பகுதி ஒன்று : இருள்நகர் – 4
அகத்தளத்தின் இடைநாழியினூடாக நடந்து காந்தாரியின் அரண்மனை முகப்பை அடைந்து அங்கு காவல் நின்றிருந்த ஏவல் பெண்ணிடம் தன் வரவை அறிவிக்கும்படி கனகர் கைகாட்டினார். அவள் தலைவணங்கி உள்ளே சென்றதும் பெருமூச்சுடன் தன் ஆடையை சீரமைத்தபடி உடல்தளர்த்தி நின்றார். ஓர் இடத்திற்குச் சென்றபின்னரும் அங்கே சென்றுசேராத தன் உள்ளத்தைப் பற்றி எண்ணிக்கொண்டார். எண்ணியிராத இடங்களுக்குச் சென்று திகைத்து நின்றிருந்தது தன்னுணர்வு. அங்கு வந்த பாதை முற்றாகவே அழிந்துவிட்டிருந்தது. அங்கிருந்து மீண்டு வருகையில் மீண்டும் வழி தவறியது. இந்த அரண்மனையில் இப்போது உளத்தெளிவுகொண்ட எவரேனும் இருக்கிறார்களா?
சாளரத்திற்கு வெளியே முரசில் கோலிழுத்ததுபோல் ஆழ்ந்த உறுமலோசை கேட்டது. சாளரத்திரைச்சீலை காற்றில் பறந்து சுருண்டு அமைந்திருக்க கீழே முற்றத்தின் ஒளி தெரிந்தது. முற்றம் இப்போதெல்லாம் முற்றொழிந்து கிடக்கிறது. ஓரிரு அரசபல்லக்குகள், புரவிகள் இல்லாத தேர்கள் இரண்டு. புரவிகளும் யானைகளும் அரிது. குடித்தலைவர்களும் அந்தணரும் பெருவணிகரும் அவைக்கு வருவதேயில்லை. வந்தாலும் நடந்தே வருகிறார்கள். பல்லக்கு தூக்குவதற்கு நகரில் போகிகளே இல்லை. பெண்கள் தூக்கும் பல்லக்கில் ஏறுவதற்கு இன்னமும் எவரும் துணியவில்லை. ஆனால் அதற்கும் விரைவிலேயே உளக்குவிவு கொண்டுவிடுவார்கள். பெண்களால் இந்நகரையே சுமக்க இயல்கிறது.
அவர் அருகணைந்து எட்டிப்பார்த்தபோது அங்கே முதிய பிடியானை ஒன்று நிலையழிந்து தன் உடலை தானே ஊசலாட்டியபடி நின்றிருப்பதை கண்டார். அஞ்சியோ துயருற்றோ நோயுற்றோ அது கொந்தளித்துக்கொண்டிருந்தது. மிகப் பெரிய யானை. அகவைமுதிர்வை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பது அதன் முதுகெலும்பின் புடைப்பிலிருந்து தெரிந்தது. கன்னக்குழிகள் சிறுகொப்பரைகளின் உட்குவைகள் என தெரிந்தன. நீராட்டி நெடுநாட்களாகியிருக்கக்கூடும். உடல் கரிய புழுதிமலை எனத் தெரிந்தது. விழிகளுக்குக் கீழே விழிநீர் வழிந்து சேற்றில் வழிந்த ஊற்றுத்தடம் எனத் தெரிந்தது. அதன் உடலின் அசைவுகளை பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு நீர்த்துளி ததும்பிக்கொண்டிருப்பதுபோல், எக்கணமும் உதிர்ந்து மறைந்துவிடும் என்பதுபோல் தோன்றியது.
