அன்புள்ள எழுத்தாளர் அவர்களுக்கு
உங்களின் சிறுகதை வரிசையை தொடர்ந்து படித்து வருகின்றேன், அனைத்தும் அருமை, ஆனால் கடிதம் எழுத வேண்டும் என்று எண்ணியதில்லை. இன்று படித்த ” யானை டாக்டர்”, என்னை மிகவும் பாதித்தது, “கண்கள் பனித்தன” .காடும், காடு சார்ந்த வாழ்கையும் எனக்குள் ஒரு கனவாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் சந்தர்ப்பம் வாய்த்ததேயில்லை அதை நிறைவேற்ற. இது என்னை ஒரு காட்டிற்குள் அழைத்து சென்று எனக்கு அந்த அனுபவத்தை தந்துள்ளது. பல நுண்ணிய தகவல்களை தந்துள்ளிர்கள்.
உங்களின் நாவல்கள் எதையும் வாசித்ததில்லை. விஷ்ணுபுரம், இதை எப்படி படிக்கவேண்டும் என்று பலர் கேட்டதை படித்து சிறிது பயமாகி விட்டது. சரி, இந்தாள் எழுதுவதை எல்லாம், கோனார் நோட்ஸ் வைத்து தான் படிக்க வேண்டும் போல என நினனைத்து விட்டேன். ஆனால் இந்த சிறுகதை தொடர் படித்த பின், அந்த எண்ணம் மாறியுள்ளது.
கதையை படித்த பின், வாசகர்கள் அதை பற்றி தங்கள் எண்ணங்களையும், புரிதல்களையும் எழுதுவதைப் படிக்கும் போது, கல்லுரி ஞாபகம் வந்தாலும், படிப்பது என்பது பொழுதுபோக்கு என்பதிலிருந்து அடுத்த நிலைக்கு செலுத்த உதவுகின்றது. இந்த கதையில் என்ன புரிகின்றது, எதை அறிந்தேன் என்பதை கூற முடியவில்லை, ஆனால் கதையை என்னால் உணரமுடிகின்றது. உணர்வதையெல்லாம் அப்படியே எழுதும் அளவிற்கு எனக்கு எழுத வராது. மற்ற கதைகளும் ஏதோ ஒன்றை உணர்த்துகின்றது, சில விஷயங்களை பற்றிய பார்வையை மாற்றுகின்றது. என்னை பொறுத்த வரை, நல்ல மனிதனாக இருக்க கூடிய சூழலைத் தருகின்றது மற்ற கதைகள். “யானை டாக்டர்”, நம்மை மட்டுமின்றி நம்மை சுற்றியுள்ள இயற்கையையும் அறிந்து கொள்ள தூண்டுகின்றது.
நன்றி
பாஞ்ஞசன்யன்
அன்புள்ள பாஞ்சஜன்யன்
இந்தக்கதைகள் நேரடியானவை, எளிமையானவை. ஏனென்றால் இவை மானுடஅறம் என்ற
பொதுக் கருவை பேசுகின்றன. அறம் சிக்கலானதோ குறுக்கு வழி கொண்டதோ அல்ல.
எளிய மன எழுச்சி ஒன்றால் எவரும் சென்று தொட்டுவிடக்கூடியதுதான் [அந்த மன
எழுச்சி இல்லையேல் கொஞ்சமும் உணரக்கூடியதும் அல்ல]
ஜெ
அன்புள்ள ஜெ
யானைடாக்டர் மிக இயல்பான முறையில் சாதாரணமாக எழுதப்பட்ட கதை. ஒரு நல்ல கதையின் குறியீட்டு அமைப்பு அப்படி ஒன்று இருப்பதே தெரியாமல் இயல்பாக கதையோடு இணைந்து இருக்க வேண்டும் என்பதை இந்தக்கதையை உதாரணமாக கொண்டுதான் புரிந்துகொண்டேன். ஒருபக்கம் காட்டின் அரசனாகிய யானை. இன்னொரு பக்கம் அற்பப்புழு. இரண்டுமே மகத்தானவை என்று இங்கே இருந்து அங்கே வரை கதை ஓடிச்செல்வதைப்பற்றி நிறய நேரம் நினைத்துக்கொண்டே இருந்தேன். கை தேர்ந்த ஓவியன் அலட்சியமாக தீட்டும் ஓவியம் போல இந்த கதைகளில் மிக எளிமையாக எல்லா நுட்பங்களும் கைகூடி வருகின்றன
வாழ்த்துக்கள்
சிவம்
அன்புள்ள சிவம்
நான் அதை கதையில் உத்தேசிக்கவில்லை. ஆனால் யானையை புழு உண்பதில் ஒரு குறியீட்டை, காட்டின் மகத்தான பாரபட்சமின்மையை, அதை எழுதும்போது உணர்ந்தேன்
ஜெ
அன்புடன் ஜே சாருக்கு
வணக்கம்
பைரனின் கவிதை இன்றும் உயிராக இருப்பதற்கு
அந்த வார்த்தைகளில் ஒளிந்து நிற்கும் அர்த்தங்களே !
