சுகிசிவமும் சுப்ரமணியனும்

 

அன்புள்ள ஜெ,

இணையத்தில் இப்போது திரு.சுகி.சிவம் அவர்களின் வேத, தமிழ் கடவுள் என்பதின் விளக்கங்கள் சர்ச்சை ஆகி வருகின்றது. நீங்கள் கவனித்திருக்கக்கூடும்? பெரும்பாலும் இவ்வித இணைய வம்புகள் / கூச்சல்களை நான் பொருட்படுத்துவதில்லை. மேலும் இந்து மதம் பற்றி “இந்திய ஞான மரபின் ஆறு தரிசங்கள்” படித்தபின், எனக்கு எவ்வித குழப்பமும் இல்லை.

மதம் என்பது குறிப்பாக இந்து மதம், தத்துவம், மற்றும் குறியீடுகள்தான் அதன் மையமாக இருக்கும். வழிபாடுகள் அதன் சடங்குகள் சமுதாயத்தின் அமைப்பை சரி செய்து கொள்வதற்காக செய்யப்பட்ட ஏற்பாடே, எனினும் சடங்குகளின் வழியாக அதன் மைய தத்துதத்தை சாமானியனும் சென்றடைய முடியும். இந்து மதம் மிகப்பெரிய உரையாடல்களை நடத்தி தத்துவ-வழிபாட்டு முறையை அமைத்திருக்கிறது.

 இந்த முழு காணொளியில், போகிற போக்கில், “வடக்கில் இருந்து வந்த வழிபாட்டு முறைகளில் சில சிறப்புக்கள் இருக்கிறது, தெற்கில் இருந்த வந்த வழிபட்டு முறையில் சில நேர்மை இருக்கிறது”. இந்த கூற்றை எவ்வாறு புரிந்து கொள்வது?

 இது தூய்மை வாதத்தின் நெடி அல்லவா ? சுகி சிவம் தூய்மைவாதம் பேசுகிறாரா ?

நிச்சயம் வம்புக்காக கேட்கவில்லை, ஒரே ஒருமுறை இதற்கு விளக்கமான பதிவு தருவீர்களா?

ராம் பாலாஜி

***

இந்துமத விவாதங்கள்

அன்புள்ள ராம்,

நான் நேற்று எழுதிய ஒரு குறிப்பின் சுட்டி உள்ளது. அதை முன்னுரையாக வாசித்துக்கொள்ளவும் – இந்துமத விவாதங்கள்

திரு.சுகி.சிவம் சொன்னதை ஒரு கருத்தாக அல்ல, பல கருத்துக்களாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். ஏனென்றால் அதற்கு வரும் எதிர்ப்புகள் பல கோணங்களிலானவை.

மரபான சைவ –முருக வழிபாட்டாளர்கள் முருகனை தொன்மமாக, பரிணாமம் அடைந்து வந்த ஒரு வடிவமாக, பல்வேறு வடிவங்களின் கலவையாக காண்பதை கடுமையாக எதிர்க்கிறார்கள். அவர்களுக்கு அது பரம்பொருளின் வடிவம். மானுடர் தோன்றும் முன்னரே அவ்வண்ணம் தோன்றியது. ஞானிகளால் அவ்வண்ணமே கண்டடையப்பட்டது. அது எப்படி உருவானது என ஆராய்வதே பிழையானது. அவர்களுக்கு மதத்தைப்பற்றிய வரலாற்றுபூர்வமான எந்த ஆராய்ச்சியும் மீறலே.

உண்மையில் மதநம்பிக்கைதான் உங்கள் வழி என்றால், பக்தியை கடைக்கொள்பவர் என்றால் ஆராய்ச்சி நோக்கு மிகமிக எதிரானது. ஆராய்ச்சி நோக்கு சற்று தோன்றினால்கூட ஐயம் எழும். பக்தி அகன்றுவிடும். அத்தகையோர் இத்தகைய ஆராய்ச்சிகளைச் செவிகொள்ளவே கூடாது. இவர்களிடம் விவாதிக்கவும் கூடாது. பக்தியும் ஆராய்ச்சியும் முற்றிலும் வேறுவேறு வழிகள் கொண்டவை. திரு.சுகி.சிவம் வரலாற்று நோக்குக்கு இடமில்லாத, பக்திக்கு மட்டுமே இடமுள்ள, மேடையில் அதைச் சொன்னதே எதிர்ப்புக்குள்ளாகிறது.

