ஊட்டி கடிதங்கள்

ஊட்டி, அபி, இளவெயில், குளிர்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம்

’ஊட்டி குளிர் அபி’ வாசித்தேன். பொள்ளாச்சியிலும் நீங்கள் சொல்லியிருந்த அதே சீதோஷ்ணம், குளிரும் சாரல் மழையும் பச்சை பிடித்திருக்கும் சுற்றுப்புறங்களும் இளவெயிலுமாக இருக்கிறது. அதனாலோ என்னவோ வழக்கமான, ”அடடா ஊட்டிக்கு நானும் போயிருந்திருக்கலாம்” என்னும் ஏக்கம் வராமல் நானும் அங்கே வந்திருந்தது போலவே இருந்தது

ஊட்டி எனக்கு மிகப்பழகிய ஒரு இடம். கோத்தகிரி வனக்கல்லூரியில் 3 வருடங்கள் ஆய்வு மாணவியாக இருந்திருக்கிறேன். எனினும் குருநித்யா ஆசிரமம் எனக்கு காட்டிய ஊட்டி முற்றிலும் வேறு. அத்தனை பேர் கூட்டமாக காவிய முகாமில் இருந்தபோதும் தனிமையை அந்த இடத்தில் உணர முடிந்தது. உயரமான இடங்களில் எனக்கு அப்படித்தோன்றும்.

முதன்முதலில் அங்கு வந்திருந்து, அமர்வின் பொருட்டு அந்த அரங்கில் நுழைந்ததும் நாற்காலியில் அமர்ந்திருந்த நித்யாவின் உருவச்சிலை ஏற்படுத்திய திடுக்கிடல், அதன்பின்னர் எத்தனை முறை அந்த அரங்கில் நுழைந்தாலும் ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. அவரும் நம்முடன் அமர்வை கவனிக்கிறார் என்று நினைத்துக்கொள்ளுவேன்

அந்த அமைதியும் குளிரும் பச்சை வாசனையும் இப்போதென என என்னால் நினைவில் மீட்டெடுக்க முடியும்

முதல் முறை வந்தபோது நடுக்கும் குளிரில் கலவையான காய்களை பெரிது பெரிதாக வெட்டிபோட்ட குழம்புடன் முகத்தில் ஆவியடிக்கும் சூட்டில் இரவுணவு சாப்பிட்டது நினைவில் வந்தது நீங்கள் எழுதியதை வாசிக்கையில்

இறுதியாக நீங்களும் சீனுவும் கூட புறப்பட்டு வந்த பின்னரும் அபியின் கவிதைகள் அங்கேயேதானிருந்திருக்கும்.

//இங்கே படரும் இருளைச் சிறுது சுண்டினால் கூட

என் மலை எனக்கு பதில் சைகை தரும்//

//என்னைச் சுற்றி நிரம்பும்காட்டுக்களிப்பு//

//பொழுதின் நினைவும் நினைவின் பொழுதும்

இடைச்சுவர் தகர்ந்து ஒன்றினுள் ஒன்றாகி ஊர்கின்றன

ஊர் தன் மிகச்சிறிய புள்ளியில்//

இப்படி நீருக்குள் கூழாங்கற்கள் உருளும் தாளலயத்தைசொல்லும் அபியின் கவிதைகள் யாருமற்ற தனிமையில் அங்கிருப்பதுதான் பொருத்தமும் கூட

கடந்த ஊட்டி முகாமிற்கு வராமல் போனது பெரும் இழப்பு எனக்கு மே மாதம் மலைச்சரிவெங்கும் பூத்திருக்கும் அடர் ஊதா ஜகரண்டாக்களை பார்க்கத்தவறி விட்டிருந்தேன். திடீரென்று வந்திருக்கும் Trigeminal neuralgia என்னும் நரம்பு தொடர்பான கோளாறினால் இனி மலைப்பிரதேசங்களுக்கு நான் செல்வது சாத்தியமில்லை என்கிறார்கள் மருத்துவர்கள். இப்படி என் வாழ்வில் எடுக்கபட்ட, ஒராயிரம் முன்முடிவுகள் தகர்ந்திருக்கின்றன , எனவே அடுத்த காவிய முகாமுக்கு குருநித்யாஆசிரமத்திற்கு வரும் நாளுக்காக காத்திருக்கிறேன்

அன்புடன்

லோகமாதேவி

***

அன்புள்ள ஜெ

ஊட்டியில் இளவெயிலில் நீங்கள் நடத்திய சிறிய சந்திப்பு பற்றி வாசித்தேன். என் வாழ்க்கைமுழுக்க நான் ஆசைப்படுவது அப்படிப்பட்ட ஒரு சந்திப்பு. பல சந்திப்புகளை உங்கள் தளத்திலே பார்த்திருக்கிறேன். ஆனால் இந்தவகையான சிறிய சந்திப்புகளின் அழகே வேறுதான். ஊட்டியின் பசுமை, குளிர், வெயில், நித்ய சைதன்ய யதியின் அருகாமை எல்லாமே கனவு போல உள்ளது. ஒருவேளை இதெல்லாம் எனக்கெல்லாம் சாத்தியமே ஆகாது. ஆனால் கனவுகாணலாமே

எஸ்

***

முந்தைய கட்டுரைகாஷ்மீரின் குளிர்
அடுத்த கட்டுரைமொழி, எழுத்து, மதம்- அ.பாண்டியன்