காலம் பல உடல்களை புதைத்து பல கேள்விகளை ஏற்படுத்தும்
என்பதற்க்கு பைரனின் கவிதைகளும் உதாரணமே !
நல்ல நினைவுகூறல்
—
என்றென்றும் அன்புடன் ,
சுகி …
அன்புள்ள ஜெ,
பிரபஞ்சத்தில் உயிரின் இருப்பை, அதன் உன்னதத்தை, (இன்றைய) மனித வாழ்வின் அபத்தத்தை விளங்க வைத்த யானை டாக்டருக்கு நன்றி. புழுவையும் இனி வெறுக்க முடியாது ஜெ.
ஜீவ காருண்யம் பற்றி மதங்களும், பலரும் நிறைய சொல்லியிருக்கக் கூடும். ஆனால் யானை டாக்டர் சொல்வதே உச்சம்.
ஸ்ரீனிவாசன்
அன்புள்ள ஸ்ரீனிவாசன்
உணர்வுகள் சரி, ஆனால் ஜீவகாருணியம் என்ற சொல்லின் பொருளில் ஒரு சிறு
சிக்கல் உண்டு. அது மனிதனை உயர்நிலையில் வைக்கிறது. அவன் தன்னைவிட எளிய
உயிர்கள் மேல் கொள்ளும் இரக்கத்தை முன்னிறுத்துகிறது. இன்றைய சூழியல்
அறம் என்பது இப்பூமி எல்லா உயிர்களுக்கும் சொந்தமானது, மனிதனும் அந்த
உயிர்த்தொகையில் ஒன்றுமட்டுமே என்ற சமத்துவ உணர்ச்சி மட்டுமே
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்,
யானைடாக்டர் கதையை வாசித்து மனம் நெகிழ்ந்தேன். சிறப்பான கதை. அறம் பற்றி பேசும் இந்தக்கதைகள் உண்மையான மனிதர்களைப்பற்றி பேசுகின்றன என்பது ஒரு மிகச்சிறந்த விஷயம். இதெல்லாம் ஒன்றும் பழைய விஷயங்களைப்பற்றிய நினைப்புகல் அல்ல, இவையெல்லாம் சமகாலத்திலேயே நடந்துகொண்டிருப்பவை என்ற எண்ணம் உருவாகியது. எனக்கு வாசித்தபோது தோன்றியது, கெத்தேல் சாகிப் கதை வாசிப்பவர் இந்த அறமெல்லாம் அந்தக்காலத்தில்தான் நடக்கும் இப்போது கிடையாது என்று சொல்வார்கள். ஆனால் அந்த மாதிரி மனிதர்கள் இப்போதும் வாழ்கிரார்கள், கண்ணெதிரே இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாக உள்ள கதை இது. அவர்களை அப்போதும் பிழைக்கத்தெரியாதவர்கள் என்பார்கள். இப்போதும் சொல்வார்கள். இதெல்லாம் வெறும் கற்பனை என்று சொல்லும்போது நாம் நம்முடைய பிழைக்கத்தெரிந்த அற்பத்தனத்தை நியாயப்படுத்தவே செய்கிறோம்
மனம் நெகிழச்சியத கதை
நன்றி
பாலகிருஷ்ணன்
அன்புள்ள பலகிருஷ்ணன்
கிருஷ்ணமூத்தி அவரது சொந்த வாழ்க்கையில் கடைசியில் பொருளியல் சிக்கல்களுக்கு உள்ளானார் என்று வனத்துறை நண்பர் சொன்னார். வனத்துறையின் கடைநிலை ஊழியர்கூட லட்சக்கணக்கில் பொருளீட்டும் நிலையில் அவர் சம்பளத்தை மட்டுமே நம்பிவாழ்ந்தமையால் தன் பெண்களுக்கு திரும்ணம் செய்து வைக்க முடியாமல் கஷ்டப்பட்டார். அவர் மேதை என்பதனால் பெண்களை வரதட்சணை வாங்கமால் மணம் புரிய எவரும் வரவில்லை. அவர் அப்படி இருந்தது சான்றோர் சான்றோராக மட்டுமே இருக்க முடியும் என்பதனால்தான், லாப நஷ்ட கணக்கு பார்த்துஅல்ல
ஜெ