திரு.சுகி.சிவம் முருகனும் சுப்ரமணியனும் வேறுவேறு என்கிறார். இந்தப் பார்வை தொன்மங்களின் அடிப்படையிலும், வரலாற்றுத்தரவுகளின் அடிப்படையிலும் தொடர்ந்து நிகழ்ந்து வரும் பண்பாட்டு ஆய்வின் ஒருபகுதி. அந்த ஆய்வு மிகவிரிவானது. பல்வேறு உள்விவாதங்கள் கொண்டது. அதை எளிமையாக்கி ஒரு மதச்சொற்பொழிவு மேடையில் ஒரு கருத்தாக முன்வைக்க முடியாது.

ஏனென்றால் மதத்தொன்மங்கள் சார்ந்த இந்த ஆய்வுகள் எவையுமே ‘நிரூபிக்கப்பட்ட’ உண்மைகள் அல்ல. அவற்றை புறவயமாக நிரூபிக்கவும் முடியாது. இவை ஊகங்கள் மட்டுமே. இந்த ஊகங்கள் எவையும் பரவலாக ஏற்கப்பட்டவையும் அல்ல. ஆகவே ஓர் ஆய்வாக இவற்றை முன்வைக்கையில்கூட இவற்றுக்கான எதிர்தரப்பையும் சேர்த்தே சொல்லவேண்டும். திரு.சுகி.சிவம் ஒரு வரலாற்று உண்மை போல சொல்கிறார். அது ஏற்கத்தக்க அணுகுமுறை அல்ல.

முருகனும் சுப்ரமணியனும் வேறுவேறா? இந்த வரியே பிழையானது. இந்து தெய்வங்கள் என நாம் இன்று வணங்கும் எல்லா தெய்வங்களும் வரலாற்றினூடாகப் பரிணாமம் அடைந்து இவ்வடிவில் வந்தமைந்தவைதான். அவை அனைத்திலுமே வெவ்வேறு தெய்வ உருவங்கள் வந்து இணைந்துள்ளன. ஆனால் இந்து தெய்வங்கள் மட்டும்தானா? இல்லை, புத்தர், ஜினர், ஏசு ,மாதா என இன்று வணங்கப்படும் எல்லா தெய்வங்களும் இவ்வாறுதான் உருவாகியிருக்கின்றன. நாட்டார்தெய்வங்களே கூட இவ்வாறுதான் திரண்டு வந்துள்ளன. இவ்வாறுதான் தெய்வங்கள் உருவாக முடியும்

இன்று வணங்கப்படும் ஒரு தெய்வஉருவகம் வெவ்வேறு தெய்வ உருவகங்கள் காலப்போக்கில் இணைந்து ஒன்றாகி எப்படி உருவானது என்று பார்ப்பதற்கும் இன்றிருக்கும் உருவத்தை பலபகுதிகளாகப் பிளந்து அவை வேறு வேறு என வாதிடுவதற்கும் பெரிய வேறுபாடுள்ளது. இணைவின் இயல்பை ஆராய்வது வேறு, பிளந்து நோக்குவது வேறு. அது வரலாற்றை ரத்துசெய்வது. பலசமயம் வரலாற்றை பிழையாக விளக்குவது. அதைத்தான் சுகி சிவம் செய்கிறார்.

நான் தெய்வ உருவங்களின் பரிணாமத்தை எப்படிப் பார்க்கிறேன்? என் நோக்கு அத்வைதம் சார்ந்தது. நாராயணகுருவின் நித்யாவின் வழிவந்தது. இத்தெய்வ உருவங்கள் மானுட உருவகங்களே. ஆனால் இப்படி உருவகிக்கப்படும் ஒன்று, ஒரு அறிபடுபொருள், அப்பால் உள்ளது. ஒரு பேசுபொருள் அதற்கான சொல்லைக் கண்டடைவதுபோல அது தன் உருவத்தை அடைகிறது. அன்பு என நாம் உணரும் ஒன்று உள்ளது. அன்பு என்னும் சொல் நாம் இடுவது மட்டுமே. நம் அறிதல் மாறுபடுந்தோறும் அச்சொல்லை நாம் சற்றே மாற்றிக்கொண்டே இருக்கிறோம். நம் பண்பாடு மாறும்போது, நம் சமூகச்சூழல் மாறும்போது அச்சொல் உருமாறிக்கொண்டே வருகிறது. தெய்வ உருவங்கள் அவ்வாறுதான் மாறுபடுகின்றன.