என்ன கருமை என்று அவருடைய அகம் வியந்தது. யானையின் கருமைபோல் விழி நிறைக்கும் பிறிதொன்றில்லை. யானை அருகணைந்து கடந்து செல்கையில் ஒரு கணம் நோக்குபவரை இருளுக்குள் கொண்டு சென்றுவிடுகிறது. ஒரு கண இரவு ஒரு கண புடவிப்பயணம். அவர் நோக்கை விலக்கிக்கொண்டார். ஆனால் விழிகளுக்குள் இருள் எஞ்சியிருந்தது. மீண்டும் நோக்கினார். யானை ஒரு கரிய நிலவறையா? அதற்குள் குடியேறியிருப்பது எந்த தெய்வங்கள்? என்ன கருமை என்றே உள்ளம் அரற்றிக்கொண்டிருந்தது. ததும்பும் கருமை. உள்ளிருந்து வெளியேற ஏதோ வன்விசை ஒன்று முட்டிக்கொண்டிருக்கிறது. அது கொடுங்காற்றென எழக்கூடும். அவர் அதை நோக்காதொழிய எண்ணினார். நோக்காதபோது அதை மேலும் அருகே நோக்குவதை உணர்ந்து மீண்டும் நோக்கினார்.
யானை துதிக்கையால் தன்னிரு கால்களையும் மாறி மாறி அறைந்துகொண்டது. முன்னங்காலைத் தூக்கி தரையில் தட்டியது. தலையை குலுக்கி அசைத்தது. காதுகளை விரைந்து வீசியது. பின் அரைக்கணம் உடல் உறைய, செவிகள் நிலைக்க எதையோ உற்றுக் கேட்பதுபோல் அசைவமைந்தது. மறுகணம் தீச்சுட்டதுபோல் விதிர்ப்புற்று மீண்டும் அசைவு கொண்டது. அதை அங்கே கட்டிப்போட்டிருக்கவில்லை என்று கண்டார். ஆனால் அதுவே அங்கே தன்னை பிணைத்திருப்பதாக எண்ணிக்கொண்டிருந்தது. வலது பின்னங்காலை தளையிட்டிருப்பதுபோல அழுந்த ஊன்றி உடலை முடிந்தவரை நீட்டி துதிக்கையை வீசியது. அதன் மூச்சுபட்டு புழுதி எழுந்து பறந்தது.
அவர் சாளரத்திலிருந்து விலகி தூணருகே சென்று நின்றார். அதற்கு என்ன செய்கிறது? நோயுற்றிருக்கக் கூடும். இந்த அரண்மனையில் நோயுறாத எவருமே இல்லை. போரின்போது விலங்குகளில் நோயுற்றவை மட்டுமே அஸ்தினபுரியில் எஞ்சவிடப்பட்டன. அஸ்தினபுரியின் காவலுக்கும் பணிகளுக்கும் என விடப்பட்டிருந்த உடலில் நிகர்நிலை அழிந்தவையும் விழிநோக்கு குறைந்தவையும் முதுமை எய்தியவையும் அகவை எய்தாதவையுமான அனைத்து யானைகளும் ஒவ்வொன்றாக படைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. எஞ்சிய யானைகளையும் அனுப்புங்கள், அவை எவையாக இருப்பினும் என்று சகுனியின் ஆணை வந்துகொண்டே இருந்தது. “இனி யானைச்சிற்பங்களைத்தான் அனுப்பவேண்டும்” என்று அமைச்சர் சபரர் சீற்றத்துடன் கனகரிடம் சொன்னார்.
அறுதியாக ஒரு யானைத்திரள் கிளம்பிச் சென்றபோது யானைக்கொட்டில் காப்பாளராகிய முதிய சூதர் பஞ்சகர் அவரைப் பார்ப்பதற்காக வந்தார். அமைச்சறையில் சூழ்ந்து நின்றிருந்த ஒற்றர்கள் நடுவே பித்தன்போல் அமர்ந்திருந்த அவரிடம் ஏவலன் யானைக்கொட்டில் தலைவர் பஞ்சகர் வந்திருப்பதை அறிவித்தபோது அங்கு ஏதோ சில யானைகள் உயிர் துறந்துவிட்டிருக்கின்றன என்பதைத்தான் அவர் உள்ளம் எண்ணியது. பின்னர் சலிப்புடன் வரச்சொல்க என்று கை காட்டினார். பஞ்சகர் அருகணைந்து வணங்கி “இன்று வந்த ஆணையின்படி தரம் பிரிக்காமலேயே பெரும்பாலாலும் அனைத்து யானைகளையும் அனுப்பிவிட்டிருக்கிறேன். கொட்டில் முற்றொழிந்துவிட்டது” என்றார்.
