ஜெயகாந்தன் -கடிதங்கள்

ஊட்டி, அபி, இளவெயில், குளிர் 

ஜெயகாந்தன் தமிழ்விக்கி

அன்புள்ள ஜெ

ஜெயகாந்தனைப்பற்றிய உங்கள் கருத்துக்களுடன் முதன்மையாக உடன்பாடுகொள்கிறேன். தமிழிலக்கியத்தில் மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டவர் ஜெயகாந்தன். அவருடைய முக்கியமான படைப்புக்கள் படிக்கப்படவே இல்லை என்று தோன்றுகிறது. இரண்டு அடிப்படைகளில் அவர் ஒரேயடியாக நிராகரிக்கப்பட்டார். ஒன்று, வணிக இதழ்களில் வெளிவந்தாலே அது இலக்கியமல்ல, பலரும் வாசித்தாலே அது இலக்கியத்தகுதி கொண்டது அல்ல என்ற ஒரு வகை சிற்றிதழ் மூர்க்கம். இன்னொன்று, கலை என்பது பூடகப்படுத்துவதும் மென்மையாகச் சொல்வதும் மட்டுமே என்ற குறுக்கல் நோக்கு என்று எழுதியிருக்கிறீர்கள்.

முற்றிலும் உண்மை. ஜெயகாந்தனின் படைப்புக்களை மொத்தமாக நிராகரித்துப்பேசுபவர்கள் உண்டு. அவர்களிடம் நான் கேட்டதுண்டு. நீங்கள் என்னென்ன படித்திருக்கிறீர்கள் என்று. பலர் படித்தே இருக்கமாட்டார்கள். பலர் ஓரிரு படைப்புக்களை இலக்கியவாசிப்பு தொடங்கும் நாளில் படித்திருப்பார்கள். பலருக்கு எந்த புரிதலும் இருக்காது. ஞாபகம்கூட இருக்காது. அந்தநாளிலே வாசிச்சது ஞாபகமே இல்லை என்பார்கள். இலக்கியப் பிரக்ஞை உண்டான பின்னர் வாசித்த படைப்புக்களை மட்டுமே கொண்டாடிக் கொண்டிருப்பார்கள்.

இன்னும் சிலரிடம் வேறு எவரை பிடிக்கும் என்று கேட்பேன். மிகச்சாதாரணமான சில பெயர்களைச் சொல்வார்கள். இவரையே பிடிக்கும் என்கிறீர்கள், ஜெயகாந்தனை அணுகும் தகுதியே இல்லை உங்களுக்கு என்று சொல்லிவிடுவேன். தமிழிலக்கியத்தில் தீவிர வாசகர்கள் என்பவர்கள் கொண்டாடிய பல படைப்புக்கள் மிகச்சாதாரணமான செமிபோர்ன் கதைகள், பூடகமான கள்ளக்காதல்கள். மெல்லிய காதல்கதைகள். இதுதான் உண்மை. ஜெயகாந்தன் கேட்கும் பண்பாட்டுக் கேள்விகளை இன்றுகூட நம் நவீனவாசகர்கள் எதிர்கொண்டதில்லை

எஸ்.ஆறுமுகப்பெருமாள்

***

அன்புள்ள ஜெ

ஜெயகாந்தனின் படைப்புக்களை நவீன வாசகர்கள் ஏன் ஏற்றுக்கொண்டதில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். அதற்கு முக்கியமான காரணம் என நான் நினைப்பது நவீன இலக்கிய வாசகர்களிடம் இருக்கும் ஒரு குறிப்பிட்ட மனநிலை. இது நுட்பமான வாசிப்பு இல்லாத தன்மையால் உருவாவது. அதாவது பரவலாகப் பேசப்பட்ட படைப்புக்களை தவிர்த்து எங்கிருந்தோ எவரோ எழுதிய சில படைப்புக்களை கொண்டுவந்து நிறுத்தி பேசுவது. தேடித்தேடி படிப்பவர் என்னும் பாவலாவுக்கு இது உதவுகிறது.

இதெல்லாம் படிக்காமல் பேசக்கூடாது என்று உதார்விடமுடியும். ஆனால் ஜெயகாந்தன் போன்ற பாப்புலர் படைப்பாளிகளைப் பற்றியோ அல்லது அந்த அபூர்வ படைப்பாளிகளைப் பற்றியோ ஒன்றும் விமர்சனமாகவோ ரசனையாகவோ சொல்லத்தெரியாது. அதெல்லாம் அபூர்வம், ரொம்ப நுட்பம், ஆழம் ஜாஸ்தி இப்படியெல்லாம் தான் ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

இந்த தாழ்வுணர்ச்சியால்தான் தமிழில் அவ்வப்போது சம்பந்தமே இல்லாதவர்களை தூக்கிப்பிடிக்கிறார்கள். நல்ல படைப்பாளிகள் உரியமுறையிலே வாசிக்கப்படாமலாகிறார்கள்

ஜெயக்குமார்

***

முந்தைய கட்டுரைஆழ்மன நங்கூரங்கள்
அடுத்த கட்டுரைஅமெரிக்காவின் வண்ணங்கள்