முருகன் என வழிபடப்படும் தெய்வம் குறித்து இரண்டுவகையான உருவகங்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன. சில சங்கப்பாடல்களில் முருகு எனக் குறிப்பிடப்படும் தெய்வம் தமிழகத்து நாட்டார்-சிறுதெய்வமாக உள்ளது. தலைவி காதல்நோய் கொள்ளும்போது அவள்மேல் அணங்கு கூடியிருப்பதாக வீட்டார் எண்ணுகிறார்கள். வேலன் வந்து வெறியாட்டு ஆடி, ஊன்சோற்றை எண்புறமும் வீசி அணங்கை அகற்றுகிறான். சில பாடல்களில் அவள்மேல் ஆவேசித்திருப்பதே முருகுதான் என்றும் கொள்ளமுடிகிறது. முருகு தலைவிமேல், பூசகன் மேல் சன்னதமாக வந்து கூடுகிறது. அது முருகு அயர்தல் எனப்படுகிறது. சங்க இலக்கியம் காட்டும் முருகனின் பூசனைமுறைகளும் நாட்டார்- பழங்குடித்தன்மை கொண்டவை.

வேறுசில சங்கப்பாடல்களில் சேயோன் மலையுடைத் தெய்வமாக, செவ்வேளாக, பெருந்தெய்வத்தின் சாயலுடன் இருக்கிறான். இரண்டும் வேறுவேறு தெய்வங்களா, ஒரேதெய்வம் காலத்தில் அடைந்த மாற்றமா என்பதை அறிஞர்கள் இன்னும் விவாதிக்கிறார்கள். இந்தத் தெய்வங்களில் சேயோனுடன் அவுணரைக் கொன்றது உட்பட புராணச்செய்திகளை இணைந்துள்ளன. சங்கம் மருவிய காலத்திலேயே சேயோன் கார்த்திகேயனாகவும் சுப்ரமணியனாகவும் ஆகிவிட்டான். முருகனை மையத்தெய்வமாகக் கொண்ட கௌமாரம் இங்கே வந்து வளர்கிறது. அங்கிருந்து தொடங்கி வடமொழி ஸ்காந்தத்தின் தமிழ்வடிவமான கந்தபுராணம் உருவாவது வரை முருகவழிபாட்டின் தொடர்ச்சியாக ஒரு வளர்ச்சிச் சித்திரம் இங்குள்ளது.

அது சுகி சிவம் சொல்வதுபோல எளிமையான வழிபாட்டுமாற்றம் அல்ல. வெவ்வேறு தெய்வங்கள் இணைந்து பெருந்தெய்வம் உருவாகும் ஒரு பெரிய பண்பாட்டுமாற்றம் அது. அதில் மெய்யியல், தத்துவம், தொன்மவியல், குறியீட்டியல் என பல நுண்ணிய அக இயக்கங்கள் உள்ளன. உலகம் முழுக்க எல்லா பெருமதங்களும் இவ்வாறுதான் உருவாகியிருக்கின்றன. தனியொருவரால் உருவாக்கப்பட்ட தீர்க்கதரிசன மதங்களே கூட இப்படித்தான் காலப்போக்கில் பேருருவம் கொள்கின்றன. பெருமதங்கள், பெருந்தெய்வங்கள் உருவாக வேறுவழியே வரலாற்றில் கிடையாது.

சரி, அங்கிருந்து வந்தது ‘வடவரின்’ அல்லது ‘ஆரியரின்’ சுப்ரஹ்மணியனா? இல்லை. அதுவும்கூட இந்தியப்பெருநிலத்தில் இருந்த பல்வேறு தெய்வ உருவங்களும் வழிபாட்டு முறைகளும் இணைந்து உருவான ஒன்றுதான். அதில் வடநிலத்திலிருந்த பழங்குடி – நாட்டார் தெய்வங்களின் கூறுகள் உண்டு.அதை சுப்ரமணியன் என வைதிகமரபு கொண்டது. தேவசேனாபதி என்னும் உருவகம் சுப்ரமணியன் என்னும் உருவகத்துக்கு சற்றே மாறானது. தேவசேனாபதியான முருகன் அன்னை தெய்வங்களை வழிநடத்திப் போருக்குச் செல்வதன் சித்திரத்தை நாம் காண்கிறோம். அதற்கு நாட்டார் மூலம் இருக்கலாம் இந்த இணைவு மகாபாரதக் காலகட்டத்திலேயே நிகழ்ந்துவிட்டது.