சொல்க என கனகர் நோக்கினார். “இனி இங்குள்ளவை துதிக்கை வலுக்காத குழவிகள்” என்று பஞ்சகர் சொன்னார். “கருவுற்றிருக்கும் நான்கு யானைகள் ஒழிய அகவைநிறைவுற்ற யானை எதுவுமே இல்லை.” அவர் என்ன சொல்லவருகிறார் என்பதை கனகர் விழிகளால் உறுத்து நோக்கிக்கொண்டிருந்தார். “பொதுவாக கருவுறும் அகவைகொண்ட யானைகளை போருக்கு அனுப்புவதில்லை. அவை வளர்திருக்கள் எனப்படுகின்றன. விதைநெல்போல, கருவூலவைப்புபோல. அவற்றை எந்நிலையிலும் நாம் பயனுறுசெயலுக்கென வெளியே எடுக்கலாகாது.” கனகர் எரிச்சல்கொண்டாலும் அடக்கிக்கொண்டார்.
“இப்போரில் நாம் வறுமைகொண்ட இல்லத்தின் உணவுக்கலமென அனைத்தையும் ஒட்ட சுரண்டிக்கொண்டிருக்கிறோம் என சூதர்கள் பாடினார்கள். அரசு ஆணையை என்னால் மீற இயலாது. ஆயினும் சொல்லியாகவேண்டும். இங்கு முதிய யானை ஒன்றேனும் வேண்டும்” என்றார் பஞ்சகர். “யானை என்பது பிற விலங்குகளைப் போன்றது அல்ல. அதற்கு ஒரு மரபுத்தொடர்ச்சி உள்ளது. இங்குள்ள சிறிய யானைகளை மட்டுமே கொண்டு நம்மால் ஒரு சிறந்த யானைப்படையை அமைக்க முடியாது. இங்கிருந்த அத்தனை யானைகளையும் தன்னுள் கொண்ட ஒரு முதிய யானையேனும் எஞ்சியிருக்க வேண்டும். அந்த யானையைக் கண்டே குட்டிகள் தங்கள் மூதாதையரின் மெய்மையையும் வாழ்க்கையையும் கற்றுக்கொள்ள இயலும்.”
கனகர் “இங்கு முதிய யானை…” என்று சொல்லி தயங்கி “தேவையெனில் கானகத்திலிருந்து யானைகளை…” என்றார். பஞ்சகர் இடைமறித்து “கானகத்து யானை வேறு, நகரத்து யானை வேறு. இங்குள்ள யானைகள் இன்றோ நேற்றோ இங்கு வந்தவை அல்ல. என்று மானுடர் நகரங்களுக்குள் வந்தார்களோ அப்போதே யானையும் வந்துவிட்டது. அதற்கு நகரங்களைக் குறித்த இடஉணர்வும் மானுடரைக் குறித்த நுண்புரிதலும் உண்டு. வருவது உணரும் நுண்மையை, சென்றதை நினைக்கும் ஒழுங்கை அது அடைந்துள்ளது. இங்கு திரளென்றும் தனித்தும் வாழ்வதற்குரிய அனைத்து அறிதல்களையும் அது வாழ்ந்து திரட்டி வழி வழியாக கொடுத்து வருகிறது” என்றார்.
“இங்கிருக்கும் குட்டியானைகள் தங்களை முன்நின்று நடத்தும் ஒரு யானையை நோக்கியே அவற்றை பெற்றுக்கொள்ள இயலும். நகரத்து யானைகள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் மொழி ஒன்று உண்டு. அது காட்டு யானைகள் பேசிக்கொள்ளும் மொழி அல்ல. இங்குள்ள பயின்ற யானைகளின் மொழி இங்குள்ள பொருட்களால் ஆனது. மொழி என்பது புறப்பொருட்களின் நுண்ணிய அகநிழல்களின் தொகை என்கின்றது மதங்கநூல்” என்றார் பஞ்சகர். “என்றாவது காட்டுக்குள் நகரத்து யானை செல்லும்போது இதை தாங்களே நோக்கி அறிய இயலும். காட்டு யானைகள் நாட்டு யானைகளிடம் உரையாடும் போது முதற்சில நாழிகைகளில் அவர்களுக்குள் திகைப்பும் பதற்றமும் தேவையில்லாத சினக்கொந்தளிப்பும் உருவாகிறது. மிக மெல்லத்தான் அவர்கள் தங்கள் பொதுச்சொற்களை கண்டடைகிறார்கள். பொதுவாக பேசிக்கொள்கிறார்கள். சொல்லமைவு உருவான பின்னரே ஒருவரை ஒருவர் புரிந்துகொள்கிறார்கள்.”
