தினமணியும் நானும்

எங்கள் வீட்டில் அன்றெல்லாம் நாளிதழ்கள் வாங்குவதில்லை. வீட்டில் நாளிதழ்வாங்குவதென்பது எழுபதுகளில் கிராமங்களில் எண்ணிப்பார்க்கமுடியாத ஒன்று. டீக்கடைகளில் தினத்தந்தி வாங்கப்படும். ஊரேகூடி வாசிப்பார்கள். நான் நாளிதழ்களை நாடகத்தனமாக வாசிப்பதில் திறன்கொண்டவன்.  “பேச்சிப்பாறை நீர்மட்டம்!” என அறிவித்து ஆழ்ந்த இடைவெளிக்குப்பின்  “இருபது அடி!” என்பேன். பெருமூச்சுகள் ஒலிக்கும். 

நான் அறிந்த நாளிதழ்களின் எச்சாயலும் இல்லாத நாளிதழாக இருந்தது தினமணி. அவ்வப்போது அதைப்பார்த்திருந்தாலும் வாசிக்கத் தோன்றியதில்லை. அதன் மொழிநடையும் செய்திகளின் அமைப்பும் சிறுவர்களுக்கு உரியதாக இருக்கவில்லை. பின்னர் தினமணியை தொடர்ந்து வாசித்திருக்கிறேன். நெருக்கடிநிலைக்காலகட்டத்தில் ஒவ்வொருநாளும் அது வருமா வராதா எனபதே பேசப்படும் செய்தியாக இருந்தது

  

தினமணி என்றால் எனக்கு அடிப்படையில் மூன்று மனிதர்கள்தான். ஏ.என்.சிவராமனின் கட்டுரைகளை நான் வாசிக்கவேண்டும் என என் வரலாற்று ஆசிரியர் முத்தையா நாடார் என்னிடம் சொன்னபோது ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். பள்ளியிலேயே தினமணி வரும். அதன் கட்டுரைகளை பெரும்பாலும் புரியாமல் படித்தேன். அவை புரியத் தொடங்கியபோது சிந்திக்கக் கற்றுக்கொண்டுவிட்டிருந்தேன். 

வளரும் வயதில் இவ்வுலகம் என்பது கண்ணால்காணும் காட்சிகளால் மட்டும் ஆனது அல்ல, அதைக்கடந்து செயல்படும் சிந்தனைகளாலும் ஆனது என அறிவதென்பது மிகப்பெரிய கண்திறப்பு. கருத்துக்களால் ஆன நிகருலகு ஒன்றுக்குள் நுழைகிறோம். திகைப்பும் பரவசமும் கொந்தளிப்புமாக கண்டுகொண்டபடியே இருக்கிறோம். நான் மதுலிமாயி, பிலுமோடி,மது தந்தவதே என அன்றைய ஜனநாயகத்தின் முகங்களை தினமணி வழியாகவே அடையாளம் கண்டுகொண்டேன். ஜெயப்பிரகாஷ் நாராயணனையும் கிருபளானியையும் வழிபடலானேன்.

மீண்டும் ஒரு திறப்பென தினமணி இன்னொரு ஆளுமை வழியாக நிகழ்ந்தது. ஐராவதம் மகாதேவனின் ஆசிரியத்துவத்தில் வெளிவந்த தினமணி நவீனத் தமிழ்ச் சிந்தனைமரபிலேயே ஒரு திருப்பத்தை உருவாக்கியது. அவர் காலத்தில் வெளிவந்த தமிழ்மணி இணைப்புதான் நவீன இலக்கியத்தை பரவலாக வாசகர்களிடம் கொண்டுசென்றது. சிற்றிதழ்களுக்குள் புதைந்திருந்த தமிழின் படைப்பாளிகள் பொதுமுகம் கொண்டனர். 

உண்மையில் அன்று நவீன இலக்கியத்தை ஆழ்ந்து வாசித்துக்கொண்டிருந்த எனக்கே பல எழுத்தாளர்கள் தினமணி வழியாகவே அறிமுகமானார்கள். அந்த அலையே பின்னர் இந்தியாடுடே, சுபமங்களா போன்றவை நவீன இலக்கியத்தைப் பரவலாகக்கொண்டுசெல்ல வழிவகுத்தது.அனைத்துக்கும் மேலாக அருண்மொழி நவீன இலக்கியத்தையும் என்னையும் தமிழ்மணி வழியாகவே அறிமுகம்செய்துகொண்டாள். தமிழ்மணியை தொகுத்து தைத்து வைத்திருந்தாள், நான் முதன்முதலாகப் பார்க்கச்சென்றபோது காட்டினாள்.

மூன்றாவது முகம் என தினமணியின் ஆசிரியர் ராம.சம்பந்தம் அவர்களைச் சொல்வேன். அவருடன் எனக்கு நேரடி அறிமுகம் உருவாகியது. எழுதத்தொடங்கியிருந்த எனக்கு அது பெரிய வாய்ப்பு. தினமணியில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதினேன். அதனூடாக என் கருத்துக்களை நானே தீட்டிக்கொண்டேன். என் கருத்துக்கள் எதிர்ப்பலைகளை உருவாக்கியபோது அவற்றை எதிர்கொள்வது எப்படி என்றும் கற்றுக்கொண்டேன். ஆசிரியராக சம்பந்தம் அவர்கள் எந்தவகையிலும் என் கருத்துக்களில் தலையிடவில்லை 

சம்பந்தம் அவர்களின் காலகட்டத்தில்தான் அரசியல்செய்திகளுக்கு இணையான இடம் பண்பாட்டுச்செய்திகளுக்கும் தினமணியில் வழங்கப்பட்டது. ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்படுவது ஓர் அரசியல்வாதியின் உரையைவிட முக்கியமானது என்னும் உணர்வு உருவானது. நூல்வெளியீட்டுச்செய்திகளைகூட பெரிய அளவில் நாளிதழ்களில் காணமுடிந்தது. அது தமிழ்வாசகர்களுக்கே திகைப்பை அளித்திருக்கும்

இன்றும் தினமணி தமிழ் அறிவியக்கத்தின் முதன்மைத் தளமாக நீடிக்கிறது. இன்னும் நெடுங்காலம் நீடிக்கட்டும்

[தினமணி மலருக்காக எழுதப்பட்ட வாழ்த்துக்குறிப்பு]

***

முந்தைய கட்டுரைசாக்லேட்டிற்கும் கவிதைக்கும் என்ன வித்தியாசம்?
அடுத்த கட்டுரைபொன்னீலன் 80- விழா