வேதகாலம் முதல் இந்தியாவில் ஒரே தெய்வங்கள் ஒரேவகையாக வழிபடப்பட்டதில்லை என்பது தொடக்க நிலைப்பாடம். வேதங்கள் தொல்காலத்தையவை. அவற்றிலிருந்த சிலதெய்வங்கள் பின்னர் வளர்ந்தன. பல பின்னர் முக்கியத்துவமிழந்தன. சூரியனும் இந்திரனும் வேதங்களின் தெய்வங்கள். அவர்கள் பின்னர் முழுமுதல்தெய்வங்களாக ஆனார்கள். சௌரம் ஐந்திரம் என்னும் மதங்களின் தலைமை தெய்வங்களானார்கள். கிபி ஐந்தாம் நூற்றாண்டுக்குள் இந்திரவழிபாடு மெல்ல மறைந்தது. கிபி பதினொன்றாம் நூற்றாண்டுவரை நீடித்த சூரியவழிபாடு சைவ வைணவ மதங்களில் இணைந்தது. சிவனும் விஷ்ணுவும் தனிப்பெருந்தெய்வமாக ஆனார்கள். கிருஷ்ணனும் ராமனும் பெருந்தெய்வங்களாக எழுந்தனர்.

இதை ‘அவன் கொண்டுவந்தான், இவன் ஏத்துக்கிட்டான்’ என்பதுபோல பேசுவது மிகமிகக் குழப்பமான, அரைகுறையான புரிதல்களையே உருவாக்கும். முருகு ஒரு சிறுதெய்வமாக இருந்த சங்ககாலத்தின் தொடக்கத்திலேயே இங்கே இந்திரன் பெருந்தெய்வமாக இருந்தான். பூம்புகாரில் நிகழ்ந்த பெருவிழா இந்திரனுக்குத்தான். இந்திரன் மறைய அதேகாலகட்டத்தில் முருகன் பெருந்தெய்வமானான். இந்த மாற்றங்கள் எளிமையான சமூகவியல் – அரசியல் வாய்ப்பாடுகளின்படி விளக்கப்படக்கூடியவை அல்ல. ஆய்வாளர்களே கூட இன்னமும் தெளிவுறாத விவாதப்பொருட்கள் இவை.

பொதுவாக ஒரு தெய்வம் பெருந்தெய்வமாக எழுவதன் சித்திரத்தை இப்படிச் சொல்லலாம்.

அ. அத்தெய்வம் ஞானியரின் உள்ளுணர்வால் மீண்டும் கண்டடையப்படுகிறது. அவர்களின் மரபால் விரிவாக்கப்படுகிறது. அறிஞர்களால் தத்துவக்கோணத்தில் விளக்கப்படுகிறது. இதுவே முதன்மையான செயல்பாடு.

ஆ. அந்த தெய்வ உருவகம் பரவத்தொடங்கும்போது வெவ்வேறு குடிகள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். அவ்வாறு ஏற்றுக்கொண்ட குடிகளின் தெய்வங்கள் இந்த மையத்தெய்வத்துடன் இணைகின்றன. அக்குடிகளின் வழிபாட்டுமுறைகள் அந்த மையத்தெய்வத்திற்கும் உரியதாகின்றன

இ. மையத்தெய்வம் இவ்வாறு பல தெய்வக்கூறுகளின் தொகையாக உருவாகி வரும்போது கூடவே துணைத்தெய்வங்களும், பிற குறியீடுகளும் இணைந்துகொள்கின்றன.

இ. அந்த இணைப்பை நிறுவும்பொருட்டு புராணங்கள் உருவாகின்றன. ஆசாரங்கள் ஆகமங்கள் வழியாக வரையறை செய்யப்படுகின்றன

இந்து தெய்வங்களின் உருவாக்கத்தை வரலாற்றுரீதியாக, மார்க்சிய நோக்கில், ஆராயும் டி.டி.கோசாம்பி போன்றவர்களின் அணுகுமுறையும் இதுவே. அதுவன்றி ஒருவரின் தெய்வத்தை இன்னொருவர் மேல் சுமத்தும் மோசடி அல்ல இது. இந்த பரிணாமத்தை புத்தமதத்திலும் காணலாம். புத்தர் திபெத்திலும் சீனாவிலும் ஜப்பானிலும் சென்றடைந்தபோது அங்குள்ள தெய்வங்களின் இயல்புகளும் அடையாளங்களும் அவருடன் இணைந்தன. அவர் உருமாற்றம் அடைந்தார். ஜப்பானிய ஷிண்டோ மதத்தை பௌத்தத்தில் இருந்தோ புத்தரை ஷிண்டோ தெய்வங்களில் இருந்தோ இன்று முற்றாகப் பிரித்துவிடமுடியாது.