“ஆம்” என்றார் கனகர். அவர் அதை கண்டிருந்தார். “இத்தகுதிகள் அனைத்தும்கொண்ட முதிய யானை ஒன்று அங்கே குருக்ஷேத்ரத்தில் இன்று உள்ளது… அதையேனும் இங்கே கொண்டுவந்தால் நன்று” என்று பஞ்சகர் சொன்னார். “அது குருக்ஷேத்ரத்துக்கு சென்றுவிட்டதா?” என்றார் கனகர். “ஆம், அதை அனுப்பும்படி காந்தார அரசர் ஆணையிட்டார். இங்கிருந்து யானைப்படை கிளம்பிச்செல்கையில் முழுப் படையையும் வழிநடத்திச் செல்லும் ஆற்றல்கொண்ட மூத்த பிடியானை ஒன்று வேண்டும் என்று அவர் கோரினார். அதன்படி ஸ்ரீகரம் என்ற யானையை படைகளுக்கு தலைமையேற்க அனுப்பினோம்” என்றார் பஞ்சகர்.
கனகர் “அது போர்க்களத்தில் உயிருடன் இருப்பதை யார் அறிவார்?” என்றார். “அது அங்கு இருக்கும், ஐயமில்லை” என்று பஞ்சகர் சொன்னார். “ஏனெனில் அதை கொட்டில் நடத்தும் அன்னையென்றே அழைத்துச் சென்றார்கள். மூதன்னை அவள். நூறாண்டு அகவை கொண்டவள். அவளுடைய ஒற்றைச் சொல்லுக்கு எந்த மதகரியும் அடங்கும். அதன்பொருட்டே அவளை கொண்டு சென்றார்கள். அவளை போருக்கு கொண்டுசென்றிருக்க வாய்ப்பே இல்லை. எனவே களம்பட்டிருக்க மாட்டாள். அங்குதான் இருப்பாள்” என்றார் பஞ்சகர். “அந்த யானையை திருப்பி கொண்டுவர வேண்டும். அவள் ஒருத்தி இருந்தாலே இங்குள்ள அடுத்த தலைமுறைகளை யயாதியின் பட்டத்து யானையின் தொடர்ச்சியுடன் இணைத்துவிடுவாள்.”
கனகர் “அதன் பொருட்டு ஓர் ஆணையை என்னால் அனுப்ப இயலாது. தாங்களே நேரில் சென்று அந்த யானையை அழைத்து வருக! இங்கு என்னிடம் சொன்னதையே காந்தாரரிடம் கூறுங்கள்” என்றார். அவர் தயங்கி “காந்தாரர் அங்கே போரில் இருப்பார். எனது சொற்களை அவர் செவிகொள்வாரா என்று தெரியவில்லை. போரிலிருப்பவர்கள் இறந்தகாலத்தை முற்றாகவே வெட்டிவிட்டே செல்கிறார்கள். மெய் என்னவென்றால் அவர்கள் எதிர்காலத்தையும் முற்றாகவே வெட்டிவிடுகிறார்கள். போர்க்களத்துக்குச் செல்லும்வரைதான் எதிர்காலம் பற்றிய திட்டங்களும் கனவுகளும் இருக்கும். போர் தொடங்கிய பின்னர் அந்நாள், அப்பொழுது, அக்கணம் மட்டுமே எஞ்சியிருக்குமென்று கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றார்.
