உன்னை அழைக்க மாட்டேன்…

என் உள்ளம் கவர்ந்த இந்தப்பாடலைப் பற்றித் தேடிக்கொண்டிருந்தபோது ஒரு விவாதத்தை கண்டடைந்தேன். 1964ல் வெளிவந்த தோஸ்தி என்ற படத்தில் இடம்பெற்றது இப்பாடல். மராத்தி நடிகர்களான சுஷீல்குமார் சுதீர்குமார் இருவரும் இதில் நடித்திருந்தனர். அவர்கள் அதன்பின் இந்திப்படவுலகில் நீடிக்கவில்லை. சுஷீல்குமார் மும்பையில் வாழ்கிறார். சுதீர்குமார் ஒரு விந்தையான முறையில் இறந்துவிட்டதாக செய்தி- வதந்தி பரவியிருக்கிறது

 

அதாவது 1993 மும்பைக் கலவரத்தின்போது சுதீர்குமாரின் தொண்டையில் ஒரு கோழியிறைச்சி முள் சிக்கிக்கொண்டதாகவும் அக்கலவரத்தின் காரணமாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லமுடியாமலாயிற்று என்றும் ,அவர் உயிர் துறந்தார் என்றும் சொல்லப்பட்டது. கொலை என்றும் பேசப்பட்டது. இணையத்தில் சுதீர்குமாரின் இளைய சகோதரியான சுசித்ரா கோப்கர் அதை மறுத்து சுதீர்குமார் உண்மையில் 1993ல் தொண்டைப்புற்றுநோயால் மறைந்தார் என்று விளக்கியிருக்கிறார்

 

உண்மையில் சினிமாவை மண்ணில் வைத்து விளங்கிக்கொள்ள மக்களால் முடியவில்லை. விரும்புவதுமில்லை. தோஸ்தியின் சோகத்திற்குச் சமானமான ஒரு கதையை அவர்களின் வாழ்க்கையிலும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் தோஸ்தி போன்ற ஒரு கல்ட் கிளாஸிக்குக்குப் பின், இன்றும் வாழும் ஆவாஸ் மெய்ன் நா தூங்கா பாடலுக்குப்பின், தோற்று பின்வாங்கி எளிமையாக, எவரையும்போல வாழ்வதே மிகபெரிய துன்பியல்நாடகம்தான். சுதீர்குமார் சாதாரணமானவரான  சுதீர்சாவந்த் ஆக வாழ்ந்து மறைந்தார். அவருக்குள் இருந்து சுதீர்குமார் இப்பாடலை பாடிக்கொண்டிருப்பதாக நானும் எண்ணிக்கொள்கிறேன். “உன்னை நான் அழைக்க மாட்டேன்!”

https://www.quora.com/What-happened-to-Sushil-Kumar-and-Sudhir-Kumar-after-the-movie-Dosti-1964

 

ஆவாஸ் மே ந தூங்கா 

[உன்னை நான் அழைக்கமாட்டேன்

காலைமுதல் மாலைவரை உன்னை காதலித்துக்கொண்டிருப்பேன்]

பாடகர் முகம்மது ரஃபி

இசை லக்ஷ்மிகாந்த் பியாரேலால்

https://www.musixmatch.com/lyrics/Mohammed-Rafi/Chahoonga-Main-Tujhe/translation/english

 

 

முந்தைய கட்டுரைஅமேசான்
அடுத்த கட்டுரைநாள்தோறும்…