இந்துதெய்வங்களான சிவன், விஷ்ணு, முருகன் போன்ற அனைத்துமே சங்ககாலத்தின் இறுதியில், சங்கம் மருவிய காலத்தில் ஏறத்தாழ இன்றிருக்கும் இதேவடிவில், இதே தொன்மங்களுடன் உருவாகிவிட்டிருந்தன. கோட்டங்கள் எனப்படும் ஆலயங்கள் அவற்றுக்கிருந்தன எனபதை சிலப்பதிகாரத்திலிருந்து அறிகிறோம். கோட்டம் என்றால் பலதெய்வங்கள் அமைந்த ஆலயவளாகம். செவ்வேளுக்கும் மணிவண்ணனுக்கும் கோட்டங்கள் அமைந்துள்ளன என்றால் அவை பெருந்தெய்வங்களாக, துணைத்தெய்வங்களுடன் கோயில்கொண்டிருந்தன என்றே பொருள்.

சங்கம் மருவிய காலகட்டம் என நாம் சொல்லும் கிபி இரண்டாம் நூற்றாண்டு முதல் நான்காம் நூற்றாண்டு வரையிலான காலம் இவ்வகையில் முக்கியமானது. சிவன், விஷ்ணு, துர்க்கை என நாம் வழிபடும் எல்லா தெய்வங்களும் ஏறத்தாழ இதேகாலகட்டத்தில்தான் இன்றுள்ள வடிவத்தை அடைகின்றன. பல்வேறு தெய்வ உருவங்கள் கலந்து இது நிகழ்கிறது. கிபி நான்காம் நூற்றாண்டில் குப்தர் காலத்தில்தான் இந்து தெய்வ உருவங்கள் திட்டவட்டமான வடிவை அடைந்தன என்று ஆய்வாளர் சொல்வதுண்டு.

ஆனால் இன்றும்கூட தெய்வ உருவங்கள் இடத்திற்கு இடம் மாறுபடுவதையும் சிற்பங்களைப் பார்ப்பவர்கள் உணரமுடியும். நீங்கள் தமிழகம் விட்டு நூறு கிலோமீட்டர் சென்று கர்நாடகத்திற்குள் நுழைந்து பேலூர் சிற்பங்களைப் பார்த்தாலே தெய்வ உருவகங்களில் உள்ள மாற்றத்தைக் கண்கூடாக காணலாம். சிற்பங்களில் இருக்கும் உருவங்களுக்கும் ஓவிய உருவங்களுக்கும் கூட மாறுபாடு உள்ளது. இன்று நாம் எண்ணும் தெய்வ உருவங்கள் ராஜா ரவிவர்மாவுக்குப் பின் காலண்டர் அச்சுமுறை உருவானதன் விளைவாக உருவானவை. அவற்றுக்கும் சிற்பங்களிலுள்ள உருவங்களுக்கும் ஒற்றுமை மிகக்குறைவு. மனித ‘மாடல்களை’ வைத்து வரையப்பட்டவை அவை. வெவ்வேறு பாடல்களில் இருந்தும் நாடகவடிவங்களில் இருந்தும் அவ்வடிவுக்கான சான்றுகள் கொள்ளப்பட்டன.

இந்துதெய்வ உருவங்களின் இந்தப் பரிணாமம் என்பது இந்தியசமூகம் உருவாகி வந்த பரிணாமத்தின் விளைவாக, அதற்கு இணையாக உருவாகி வந்தது. இந்தியமெய்யியல் திரண்டு வந்ததன் விளைவாக, அதன் அடையாளமாக உருவாகி வந்தது. இந்தியச் சமூகப்பரிணாமத்தை இவ்வடிவங்களின் பரிணாமத்தைக் கொண்டு புரிந்துகொள்ள முயலலாம். இந்தியச்சமூகப் பரிணாமத்தைக் கொண்டு இந்த வடிவங்களின் பரிணாமத்தைப் புரிந்துகொள்ள முயலலாம். இந்திய மெய்யியலை பருவடிவமாக ஆராய இதைப் பயன்படுத்தலாம்.