“மெய்” என்றார் கனகர். “வரும் தலைமுறைகளுக்காக ஒரு விதையை எஞ்சவிடவேண்டுமென்று காட்டுநெருப்பு நடுவே நின்று பொருதும் அவரிடம் சொல்ல இயலாது” என்றார் பஞ்சகர். கனகர் “நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. வேண்டுமெனில் நீங்களே சென்று அந்த யானையை அழைத்து வரலாம்” என்று சொன்னார். “இங்கு கருவுற்றிருக்கும் யானைகளிலிருந்து புதிய யானைகள் தோன்றும். வழிவழியாக இங்கு திகழ்ந்த யானைகளின் குடிமரபுகள் இங்கே திகழும். உள்ளிருந்து கற்பவை இங்குள்ள யானைப்படையில் சுடர் கொண்டெழும். நான் பேசிக்கொண்டிருப்பது வெளியிலிருந்து அளிக்கப்படுபவற்றைப் பற்றி” என்று சொன்னபின் பஞ்சகர் “வேறு வழியில்லை எனில் நானே செல்கிறேன்” என்றார்.
கனகர் “தங்களை படைமுகப்பு வரை கொண்டுசெல்வதற்கு துணை ஒருக்குகிறேன். காந்தாரரை தாங்கள் நேரில் சென்று சந்திப்பதற்கான ஓலை ஒன்றை அளிக்கிறேன். அது ஒன்றே என்னால் செய்யக்கூடுவது” என்றார். பஞ்சகர் தலைவணங்கினார். அவர் கிளம்பிச்சென்றபோது ஒற்றர்கள் வந்து அச்செய்தியை சொன்னார்கள். அப்போது அவரை எதற்காக அனுப்பினோம் என்பதை மறந்துவிடும் அளவிற்கு மேலும் ஒற்றர்களிடமும் அயல்செய்தியாளர்களிடமும் அவர் உழன்றுகொண்டிருந்தார். பல்லாயிரம் செய்திகள் ஒன்றையொன்று நிகர் செய்து முற்றிலும் செய்தியின்மை நோக்கி சென்று கொண்டிருந்தன அப்போது.
மேலும் சில நாட்கள் கழித்து அவர் யானைக்கொட்டில் வழியாக பழைய கதைகள் குவிக்கப்பட்டிருந்த கொட்டகைக்குச் சென்றபோது வழியில் பஞ்சகரை பார்த்தார். அரைக்கணம் இவரை எங்கோ பார்த்திருக்கிறோம் என்று எண்ணி பின் அணைந்தது அவர் அகம். யானைக்கொட்டில் முற்றோய்ந்து கிடந்தது. அசைவில்லாத இடத்தில் படியும் புழுதியின் மணம். உலர்ந்த யானைச்சாணியுடன் கலந்திருந்தது அது. அவர் திரும்பும்போது பஞ்சகர் பின்னால் வந்தார். வணங்கி “அமைச்சரே, நான் காந்தாரரை பார்த்துவிட்டு திரும்பி வந்தேன்” என்றார். “கூறுக!” என்று கனகர் சொன்னார். அவரை அப்போதுதான் அடையாளம் கண்டார்.
பஞ்சகர் தயங்கி “எனது சொற்களை அவர் செவிகொள்ளவில்லை. என்னை கடிந்து துரத்தினார்” என்றார். “ஏன்?” என்று கனகர் கேட்டார். “ஏன் என்பது அப்போது புரியவில்லை. பின்னர் புரிந்துகொண்டேன். திரும்பி வரும் வழியில் மேலும் மேலும் தெளிவு கொண்டேன்” என்றார் பஞ்சகர். “கூறுக!” என்று கனகர் சொன்னார். “அஸ்தினபுரியில் யானையின் மரபு தொடர்ந்து நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று நான் சொல்லும்போது இப்போரில் அஸ்தினபுரி தோற்றுவிடுமென்ற முன் உய்த்தல் அதிலிருப்பதாக காந்தாரர் எண்ணினார். ஆகவே பெருஞ்சினத்துடன் என்னை நோக்கி கூச்சலிட்டார். போரில் வென்று புதிய யானைத்திரளுடன் அஸ்தினபுரிக்குள் நுழைவேன். அஸ்தினபுரிக்கு யானைத்தொடர்பு மட்டுமல்ல இந்திரப்பிரஸ்தத்தின், மாளவத்தின், மகதத்தின், பாரதவர்ஷத்தின் அனைத்து யானைகளின் மெய்யறிதல்தொடரும் அஸ்தினபுரியில் திரளும். அதில் உங்களுக்கு ஏதேனும் ஐயம் உள்ளதா என்றார். இல்லை என்றேன். பிறகென்ன கிளம்புக என்றபின் திரும்பி தன் குடிலுக்குள் சென்றுவிட்டார். நான் தனித்து திரும்பி வந்தேன்” என்றார்.
