தடம் -கடிதங்கள்

தடம் இதழ்

ஜெமோ,

உங்கள் படைப்புகளான  விஷ்ணுபுரம்  மற்றும் பின்தொடரும்  நிழலின் குரல் வழியாக உங்களை நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில்தான் தடம் இதழை விகடன் ஆரம்பித்திருந்தது. அதிலிருந்த உங்களுடைய மிக விரிவான நேர்காணலும்  அதைத் தொடர்ந்து வந்த ‘நத்தையின்  பாதை’ தொடரும் உங்களை நெருங்கி அறிய உதவின. ஒவ்வொரு மாதமும் அக்கட்டுரைகளைப்  படித்துவிட்டு உங்களுக்கு கடிதங்கள் எழுதியிருக்கிறேன்.

அதில் வந்த மற்றவர்களின் கட்டுரைகள், விரிவானவை  மட்டுமல்ல. முக்கியமானவை என்றும் நம்புகிறேன். குறிப்பாக, சமீபத்தில் வெளிவந்த  ராஜேந்திர சோழனின் நேர்காணல். அவர் விஷ்ணுபுரம்  விருதுக்கு தேர்வானவர்  என்பதை அறிந்ததும், அவருடைய படைப்புகளை தேட ஆரம்பித்தேன்.

நிறைய வாசகர்களுக்கு, விகடனின்  வணிக வாசிப்பிலிருந்து  சற்றாவது  விடுபட்டு இலக்கிய வாசிப்பிற்குள் நுழைவதற்கு தடம் வழிகாட்டியது  உண்மை.

அன்புடன்

முத்து

***

வணக்கம் ஜெ

காட்சியூடகம் மற்றும் வாசிப்பு பற்றி ஏற்கெனவே இத்தளத்தில் விவாதங்கள் நிகழ்ந்துள்ளன. இன்று ஒரு சிற்றிதழ் நிறுத்தப்படுவதென்பது வாசிப்பு குறைந்து வருவதைத்தான் காட்டுகிறது. காட்சியூடகம் அந்த இடத்தை அபகரித்துக்கொண்டு வருகிறது. வாசிப்பு என்பதெல்லாம் பழசு, வீடியோக்கள் என்பதுதான் இப்போ டிரெண்ட் என்பதுதான் பலரது வாதம். வாசிக்கும் அதே அனுபவத்தை வீடியோக்கள் கொடுத்தால் பரவாயில்லை. ஆனால் அப்படியில்லையே ! வாசிப்பில் உள்ள பொறுமையும், கற்பனையும் காட்சியூடகத்தில் வருவதில்லை. அது அப்போதைய பரபரப்பு மட்டுமே. காட்சியூடகம் நம்மைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு அடுத்தடுத்த காட்சிகளுக்குள் தூக்கி வீசுகிறது. அங்கு பெரிதாக கவனிக்கவோ, கற்பனைசெய்யவோ வழியில்லை. இன்று ‘பொறுமை’, ‘நுட்பம்’, ‘ஆழம்’, ‘முழுமை’ போன்ற சொற்களெல்லாம் பொருளிழந்து கொண்டிருக்கிறது. நூடுல்ஸ் போன்று எல்லாம் உடனடியாக வேண்டும். அடுத்து…அடுத்து… என்று தாவிக்கொண்டு செல்லவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஒரு எழுத்தாளர், ‘Web Series’ பார்க்கவில்லையென்றல் நீங்களெல்லாம் வேஸ்ட் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.

ஆனால் வாசிக்கும் மக்களும், அச்சிடப்பட்ட நூல்களும் தொடர்ந்து இருக்கும் என்றே நம்புகிறேன். அதற்கென்று ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. கைபேசி வழியாக இணையதள கட்டுரைகள் வாசிப்பது ஒரு வசதிதான். ஆனால் பல பக்கங்கள் கொண்ட நூல்களை கைபேசியிலோ, கணினித்திரையிலோ Scroll செய்து வாசிப்பது அவ்வளவு வசதியாக இல்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு அச்சிடப்பட்ட புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு சாவகாசமாக படிப்பதுதான் வசதியாக இருக்கிறது. இன்று  மின் நூல்கள் (e books) அச்சு நூல்களுக்கு சரியான மாற்றாக இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்களா ? எதிர்காலத்தில் அச்சுநூல்களுக்கான தேவை மேலும் குறைந்து இல்லாமல்போகும் சூழல் வருமா ?

(எப்படியும் என் காலத்தில் அது நடக்கப்போவதில்லை. எனவே எனக்கு பிரச்சனையில்லை)

விவேக்.

***

அன்புள்ள ஜெ

சென்ற ஆண்டு தடம் இதழ் தொடங்கப்பட்டபோது நீங்கள் எழுதிய ஒரு குறிப்பு உங்கள் இணையதளத்தில் உள்ளது. தடம் என்ன செய்யக்கூடாது என்று சொன்னீர்களோ அதையெல்லாமே அவர்கள் செய்தார்கள். ஆகவேதான் தடம் நின்றது. மேலே ஒன்றுமே சொல்வதற்கில்லை

ஆர்.ராமகிருஷ்ணன்

***

அச்சிதழ்கள், தடம்

முந்தைய கட்டுரைமீள்கை
அடுத்த கட்டுரைநீதிமன்றம், நெறிகள் – கடிதம்