அன்புள்ள ஜெமோ,
இந்த செய்தி பார்த்தீர்களா? http://www.thehindu.com/2009/01/10/stories/2009011050810300.htm
தென்னகத்தின் கலாசாரத்தைக் காப்பாற்றிய வீரமன்னர் கிருஷ்ணதேவராயரின் பெயரில் ஒரு மலை இருப்பது திமுக நகராட்சியின் கண்களை உறுத்துகிறது போலும்… ஓட்டுவங்கி அடிவருடித்தனத்திற்கு ஒரு அளவே இல்லை போலிருக்கிறது…. தமிழக பா.ஜ.க சத்தம் போட்டிருக்காவிட்டால் இந்த விஷயம் கூட வெளியே தெரிந்திருக்காது…
கிருஷ்ணகிரியின் தொன்மை பற்றிய அரசின் அதிகாரபூர்வ ஆவணம் – http://krishnagiri.nic.in/history.htm
தமிழகத்தில் நடக்கும் கலாசாரப் படுகொலைகள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன..
அன்புடன்,
ஜடாயு
அன்புள்ள ஜடாயு,
நீங்கள் அளித்த இந்தச் செய்திவழியாகவே இவ்விவரத்தை அறிந்துகோண்டேன். கலாச்சாரத்தின் மீது உண்மையான க்கறை கொண்டவர்கள் முழுமூச்சாக எதிர்க்க வேண்டிய கலாச்சாரஅழிப்பு இது. ஒருவகை கருத்தியல் பயங்கரவாதம்.
நம்முடைய ஊர்ப்பெயர்கள் இடப்பெயர்கள் போன்றவற்றில் பலநூறு வரலாற்றுச்செய்திகள் புதைந்துகிடக்கின்றன. அவற்றில் மிகக்குறைவானவையே ஆராயப்பட்டிருக்கின்றன. இன்றுகூட வரலாற்றாய்வுக்கு ஊர்ப்பெயர்களை முக்கியமான சான்றாதாரமாகக் கொள்ளும் போக்கும் நம் வரலாற்றாய்வில் வலுவாக உள்ளது.
ஓர் உதாரணம். சென்ற சில நாட்களுக்கு முன்னர் நான் இவ்விணையதளத்தில் எழுதிய கட்டுரையில் கேரளத்தில் உள்ள கொடுங்கல்லூர்தான் சேரன் செங்குடுவனின் வஞ்சிமாநகராக இருக்கலாமென எழுதியிருந்தேன். ஒரு தொல்பொருள்சான்றுகூட அதற்குக் கிடையாது. இரு இடப்பெயர்கள்தான் உள்ளன.
அங்கிருக்கும் சிவபெருமானின் ஆலயத்துக்கு ‘திருவஞ்சைக்குளம்’ என்று பெயர். அவ்வூரின் அருகே இருக்கும் ஒரு மயானம் மாக்கோதப்பறம்பு என்று அழைக்கப்படுகிறது. இப்பெயர்கள் நம் தொன்மையான வரலாற்றின் விளிம்புகள். அவற்றை அழிப்பவர்கள் அழிப்பது நம் வரலாற்றையே
ஜெ
**