கனகர் “மெய்தான். வெற்றி, மறுகணமே வெற்றி, முழுமையாக வெற்றி, உறுதியான வெற்றி என்ற நம்பிக்கையின் வெறியே போரை நிகழ்த்துகிறது” என்றபின் “இதைச் சொல்லி பயனில்லை. இவ்வண்ணம்தான் இவை நிகழ்கின்றன. இதோ அஸ்தினபுரியின் கொடிவழிகள் முற்றழிந்துகொண்டிருக்கிறார்கள். என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்றும் எஞ்சுவதென்ன என்றும் எண்ணும்போது நெஞ்சு திடுக்கிடுகிறது. யானைக்கொட்டிலை அன்றி பிறிதொன்றை எண்ணாத உங்களால் யானையின் தொடர்ச்சியைப்பற்றி மட்டுமே இப்போது பேசிக்கொண்டிருக்க இயலும். என்னிடம் பேச எதுவுமில்லை. எது ஊழோ அது நிகழட்டும்” என்றார்.
அஸ்தினபுரியின் முழுத் தோல்வி குறித்த செய்தி வந்து, நகர் மேல் படுகளம் விட்டு ஓடியவர்களின் தாக்குதலும் நிகழ்ந்து, மண் மழையும் பின் பெருமழையும் பெய்து ஓய்ந்த அடுத்த நாள் கோட்டைக் காவல்மாடத்திலிருந்து முரசொலி கேட்டு அவர் தன் அமைச்சு அறையில் எழுந்து நின்றார். “என்ன ஆயிற்று? ஏன் முரசொலி?” என்றார் சிற்றமைச்சர் ஸ்ரீபதர். அவரே உரக்க “அது பேரரசியை வரவேற்கும் முரசொலி அல்லவா? பேரரசி எங்கு சென்றார்?” என்றபின்னர் கனகரிடம் “குந்திதேவி நகர் புகுகிறார்களா என்ன? அவ்வண்ணம் அவர் இங்கு வர வாய்ப்பே இல்லையே” என்றார். இளைய அமைச்சர் ஆகையால் நாவின்மேல் கட்டுப்பாடற்றவராக இருந்தார்.
“அரசர்கள் இங்கு வந்து நகர் கைக்கொண்டு அரியணை அமர்ந்து முடிசூடிய பின்னரே அரசமுறைமைகளுடன் பேரரசியை வரவேற்று உள்ளே அழைத்துவருவார்கள் என்று எண்ணினேன். ஒருவேளை திரௌபதி தேவியாக இருக்கலாமோ?” என்றார் ஸ்ரீபதர். இன்னொரு இளைய அமைச்சராகிய உர்வரர் “அவர்கள் வருவதற்கு இன்னும் வாய்ப்பு குறைவு…” என்றார். “பின் எவர்?” என்று ஸ்ரீபதர் கேட்டார். கனகரும் திகைத்துப்போயிருந்தார். மேலும் தெளிவாக முரசுகள் பேரரசி நகர்புகுவதை அறிவித்து முழங்கத்தொடங்கின. நகரெங்கும் வாழ்த்தொலிகளும் எழுந்ததை கேட்கமுடிந்தது.
கனகர் மாளிகை முற்றத்திற்கு வந்தபோது அரண்மனை முகப்பில் பேரரசியை வரவேற்பதற்காக சிறிய படையொருக்கம் நிகழ்ந்துகொண்டிருந்தது. காவல்பெண்டுகள் வேல்களுடனும் வாள்களுடனும் ஏழு நிரைகளாக நின்றிருந்தனர். முகப்பில் வரவேற்பொலி எழுப்பும் முரசுகளும் கொம்புகளும் வந்து அணியமைந்தன. காவலர்தலைவி கலிகை கனகரிடம் வந்து தலைவணங்கி “பேரரசி வருகை தருகிறார்கள் என்று முரசுகள் கூறுகின்றன. ஆனால் அங்கிருந்து பறவைச்செய்தி ஏதும் வரவில்லை. எதிர்பாராத வருகை என எண்ணுகிறேன். வருவது எவர் என்று நாங்கள் அறிந்துகொள்ளலாமா?” என்றாள்.
