத்திலும் மேலெழச்செய்யாமல் போகிறது. சின்ன விஷயங்களையே பேசிக் கொண்டிருப்பதை போன்ற ஒரு எண்ணத்தை கொடுக்கிறது. வாழ்வின் நுண்மைகளைத் தேடிச் செல்லும் வாசகனை இது வெளியே தள்ளிவிடுகிறது. முக்கியமாக செறிவான மொழியற்ற கதைகள் செவ்வியல் தரத்தை நெருங்குவதில்லை. வட்டார வழக்குகள் நிறைந்திருக்கும் மொழியில் பேச்சு வழக்கு தனித்துவம் பெருகிறது. ஆனால் நிலத்திற்கு நிலம் ஆங்கில உச்சரிப்பும் சரி தவறுமாக இலக்கணம் மட்டும் மாறுபடும் மொழிச்சூழலில் பெரும்பாலும் ஓர் அர்த்தம் கொண்ட பன்மொழி அதிகம் காண்பதற்கில்லை. மாறாக, இந்த புலம் பெயர்ந்தவர்களின் நேரடி ஆங்கில கதைகளில் இத்தகைய மொழி கையாளப்படுவதில்லை. அப்படியே வந்தாலும் அது கலாச்சார வித்தியாசங்களை காட்டும் முகமாக மட்டுமே வருகிறது. மேலும் ஆங்கிலத்தை, ஒரு மொழியாக கற்று இவர்கள் எழுதுவதால் பேச்சு வழக்கில் அரிதாக தென்படும் வார்த்தைகள் இவர்கள் கதைகளில் பார்க்க முடியும். அர்த்தம் மிகுதியான வார்த்தைகளை கையாள்கிறார்கள். இவர்களின் மொழி ஆங்கில இலக்கிய வாசகனுக்கு பெரும் வசீகரமாக இருக்கிறது.

 

இந்த நான்கும் ஆங்கில சிறுகதைகள் கிட்டத்தட்ட மறைந்து போய்விட்ட இக்காலகட்டத்தில் மீண்டும் உயிர் பெறச் செய்யும் கூறுகளாக கருதலாம். இதனாலேயே புலம் பெயர்ந்தவர்களின் எழுத்துக்கள் சிறுகதைகளை மீண்டும் மைய இலக்கியத்தில் காணச் செய்யத் தொடங்கியிருக்கிறது. ஆனால் ஒரு தமிழ் இலக்கிய வாசகனாக இந்த கலாச்சார இணைதலும் பிரிதலும் பெரும் பரவசத்தை கொடுப்பதில்லை. இந்த கூறுகுகள் எதுவும் தமிழ் வாசகனுக்கு புதிதில்லை. நிலமும் வரலாறும் மட்டுமே புதிது. ஆகவே இக்கதைகள் மேலெழுந்து மானுட தேடலை முன்னெடுக்காவிடில் நமக்கு அவை கொடுப்பது அனேகமாக ஒன்றுமில்லை. புலம் பெயர்ந்தவர்களின் சிறுகதைகள் தங்களின் பாதிப்பினால் மேற்கத்திய கலாச்சாரம் மாறுதலடைந்ததையோ அவர்களின் பண்பாடு நெகிழ்ந்து திசை திரும்புவதையோ தன் தேடலாக கொள்ளாமல் தொடர்ந்து தங்கள் வாழ்வின் பிரதிகளாக மட்டுமே வருமெனில் இந்த சிறுகதைகளின் அலையெழிச்சியும் சிறுகல் மோதி உடையும். ‘காகித மிருகச்சாலையில்’ ஜாக் எப்படி அம்மாவின் ஆரிகாமி மூலமாக மூதாதைகள் மீண்டெழும் நாளில் கற்பனை என்னும் மாயத்தை மீண்டும் கண்டுகொண்டானோ அப்படி ஆங்கில சிறுகதை இயக்கமும் மீண்டு எழுந்து வருமென்று நம்பலாம்.

நன்றி!

 

[ஈரோடு சிறுகதை விவாத அரங்கில் பேசப்பட்ட கட்டுரை. நரேன்]

ஆயிரமாண்டுப் பிரார்த்தனைகள்-     யியூன் லீ

முந்தைய கட்டுரைஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்
அடுத்த கட்டுரைசுயபண்புமுன்னேற்றம்