ஆனால் இங்கே நிகழ்வதென்ன என்றால் இந்த பரிணாமம் ஒரு எளிய சதிவேலையாக குறுக்கப்படுவதுதான். வெறும் ஆதிக்க அரசியலின் ஒரு விளைவாக இதை எளிமையாக்கிவிடுவதுதான். இது இங்கே சென்ற சில ஆண்டுகளாக நடைபெறுகிறது. மொழித்தூய்மைவாதம், இனவாதம், சாதியவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் மொத்த வரலாற்றுச் சக்கரத்தையே நேர் எதிர்த்திசையில் சுழற்ற முயல்கிறார்கள் சிலர். நம் வீட்டுக் கடிகாரத்தின் முள்ளை நாம் நேர் எதிராக பிடித்துச் சுற்றிக்கொண்டிருந்தால் தாத்தா காலத்திற்குச் சென்றுவிடலாம் என்பதுபோல ஒரு நம்பிக்கைதான் இது.

இது இங்கே உருவாகிவரும் ஓர் அரசியல்தரப்பு மட்டுமே. எவ்வகையிலும் மதம், ஆன்மிகம் சார்ந்தது அல்ல. இவர்கள் இந்தியவியலாளர்களும் மார்க்சிய ஆய்வாளர்களும் இந்தத் தெய்வ உருவங்கள் அடைந்த பரிணாமம் குறித்து செய்திருக்கும் விரிவான ஆய்வுகளை எளிமைப்படுத்துகிறார்கள்.. அதிலிருந்து மேலோட்டமான சில கருத்துக்களை எடுத்துக்கொண்டு தமிழரின் தெய்வம், கலப்பற்ற தெய்வம், வந்தேறித்தெய்வம் என்றெல்லாம் பேசத் தொடங்குகிறார்கள். அவற்றுக்கான ஆய்வுமுறைமைகள் அரைகுறையானவை. இந்துமதக் கொள்கைகளுக்குள் அவற்றுக்கு இடமில்லை. இந்தியவியல் ஆய்வுமுறைமைகளின்படியும் அவை அரைகுறையானவை.

ஏற்கனவே சைவத்தில் இப்போக்கு மிகுந்துள்ளது. சைவத்திலிருந்து ஒரு தமிழ் சைவத்தை பிரித்து எடுக்கும் முயற்சி நிகழ்கிறது. சிவனிலிருந்து தமிழ் சிவனை பிரித்துக்கொள்ள முயல்கிறார்கள். முருகனிலிருந்து தமிழ் முருகனை எடுக்க முயல்கிறார்கள். அதற்கு இரண்டாயிரமாண்டு வரலாற்றைத் திருப்பிச்சுழற்ற வேண்டும். ஒட்டுமொத்த மரபையே நிராகரிக்கவேண்டும். அது இயல்வதா என்பது வேறு கேள்வி. இயல்வதென்றால் நாம் இழப்பதென்ன என்பது அதைவிடப்பெரிய கேள்வி. சங்ககாலத்திலிருந்து பாரதிவரைக்குமான ஒரு மாபெரும் பாரம்பரியத்தை, அதன் அறிவுச்செல்வத்தை, கலைக்கருவூலத்தை ஒட்டுமொத்தமாக தூக்கிவீசிவிடவேண்டுமா? தமிழ் சமூகத்தை நோக்கி எளிய அரசியலின் பொருட்டு அவ்வாறு அதன் பண்பாட்டின் ஆயிரத்தைநூறு ஆண்டுகளைத் தூக்கிவீசிவிட அறைகூவும் ஒருவர் மெய்யாகவே தமிழ்ப் பண்பாட்டை அறிந்தவரா? அதை வாழவைக்கவா அவர் முயல்கிறார்?.

சுகி.சிவம் செய்யும் பிழை என்னவென்றால் அந்த அரசியல் தரப்புகளுக்கேற்ப தன் கருத்துக்களை உருமாற்றிக் கொண்டதுதான். சென்ற ஐந்தாண்டுகளில் தமிழ் மதச்சூழலில் நிகழ்ந்துவரும் மாற்றத்தை அவர் பிரதிபலிக்கிறார். அவர் ஒரு மதச்சொற்பொழிவாளர் என்னும் வகையில், அறிஞர் என்னும் நிலையில் வழிகாட்டியாகத் திகழவேண்டுமே ஒழிய அரங்கில் எழும் உணர்ச்சிகளை தான் அடைந்துவிடக்கூடாது. அவருடைய சொற்களில் வெளிப்பட்டது அரங்கினரில் ஒரு பகுதியை நிறைவுசெய்யும் எளிய உத்தி மட்டுமே.

