ஒரு சிறு நினைவுடன் தொடர்புள்ள பாடல் இது. தேவ் ஆனந்தின் ‘கைடு’ படம் 1965ல் வெளிவந்தது நான் சின்னக்குழந்தை அப்போது. அன்று இது மிகப்புகழ்பெற்ற படம். ஆனால் தமிழகத்தில் சென்னைக்கு வெளியே எவரும் பார்த்திருக்கமாட்டார்கள். ஆர்.கே.நாராயணனின் நாவலின் திரைவடிவம். இதன் ஹாலிவுட் வடிவத்திற்கு நோபல் பரிசு பெற்ற பேர்ல் எஸ் பெர்க் திரைக்கதை எழுதியதாகச் சொல்வார்கள்.
அன்றெல்லாம் பீகாரிகள் குடும்பமாக வந்து எங்களூரில் பிச்சை எடுப்பார்கள். அங்கே வெள்ளம் என்றும் பஞ்சம் என்றும் சொல்வார்கள். உண்மையிலேயே அங்கே பஞ்சம் இருந்தது. பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் இரவலர் வாழ்க்கைக்குப் பழகி அதிலேயே நீடித்தார்கள்
நாங்கள் அப்போது கன்யாகுமரி அருகே கொட்டாரம் என்னும் ஊரில் ’கோட்டி’ பூமேடைக்குச் சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்தோம். எனக்கு ஐந்து வயது. அது காந்திய யுகத்தின் நீட்சி இருந்த காலம். என் அம்மா சர்க்காவில் நூல் நூற்பார்கள். அதை ‘நூலாப்பீஸ்’ என்னும் இடத்திற்கு கொண்டுசென்று கொடுத்தால் பணம் கிடைக்கும். அது பெண்களுக்குரிய பணம். ஆண்களுக்குச் சம்பந்தமில்லாதது. அலங்காரப் பொருட்களுக்காகப் பெரும்பாலும் செலவிடப்படும்.
ஆண்கள் வீட்டைவிட்டுச் சென்றுவிட்டபின் பெண்கள் கூடி அமர்ந்து சர்க்காவில் நூல் நூற்பதென்பது ஒரு இனிய கொண்டாட்டமாக இருந்தது. பாட்டுகள் பாடப்படும். கதைகள் சொல்லப்படும். அம்மா தொடர்கதைகளை விரிவாக, நாடகத்தனமாகச் சொல்வாள். சிரிப்பும் கொண்டாட்டமுமாக இருக்கும். எங்கள் வீட்டின் முகப்பு பெரியது. பத்துப் பதினைந்துபேர் அமரலாம். அப்பா இல்லாதபோது அது பெண்களின் கேளிக்கைமண்டபம்.
ஒருநாள் ஒரு ஜோடி கையில் சிறுகுழந்தையுடன் வந்தது. ஆணின் கையில் ஆர்மோனியம். அவர்கள் பிகாரி பஞ்சத்திலிருந்து வந்ததாகச் சொன்னார்கள். பாடகர்கள். அம்மா எந்தப் பாடகரையும் பாடாமல் திருப்பி அனுப்புவதில்லை. அவர்கள் இந்தப் பாடலை பாடினார்கள். அம்மாவால் தாங்கவே முடியவில்லை. திரும்பத்திரும்ப பாடவைத்தாள். பத்து தடவைக்குமேலாக. அதன்பின் அதை எழுதிவாங்கிக்கொண்டு அவ்வப்போது பாடிக்கொள்வாள்.
நெடுங்காலம் கழித்து ரேடியோவில் இப்பாடலைக் கேட்டபோது நான் அம்மாவிடம் இந்நினைவுகளைச் சொன்னேன். அம்மா முகம் மலர்ந்து ஓரிரு வரிகளை முனகிக்கொண்டாள். முகம் மேலும் மேலும் கனவில் கனிந்து இளம்பெண்ணாக ஆனாள்.
***