கனகர் எரிச்சலுடன் செல்க என்று கைகாட்டினார். அங்கு நின்றிருக்கையில் ஒவ்வொரு கணமும் பதற்றம் ஏறிக்கொண்டிருந்தது. குந்தியோ திரௌபதியோ நகர் நுழைவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. ஆனால் அவ்வாறு நிகழக்கூடாதென்றும் இல்லை. போர் அனைத்தையும் கலைத்து குவித்துவிட்டது. அதிலிருந்து உருவாகும் முறைமை என்பது முற்றிலும் புதிய அடுக்கு. அதன் பொருளென்ன என்பதை முந்தைய காலகட்டத்திலேயே வாழும் எவரும் புரிந்துகொள்ள முடியாது. இனி போருக்குச் சென்று அங்கிருந்து மீண்டவர்களால் மட்டுமே பாரதவர்ஷத்தை நடத்த இயலும் போலும். போருக்குச் சென்றவர், எஞ்சியவர் என இரண்டு வகை மக்கள் பாரதவர்ஷத்தில் உருவாகிவிட்டனர்.
சற்று நேரத்தில் செய்திமுரசு முழங்கத்தொடங்கியது. ஒவ்வொரு சொல்லாக கூட்டி எடுத்தபோது கனகர் முதலில் திகைத்து பின்னர் விந்தையானதோர் நிறைவை அடைந்தார். வந்துகொண்டிருப்பது ஒற்றைத் தனி யானை. பஞ்சகர் பேருவகையுடன் இரு கைகளும் பதறி அலைபாய முற்றத்தின் மறுமுனையில் தோன்றி கூச்சலிட்டபடி அவரை நோக்கி ஓடிவந்தார். வெறும் வெளியில் ஒரு வியந்த முகம் வெறித்த கண்களும் திறந்த வாயுமாக திரையில் வரையப்பட்டு நின்று நெளிவது போலவே தோன்றியது. ஓசை ஏதுமில்லாத அலறல்போல செவிகளை வந்தறையும் பிறிதொன்றில்லை. அது கனவில் நிகழ்கிறது.
பஞ்சகர் அருகே வந்து “அமைச்சரே, அவள் திரும்பி வந்துவிட்டாள்! அவள்தான்! அவள்தான் திரும்பி வந்துவிட்டாள்!” என்றார். அதற்குள் புரவியில் வந்திறங்கிய கோட்டைமுகப்பின் காவலர்தலைவி பத்ரை அவரை அணுகி வணங்கி “இன்று காலை காட்டுக்குள்ளிருந்து தன்னந்தனியாக முதிய யானை ஒன்று வந்து வாயிலில் நின்றிருந்தது. கோட்டைத்தலைவி சம்வகை அது அணுகுவதைப் பார்த்ததுமே பேரரசியருக்குரிய முரசொலியும் வரவேற்பும் அளிக்கும்படி ஆணையிட்டுவிட்டார். யானைகளுக்கு அவ்வாறு அளிக்கும் வழக்கமில்லை என்று முதிய காவல்பெண்டு ஒருத்தி சொன்னபோது தன் ஆணை அது என்று கூறினார். ஆகவே…” என்றாள். “நன்று, அது முறைமையே” என்றார் கனகர்.