ஆனால் ஒன்றைச் சொல்லவேண்டும். சைவத்திற்கும் இந்துமதத்தின் பிற பிரிவுகளுக்கும் இடையேயான முரண்பாடும் சைவத்தின் தனித்தன்மையும் நிலைகொள்வதே உகந்தது. சைவமேகூட தமிழகத்தில் பல தனித்தன்மைகளைக் கொண்டிருக்கிறது. சைவம் சார்ந்த பல தமிழ்த்தொன்மங்கள் வேறெங்கும் இல்லாதவை. ஆகவே இங்கே சைவம் தமிழ்ச்சைவமாக நீடிக்க முயல்வதிலும் பிழையேதுமில்லை. அது இந்துத்துவ அரசியலுக்கு உடன்பாடற்றதாக இருக்கலாம். அவர்கள் தரப்படுத்தும் இந்துமதத்திற்குள் அமையாமல் நிற்கலாம். சுகி.சிவம் போன்றவர்கள் அதற்காக பேசுவது முற்றிலும் ஏற்புடையதே.

அது ஒருவகை அடிப்படைவாத நோக்குதான். ஆனால் அனைத்தையும் வேதங்களில் கொண்டு சென்று கட்டும் அடிப்படைவாதத்திற்கு எதிரான தூய்மைவாதம் அது. தமிழ்ப்பண்பாட்டில் என்றும் அந்த எதிர்ப்பு இருந்து வந்துள்ளது. அது தமிழ்ப்பண்பாட்டின் தனித்தன்மையிலிருந்து எழும் குரல். அக்குரலாக ஒலிக்கும் அறிஞர்கள் பலர் இங்கே இருந்தனர். அ.ச.ஞானசம்பந்தன் முதல். அவர்களின் குரலாக சுகி.சிவம் தொடர்வது ஏற்புடையதே.

ஆனால் அது ஒட்டுமொத்தப் புரிதலின் விளைவாகவே அமையவேண்டும். இந்துதெய்வங்கள், சைவ தெய்வங்கள் பரிணாமம் அடைந்து வந்த பாதையை ஒரு மெய்ஞானப்பரிணாமமாகவே மதம்சார்ந்த பார்வையால் வகுக்க முடியும். அரசியல்சதியாக, ஆதிக்க உத்தியாக அதைப் பார்க்கையில் அது மதத்தை மறுக்கும் பார்வையாக ஆகிவிடுகிறது. அந்தத் தெளிவு அனைவருக்கும் தேவை.

மதத்தில் மாறுதல்கள் நிகழலாமா?இரண்டு அடிப்படையில் நிகழலாம. ஒன்று மெய்யறிவர் தங்கள் மெய்மையறிதலின் அடிப்படையில் உருவாக்கும் மாற்றங்கள். இரு உதாரணங்கள். திருவிதாங்கூர் [குமரிமாவட்ட] ஆலயங்கள் பலவற்றின் பூசனைநெறிகள் போன்றவற்றை வில்வமங்கலத்து சுவாமியார் என்னும் ஆசிரியர் மாற்றியமைத்ததாக வரலாறு சொல்கிறது. இந்த மையமரபிலிருந்து விலகி ஐயா வைகுண்டர் அவர்கள் அவருக்கென ஒரு வழிபாட்டுமுறையை உருவாக்கினார். இருவழிகளுமே எப்போதும் உள்ளவைதான்.

இரண்டாவதாக மாறிவரும் அறங்களுக்கேற்ப மாற்றங்கள் நிகழ்வதைச் சொல்லலாம். எந்த மதமும் அது வடிவம்கொண்ட காலகட்டத்தின் அறத்தையே வெளிப்படுத்தும். அது என்றென்றும் மாறாதது என மரபுவாதிகள் நம்ப விழைந்தாலும் அது காலம் மாறுகையில் மாறியே ஆகவேண்டும், மாறிக்கொண்டே இருக்கிறது என்பதே உண்மை. அனைவருக்கும் ஆலயம்புகும் உரிமை முதல் அனைவரும் அர்ச்சகராகும் உரிமை வரை இவ்வகைப்பட்டவை.

