,//அறம், சோற்றுக்கடன், வணங்கான் – போன்ற செறிந்த இலக்கியங்களைச் சரமாரித்
தொடுக்கும் உங்களது அபாரப் படைப்பூக்கம், தொடர்ந்து இப்படியே பல்லாண்டு
காலம் நீடித்திருந்தால் எப்படி இருக்கும் என்ற நினைப்பே அலாதியாய்
இருக்கிறது.// என்று சண்முகம் என்கிற வாசகர் உங்களுக்கு எழுதிய மனநிலையில் இருந்தேன்… தாயார் பாதம் படிக்கும் வரை.
சோற்றுக்கடன் என் சொந்த வாழ்வின் நிகழ்வைக் கொண்டது, என் உறவினர் வீடுகளில் சோற்றில் கை வைக்கும் போது மறக்க முடியாத நிகழ்வுகள் அவை. எனவே அது பிடித்திருந்தது.
வணங்கான் என்ன சொல்வது – நேசமணி நிகழ்த்தி காட்டினார் அல்லது தொன்மக் கதை என்று யூகித்திருந்தாலும், கதையும் வர்ணனையும், இதே போன்று வாழ்க்கையில் சந்தித்த மனிதர்களும் என்று என்னோடு தங்கப் போகும் கதை….
ஆனால், தாயார் பாதம் சிறுகதையில், உங்கள் formula மிகை – எதிர்பார்க்கக் கூடிய திருப்பங்கள். பிராமண பாஷை, பெண்ணின் நோக்கு இரண்டும் கதையோட்டத்தோடு சரிவர இல்லை. பெண்ணின் நோக்கு இல்லாதது ரொம்பவே damaging – வணங்கான் மற்றும் சோற்றுக்கடன் இரண்டிலும் துன்பப்பட்டவனின் நோக்கிலிருந்து கதை அவர்களின் பாஷையோடு மிகவே அருமையாக இருந்தது. இந்த “தாயார் பாதம்” மாதிரி இன்னும் பெண்கள் கதை எழுதினால், நாளைக்கு தாடியை நீவி கதைச்சித்தர் ஆகி விடுவீர்களோ என்று பயமாக இருக்கிறது:-)
இன்னும் விரிவாக எழுத விருப்பம், நேரம் இல்லை. மன்னிக்கவும்.
கெ. பி.
http://kekkepikkuni.blogspot.com
—
பெண்ணீன் குரல் ஒலித்தால்தான் பெண்ணின் தரப்பு அதில் இருக்கிறது என்று பொருள் இல்லை. அவ்வளவுதான் என் தரப்பு
ஜெ
திரு ஜெயமோகன்,
தாயார் பாதம்
ரணங்கள் தந்த தழும்புகளை தடவி பார்ப்பது போல்… இந்த கதையின் தாக்கத்தை எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. ஏனென்றால் அந்த பாட்டியின் மௌனம், வலி உணரமட்டுமே முடிந்த ஒன்று. பொதுவாக நல்லவர்களாய் இருக்கும் அப்பா, சித்தப்பா, பெரியப்பா, அண்ணன்கள், etc அனைவரிடமும் இப்படி ஒரு மிருகத்தனமான முகம் இருப்பதை பார்த்திருக்கிறேன். முக்கால்வாசி பெண்கள் ‘குணம் நாடி குற்றம் நாடி’ என்று இருப்பது போல் ஒரு தோற்றம் தருவார்கள் (தந்திருக்கிறேன்).
‘கொஞ்சம் கோபம் வரும். மத்தபடி நல்ல மனுஷன்.’ —பொதுவாக பெண்கள் சொல்லும் ஆனால் ரொம்பவே வலிக்கும் ஒரு சமாதானம்.
ஆங்கிலத்தில் nemesis என்று சொல்வது போல், God’s ways are strange but sure என்று சொல்வது போல் இருந்தது கதையின் அடிநாதம். நான் பெண்ணியம் எதுவும் பேசவில்லை. யாருமே flawless ஆக இருக்க முடியாது. ஆனால் இதுபோன்ற வலி ஒரு பெண்ணுக்கு, அவள் வாழ்வில் மிகவும் நேசிக்கும் அல்லது தவிர்க்க முடியாத ஆணால் தான் ஏற்படுகிறது.
“வெறிபுடிச்சாப்ல வீட்டுவேலை செய்றதுதான் அவளோட ஒலகம்…அப்றம் வீட்டுக்குள்ள குழந்தையோட அழுக்கு கெடந்தா ஒடனே மொத்த வீட்டையும் துடைச்சு கழுவறது.
பாட்டியோட அப்பா வந்து தெருவிலே தென்னை மரத்தடியிலே நிக்கிறார். ‘கூட்டிண்டு போனா அப்டியே போயிரும் ஓய்’ நு தாத்தாவோட அப்பா சொல்லிட்டார். ‘இல்லே, எங்க இருந்தாலும் புள்ளைகுட்டிகளோட நெறைஞ்சு இருக்கட்டும். ஏழையோட ஆசீர்வாதம் எப்பவும் அவ பின்னாலே நெழலு மாதிரி இருக்கும்’னு சொல்லிட்டு அழுதிண்டே போனார். அதோட சரி. பிறகு பாட்டிக்கும் பத்தூருக்கும் சம்பந்தமே இல்லாம ஆச்சு.
கண்ணு நிறைஞ்சு ரெண்டு மைக்குப்பி மாதிரி இருக்கு.தாத்தா ‘அடியே’ன்னு ஒரு சத்தம் போட்டிருக்கார். சமையல் உள்ளிலே வேலையா இருந்த பாட்டி ஓடி வந்திருக்கா. அந்த பெட்பானை அப்டியே தூக்கி அவ தலைமேலே கொட்டிட்டார்.
’எனக்கு என்ன ஆச்சுன்னு இப்பவும் சொல்ல தெரியலை…வெளிநாக்கு கிடந்து அலைபாயும். மனநாக்கு மடங்கி ஒட்டி நடுங்கிண்டிருக்கும்.’
சில வார்த்தைகளுக்கு தமிழ் தெரியவில்லை. மன்னிக்கவும்.
மங்கை