பஞ்சகர் “ஆம், அவள் நகர்புகும்போது அவ்வரவேற்பு அளிக்கப்படவேண்டும். பேரன்னை இன்னமும் இந்நகரை கைவிடவில்லை. இவளில் குடிகொள்ளும் தெய்வம் இந்நகரை வாழ்த்தியிருக்கிறது. மங்கலச்செல்வி நகர்புகுந்துவிட்டாள்! இனி இவ்வூர் நீடுவாழும்” என்று கூவினார். சற்று நேரத்தில் கோட்டைமுகப்பின் காவல்பெண்டிர் அணிவகுத்து பின்னால் வர முகப்பில் பேருடல்கொண்ட பிடியானை மெல்ல அசைந்து நடந்து வந்தது. “அவள் உடலில் புண்கள் இருக்கின்றனவா? போர்க்களத்திலிருந்தா வருகிறாள்?” என்று கனகர் கேட்டார். “அன்னையே! அன்னையே!” என்று கூவியபடி பஞ்சகர் அதை நோக்கி ஓடினார். அதனருகில் சென்று ஓடிய விசையிலேயே குப்புற விழுந்து நிலத்தில் முகம் படிய கைநீட்டி பணிந்து வணங்கினார். யானை துதிக்கை நுனியால் அவர் தலையை மெல்ல தொட்டது. எழுந்தமர்ந்து “அன்னையே! அன்னையே!” என்று பஞ்சகர் கூக்குரலிட்டார். ஏதென்றறியாத உணர்வால் கனகர் உளம் பொங்கி விழிநீர் மல்கினார்.
அந்த யானைதான் இது என்னும் எண்ணத்தை அடைந்ததும் கனகர் திடுக்கிட்டார். அந்த யானையை எப்படி மறந்தேன்? ஓரிரு நாட்கள்கூட கடந்து செல்லவில்லை. அதற்குள் நெடுந்தொலைவு வந்துவிட்டிருக்கிறேன். ஒவ்வொருநாளும் இங்கு நிகழ்வன ஒரு யுகம் நிறைக்கும் நினைவுகள். ஒரு தலைமுறைக்குரிய துயரங்கள். அவர் மீண்டு சென்று சாளரத்தினூடாக அந்த யானையை பார்த்தார். நிலையழிந்து அது தவித்துக்கொண்டிருந்தது. எதையோ அறிவிக்க விரும்புவதுபோல. எதையோ சொல்லிவிட்டு அகல விரும்புவதுபோல.
உள்ளிருந்து சத்யசேனை வந்து “அரசி நீராடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றாள். அவள் விழிகள் தளர்ந்து, கண்கீழ்த் தசைகள் கருகி வழிந்திருக்க, தொல்மரப்பாவைபோல மெருகிழந்திருந்த முகத்துடன் மிக முதியவள்போல் தோன்றினாள். கனகர் திரும்பி அந்த யானையை பார்த்தார். அவளும் யானையைப் பார்த்தபின் “நேற்று முன் தினம் புலரியில் இங்கு வந்தது. பாகர்கள் இங்கிருந்து அதை கொண்டு செல்ல முயல்கிறார்கள். உறுதியாக மறுத்துவிடுகிறது. அங்கேயே நின்றுகொண்டிருக்கிறது. அது எண்ணுவதென்ன என்பது எவருக்கும் புரியவில்லை” என்றாள். “வருக!” என்று உள்ளே சென்றாள்.
கனகர் உள்ளே சென்று அவள் காட்டிய பீடத்தில் அமர்ந்தார். ஒவ்வொரு முறை எங்கேனும் அமரும்போதும் ஏற்படும் பெருங்களைப்பை உணர்ந்தார். அமருமிடத்திலேயே அப்படியே விழுந்து துயின்றுவிடவேண்டுமென்று தோன்றியது. அரைக்கணம் கண்கள் மயங்கி, இமைகள் தழைய, வாய் திறந்து குறுந்துயிலில் மூழ்கினார். அறைமூலையில் அந்த யானை நின்றிருந்தது. அதன் உடல் தவிப்பு கொண்டிருந்தது. “இங்கு அறைமூலையில்…” என்றபடி அவர் விழித்துக்கொண்டார். அறைமூலையில் தேங்கிய இருளை பார்த்தார். கையால் வாயைத் துடைத்தபடி சூழ நோக்கியபோது அக்கூடத்தின் நான்கு மூலைகளிலும் இருள் செறிந்திருப்பதை கண்டார். உள்ளே இடைநாழிகள், சிற்றறைகள் அனைத்திலும் இருள் நிறைந்திருந்தது. நோயுற்ற யானைபோல் இருள் தவித்துக்கொண்டிருந்தது.