இவற்றுக்கு அப்பால் அரசியல் நோக்குகளால் மதக்கொள்கைகள் மறுவிளக்கம் அளிக்கப்படும் என்றால், மாறுதல்கள் நிகழுமென்றால் மதம் காலப்போக்கில் அழியும். மதத்தின் முக்கியமான சிறப்பியல்பே அது நம்மால் எண்ணிச்சென்றடையாத தொல்காலத்துடன் நம்மைப் பிணைக்கிறது என்பதுதான். சமகால அரசியலுக்கேற அதை மாற்றப்புகுந்தால் எஞ்சுவது இன்னொருவகை அரசியலாகவே இருக்கும். இது எல்லா தரப்பினரும் எண்ணவேண்டிய ஒன்று.

சுகி.சிவம் கூறியதை எதிர்ப்பவர்களில் இந்துத்துவர்கள் அவர்களின் ஒற்றை இந்துமத உருவகத்தை இவர் பிளவுபடுத்துகிறார் என்பதனால் சினமுறுகிறார்கள். அவர்கள் வழிபாடுகளின் தனித்தன்மையைப் பற்றிப் பேசுபவர்களைக்கூட அவ்வண்ணமே அணுகுகிறார்கள் என்பதைக் காணலாம். அவர்களின் மொழியை எண்ணி வருந்துவதில் பொருளில்லை. அது வெறுப்பரசியலின் மொழி. வேறெதையும் அது அறியாது. தன் தரப்பை தன் குரலில் சொல்லாத அனைவருமே அதற்கு எதிரிகளே. எதிரிகளை எந்த எல்லைக்கும் சென்று வசைபாடுவதே அதன் வழி. அதற்கு அறிவடிப்படை என ஏதும் இல்லை.

தனிப்பட்ட முறையில் சுகி.சிவம் அவர்களின் உரைகள் இன்று இன்றியமையாத ஒரு மரபின் நீட்சியை நிலைநிறுத்துவன என்று நினைக்கிறேன். அவரைப்போன்ற ஒருவரின் சொற்களில் மாற்று அல்லது மறுப்பு இருக்குமென்றால்கூட அதற்கான மதிப்புடன் மட்டுமே சொல்லப்படவேண்டும் எனக் கருதுகிறேன். நமது மத அறிஞர்களை நாமே மதிப்பதையே முதலில் நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.

நான் சுகி.சிவம் அவர்களின் தரப்புடன் முரண்படுவது வேறு அடிப்படைகளில்.

அ.. அவர் நின்றுபேசுவது பக்தியின் அடித்தளம்மீது. அதற்கு ஆய்வுநோக்கு எதிரானது. அவர் தூய அத்வைதி என்றால் மட்டுமே மதத்தின் தளத்திற்குள் அதைச் செய்யமுடியும். அல்லது இந்தியவியலாளராக வெளியேவந்து செய்யலாம். பக்தியுடன் ஆய்வை குழப்பிக்கொள்ளக்கூடாது.

ஆ. அவர் இந்து தெய்வங்கள் உருவாகி வந்த பரிணாமத்தை எளிமைப்படுத்தி ஒருவகை சதியாக காட்டிவிடுகிறார். அந்தப் பரிணாமம் மெய்யறிஞரும் படிவரும் அடைந்த உள்ளுணர்வினூடாக, உரையாடல்களினூடாகத் திரண்டுவந்தது. அது வரலாற்றின் கனி. அதை திரும்பக்கொண்டு செல்ல முடியாது. அவ்வாறு செய்யமுயல்வது எளிய அதிகார அரசியல் சார்ந்தது.

இ. மதச்சொற்பொழிவு என்பது மதத்தின் தத்துவங்களையும் ஆசாரங்களையும் புரிந்துகொள்ள வழிகாட்டுவது. அதில் அரசியல் கலக்கும்போது வம்புபேசுவதாக ஆகிவிடும். அவ்வுரையின் நோக்கமே இல்லாமலாகிவிடும். சுகி.சிவம் தன் சைவம் –தமிழ் சார்ந்த நோக்கில் மதத்தைப்பற்றிப் பேசலாம். ஆனால் அது எங்கே அரசியலாகிறது என அறிந்திருக்கவேண்டும். இவ்வுரையில் மட்டுமல்ல இப்போது பல உரைகளிலும் அவர் அவ்வெல்லையை மீறுகிறார். அதற்கான ஆதரவு இங்கே இருக்கிறது என்பதே காரணம். அவர் அந்த ஆதரவின் பின் செல்பவராக இருக்கலாகாது.

ஜெ

***

சங்க இலக்கியங்களில் முருகன் பழங்குடி இன வெறியாட்டு வழிபாடு- எம். சண்முகம் பிள்ளை

முந்தைய கட்டுரைசிவப்பயல் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைகாஷ்மீரின் குளிர்